குழந்தைகளை குறிவைக்கும் மூளை வாதம்… கலக்கமின்றி கடக்க என்ன வழி? ( மருத்துவம்)
‘குழந்தை சரியா உட்கார மாட்டுது’, ‘ஆறு மாசம் ஆகப்போகுது. ஆனா இன்னும் குழந்தையோட தல நிக்கல’, ‘குழந்தை நாம என்ன சொன்னாலும் சரியா புரிஞ்சிக்க மாட்டுறான்(ள்)’ என்பது மாதிரியான குழப்பங்களோடு சில தாய்மார்கள் தம் குழந்தைகளுக்கு தடுப்பூசி போடும்போது குழந்தை நல மருத்துவரிடம் சொல்லக் கேட்டிருப்போம்.
உடனே என்ன குறை, என்ன கோளாறு என பரிசோதனைகள் செய்து மூளை வாதம் என்று மருத்துவர்கள் சொல்லக்கூடும். அவ்வாறு சொன்னால் கூடவே இந்த வாதத்தை குணப்படுத்தக் கூடிய மருந்துகள் இல்லையென்றும் சொல்வார்கள்.அது என்ன மூளை வாதம்? பிறந்த குழந்தைக்கு எப்படி மூளையில் கோளாறு உண்டாகும்? தீர்வு இல்லையெனில் மேற்படி என்ன செய்ய வேண்டும்? இதனால் குழந்தையின் வாழ்க்கை தரம் எவ்வாறு அமையும்? என அனைத்து கேள்விகளுக்குமான விடையை பற்றி இங்கே தெளிவாக தெரிந்துகொள்வோம்.
மூளை வாதம்…
* செரிபரல் பால்சி (cerebral palsy) என்று மருத்துவ உலகம் அழைக்கும் இந்த மூளை வாதமானது குழந்தையின் வளரும் மூளைக்கு வரக்கூடிய மூளை சேதம் ஆகும்.
* மேலும் இது ஒரு குழுவாக உடலியல் கோளாறுகளை உள்ளடக்கியது. உதாரணமாக உடல் அசைவுகள், அறிவுத் திறன், விழித் திறன், பேச்சுத் திறன் சார்ந்த குறைபாடுகள் என பல பிரச்சனைகளை உருவாக்கக் கூடியது.
காரணங்கள்…
* சிசு பிறக்கும் முன், பிறக்கும் போது, பிறந்த பின் என மூன்று கட்டங்களிலும் சி.பி. என சொல்லக்கூடிய செரிபரல் பால்சி வருவதற்கான வாய்ப்புகள் உள்ளது என்பதை மனதில் வைத்துக்கொள்ள வேண்டும்.
* போதுமான பிராண வாயு குழந்தை பிறக்கும்போது இல்லாமல் போவதால் மூளைக்கு செல்லும் பிராண வாயுவின் அளவு குறையும். இதனால் மூளை திசுக்கள் சேதமடையும்.
* பாக்டீரியா, வைரஸ் போன்ற தொற்றுகள் குழந்தையின் மூளையையும், மூளையை போர்த்தியுள்ள திசுவையும் பாதிக்கும்போது ஏற்படலாம்.
* கர்ப்ப காலத்தில் தாய்க்கு ஏற்படும் தொற்று நோய்களாலும் குழந்தைக்கு சி.பி. வரக்கூடும்.
* முன்கூட்டியே பிறக்கும் (pre mature) குழந்தைகளுக்கு எளிதில் மூளை செல்களில் சேதம் ஏற்பட வாய்ப்புண்டு.
* நஞ்சுக்கொடி சுற்றிக் கொண்ட சிசுகளுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு மூளை செல்கள் சேதம் அடையும்.
* குழந்தையை கருப்பையில் இருந்து வெளியே எடுக்கும்போது மூளை சேதம் உண்டாகலாம். சாதாரண முறை சுகப்பிரசவமாக இருந்தாலும் அல்லது கருவிகள் கொண்டு குழந்தையை வெளியே கொண்டுவரும் பிரசவமாக இருந்தாலும் சரி, பாதிப்பு ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம்.
* மஞ்சள் காமாலை இருக்கும் குழந்தைகளுக்கு மூச்சுத் திணறல் ஏற்படுவதால் வரும் மூளை சேதம்.
குறிப்பு: எனவே, கருவுற்றதிலிருந்து குழந்தை பிறந்து ஓராண்டு வரை மேல் சொன்ன சிக்கல்கள் ஏற்பட்டால் சி.பி. வரலாம்.
ஆபத்து காரணிகள்…
* அதிக குழந்தைகளை ஈன்றெடுத்த தாய்க்கு பிறக்கும் குழந்தைகள்.
* மது மற்றும் புகைப்பழக்கம் உள்ள
கர்ப்பிணிகள்.
* கர்ப்பகால உயர் ரத்த அழுத்தம்.
* கர்ப்பகால சர்க்கரை நோய்.
* முப்பத்து ஐந்து வயதிற்கு மேல் சிசுவை ஈன்றெடுக்கும் தாய் என பல காரணிகள் சிபியை உண்டாக்கலாம்.
அறிகுறிகள்…
* அறிகுறிகள் ஒவ்வொரு குழந்தைகளுக்கும் மாறுபடலாம். மூளையின் எந்த பகுதி பாதிக்கப்படுகிறதோ அதற்கேற்ப அறிகுறிகள் வெளிப்படும்.
* தாமதமான மைல் கற்கள்தான் பிரதான அறிகுறி. அதாவது தாமதமாக கழுத்து நிற்பது, உட்காருவது, நடப்பது போன்ற வளர்ச்சிப் படிகள்.
* உடல் அசைவுகள்தான் பெரிதும் பாதிக்கும். இதனால் ஸ்திரத் தன்மை (balance), பாதிப்படையும். இதன் வெளிப்பாடாய் நடப்பதற்கு, உட்காருவதற்கு குழந்தை சிரமப்படும்.
* தோற்றப்பாங்கு (posture) உடல் முழுவதும் மாறக்கூடும். தசைகள் பாதிப்பதால் சரியான தோற்றப்பாங்கு இல்லாமல் இருப்பார்கள்.
* அறிவுத் திறன் சார்ந்த குறைபாடுகள்.
உதாரணமாக சிந்தனை திறன், கற்கும் திறன்.
* சில குழந்தைகளுக்கு வலிப்பு வருவதற்கும் வாய்ப்பு உள்ளது. வலிப்பில் பல வகைகள் உண்டு என்பதால் அதுவும் வெவ்வேறு வெளிப்பாடுகளுடன் இருக்கும்.
* பார்வைத் திறன் குறைபாடு.
* கேட்கும் திறன் குறைபாடு.
* பேச்சுத் திறன் குறைபாடு.
* வளைந்த முதுகுத்தண்டு.
* தசையையும் எலும்பையும் இணைக்கும் ‘தசை நாண் இறுக்கம்’. இது பொதுவாக கால் தசைகளில் ஏற்படும்.
* நடக்க முடியாமல் இருப்பது, நடக்க சிரமப்படுவது, கோணலாக நடப்பது.
ஆய்வு முடிவுகள்…
* மிகப் பொதுவான தசைகள் சார்ந்த குழந்தை பிராய நோய் என இதனை சொல்லலாம்.
* பிறந்த ஆயிரம் குழந்தைகளில் நான்கு குழந்தைகள் சி.பி.யால் பாதிக்கப்படுகின்றனர்.
* இந்தியாவில் உடலியல் கோளாறுகளை கொண்டு பிறக்கும் குழந்தைகளில் பதினைந்து சதவிகிதம் குழந்தைகள் சி.பி.யால் பாதிக்கப்பட்டவர்கள் என்கிறது ஆய்வுகள்.
* தற்போதைய ஆய்வுகளின்படி சி.பி. இருக்கும் குழந்தைகளுக்கு ஆட்டிசம், ஏ.டி.எச்.டி போன்ற பாதிப்புகளும் ஏற்படும் விகிதம் அதிகரித்து வருகிறது.
சி.பி.யின் வகைகள்…
1. டைப்பிளீஜியா (Diplegia) – கால்கள் இரண்டும் பாதிக்கப்பட்டிருக்கும்.
2. ஹெமிப்பிளீஜியா (Hemiplegia) – ஒரு பக்க கை மற்றும் கால் பாதிப்புக்குள்ளாகி இருக்கும்.
3. க்வாடிரிப்பிளீஜியா (Quadriplegia) – இரு கை மற்றும் கால்களில் என முழு உடலும் பாதிப்படைந்திருக்கும்.
சி.பி.யின் தன்மைகள்…
1. ஸ்பேஸ்டிசிட்டி : இந்த வகைதான் இது வரை அதிக குழந்தைகளை பாதித்திருக்கிறது. எண்பது சதவிகித சி.பி. குழந்தைகள் இவ்வகையை சார்ந்தவர்கள். இந்த தன்மையில் தசைகள் அதீத இறுக்கமாக இருக்கும். கால்களையோ, கைகளையோ இயல்பாய் விரித்து நீட்ட முடியாத அளவு இறுக்கம் ஏற்பட்டிருக்கும்.
2. ஃபிலசிடிட்டி (Flaccidity): இந்த வகையில் தசைகள் மிகவும் தளர்வாக (அதாவது கொலகொலவென) இருக்கும்.
எப்படி கண்டறிவது…?
* குழந்தைகளின் வளர்ச்சிப் படிநிலைகளை நாம் கண்காணித்துக் கொண்டே இருக்க வேண்டும். அதாவது, Developmental monitoring என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள். சரியான மாதத்தில்தான் குழந்தை தவழ்கிறதா, உட்காருகிறதா, நாம் கூப்பிட்டால் திரும்பி பார்க்கிறதா என அனைத்தையும் கவனிக்கவேண்டும். அப்படி வித்தியாசங்கள் தெரியும் பட்சத்தில் அருகில் உள்ள இயன்முறை மருத்துவரை நாடவேண்டும்.
* அவர் தசை பரிசோதனைகள் செய்து பார்ப்பார்கள். மேலும் தேவைப்பட்டால் சி.டி, எம்.ஆர்.ஐ ஸ்கேன்கள் பரிந்துரைப்பார்கள்.
சிகிச்சை முறை…
சி.பி.யை முழுவதுமாக குணப்படுத்த முடியாது என்பதால் வாழ்க்கை தரத்தை மேம்படுத்த உதவும் சிகிச்சைகளை தொடர்ந்து செய்து வரவேண்டும். மேலும் வாழ்நாள் முழுவதும் அறிகுறிகளுக்கு ஏற்றவாறு சிகிச்சைகள் எடுத்துக்கொள்ள வேண்டும்.
இயன்முறை மருத்துவம்…
* இயன்முறை மருத்துவ நுட்பங்கள் மற்றும் பயிற்சிகள் வழங்கப்படும். இதனால் தசைகளை சரியாய் இயங்க வைக்கமுடியும்.
* உட்காருவதற்கு, நடப்பதற்கு என தாமத வளர்ச்சிப் படிநிலைகளை பயிற்சிகள் மூலம் சரி செய்வார்கள்.
* பலகட்ட உடற்பயிற்சிகளுக்கு நடுவே நடப்பதற்கு தேவையான உபகரணங்களை (splints, braces) இயன்முறை மருத்துவர் பரிந்துரைப்பார்கள். அதனை வீட்டிலும், உடற்பயிற்சி செய்யும்போதும் குழந்தைகள் அணிந்து கொண்டிருக்க வேண்டும்.
* சில குழந்தைகளால் எப்போதுமே நடக்க முடியாமல் கூட போகலாம். அப்படி உள்ளவர்கள் இயன்முறை மருத்துவர் கற்றுக் கொடுக்கும் பயிற்சிகளை தினசரி செய்து வரவேண்டும். இதனால் தசைகள் மேலும் மோசமாகாமல் பராமரித்துக் கொள்ளலாம்.
மற்ற சிகிச்சை முறைகள்…
* அறிகுறிக்கு ஏற்றவாறு மருந்துகளை குழந்தை நல மருத்துவர்கள் பரிந்துரை செய்வார்கள். உதாரணமாக தசை இறுக்கத்திற்கு இயன்முறை மருத்துவப் பயிற்சியுடன் கூடிய ஊசிகளை குழந்தைகளுக்கு மருத்துவர் போடுவர். இதனால் இறுக்கம் சற்று கட்டுக்குள் கொண்டுவரப்படும்.
* இறுக்கம் மிகவும் அதிகமாக இருக்கும் பட்சத்தில் அறுவை சிகிச்சை மூலம் தசை நாணினை தளர்த்துவார்கள். இதனை செய்த பின்பும் இயன்முறை மருத்துவத்தை தொடர வேண்டும்.
* மற்ற சிகிச்சைகள் (தெரப்பிகள்) தேவைப்பட்டால் அதனையும் தயங்காமல் செய்யவேண்டும். உதாரணமாக பேச்சுப் பயிற்சி, கற்றல் பயிற்சி (special education) போன்றவை.
* எல்லா வகை மருத்துவ முறைகளும் கூட்டாய் இணைத்து பயன்படுத்தும்போது நல் விளைவுகள் வரும்.
ஆகவே, ‘சி.பி. குழந்தை’ என கண்டறியப்பட்டால் பயம் கொள்ளாமல், தேவையான சிகிச்சைகளை தகுந்த நிபுணர்களின் ஆலோசனைகளோடு போதுமான காலம் வரை எடுத்து வந்தால் போதும். குழந்தையின் வாழ்க்கை தரத்தை கூட்டாக இணைந்து மேம்படுத்தலாம். மேலும், சி.பி.யால் பாதிக்கப்பட்ட பல குழந்தைகள் இன்று நன்முறையில் பல்வேறு சாதனைகளுக்கும், திறமைகளுக்கும் சொந்தக்காரர்கள் என்பதனை நாம் ஒவ்வொருவரும் அறிந்துகொள்ளவேண்டியது மிக அவசியம்.
Average Rating