IVF சிகிச்சை… மருத்துவரிடம் கேட்க வேண்டிய கேள்விகள்!! (மருத்துவம்)
குழந்தையின்மைக்கான சிகிச்சைகளுக்குத் தயாராவதென்பது, தம்பதியரை உடலளவில், மனத்தளவில் மிகுந்த களைப்புக்குள்ளாக்கும் முடிவு. நிறைய கேள்விகள்… நிறைய நிறைய சந்தேகங்கள்… எதை யாரிடம் கேட்பது… சரியா தவறா என்ற குழப்பங்கள் தம்பதியரை ஆக்கிரமித்திருக்கும்.
ஆனால், இந்த தயக்கங்கள் தேவையில்லை. கேள்விகள் கேட்பது உங்கள் உரிமை. எனவே, கேட்க நினைக்கும் விஷயங்களைத் தயங்காமல் உங்கள் மருத்துவரிடம் கேட்டுத் தெளிவு பெறுங்கள்.
குழந்தையின்மைக்கான சிகிச்சை என்பது பல துறைகளைச் சேர்ந்த மருத்துவர்கள் ஒருங்கிணைந்து சிகிச்சை அளிக்க வேண்டிய ஒரு கூட்டு முயற்சி. தனியொரு மருத்துவரே எல்லாப் பிரச்னைகளையும் கண்டுபிடித்து ஒவ்வொரு சிகிச்சையாகச் செய்து கொண்டிருக்க முடியாது.பெண்களைப் பெண் நோயியல் மருத்துவர் பரிசோதித்தால், ஆண்களை அதே மருத்துவமனையில் உள்ள ஆண் நோயியல் மருத்துவர் பரிசோதிக்க வேண்டும். முக்கியப் பரிசோதனைகள் செய்ய வேண்டியிருந்தால், அவற்றுக்கான கருவிகள் தயாராக இருக்க வேண்டும்.அதிநவீன லேசர் கருவி வசதிகள் இருக்க வேண்டும்.
மருத்துவரிடம் கேட்க வேண்டியவை
பார்த்துப் பேசியதுமே ஒரு மருத்துவரின் அனுபவம், திறமை ஆகியவற்றை எப்படியும் தெரிந்து கொள்வீர்கள் என்றாலும், முதல்முறை மருத்துவரிடம் போகும்போது என்னென்ன கேள்விகளைக் கேட்கலாம் என்று ஒரு பட்டியலைத் தயாரித்துக் கொள்ளுங்கள்.
மருத்துவரைப் பற்றி…
இந்தத் துறையில் எத்தனை ஆண்டுகள் பயிற்சி பெற்றவர்?
* இந்தப் பிரச்னையை நீங்களே தீர்த்துவிடுவீர்களா? வேறு துறை மருத்துவர்களையும் உடன் சேர்த்துக் கொள்வீர்களா?
* கருத்தரித்தால் பிரசவம் வரை நீங்களே பார்ப்பீர்களா? வேறு பெண் நோயியல் மருத்துவரிடம் அனுப்பி வைப்பீர்களா?
* ஆய்வக வசதிகள் இங்கே இருக்கின்றனவா? அல்லது பரிசோதனைகளுக்கு வெளியில் செல்ல வேண்டுமா?
* சிகிச்சை எனக்கு மட்டுமா? என் துணைக்குமா?
* என் பிரச்னைகளைப் பற்றி நீங்கள் செய்யும் பரிசோதனை மற்றும் மெடிக்கல் ரிப்போட்டுகளை எனக்குத் தருவீர்களா?
* குறைபாடு இல்லாத குழந்தை பிறப்பதற்கான நவீன சிகிச்சைகள் உள்ளனவா?
* கருப்பைக்கு வெளியே நடக்கும் கருவாக்கம் இந்த மருத்துவமனைக்குள் நடக்குமா? அல்லது வேறு மருத்துவனையில் கருவாக்கம் செய்து அதைக்
கொண்டுவந்து பொருத்துவீர்களா?
* உங்கள் மருத்துவமனையில் இந்தப் பிரச்னைக்காக எத்தனை பேர் வந்திருக்கிறார்கள்? அவர்களில் எத்தனை பேர் வெற்றிகரமாக சிகிச்சை பெற்றார்கள்?
* நீங்கள் தகுதியான மருத்துவரா? என்லிஸ்டட் டாக்டரா?
பரிசோதனைகளைப் பற்றியும் தெரிந்து கொள்ளுங்கள்
* இது என்னவிதமான பரிசோதனை முறை?
* இதன் மூலம் நீங்கள் எதைத் தெரிந்து கொள்வீர்கள்?
* என்ன ரிசல்ட் எதிர்பார்க்கிறீர்கள்?
* எவ்வளவு டைம் பிடிக்கும்? செலவு என்ன?
* இது உடலுக்குத் தீங்கு, பக்கவிளைவுகளை ஏற்படுத்துமா?
* பரிசோதனைக்குப் பின் ஏதேனும் அறிகுறிகள் தோன்றுமா?
* இதை உங்கள் மருத்துவமனையிலேயே செய்வீர்களா? அல்லது வேறு மருத்துவமனைக்குப் போக வேண்டுமா?
* என் இணையும் இந்தப் பரிசோதனையை மேற்கொள்ள வேண்டுமா?
* பரிசோதனைக்குப் பிறகு வீடு அல்லது அலுவலகத்துக்கு நான் போகலாமா?
* எத்தனை முறை இந்தப் பரிசோதனையை மேற்கொள்ள வேண்டி இருக்கும்?
* இதனால் எங்கள் தாம்பத்திய வாழ்க்கை பாதிக்கப்படுமா?
மருந்து, மாத்திரைகள் பற்றி…
* என்ன ரிசல்ட் எதிர்பார்க்கிறீர்கள்?
* எதுவரைக்கும் இதைச் சாப்பிட வேண்டும்? இதன் விலை என்ன?
* இதனால் என்ன பக்கவிளைவுகள் வரும், இதை வெளியே போகும்போது எடுத்துச் சொல்லலாமா? எத்தனை வேளை சாப்பிட வேண்டும்?
* விட்டுவிட்டு சாப்பிட்டாலோ தாமதமாகச் சாப்பிட்டாலோ என்ன ஆகும்?
மருத்துவத் திட்டம் பற்றி பேச வேண்டும்
முதல் பரிசோதனை மற்றும் சிகிச்சை பெற்ற நான்கைந்து வாரங்களிலேயே உங்களுக்குத் தேவையான சிகிச்சை பற்றி ஒரு வரையறை வந்துவிடும். அதற்கேற்ப மருத்துவருடன் ஒத்துழைத்து சிகிச்சையை வெற்றிகரமாக்கப் பாடுபட வேண்டும்.
சிகிச்சைத் திட்டத்தை மருத்துவர் மாற்றுகிறார் என்றால், அதற்கான காரணத்தைக் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும். கேட்க நினைக்கும் விஷயங்களைத் தயங்காமல் உடனேயே கேட்டுவிடுங்கள்.
கடைசியில் ஒரு முக்கிய விஷயம்…
சிகிச்சை தொடர்பான விஷயங்களைப் பற்றி டாக்டரிடம் தாராளமாகப் பேசலாம். பேசாத, பொறுமையின்றி எரிச்சல் அடைகிற மருத்துவரிடம் அதைப் பற்றி விளக்கம் கேளுங்கள். வெளியில் படித்த, கேட்ட தகவல்களை வைத்துக் கொண்டு, எல்லாம் தெரிந்ததைப் போல கேட்பது சரியான முறையல்ல என்பதையும் கவனத்தில் கொள்ளுங்கள்.
Average Rating