ஹீமோகுளோபின் குறைபாட்டை சரி செய்யும் யோகாசனங்கள்!! (மகளிர் பக்கம்)
‘உடலில் ரத்தத்தின் உற்பத்திக்கு இரும்புச்சத்து மிகவும் அவசியம். ரத்தத்தில் காணப்படும் ஹீமோகுளோபின் என்றழைக்கப்படும் சிவப்பணுக்களில்தான் 70 சதவீத இரும்புச்சத்து இருக்கிறது. நுரையீரலிலிருந்து திசுக்களுக்கு ஆக்ஸிஜனை எடுத்துச் செல்லும் வேலையை இந்த ஹீமோகுளோபின்கள்தான் செய்கின்றன.
ஒருவருக்கு ஹீமோகுளோபின் அளவு குறையும்போது தலைசுற்றல், தலைவலி, சோர்வு மற்றும் அசதி ஏற்படும். இதனால் எதிலும் கவனம் செலுத்த முடியாத நிலை ஏற்படும். இங்கு விவரிக்கப்பட்ட சிலவகை மூச்சுப்பயிற்சிகளையும், யோகாசனங்களையும் தொடர்ச்சியாக செய்து வந்தால் ஹீமோகுளோபின் அளவை அதிகரித்துக் கொள்ளலாம்’’ என்கிறார் யோகா மற்றும் இயற்கை மருத்துவரான இந்திரா தேவி.ஹீமோகுளோபினை அதிகரிப்பதற்கான ஆசனங்கள் பற்றியும், அதன் பயன்கள் பற்றியும் தொடர்ந்து விவரிக்கிறார் இந்திரா தேவி.
ஷித்தாலி அல்லது உஜ்ஜயி பிராணாயாமம்
யோகா விரிப்பில் குறுக்கே கால்களை மடக்கியவாறு ரிலாக்ஸாக அமர்ந்து கொண்டு, இரண்டு கைகளையும் முட்டிகளில் ஊன்றிக் கொள்ளவும். சாதாரணமாக மூச்சை விடவும். பின்னர் நாக்கை வெளியில் இரண்டு பக்கமும் மடக்கி ஒரு ட்யூப் வடிவில் நீட்டிக் கொள்ள வேண்டும்.
இப்போது மடக்கிய நாக்கு வழியாக காற்றை நன்கு ஆழமாக உள்ளே இழுக்கவும். அப்போது வயிறு உள்நோக்கி ஒட்டியவாறு இருக்கும். வாய்வழியாக சத்தமாக காற்றை இழுக்க வேண்டும். பிறகு, உள்ளிழுத்த காற்றை, வாயை மூடிக்கொண்டு மூக்கு வழியாக மெதுவாக வெளியேற்ற வேண்டும்.
பலன்கள்
இந்த பிராணாயாமம் மூச்சினை சமநிலைப்படுத்தி, ஆக்ஸிஜனேற்றத்தை அதிகரிக்கிறது. மேலும், உடலினுள் வெப்பத்தையும் உருவாக்குகிறது. ரத்தத்தில் சிவப்பணுக்களை உற்பத்தி செய்கிறது. ரத்த அழுத்தத்தை சமநிலைப்படுத்துவதால் மாரடைப்பு வராமல் பாதுகாக்கிறது. உடலினுள் இருக்கும் நச்சுக்களை எல்லாம் வெளியேற்றுகிறது. உடல், மனம் இரண்டும் புத்துணர்வு அடைகிறது.
நுரையீரலின் வேலையை மேம்படுத்துவதால் அதனுள் இருக்கும் எல்லா உறுப்புகளுக்கும் ஆக்சிஜனை எடுத்துச் செல்கிறது. உள்ளே சேர்ந்திருக்கும் சளி இதனால் வெளியேறி விடும். இது ஆஸ்துமா நோயாளிகளுக்கும் சிறந்த ஆசனம்.
நாடிஷோதன பிராணாயாமம்
நாடி சுத்தி என்பது சுவாசத்தை சுத்தம் செய்யும் ஆசனம் ஆகும். முதலில், விரிப்பில் ரிலாக்ஸாக உட்கார்ந்து சாதாரணமாக மூச்சை இழுத்து விடவேண்டும். பின்னர் வலதுபக்க மூக்கை வலக்கையின் பெருவிரலால் அழுத்திக் கொள்ளவும்.
இடது மூக்கின் வழியாக மூச்சை உள்ளிழுக்கவும். இப்போது இடது மூக்கை மோதிரவிரல், சுண்டுவிரல் இரண்டாலும் அழுத்திக் கொள்ளவும். வலது மூக்கை திறந்து, இழுத்த மூச்சை வலது மூக்கால் மெதுவாக வெளியேற்றவும்.
அடுத்து வலது மூக்கை திறந்து, இடது மூக்கை மூடிக் கொள்ள வேண்டும். இப்போது வலது மூக்கால் மூச்சை இழுத்து இடது மூக்கால் மெதுவாக வெளியேற்றவும். இப்போதுதான் ஒரு சுற்று முழுமை அடைகிறது. இதுபோல் 5 முறை முழுமையாகச் செய்ய வேண்டும்.
பலன்கள்
இந்த நாடிஷோதன பிராணாயாமம் இதயத்துடிப்பை சீராக்குகிறது. மனப்பதற்றத்தைக் குறைக்கிறது. மூளையின் இரு அரைக்கோளங்களையும் ஒத்திசைவாக செயல்பட வைக்கிறது. இதனால் மூளை அமைதியடைகிறது.
ரத்தம் மற்றும் நுரையீரலில் படிந்துள்ள கழிவுகளை வெளியேற்றி சுத்தப்படுத்துகிறது. நரம்பு மண்டலங்களின் செயல்பாட்டைத் தூண்டுகிறது. ஆழ்ந்து மூச்சுவிடுவதால் ரத்தத்துக்கு ஆக்சிஜன் நிறைய கிடைக்கிறது. கவனச்சிதறல்கள் விலகி மூளை ஆற்றல் பெறுகிறது.
கபாலபதி பிராணாயாமம்
முதலில் யோகா விரிப்பில் நேராக நிமிர்ந்து கண்களை மூடிய நிலையில் அமர்ந்து கொள்ள வேண்டும். இரண்டு கைகளையும் முழங்கால்களில் ஊன்றிக் கொள்ள வேண்டும். மூக்கின் இரு துவாரங்கள் வழியாக நுரையீரல் நிரம்பும் வகையில் நன்றாக மூச்சை உள்ளிழுக்க வேண்டும். வயிறு நன்றாக உள்ளிழுத்த நிலையில் இருக்க வேண்டும்.
இப்போது மூச்சு முழுவதும் வேகமாக வெளியே விடவேண்டும். இப்போது வயிறில் ஒரு அழுத்தம் கிடைக்கும். இதேபோல் 5 நிமிடங்கள் மீண்டும் மீண்டும் செய்ய வேண்டும்.
பலன்கள்
மூச்சை இழுத்து விடும்போது உருவாகும் வெப்பமானது வயிற்றின் உள்ளே இருக்கும் நச்சுக்களை வெளியேற்றுகிறது.ரத்தத்துக்கு அதிகமான ஆக்சிஜன் கிடைப்பதால் ரத்தம் சுத்தமாகிறது. செரிமானத்தைத் தூண்டி, சிறுநீரகங்கள் மற்றும் கல்லீரலின் செயல்பாடுகளை அதிகரிக்கிறது.அனைத்து குடல் பிரச்னைகளையும் குணப்படுத்துகிறது.
கண்களில் உள்ள அழுத்தத்தைக் குறைப்பதால் கண்களைச் சுற்றியுள்ள கருவளையங்களை போக்குகிறது. உடலின் அனைத்து பாகங்களிலும் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது. வயிற்று சதை குறையும். மனதை அமைதிப்படுத்தி மனப்பதற்றத்தையும் குறைக்கிறது.
சர்வாங்காசனம்
‘சர்வ’ என்றால் முழுமை, உடல் முழுவதையும் பயன்படுத்தி செய்யும் ஆசனம் என்பதே பொருள். முதுகை தரையில் படுத்த நிலையில் மெதுவாக மூச்சை உள்ளிழுத்தவாறே இரண்டு கால்களையும் மேலே தூக்க வேண்டும்.
கைகள் இரண்டும் இடுப்பைத் தாங்கியவாறு இடுப்போடு, கால்களையும் உயர்த்தவும். கால்கள் இடுப்பு, தோள் நேராக நேர்கோட்டில் இருக்க வேண்டும். தோளுக்கு கீழ் தலையணை முட்டு கொடுக்கலாம். இந்த நிலையில் 2 நிமிடம் முதல் 10 நிமிடங்கள் வரை இருக்கலாம். மெதுவாக மூச்சை வெளிவிட்டவாறு பழைய நிலைக்கு திரும்பவும்.
பலன்கள்
உச்சந்தலையிலிருந்து உள்ளங்கால் வரை உடலின் அனைத்து பாகங்களுக்கும் பயன் தரக்கூடியது. கால்களில் உள்ள ரத்த நாளங்களில் ரத்த ஓட்டம் அதிகரிப்பதால் வெரிகோஸ் வெய்ன் பாதிப்பால் ஏற்படும் வலியைப் போக்குகிறது. இனப்பெருக்க உறுப்புகளைத் தூண்டுவதால் மலட்டுத்தன்மையைப் போக்குகிறது. உள்ளுறுப்புகளில் ரத்த ஓட்டம் அதிகரிப்பதால், மலச்சிக்கல், வாயு மற்றும் செரிமானப் பிரச்னைகளுக்குத் தீர்வாகிறது.
இடுப்பு எலும்புகள் விரிவடைவதால் மாதவிடாய் காலங்களில் பெண்களுக்கு ஏற்படும் பிரச்னைகள் சரியாகின்றன.மூளையின் ரத்த ஓட்டம் அதிகரிப்பதால் செயல்பாட்டைத் தூண்டுகிறது.ரத்தத்தை சுத்திகரிப்பதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகிறது. மயிர்க்கால்களில் ரத்த ஓட்டம் செல்வதால் தலைமுடி உதிர்வது தடுக்கப்படுகிறது. முகம், கழுத்துப் பகுதிகளில் தோல் சுருக்கம் குறைந்து இளமையான தோற்றத்தை தருகிறது.
விபரீதகரணி
விபரீதகரணி `விபரீத’ என்றால் தலைகீழ் என்று பொருள். கரணி என்றால் செயல்பாடு என்று பொருள். நமது உடலை தலைகீழாக புவிஈர்ப்பு சக்தியை நோக்கி வைப்பதால் உடல் உறுப்புகள் வலிமை பெறுகின்றன. விரிப்பில் மல்லாந்து படுத்துக்கொண்டு, மூச்சை உள்ளே இழுக்கவும். கால்களை ஒன்றாக நீட்டியபடியே அப்படியே மேலே தூக்க வேண்டும்.
தூக்கும்போது இரண்டு கைகளாலும் இடுப்புக்கு முட்டுக் கொடுக்க வேண்டும். இரு கைகளாலும் இடுப்பைத் தாங்கிய வண்ணம் கால்கள் மட்டும் செங்குத்தாகத் தூக்க வேண்டும். உடல் பாரம் முழுதும் பின் கழுத்து, நெஞ்சின் பின்புறப் பகுதி ஆகியவற்றால் தாங்க வேண்டும். இப்போது மூச்சை மெதுவாக வெளியேற்றியவாறு பழைய நிலைக்கு திரும்ப வேண்டும்.
பலன்கள்
அதிகப்படியான ரத்த ஓட்டம் கிடைப்பதால் முதுகுத் தண்டுவடம் உறுதிப்படுத்துகிறது. ரத்த அணு உற்பத்திக்கு தேவையான ஆக்சிஜன் கிடைக்கிறது. எலும்புகளுக்கிடையே எண்ணெய்ப்பசை அதிகரிப்பதால் எலும்புத் தேய்மானம் குறைகிறது. பின்பக்கத் தலைக்கு ரத்த ஓட்டம் கிடைப்பதால் பெருமூளை மற்றும் சிறுமூளை புத்துணர்வு பெறுகிறது. ரத்த உற்பத்திக்கு உதவுவதால் பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் ஏற்படும் ரத்த இழப்பை ஈடுகட்டுகிறது.
மெனோபாஸ் காலங்களில் ஏற்படும் ரத்தசோகையை போக்குகிறது.நுரையீரல் பிரச்னைகளை போக்குகிறது. வெரிகோஸ் வெய்ன் எனப்படும் நரம்பியல் பிரச்னையை சரிசெய்ய உதவுகிறது.தைராய்டு சுரப்பிகளை தூண்டச்செய்வதால் தைராய்டு பிரச்னைக்கும் தீர்வாகிறது. தலைவலி, ஒற்றைத் தலைவலியைப் போக்குகிறது. மனப்பதற்றம், மன அழுத்தத்தைப் போக்கி மனநலத்தை பாதுகாக்கிறது.
உத்தன்பாதாசனம்
விரிப்பில் படுத்து கைகள் இரண்டையும் பக்க வாட்டில் வைத்துக் கொள்ள வேண்டும். மூச்சை உள்ளிழுத்தபடி கால்கள் இரண்டையும் சற்றே உயரமாக 45 டிகிரி கோணத்தில் தூக்க வேண்டும். இதேநிலையில் சில நிமிடங்கள் இருக்க வேண்டும். மூச்சை வெளியேற்றியவாறு பழைய நிலைக்கு திரும்ப வேண்டும். இதேபோன்று 3-லிருந்து 5 முறை செய்யலாம்.
பலன்கள்
அசிடிட்டி, அஜீரணம் மற்றும் மலச்சிக்கல் போன்ற வயிறு கோளாறுகளை குணப்படுத்துகிறது. அடிவயிற்று உறுப்புகளை வலுவடையச் செய்கிறது. முதுகு, இடுப்பு மற்றும் தொடை தசைகளை வலுவாக்குகிறது. வாய்வுக் கோளாறு, அஜீரண வாந்தி, மூட்டுவலி, இதயக் கோளாறு மற்றும் இடுப்பு வலியைப் போக்குகிறது.முதுகுவலியைப் போக்குகிறது.
கணையச் சுரப்பியின் வேலையைத் தூண்டுவதால் நீரிழிவு நோயாளிகளுக்கு சிறந்தது.செரிமான உறுப்புகளின் வேலையை துரிதப்படுத்துகிறது. இரைப்பையில் தேங்கியுள்ள வாயுவை வெளியேற்றுகிறது.தொப்பையை குறைக்க நினைப்பவர்களுக்கு இது ஒரு சிறந்த ஆசனப்பயிற்சி.
Average Rating