கல்லீரலை பாதுகாப்போம்!: உலக ஹெபடைட்டிஸ் தினம்!! (மருத்துவம்)

Read Time:11 Minute, 23 Second

உலகளவில் முப்பது விநாடிக்கு ஒருவர் கல்லீரல் சம்பந்தமான பாதிப்பால் உயிரிழக்கிறார் என உலக சுகாதார அமைப்பு தெரிவிக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 28 ஆம் தேதி கல்லீரல் பாதிப்பால் ஏற்படும் விபரீதங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த உலக ஹெபடைட்டிஸ் தினம் கொண்டாடப்படுகிறது. இது குறித்த முழு விவரத்தையும் அறிந்துகொள்ள, ஹெபடாலஜி துறையின் இயக்குனரான, மருத்துவர் ஜாய் வர்கீஸுடன் பேசினோம்.

“உடலில் இருக்கும் கல்லீரல் ஏதோ ஒரு காரணத்தினால் பாதிக்கப்பட்டு செயலிழக்கும் போது, அதை ஹெபடைட்டிஸ் என்று குறிப்பிடுகிறோம். இந்த கல்லீரல் பாதிப்பு ஏதாவது ஒரு வைரஸ் தொற்றால் ஏற்பட்டால் அதை வைரல் ஹெபடைட்டிஸ் என்று கூறுவோம். கல்லீரல் பாதிப்பு குடிப்பழக்கத்தால் ஏற்பட்டால் அதற்கு ஆல்கஹால் ஹெபடைட்டிஸ் என்று பெயர். ஆட்டோ இம்யூன் ஹெபடைட்டிஸ் எனும் வகை, பொதுவாக நம் உடலில் வைரஸ் மற்றும் பாக்டீரியாவை எதிர்த்துத் தாக்கும் எதிர்ப்புச் சக்தி நம் கல்லீரலை தாக்க தொடங்கும் போது ஏற்படுகிறது. இது தவிர குடிப்பழக்கம் இல்லாதவர்களுக்கும், கல்லீரலில் அதிகப்படியான கொழுப்பு சேரும் போதும் ஹெபடைட்டிஸ் பாதிப்பு ஏற்படும்.

வைரஸ் தொற்றால் ஏற்படும் கல்லீரல் பாதிப்பை வைரல் ஹெபடைட்டிஸ் என்று குறிப்பிட்டு, அதை ஹெபடைட்டிஸ் ஏ, ஹெபடைட்டிஸ் பி, ஹெபடைட்டிஸ் சி, ஹெபடைட்டிஸ் டி, ஹெபடைட்டிஸ் இ என ஐந்து முக்கிய பாதிப்புகளை நிபுணர்கள் கண்டறிந்துள்ளனர். இந்த ஏ,பி,சி,டி போன்ற ஆங்கில எழுத்துக்கள் வைரஸ் தொற்றின் பெயரைக் குறிக்கிறது. பொதுவாக இந்தியா போன்ற வளர்ந்து வரும் நாடுகளில் ஏ மற்றும் இ வைரஸ் பாதிப்புகள் அதிகமாக இருக்கும். இந்த இரண்டு வைரஸ் பாதிப்புகளும், அசுத்தமான உணவு மற்றும் நீர் மூலமாக ஏற்படுகின்றன. இவை மஞ்சள் காமாலை மூலம் கல்லீரலை பாதிக்கக் கூடியவை.

ஹெபடைட்டிஸ் பி மற்றும் சி, ஹெபடைட்டிஸ் பாதிக்கப்பட்ட ஒருவரின் ரத்தம் அல்லது உறுப்பை வேறொருவருக்கு மாற்றும் போது பரவுகிறது. ஹெபடைட்டிஸ் டி பாதிப்பு, ஏற்கனவே ஹெபடைட்டிஸ் – பி வைரசால் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு வரும். ஹெபடைட்டிஸ் பி மற்றும் டி சேர்ந்து ஒருவரை தாக்கும் போது அதன் பாதிப்புகள் அதிகமாக இருக்கும். ஆனால், ஹெபடைட்டிஸ்க்கான தடுப்பூசி செலுத்திக் கொண்டவருக்கு ஹெபடைட்டிஸ் – டி பாதிப்பிலிருந்தும் பாதுகாப்பு கிடைக்கும். ஹெபடைட்டிஸ் ஏ மற்றும் இ பொதுவாக பலருக்கு ஏற்பட்டாலும், இது தீவிரமான பாதிப்புகளை ஏற்படுத்தாது. இவை சில சமயம் தானாகவே கூட சரியாகிவிடும். ஆனால் பி மற்றும் சி வைரஸ் நம் உடலுக்குள் பல வருடங்களாக இருந்து கல்லீரலை முழுமையாக பாதித்து செயலிழக்க வைக்கலாம்.

சிலருக்கு ஆட்டோ இம்யூன் எனப்படும் மரபியல் காரணமாக ஹெபடைட்டிஸ் அல்லது கல்லீரல் பாதிப்பு ஏற்படும் இந்த பாதிப்பு இளம்பெண்களை பொதுவாக பாதிக்கிறது. அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளில் கல்லீரலில் கொழுப்பு சேர்வதால் ஏற்படும் கொழுப்பு கல்லீரல் நோய் (Fatty liver) பாதிப்பு அதிகமாக இருக்கும். வளர்ந்த நாடுகளில் வைரஸ் ஹெபடைட்டிஸ் பாதிப்பு மிகவும் குறைவாகவே இருக்கும். கொழுப்பு கல்லீரல் பாதிப்பால், கல்லீரல் முழுவதுமாக செயலிழக்கும் ஆபத்து அதிகமாக உள்ளது.

கல்லீரல் பாதிப்பு ஏற்படும்போது அதன் உயிரணுக்கள் உயிரிழந்தாலும் மீண்டும் உயிர்ப்பிக்கும் ஆற்றல் கல்லீரலுக்கு உண்டு. உதாரணத்திற்கு, ஹெபடைட்டிஸ் ஏ வைரஸ் நம் கல்லீரலுக்குள் சென்று அதிக பாதிப்புகளை ஏற்படுத்தினாலும், இரண்டிலிருந்து மூன்று வாரத்திற்குள் மீண்டும் அந்த கல்லீரலை ஆரோக்கியமாக மீட்டெடுக்க முடியும். ஆனால் மீண்டும் மீண்டும் பல மாதங்களாகவும் வருடங்களாகவும் பாதிப்புக்கள் தொடரும்போது கல்லீரல் முழுவதுமாக செயலிழக்கும் வாய்ப்புகள் அதிகம் உள்ளன. அதிகமாக மதுப் பழக்கம் உடையவர்களுக்கு இந்த பாதிப்புக்கள் தோன்றும்.

அறிகுறிகள்

ஹெபடைட்டிஸ் பாதிப்பில் அறிகுறிகள் பெரிதாகத் தோன்றாது. உடல் சோர்வாக இருக்கும். எவ்வளவு ஆரோக்கியமான உணவையும் உடற்பயிற்சியையும் செய்தாலும், உடல் சோர்வாகவும் களைப்பாகவும் இருக்கும். இதைத்தாண்டி மஞ்சள்காமாலையும் ஒரு முக்கிய அறிகுறிதான். மஞ்சள் காமாலை பாதித்தவர்களுக்கு, கண்கள் மஞ்சளாக இருப்பது, சிறுநீர் மஞ்சளாக கழிப்பதும் உள்ளங்கை மற்றும் உள்ளங்கால்களில் மஞ்சள் நிற தடுப்புகள் ஏற்படுவது போன்ற அறிகுறிகளை காணலாம்.

மேலும், கல்லீரல் பாதிப்பு அதிகரிக்கும் போது, உடலில் அரிப்புக்கள் அதிகமாக தெரியும். நாவில் சுவை தெரியாது. இதனால் முழுமையாக சாப்பிட முடியாமல், உணவின் சுவை மற்றும் மனம் பிடிக்காமல் ஒவ்வாமை உண்டாகும். இதையெல்லாம் தாண்டி கல்லீரல் 100% பாதிப்பை அடையும்போது கால்களில் நீர் கோர்த்துக் கொள்ளும். அங்கு கால்கள் வீங்கிப் போகும். வயிற்றுப்பகுதி கொஞ்சம் கொஞ்சமாக வீங்க ஆரம்பித்து பெரிதாகும். கை – கால்களில் வீக்கம் ஏற்படுவது, முகங்களில் நீர் வீக்கம் ஏற்படுவது போன்ற அறிகுறிகள், கல்லீரல் 70 சதவீதம் முதல் 100 சதவீதம் பாதிப்புக்களை அடையும்போதுதான் தோன்றும்.

ஒரு கட்டத்தில் கல்லீரல் பாதிப்பு, உடலின் மற்ற உறுப்புக்களும் பாதிக்க ஆரம்பிக்கும். ஹெபடைட்டிஸ் பாதிப்பினால் சிறுநீரகம் பாதிக்கப்பட்டு சிறுநீரின் அளவு குறையும். கல்லீரல் பாதிப்பு மூளையைத் தாக்கும் போது தேவையில்லாத குழப்பமான மனநிலை உருவாகி, இரவில் தூங்க முடியாமல் தவிப்பது, மனதின் ஆரோக்கியம் பாதிப்பது போன்ற பிரச்சினைகள் ஏற்படும். தீவிரம் அதிகரிக்கும் போது கல்லீரலுடன் சேர்ந்து பிற உறுப்புகளும் செயலிழக்கலாம்.

கல்லீரல் பாதிப்பு ஹெபடைட்டிஸ் ஏ போன்ற சிறிய காரணத்தினால் உருவாகினால் விரைவிலேயே முழுமையாக குணப்படுத்திவிட முடியும். ஆனால் தொடர்ந்து குடிப்பழக்கம் உள்ளவர்களுக்கு, அதனால் ஏற்படும் கல்லீரல் பாதிப்பை தடுப்பதும் காப்பதும் கடினம்தான். அவர்களுக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சையே தீர்வாக இருக்கும். மரபியல் காரணங்களால் பிறக்கும்போதே கல்லீரல் குறைபாடுகளுடன் சில குழந்தைகள் பிறப்பார்கள்.

அவர்களால் மற்ற குழந்தைகளைப் போல ஆரோக்கியமாக வளர முடியாது. அந்த குழந்தைகளுக்கும் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சையே முழு தீர்வாக இருக்கும்.ஆரம்பக்கால பாதிப்புகளை மருந்துகள் மூலம் குணப்படுத்திவிடலாம். உயிருக்கு ஆபத்து எனும் நிலையில் தான் கல்லீரல் அறுவை சிகிச்சை தேவைப்படும். பொதுவாக குழந்தைகளை தாக்கும் ஹெபடைட்டிஸ், அசுத்தமான உணவு மற்றும் நீரினால் ஏற்படும் ஏ மற்றும் இ வகை வைரஸ் நோயாக இருக்கும். சில பெண்களுக்கு, கர்ப்பமாக இருக்கும் போது மஞ்சள் காமாலை தாக்கி கல்லீரல் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. கர்ப்பமான பெண்களுக்கு இந்த பாதிப்பு ஏற்பட்டால் கவனமாக அணுக வேண்டும்.

தாயிடமிருந்து, குழந்தைக்கு பாதிப்பு பரவாமல் இருக்கத் தேவையான சிகிச்சைகளை செய்ய வேண்டும். இதனால் கர்ப்பமாக இருக்கும் பெண்கள் தங்களின் கண்கள் மஞ்சளாக தெரிந்தால் உடனே மருத்துவரை அணுக வேண்டும். அவர் பரிசோதித்து, தேவையான சிகிச்சையை விரைவிலேயே ஆரம்பித்து குணப்படுத்துவார்” என்கிறார் மருத்துவர் ஜாய் வர்கீஸ்.ஹெபடைட்டிஸ் – பி தாக்குதலிலிருந்து காத்துக்கொள்ள தடுப்பூசி இருக்கிறது. இந்த ஹெபடைட்டிஸ் பாதிப்பை 2030க்குள் ஒழிக்க வேண்டும் என உலக சுகாதார அமைப்பு உலக நாடுகளுக்கு அறிவுறுத்தி, அதற்கான விழிப்புணர்வைச் செய்து வருகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post போதையால் செக்ஸ் திறன் அதிகரிக்குமா?! (அவ்வப்போது கிளாமர்)
Next post தோலை தூக்கி எறியாதீங்க!! (மருத்துவம்)