மாடு அறுப்பு ஒரு பிரச்சினையா? (கட்டுரை)

Read Time:12 Minute, 33 Second

சின்னச்சின்ன விவகாரங்கள், ஒட்டுமொத்த நாட்டு மக்களினதும் தேசிய பிரச்சினைகள்போல காண்பிக்கப்படுவதும், பெரிய குழப்பங்கள், நெருக்கடிகளை மூடிமறைத்து, மக்களைத் திசை திருப்புவதற்கு அற்பத்தனமான விடயங்களை உருப்பெருப்பித்துக் காண்பிப்பதும், இலங்கை அரசியல் சூழலில் புதியதல்ல. இதற்கு முஸ்லிம்களே அண்மைக் காலத்தில் அதிகம் பலிக்கடாவாக்கப்பட்டு வருகின்றார்கள்.

முஸ்லிம்கள் ஹஜ்ஜூப் பெருநாளைக் கொண்டாடவுள்ள நிலையில், பள்ளிவாசல் வளாகங்களில் மாடுகளை அறுப்பது தடைசெய்யப்பட்டுள்ளது. அதற்கு மேலதிகமாக, அமைச்சரவைத் தீர்மானத்துக்கு ஒத்திசையும் விதத்தில், பொதுவாகவே மாடறுப்பைத் தடுப்பதற்கு அரசாங்கம் எத்தனங்களை எடுத்து வருகின்றது. இது, முஸ்லிம்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஹஜ்ஜூப் பெருநாள் நாள்களில், முஸ்லிம்கள் மாடு அல்லது ஆட்டை அறுத்து, அந்த இறைச்சியை ஏனையோருக்குத் தானமாக வழங்குகின்றார்கள். இதற்குப் பின்னால், மத ரீதியான வரலாற்றுக் கதையுள்ளது. ஆனால், பெருநாள் தினத்தில், ஏழை மக்கள் பசியுடன் இருக்கக் கூடாது என்பது, இதன் தார்ப்பரியமாகும்.

இந்நிலையில், முஸ்லிம் பண்பாட்டலுவல்கள் திணைக்களமானது, பள்ளிவாசல் வளாகங்களில், மாடுகளை இறைச்சிக்காக அறுப்பதைத் தடை செய்திருக்கின்றது. இதுகூட விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது. ‘யானை அடிப்பதற்கு முன்னதாக, தானே அடித்துக் கொள்கின்ற செயற்பாடு’ இது எனச் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

மேற்படி திணைக்கள பணிப்பாளர் அளவுக்கதிகமாக அதிகாரத்தை கையிலெடுத்துக் கொள்கின்றார் என்று குறிப்பிட்டுள்ள ஓரிரு முஸ்லிம் அரசியல்வாதிகள், எனவே இவ்வறிவிப்பை வாபஸ் பெற வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.

எவ்வாறிருப்பினும், கொரோனா வைரஸ் பரவல் நிலைமையைக் கருத்தில் கொண்டும், மாடறுப்பு தடைச்சட்டம் கொண்டு வரப்படுவதற்கு ஏதுவான களநிலையை நாமே ஏற்படுத்திக் கொடுத்து விடக் கூடாது என்பதற்காகவுமே, முன்கூட்டியே இவ்வறிப்பை விடுத்ததாக ‘வக்பு’ சபையின் தலைவர் பின்னர் விளக்கமளித்து இருக்கின்றார்.

இலங்கையில் முஸ்லிம்களை வழிப்படுத்துகின்ற சபைகள் எடுக்கின்ற எல்லாத் தீர்மானங்களும் நகர்வுகளும், சரி என்று கூற முடியாது. முக்கியமான தருணங்களில் பல சபைகள், அமைப்புகள் செயற்பாட்டுக் களத்தில் காணாமல் போய்விடுவதையும் குறிப்பிட்டாக வேண்டும்.

ஜம்மியத்துல் உலமா சபை, வக்பு சபை, முஸ்லிம் பண்பாட்டலுவல்கள் திணைக்களம் போன்றவை, சில தருணங்களில் சற்றுத் தைரியமான முடிவையும் எடுக்க வேண்டும். எல்லா விடயங்களிலும் ‘அவர்களை’ திருப்திப்படுத்த முடியாது. ஆனால், அதற்கான அரசியல்சார் பலமும் நெஞ்சுரமும், முஸ்லிம் சமூகத்துக்குள் இல்லை என்பதே நிதர்சனமாகும்.

எது எவ்வாறிருப்பினும், முஸ்லிம் பண்பாட்டலுவல்கள் திணைக்களம் விதித்துள்ள இத்தடையில், நிறையவே நியாயங்கள் இருப்பதைக் காணலாம். கொரோனா வைரஸ் பரவல் நெருக்கடி காரணமாக, இரண்டரை மாதங்களுக்கும் மேலாக மூடப்பட்டிருந்த பள்ளிவாசல்கள், தற்போதுதான் சுகாதாரக் கட்டுப்பாடுகளின் கீழ் திறக்கப்பட்டுள்ளன. பெருநாள் தினத்தில், பயணத்தடையோ, முடக்கமோ விதிக்கப்படுவதற்கும் வாய்ப்பிருக்கின்றது.

இந்நிலையில், பிராணிகளை அறுப்பதற்காகப் பள்ளிவாசல்களுக்குள் கூடுவதன் ஊடாக, தேவையற்ற சிக்கல்கள் ஏற்படலாம். பொதுச் சுகாதார பரிசோதகர்கள் புகுந்து, அன்டிஜன் பரிசோதனை செய்து, 10 பேருக்கு ‘பொசிடிவ்’ என்றால், அந்தத் தொற்றாளர்களுக்கு ‘பள்ளிவாசல் கொத்தணி’ என்றே பெயர் வைத்து விடுவார்கள்.

எனவே, யதார்த்தங்களின் அடிப்படையில் சிந்தித்தால், இந்த முடிவில் சற்று விவேகமும் கலந்துள்ளமை புலனாகின்றது. அதற்காக முஸ்லிம்களை வழிப்படுத்தும் தரப்பினர் எடுக்கின்ற எல்லா நகர்வுகளையும், புத்திசாலித்தனமானவை எனச் சொல்ல வரவில்லை.

ஆனால், இலங்கையில் இறைச்சிக்காக மாடுகள் அறுப்பதை முற்றாகத் தடை செய்வதற்கு, அரசாங்கம் எடுத்துவரும் நடவடிக்கைகளில் எந்த நியாயமும் இருப்பதாகத் தெரியவில்லை. மாறாக, முஸ்லிம் சமூகத்தை நோக்கிய இன்னுமோர் அநியாயமாகவே இதுவும் தெரிகின்றது.

இலங்கையில் மாடுகளை உணவுக்காக அறுப்பதைத் தடை செய்வதற்கான முயற்சிகள், நீண்டகாலமாகவே இடம்பெற்று வருகின்றன. இனவாத அமைப்புகள் இதற்கான அழுத்தத்தைப் பிரயோகித்து வந்த நிலையில், பின்னர் அதே கொள்கையுடன் சில அரசியல்வாதிகள் அதிகாரத்துக்கு வந்ததால் அரசாங்கத்திலுள்ள சிலர் இதில் குறியாக இருக்கின்றனர்.

இப்போது, சமூக வலைத்தளங்களில் ஒரு கடிதம் பகிரப்பட்டுள்ளது. அதாவது, பிராணிகளை அறுப்பதைத் தடைசெய்யும் சட்டமூலத்தைக் கொண்டு வருவதற்கு அமைச்சரவை ஏற்கெனவே அனுமதி அளித்துள்ளதாலும், அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாலும், அந்தத் தீர்மானத்துக்கு அமைவாகச் செயற்படுமாறு, உள்ளூராட்சி சபைகளுக்கு அறிவிக்கப்பட்டு உள்ளதாக அறிய முடிகின்றது.

இந்தக் கடிதம், அதிகாரபூர்வமானதும் உண்மையானதும் என்றால், இவ்வறிவிப்பு கொஞ்சம் கூட ஏற்றுக் கொள்ள முடியாததும், முஸ்லிம்கள் மீதான வெறுப்புணர்ச்சியின் இன்னுமொரு வடிவமாகவுமே அமையும்.

இங்கு, கவனிக்கப்பட வேண்டிய மூன்று விடயங்கள் உள்ளன.
ஒன்று, முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு தற்காலிகமானதாகும். கொரோனா வைரஸ் பரவலைக் கருத்தில் கொண்டு எடுக்கப்பட்ட ஒரு முடிவாகும். அமைச்சரவைத் தீர்மானத்தை மேற்கோள்காட்டி, இதை நீடிக்க அரசாங்கம் எண்ணக்கூடாது.

ஏனெனில், அமைச்சரவைத் தீர்மானங்கள், சட்டமூலமாக வரையப்பட்டு, அது நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டு, நிறைவேற்றப்பட்ட பின்னரே சட்ட அந்தஸ்தைப் பெறும். இது, இரவோடிரவாக நடந்து விடுகின்ற காரியமல்ல. அப்படிச் செய்ய முடியுமென்றால், அதை எப்போதோ செய்திருப்பார்கள்.

எனவே, பழைய அமைச்சரவை முடிவுகளைச் சொல்லி, உள்ளூராட்சி சபைகளின் ஊடாக, நிழல் சட்டமொன்றை அமல்படுத்த முனையக் கூடாது. அமைச்சரவையில் எடுக்கப்படுகின்ற தீர்மானங்களை, சட்டத்தைப் போல அமல்படுத்த ஒவ்வோர் அதிகாரத் தரப்பும் நினைத்தால், ஒவ்வொரு வாரமும் ஏகப்பட்ட அறிவிப்புகளை விடுக்க வேண்டி வரும் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.

இரண்டாவது விடயம், முஸ்லிம்களைப் பொறுத்தமட்டில், மாட்டிறைச்சி சாப்பிடுவது, அவர்களது மார்க்கக் கடமையல்ல; அது அவர்களது வழக்கமாகும். சிங்கள மக்களுக்குப் பருப்புக் கறி போல, முஸ்லிம்களின் உணவில் இறைச்சி இடம்பிடித்துள்ளது. எனவே, பருப்பைத் தடை செய்தால், சிங்கள மக்களின் உணர்வு எப்படி மேலெழும் என்பதை, ஆட்சியாளர்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

மூன்றாவது விடயம் முக்கியமானது. மாடுகளை அறுத்து விற்பதும், உண்பதுமே முஸ்லிம்கள் என்றாலும், மாடு சார்ந்த வர்த்தகம் பெரும்பாலும் சிங்கள மக்களைச் சார்ந்ததாகும். மாட்டுப் பண்ணைகள் சிங்களப் பிரதேசங்களிலேயே அதிகளவில் காணப்படுகின்றன. சில தமிழர்களும் விற்பனைக்காக மாடு வளர்க்கின்றனர்.இலட்சக்கணக்கான மாடுகள் இவ்வாறு அறுவைக்காக வளர்க்கப்படுகின்றன.

ஆகவே, இந்த மாடறுப்புத் தடை அமலுக்கு வந்தால், சிங்கள பண்ணையாளர்கள் கடுமையாகப் பாதிக்கப்படுவார்கள். தற்போதிருக்கின்ற மாடுகளை என்ன செய்வது எனத் தெரியாத நிலை உருவாகும். அத்துடன், மாடுகள் வீதிகளில் கட்டாக்காலிகளாகத் திரிந்து, உணவின்றி, நீரின்றி வீதிகளில் செத்துக் கிடக்கும் என்பதை, ஏற்கெனவே ஆய்வாளர்கள் சொல்லி விட்டார்கள்.

இந்த இடத்தில், ஒன்றைக் கவனிக்க வேண்டும். அரசாங்கம் மாடுகளை அறுப்பதற்கு தடை விதிக்க முனைகின்றதே தவிர, இறைச்சியைச் சாப்பிடுவதற்குத் தடை விதிப்பதாகக் கூறவில்லை. எனவே, கம்பனிகளைப் பதிவு செய்து, அதனூடாகக் கண்ணுக்குத் தெரியாத ஒரு தேசத்தில் அறுக்கப்பட்ட மாட்டிறைச்சியை அல்லது, மாட்டிறைச்சி என்று சொல்லப்படும் ஒருவகை இறைச்சியை இறக்குமதி செய்யும் மறைமுகத் திட்டம் இருக்கின்றதா என்ற சந்தேகமும் எழாமல் இல்லை.

உண்மையில், நாட்டில் இப்போதிருக்கின்ற பிரச்சினைகள், நெருக்கடிகளுடன் ஒப்பிடுகையில் இதுவெல்லாம் ஒரு பிரச்சினையே இல்லை.

எனவே, பிராணிகளை அறுக்கின்ற விடயத்தை, ஒரு முக்கியத்துவம்மிக்க விவகாரமாகக் காட்சிப்படுத்தி, இன்னும் குழப்பங்களை ஏற்படுத்துவதை விடுத்து, மாடு அறுக்கும் நடைமுறையை ஒழுங்குபடுத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்குமானால் ஒப்பீட்டளவில் நல்ல பெறுபேறுகள் கிடைக்கலாம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post உளவாளி அதிபரான கதை!! (வீடியோ)
Next post இரண்டாவது ஹக்!! (மகளிர் பக்கம்)