மனதை லேசாக்கும் பசுமை! (மகளிர் பக்கம்)
“இப்பூவுலகில் தாவரங்கள் இல்லை என்றால் மற்ற உயிர்கள் ஏதும் உயிர்த்திருக்க முடியாது. மனித வர்க்கமும் விலங்குகளும் தாவரங்களை நம்பியே உயிர் வாழ்கின்றன. மனிதனும் மற்ற உயிர்களும் சுவாசிப்பதற்கு இன்றியமையா தேவை பிராணவாயுவாகும். இந்தப் பிராண வாயுவைத் தயாரித்துக் கொடுக்கும் தொழிற்சாலை தாவரங்கள்தான்.
பசுமை நிறம் எப்பொழுதும் மன அமைதியை கொடுக்கும். அலை பாய்கின்ற மனதுக்கு அமைதியை கொடுக்கும் செடிகளின் இயல்பான அழகினைக் காணும்பொழுது மனிதனின் மனம் மாற்றம் அடைகின்றது… எழுச்சிபெறுகிறது… தூய்மையாகின்றது… கண நேரமாயினும் கவலையை மறந்து இயற்கையோடு இணைந்துவிடுகிறது. ஆகவே நாம் வசிக்கும் இடங்களில் எல்லாம் நமக்குப் பிடித்தமான செடிகளை வளர்த்தால் நாம் எப்பொழுதும் அவைகளை பார்த்து புத்துணர்வும், மன நிறைவும் அடையலாம்” என்கிறார் தோட்டக்கலைப் பண்ணை நிறுவனர் ஜெயந்தி.
உலகம் வெப்பமயமாதலை தடுத்து உலகில் பசுமைப் புரட்சியை ஏற்படுத்தும் மாபெரும் பணியில் பலர் ஈடுபட்டு வருகின்றனர். இதுவரை இந்தியாவில் 47,000 தாவர இனங்கள் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளன. இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் உள்ள காடுகளில் இருந்து சேகரிக்கப்பட்ட அரியவகை மரங்களின் விதைகளைக் கொண்டு 1’ அடி முதல் 8’ அடி – 10’ அடி வரை நாற்றுக்களாக வளர்க்கப்பட்ட மரங்களை மிகவும் குறைந்த விலையில் எவ்வித லாப நோக்கமுமின்றி அடக்க விலையில் வழங்கி வருகிறார் ஜெயந்தி. அது மட்டுமில்லாமல், இவரின் தோட்டக்கலைப் பண்ணையில், எங்கும் கிடைக்காத அரிய வகை மரங்களும், பூஜைக்கான பூச்செடிகளும், இந்தியாவிலுள்ள கோவில்களின் ஸ்தல விருட்சங்களான நாகலிங்கமரம், வன்னிமரம், வில்வமரம், மகிழமரம், பாரிஜாதம், செண்பகமரம், புன்னைமரம், சரக்கொன்றை போன்ற மரக்கன்றுகளை வளர்த்து வருகிறார்.
இது குறித்து கூறும் ஜெயந்தி, “மேற்கண்ட மரங்கள் மட்டுமின்றி மரவேலைப்பாடுகளுக்கு உகந்த உயர்ரக மரவகைகளான சில்வர் ஓக், ரோஸ் உட், செம்மரம், மகாகனி, இயல்வாகை, பூவரசு, சந்தனமரம், மரமல்லி போன்ற பல்வேறு மூலிகை மரங்களும் எங்களிடம் உள்ளது” என்கிறார். “‘மருந்தே உணவு’ என்ற நிலை மாறி ‘உணவே மருந்து’ என்ற நிலைப்பாடு வந்துள்ள நிலையில் மூலிகைகள் உபயோகம் இன்று மிகப் பிரபலம் அடைந்து வருகின்றது. உள் நாட்டு பயன்பாட்டைத் தாண்டியும், வெளி நாடுகளுக்கு ஏற்றுமதியும் எங்கள் பண்ணை மூலம் அனைத்து இடங்களுக்கும் செடிகளையும், மரச்செடிகளையும் வழங்கி வருகிறோம்.
ஏற்றுமதிக்கு தேவையான முதல் தர தாவரங்களான சோற்றுக்கற்றாழை, சிரியா நங்கை(பாம்பின் விஷம் முறிக்கும்), மருதாணி, கிருஷ்ணர் துளசி, நித்யகல்யாணி, ஆடாதோடா, நொச்சி, பேய் மிரட்டி, ஆவாரம்பூ போன்றவை மட்டுமல்லாமல் பல்வேறு மூலிகைச் செடிகளையும் பாதுகாத்து வளர்த்து வருகிறோம். இவைகளோடு கோவில் பூஜைக்குத் தேவையான நந்தியாவட்டை(6 ரகம்), செம்பருத்தி (20 கலர்), அரளி (8 கலர்), புளுமேரியா ஆல்பா (5 கலர்), விருச்சிப்பூ (4 ரகம்), போகன் வில்லா (15 ரகம்), ரோஜா, எட்டு அடுக்கு மல்லி, முல்லை, சாதி மல்லி போன்ற செடிகள் மட்டுமின்றி இன்னும் பல்வேறு விதமான ஆயிரக்கணக்கான வண்ண வண்ண குரோட்டன்ஸ் பூச்செடிகளையும் நாங்கள் வளர்த்து வருகிறோம். எங்களிடம் பழவகை மரங்களான கொய்யா, மாதுளை, தென்னை, தென்னை(மஞ்சள்), மா, பலா, ஒட்டு நெல்லி, முள்சீதா, சாத்துக்கொடி, நாவல் போன்ற மரச்செடிகளும் உள்ளது. இவைகளோடு போன்சாய், கள்ளிவகை போன்ற தாவர வகைகளும் வளர்க்கப்பட்டு வருகிறது” என்கிற ஜெயந்தி, செடி வளர்வதற்கான சூழல் பற்றியும் விவரித்தார்.
“தாவரங்கள் வளர தண்ணீர், மண் மிகவும் அவசியம். அதனுடன் தாவரங்கள் செழித்து வளர இயற்கை உரங்கள் அதி முக்கியமாகின்றது. செடிகளுக்கு தேவையான இயற்கை உரங்களையும் நாங்களே தயாரிப்பது மட்டுமில்லாமல் அதை எங்க பண்ணையில் உள்ள செடிகளுக்கு உபயோகித்து வருகிறோம். இதனுடன் தரமான மண்புழு உரத்தினையும் தயாரித்து செடிகளின் மண் வளத்தை பாதுகாத்து வருகிறோம். மேலும் எங்க பண்ணையில் செடிகளுடன் வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப இந்த உரங்களையும் வழங்குகிறோம்” என்று கூறும் ஜெயந்தி விவசாயத்துறையில் பட்டம் பயின்றவர்.
ஜெயந்தியின் பண்ணை முழுக்க கிராமப்புற மகளிர்களால் மட்டுமே நிர்வகிக்கப்பட்டு வருகின்றது. இதனால் கிராமப்புறத்தில் குறிப்பாக விவசாயத்தில் ஆர்வமுள்ள மகளிர்களுக்கு பயிற்சி அளித்து அவர்களுக்கு நிதி வருவாயை அளித்து வருகிறார்கள். மேலும் விவசாயம், தோட்டக்கலை சார்ந்த பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்பு பயிலும் மாணவர்களுக்குத் தேவையான அனைத்து தாவரங்களுக்கான அறிவியல் பெயர்களுடன் இலவச ஆலோசனையை வழங்கி வருகிறது.
இப்படி சேவை மனப்பான்மை ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு நாட்டில் பசுமை புரட்சியை ஏற்படுத்த வேண்டும் என்றால் முதலில் இளையதலைமுறையிடம் தோட்டக்கலை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். அதன் முன்னோடியாக திருமணம் மற்றும் இல்ல சுப நிகழ்ச்சிகளில், பூச்செடிகள், உயர்ரக பழவகைச் செடிகளை பரிசுப் பொருளாக வழங்க ேவண்டும் என்று ஊக்குவித்து வருகிறோம். தமிழ் நாட்டில் அனைத்து வகையான மூலிகைச் செடிகள், உயர்ரக மரவகைகள், நிழல் தரும் மரவகைகள், அலங்கார பூச் செடிகள் என அனைத்தும் ஒரே இடத்தில் பேரம்பாக்கம், திருவள்ளூரில் உள்ள எங்க பண்ணையில் அமைத்துள்ளோம்” என்கிறார் ஜெயந்தி.
Average Rating