கொக்கு சைவக் கொக்கு !! (கட்டுரை)

Read Time:5 Minute, 25 Second

வீடுகளில் செல்லப்பிராணிகளை வளர்ப்பதற்காகப் பலர், பிரத்தியேகமாக நேர காலங்களை ஒதுக்கி, பொருளாதாரங்களை செலவு செய்கிறார்கள்.

ஆனால், மட்டக்களப்பு, கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபைக்கு உட்பட்ட ஓட்டமாவடி பிரதேசத்தில், மீரா லெப்பை அப்துல் சலாம் என்ற மீன் வியாபாரி, கொக்கு ஒன்றை, ஏழு வருடங்களாக விசித்திரமான முறையில் வளர்த்து வருகிறார்.

“சுமார் ஏழு வருடங்களுக்கு முன்னர், எனது மீன் வாடியில் தொழிலை மேற்கொண்டு இருக்கும் போது, வாடிக்கு இரண்டு சின்னஞ்சிறிய கொக்குகள் வந்தன. அப்போது இரண்டு கொக்கு குஞ்சுகளுக்கும் மீன் வழங்கினேன். அதில் ஒரு குஞ்சு மீனை உட்கொள்ளவில்லை. மற்றையது மீன்களைத் தின்றது” என அந்தக் கொக்கின் சுவாரசியமான கதையை எம்மிடம் கூறினார்.

மீரா லெப்பை தனது செல்லப்பிராணி குறித்து தொடர்ந்தும் கூறினார். “உணவு கிடைக்கும் என்று தன்னம்பிக்கையில் வரும் அந்தக் கொக்கின் எதிர்பார்ப்பை நான், இன்று வரைக்கும் நிறைவேற்றி வருகிறேன். அது என் மனத்துக்கு ஆறுதலை தருகிறது. அந்தக் கொக்கு, நாளொன்றுக்கு இரண்டு தடவைகள் எனது மீன் வாடிக்கு வரும். காலை ஆறு மணியளவிலும் பகல் நேரத்திலும் அது வந்து செல்லும். சில நேரங்களில் மாலை நேரத்திலும் அது எனது கடைக்கு வந்து செல்லும். அதற்கு நான் மீன்களை வழங்குவேன். அது மீன்களை சுதந்திரமாக சாப்பிட்டு விட்டுச் செல்லும். நான் கொடுக்கும் மீன்களில், ஐஸ் கலக்கப்பட்டு குளிராக இருந்தால், அந்த மீனை, அது சிறிது நேரம் தண்ணீரில் போட்டு வைத்து குளிர் போனதும் உட்கொள்ளும். ஒரு நாளைக்கு, நூறு ரூபாய்க்கு மேற்பட்ட 400 கிராம் மீன்களை, கொக்குக்கு நான் கொடுத்து வருகிறேன்.

“இந்தக் கொக்கு எனது வாடிக்குள் அத்துமீறிப் புகுந்து, மீன்களை எடுத்துச் சாப்பிடாது. நான் கொடுக்கும் போது மாத்திரமே, அது மீன்களை உட்கொள்ளும். அந்தக் கொக்கு எல்லா வகையான மீன்களையும் சாப்பிடாது. அதற்கென்று விரும்பிய மீன்களை மாத்திரமே அது சாப்பிடும். அது இப்போது சால, நெத்தலி, கொய் போன்ற மீன் இனங்களை மாத்திரமே உட்கொண்டு வருகிறது. அது விரும்பாத மீன்களை நான் அதற்கு கொடுத்தால், அது சாப்பிடாமல் அருகில் நிற்கும் காகங்களுக்கு விட்டுக் கொடுத்து விலகிவிடும். அந்தக் கொக்கு, ஏனைய பறவைகளுடன் இப்படி நடந்து கொள்வது, அனைவரையும் ஆச்சரியப்படுத்துகிறது.

“எனது மீன் வாடியில் அது உண்ணும் மீன்கள் இல்லாத சந்தர்ப்பத்தில், நான் அருகிலுள்ள மீன் கடைகளுக்குச் சென்று, அது விரும்பி உண்ணும் மீன்களை பெற்றுக் கொடுப்பேன். நான் வேறு மீன் கடைக்கு மீன்களை எடுக்கச் சென்றால், அந்தக் கொக்கும் என் கூடவே வரும். சில சந்தர்ப்பங்களில் அந்தக் கொக்கு தாமதமாக வந்தாலும், அதற்கான மீன்களை நான் எடுத்து வைத்து, வரும்வரை காத்திருப்பேன். இந்தக் கொக்கு நூறு வீத சுதந்திரத்துடன் எனது செல்லப் பிராணியாக வாழ்ந்து வருகிறது.

“ஆற்றங்கரையோரம் எனது மீன் வாடி அமைந்திருந்தாலும், ஆற்றங்கரையோரம் வரும் மீன்களைப் பிடித்துச் சாப்பிடாமல், அது எனது கடைக்கே வருகிறது. மக்கள் குவிந்து நிற்கும் இடத்துக்கு அது அச்சமின்றி வந்து, தனக்கான மீன்களை உட்கொண்டு விட்டுச் சுதந்திரமாக செல்கின்றது. என்னை நம்பி வரும் அந்தக் கொக்குக்கு, என்றும் எனது வாடியில் மீன்கள் காத்திருக்கும். நான் அந்தக் கொக்கை, எனது வீட்டுப் பிள்ளை போன்றுதான் பார்த்து வருகிறேன்” என்று விசித்திரமாக நடந்து கொள்ளும் தனது செல்லப்பிராணி குறித்து பெருமையுடனும் பெருமிதத்துடனும் கூறினார் மீரா லெப்பை அப்துல் சலாம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வட்டமிடும் முஸ்லிம் எம்.பிக்கள் வாய்ப்பைச் சமூகத்துக்காக பயன்படுத்துவார்களா? (கட்டுரை)
Next post எய்ட்ஸை கண்டறிய புதிய கருவி!! (அவ்வப்போது கிளாமர்)