தங்க மங்கை தீபிகா!! (மகளிர் பக்கம்)

Read Time:6 Minute, 41 Second

ஒரே நாளில் வில்வித்தையில் ஹாட்ரிக் தங்கப்பதக்கத்தை வென்று சாதித்துள்ளார் இந்தியாவின் தீபிகா குமாரி. பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நடைபெற்ற உலகக் கோப்பை வில்வித்தை போட்டியில் (மூன்றாம் நிலை) ஒற்றையர், மகளிர் மற்றும் கலப்பு அணி என மூன்று விதமான போட்டிகளிலும் பங்கேற்ற அவர், அதில் தங்கம் வென்றுள்ளார். குறிப்பாக ஒற்றையர் ரீகர்வ் பிரிவில் தங்கம் வென்றதன் மூலம் மீண்டும் சர்வதேச அரங்கில் நம்பர் 1 வில்வித்தை வீராங்கனை என்ற அந்தஸ்தை எட்டியுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனியின் சொந்த ஊரான ராஞ்சி தான் தீபிகாவுக்கும் சொந்த ஊர். ராஞ்சியிலிருந்து 15 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ராத்து சட்டி (Ratu Chatti) என்ற கிராமத்தில் 1994 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 13 ஆம் தேதி பிறந்தார். தீபிகாவின் தந்தை ஷிவ்நாராயண் மஹாதோ வாழ்வாதாரத்திற்காக ஆட்டோ ரிக்‌ஷா ஓட்டி வந்துள்ளார். அவரது தாய் கீதா, செவிலியராக பணியாற்றி வந்துள்ளார். 11 வயதில் மாங்காயை டார்கெட்டாக செட் செய்து வில்வித்தை பயிற்சியை தொடங்கியுள்ளார்.

அதற்காக மூங்கிலாலான வில் மற்றும் அம்புகளை அவரே வடிவமைத்துள்ளார். அவருக்கு அந்த வித்தையை கற்றுக் கொடுத்தவர் அவரது உறவுக்கார பெண் வித்யா குமாரி. இவர் டாடா வில்வித்தை பயிற்சி அகாடமியில் பயிற்சி பெற்று வந்துள்ளார். வித்யாவிடம் வில்வித்தையை கற்றுக் கொண்ட தீபிகாவிற்கு, இதனை முறையாக பயிற்சி பெற வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது. தன் விருப்பத்தை தன் அம்மாவிடமும் தெரிவித்துள்ளார் தீபிகா. ஆனால் அவரது அம்மா கீதாவிற்கோ தனது மகளை மருத்துவராக பார்க்க வேண்டும் என்று ஆசை. இருப்பினும் மகளின் விருப்பத்திற்கு தடை ஏதும் சொல்லாத அவர் பயிற்சி பெற அனுமதித்துள்ளார். ஆரம்ப நாட்களில் தீபிகாவின் வில்வித்தை பயிற்சிக்கு தேவைப்படும் நிதி ஆதாரத்தை திரட்ட முடியாமல் அவரது பெற்றோர் திகைத்துள்ளனர்.

எப்படியோ 2005 வாக்கில் தீபிகா வில்வித்தை பயிற்சி அகாடமியில் பயிற்சிக்கு சேர்ந்துள்ளார். ஒரே ஆண்டில் தனது திறனை நிரூபித்து டாடா வில்வித்தை பயிற்சி அகாடமியில் பயிற்சிக்கு சேர்ந்துள்ளார். அதன் பிறகு மூன்று ஆண்டுகளுக்கு அவர் வீட்டுக்கே திரும்பவில்லை. கேடட் உலக சாம்பியன்ஷிப் பட்டத்தை 2009ல் வென்ற பிறகே வீடு திரும்பியுள்ளார் தீபிகா. அதன் பிறகு அவரது வாழ்வில் அனைத்தும் ஏறுமுகம்தான். டெல்லியில் கடந்த 2010 ஆம் ஆண்டு நடந்த காமன்வெல்த் போட்டியில் தீபிகா குமாரி சிறப்பாக விளையாடி புகழ்பெற்றார். தனிநபர் மற்றும் பெண்கள் அணி பிரிவில் இரண்டு தங்கப் பதக்கங்களை வென்றார்.

2010 ஆம் ஆண்டு ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் கலப்பு பிரிவில் வெண்கலம் வெல்ல முக்கியமான நபராக விளங்கினார். உலகக் கோப்பை மற்றும் உலக சாம்பியன்ஷிப் போட்டிகளிலும் தங்கம், வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்களைத் தொடர்ந்து வாங்கினார். 2012 லண்டன் ஒலிம்பிக்கில் இந்திய அணியின் தங்க வேட்கையை தணிப்பார் என எதிர்பார்ப்பு எகிறி இருந்தது. ஆனால் பதக்கம் ஏதும் வெல்லாமல் ஏமாற்றினார். தொடர்ந்து 2016 ரியோ ஒலிம்பிக் போட்டியிலும் பதக்கம் வெல்ல தவறினார்.

2014-ம் ஆண்டு ஃபோர்ப்ஸ் வெளியிட்ட இந்தியாவின் 30 வயதுக்குட்பட்ட மதிப்பு மிக்கவரின் பட்டியலில் இவரும் இடம் பிடித்தார். கடந்த 2020 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 30-ம் தேதி அட்டானு தாஸ் என்பவரை காதலித்து மணந்துகொண்டார். இவரும் ஒரு வில்வித்தை வீரர் ஆவார். அட்டானு ஆண்களுக்கான வில்வித்தை போட்டியில் உலக அளவில் ஒன்பதாவது இடத்தில் உள்ளார். கணவன் மற்றும் மனைவி இருவரும் இணைந்து தங்கப் பதக்கம் வாங்கியது தொடர்பாக தீபிகா பேசும்போது, “வில்வித்தைப் போட்டியின் வெற்றியின் மூலம் நாங்கள் மேட் ஃபார் ஈச் அதர் என்று நினைக்கிறேன். அதனால்தான் நாங்கள் இருவரும் திருமணம் செய்திருக்கிறோம்” என்று தெரிவித்துள்ளார்.

தீபிகா குமாரியின் வாழ்க்கை கதை LADIES FIRST என்ற ஆவணப்படமாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இப்போது உலகக் கோப்பை வில்வித்தை போட்டியில் அவர் வென்றுள்ள தங்கம் மீண்டும் ஒலிம்பிக் பதக்கத்தை அவர் வெல்வார் என்ற நம்பிக்கையை விதைத்துள்ளது. அடுத்த மாதம் டோக்கியோவில் நடைபெறும் ஒலிம்பிக்கில் அவர் பங்கேற்க உள்ளார். எதிர்வரும் போட்டிகளிலும் தீபிகா இந்த வெற்றி நடையை தொடங்குவார் என நம்புவோம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post உலகை கண்ணீரில் மூழ்கடித்த ஒரு கரடியின் கதை ! (வீடியோ)
Next post ஆயுர்வேதம் கூறும் சுகப்பிரசவத்திற்கான வழிமுறைகள்!! (மகளிர் பக்கம்)