வருத்தும் கணுக்கால் சுளுக்கு… சொல்வோம் குட்பை! (மருத்துவம்)
காயங்கள் (injuries) என்றதும் முதலில் விளையாட்டு வீரர்கள்தான் பலருக்கும் நினைவுக்கு வருவார்கள். காரணம், பொதுவாக விளையாட்டு வீரர்களுக்குதான் அதிகமாக காயங்கள் ஏற்படும் என்பதால்தான். ‘அப்போ, காயங்கள் விளையாட்டு வீரர்களுக்கு மட்டும்தான் ஏற்படுமா?’ என்றால் ‘இல்லை’ என்பதும், ‘பொது மக்களாகிய நமக்கும் ஏற்படும்’ என்பதையே பதிலாக சொல்லலாம். அவ்வாறு ஏற்படும் காயங்களில் ஒன்றுதான் கணுக்கால் சுளுக்கு என்பது.கணுக்கால் சுளுக்கு ஒருவருக்கு ஏன் ஏற்படுகிறது, அதனை எவ்வாறு அறிந்து முழு தீர்வு காண வேண்டும் என்பதை பற்றி இங்கே விரிவாகக் காணலாம்.
கணுக்கால் மூட்டு என்பது?
கணுக்கால் மூட்டு (ankle joint) என்பது மேலிருந்து இரண்டு நீளமான எலும்புகளும், கீழே பாதத்தின் முதல் எலும்பும் ஒரு சேர அமைவது. உறுதியான இந்த மூட்டுகள்தான் உடலின் மொத்த எடையையும் தாங்குவது. நிற்கும்போது, நடக்கும்போது, ஓடும்போது, குதிக்கும்போது என ஒவ்வொரு முறையும் நம் கணுக்கால் மூட்டு நம் உடல் சரியாய் செய்ய வேண்டிய வேலையை செய்வதற்கு உறுதியாக, பலமாய் இருந்து உதவி புரிகிறது. கணுக்காலை சுற்றி தசைகள், தசைநார்கள், இணைப்பு ஜவ்வுகள் (ligaments) போன்ற திசுக்கள் சூழ்ந்திருக்கும்.
உள்ளே என்ன நடக்கும்…?
ஓர் எலும்பும் இன்னோர் எலும்பும் இணைந்து ஒரு மூட்டு உருவாகும். அந்த இரு எலும்புகளை இணைத்து இறுக்கமாய் பற்றிக்கொள்வதே ‘இணைப்பு ஜவ்வுகள்’. அவ்வாறான இந்த இணைப்பு ஜவ்வுகள்தான் மிகவும் திடமான நெகிழ்வு தன்மையை உடையது. இதனால் நாம் மூட்டுகளை அசைக்கும்போது எலும்புகளை ஓரிடத்தில் நிலையாய் வைத்திருக்கும். சுளுக்கு என்பது, இந்த இணைப்பு ஜவ்வுகள் தன் விரியும் தன்மையை தாண்டி விரிந்தால் (over strech) நிகழும். அதாவது, ஜவ்வு இருக்க வேண்டிய நிலையில் இருந்து வெகுதூரம் திரும்பிக் கொள்வதே (twist) ஆகும். சுளுக்கின் பாதிப்பு அடுக்குகள்(கண்ணுக்கு தெரியாத அளவு கிழிவது முதல் முழுவதுமாக கிழிவது வரை வரையறுக்கப்பட்டுள்ளது)
* நிலை 1: மிகவும் நுணுக்கமான கீறல் ஏற்படும். இது லேசான பாதிப்பு. மருத்துவம் பார்க்காமலேயே வீட்டில் பாதிக்கப்பட்ட காலுக்கு ஐஸ் ஒத்தடம், போதுமான ஓய்வு கணுக்காலுக்கு தருவது என செய்து வந்தால் போதும் எளிதில் உள்ளே ஏற்பட்ட மெல்லிய கீறல் ஆறிவிடும்.
* நிலை 2: அளவிலும், ஆழத்திலும் கொஞ்சம் பெரிய காயம் ஏற்படுவது. இதற்கு சிகிச்சை பெறுவது அவசியம். பலர் இந்த நிலையில் சிகிச்சை எடுக்காமல் இருப்பர் அல்லது பாதி சிகிச்சையில் விட்டுவிடுவர். இதனால் பின்நாட்களில் பல்வேறு பாதிப்புகள் வரக்கூடும்.
* நிலை 3: திசு முழுவதுமாய் கிழிந்து அதாவது, முழுமையாய் அறுபட்டுவிடும். இது குறைந்த எண்ணிக்கையில்தான் நிகழும் எனினும், முழுதாக சிகிச்சை எடுப்பதும், மேலும் அடிக்கடி இவ்வாறு நிகழலாம் என்பதால் தொடர்ந்து இயன்முறை மருத்துவரின் ஆலோசனை மூலம் உடற்பயிற்சிகள் செய்து வருவதும் அவசியம். வெகு சில நேரங்களில் அறுவை சிகிச்சையும் தேவைப்படும்.
வயது மற்றும் பாலினம்…
* பதினைந்து வயது முதல் யாருக்கு வேண்டுமானாலும் வரலாம்.
* பெண்களை விட ஆண்களுக்குதான் அதிகம் ஏற்படும்.
* முப்பது வயதிற்கு மேற்பட்ட பெண்கள் அதிகமாக பாதிக்கின்றனர் என்கிறது ஆய்வு.
யாருக்கெல்லாம் வரலாம்…?
* வார இறுதி நாட்களில் மட்டும் விளையாடுபவர்களுக்கு, அதாவது சரிவர உடற்பயிற்சி செய்யாமல் வாரத்தில் சனி, ஞாயிறுகளில் மட்டும் நேரம் கிடைப்பதால் நாள்முழுவதும் கிரிக்கெட் போன்ற விளையாட்டுகளில் ஈடுபடுவோருக்கு நிகழலாம்.
* கணுக்காலில் ஏற்படும் காயங்களில் பாதிக்கும் அதிகமாக நிகழ்வது விளையாட்டு வீரர்களின் விளையாட்டு செயல்கள் (sports activity) மூலமே. அதிலும் கால்பந்து, கிரிக்கெட், கூடைப்பந்து போன்ற விளையாட்டுகளில் அதிகம் நிகழும்.
* சமநிலை இல்லாத தரையில் நடப்பது, ஓடுவது, குதிப்பது.
* அதிக உயரம் கொண்ட காலணிகளை அணிவது.
* சரியான பொருத்தம் இல்லாத காலணிகளை அணிவது.
* விளையாட்டு வீரர்கள் குதிப்பது போன்ற செயல்களில் ஈடுபடும்போது தவறான முறையில் கால்களை கீழே ஊன்றும் போது.
* சில சமயம் படிக்கட்டுகளில் தடுக்கி கீழே விழும்போது.
* உடல் பருமன் கொண்டவர்கள்.
அறிகுறிகள்…
* காயம் ஏற்பட்ட இடத்தில் மிகுந்த வலி உண்டாவது.
* வீக்கம் ஏற்படுவது.
* ரத்தம் கட்டுவது.
* காயம் ஏற்பட்டதால் அந்த இடம் சிகப்பாய் மாறுவது.
* நடக்க முடியாமல் போவது (கால் ஊன்றும்போது வலியின் மிகுதியால் நடப்பதற்கு சிரமம் உண்டாகும்).
* நாள்பட்ட நிலை வந்துவிட்டால் அடிக்கடி நடக்கும்போது கால் நிலை கொள்ளாமல் திருப்பிக் (twist) கொள்வது போன்று நிகழலாம்.
எப்படி கண்டறிவது…?
காயம் ஏற்பட்டதும் எலும்பு மூட்டு மருத்துவரை அணுகி இது இணைப்பு ஜவ்வு காயமா அல்லது எலும்பு முறிவா என பரிசோதனை செய்து தெரிந்துகொள்ள வேண்டும். வேண்டுமென்றால் முதலில் எக்ஸ்ரே பரிந்துரைப்பர். பின் எம்.ஆர்.ஐ ஸ்கேன் எடுக்க சொல்வர்.
தீர்வு முறைகள்…
வீட்டில் செய்ய வேண்டியது
* காலினை மேலும் தரையில் ஊன்றாமல் பாதுகாப்பது.
* காலிற்கு பெரிய அசைவுகள் கொடுக்காமல் ஓய்வு கொடுப்பது.
* ஐஸ் ஒத்தடம் கொடுப்பது (தொடர்ந்து பதினைந்து நிமிடங்கள் கொடுக்க வேண்டும்).
* compression bandage என்று சொல்லப்படும் இறுக்கமான சாக்ஸ்சை காலில் அணிந்து கொள்வது.
* வீக்கம் ஏற்படாதவாறு காலினை உயர்த்தி வைத்துக் கொள்வது போன்ற அறிவுரைகளை இயன்முறை மருத்துவர் வழங்குவார்கள்.
இயன்முறை மருத்துவம்…
* இயன்முறை மருத்துவ உபகரணங்கள் மூலம் வலியை குணப்படுத்துவர்.
* பின் சில பயிற்சிகள் மூலம் சுற்றியிருக்கும் தசைகளை தளரச் செய்வது, கணுக்கால் மூட்டினை அதன் முழு அளவு அசையும் வரை பயிற்சிகள் செய்வது போன்றவற்றை கற்றுக்கொடுப்பர்.
* பிறகு கணுக்கால் மூட்டை சுற்றியுள்ள தசைகள் வலுப்பெற தனி உடற்பயிற்சிகளும் செய்வதற்கு கற்றுக் கொடுப்பர்.
* இதன் இடையில், வலி சரியாகிவிட்டது என இயன்முறை மருத்துவத்தை முழுவதுமாக முடிக்காமல் பாதியில் விட்டால் நாள்பட்ட காயங்களாக மாற வாய்ப்புண்டு. அதாவது வலி, வீக்கம் எல்லாம் குறைந்திருக்கும். ஆனால் கிழிந்த ஜவ்வு முற்றிலும் குணமாகி இருக்காது. எனவே மேலும் நடக்கும்போது, ஓடும்போது ஜவ்வு முற்றிலும் கிழிந்து போவதோடு, இம்முறை அதனை சரிசெய்ய வெகு மாதங்கள் ஆகும் என்பதை மனதில் நிறுத்திக் கொள்ளவேண்டும்.
வலி நிவாரணி மாத்திரைகள் போடுவதால் அந்த நேரம் மட்டும்தான் பலன் என்பதையும், அதனால் கிழிந்த ஜவ்வு கூடாது என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும். அத்தோடு அது தேவையற்ற பக்கவிளைவுகளை உண்டாக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
எனவே எந்தவொரு ஜவ்வு பிரச்சனையும் சரியான மருத்துவத்தை முழுவதுமாக செய்துவந்தால் மட்டுமே முற்றிலும் குணமாகும் என்பதில் எந்தவித ஐயமும் இல்லை என்பதனை அனைவரும் உணர்ந்தால் போதும் ‘வலி என்பது நிச்சயம் வழியாக மாறும்’.
Average Rating