எவ்வளவு தடை வந்தாலும்… நாங்க சமாளிப்போம்!! (மகளிர் பக்கம்)
கடந்த இரண்டாண்டாக கொரோனா தாக்கம் பலரின் வாழ்க்கையில் பெரிய பாதிப்பினை ஏற்படுத்தியுள்ளது. இந்த தாக்கம் எப்போது தணியும் என்று இன்று வரை சரியாக கணிக்க முடியாத நிலையில் தான் நாம் அனைவரும் பயணித்து வருகிறோம். இதனால் சிறு வியாபாரி முதல் பெரிய வியாபாரி வரை அனைவரும் பாதிக்கப்பட்டுள்ளனர். பல சிக்கல்கள், பிரச்னைகளை தாண்டி தனக்கான ஒரு வாழ்வாதாரம் ஆரம்பித்த பாலமுருகன்-பிரியங்கா தம்பதியினருக்கு கடந்த மாதம் போடப்பட்ட ஊரடங்கு அவர்களின் பிரச்னைகளை மேலும் ஒரு படி அதிகரிக்கத்தான் செய்திருக்கிறது. இருந்தாலும் நம்பிக்கை இழக்காமல், மறுபடியும் முதல் படியில் இருந்து தங்களின் வாழ்வாதாரத்தை துவங்கியுள்ளனர்.
‘‘நான் பிறந்தது, வளர்ந்தது, படிச்சது எல்லாம் சென்னை ஆதம்பாக்கம் தான். கணிதத்தில் இளங்கலை பட்டப்படிப்பு முடிச்சிட்டு ஒரு ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் ஒரு வருடம் வேலைப் பார்த்தேன். இதற்கிடையில் எங்க வீட்டில் எனக்கு திருமணம் பேசி முடிச்சாங்க. என் கணவர் பாலமுருகன், தனியார் நிறுவனத்தில் வேலைப் பார்த்து வந்தார்’’ என்று பேசத் துவங்கினார் பிரியங்கா. ‘‘கடந்த ஆண்டு ஜனவரி மாசம் தான் எங்களுக்கு திருமணமாச்சு. கல்யாணமாகி மூன்று மாசம் தான் எங்களின் சந்தோஷமான நாட்கள்னு சொல்லணும். அதில் மிகப்பெரிய சந்தோஷம் நான் கருவுற்றிருந்தேன். ஆனால் அந்த தருணங்களை எங்க இருவராலும் கொண்டாட முடியாத நிலை ஏற்படும்ன்னு நான் இருவரும் கனவில் கூட நினைச்சு பார்க்கல. எங்க வாழ்வில் அப்படி ஒரு இடி விழும்ன்னு நாங்க எதிர்பார்க்கல’’ என்றவரை தொடர்ந்தார் அவரின் கணவர் பாலமுருகன்.
‘‘திருச்சி, மேட்டுப்பாளையம் கிராமம் தான் என்னோட சொந்த ஊர். நான் எட்டாம் வகுப்பு படிக்கும் போது சென்னையில் குடும்பத்தோடு செட்டிலாகிட்டோம். பி.பி.ஏ முடிச்சிட்டு மார்க்கெட்டிங் துறையில் வேலைக்கு சேர்ந்தேன். வாழ்க்கை எந்த தடங்களும் இல்லாமல் நகர்ந்து கொண்டிருந்தது. திருமணமாகி மூன்று மாசத்தில் என்னுடைய நடையில் கொஞ்சம் வித்தியாசம் ஏற்பட்டதாக என் மனைவி சொன்னாங்க. எனக்கும் 100 மீட்டருக்கு மேல் நடந்தா இடுப்பு பகுதியில் வலி ஏற்பட ஆரம்பிச்சது. டாக்டரிடம் போன போது, பரிசோதித்தவர் அறுவை சிகிச்சை செய்யணும்ன்னு சொல்லிட்டார். ஒன்னுமே புரியல.
ஸ்கேன் செய்து பார்த்த போது, இடுப்பு மற்றும் தொடை பகுதியை இணைக்கும் மூட்டிற்கு ரத்தம் ஓட்டம் இல்லாததால் அந்த எலும்பு இறந்துவிட்டதுன்னு சொன்னாங்க. அதாவது அந்த மூட்டு எலும்பு மண் போல நொறுங்கி விட்டதாக டாக்டர் கூறினார். அதனால் கூடிய விரைவில் எலும்பு மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்யணும், இல்லைன்னா என்னால் எதிர்காலத்தில் நடக்கவே முடியாம போயிடும்ன்னு சொல்லிட்டாங்க.
கல்யாணம் முடிஞ்ச மூணே மாசத்தில் இந்த மாதிரி ஒரு சூழல். என்ன செய்றதுன்னே தெரியல. அந்த நேரத்தில் தான் கொரோனாவின் தாக்கமும் அதிகமாக இருந்தது. ஊரடங்கு வேறு. மேலும் மருத்துவர்கள் எல்லாரும் கொரோனாவில் கவனம் செலுத்தி வந்ததால், அறுவை சிகிச்சை செய்யக்கூடிய வாய்ப்பு அமையவில்லை. இந்த நிலையில் வேலைக்கும் போகமுடியல. பெரும்பாலும் படுத்துக் கொண்டே தான் இருப்பேன். கொஞ்ச நேரம் சேரில் அமர்ந்தாலும் வலி வந்திடும். போய் படுத்திடுவேன். கர்ப்பமாக இருந்தாலும், என் மனைவி தான் என்னை முழுசா பார்த்துக்கிட்டாங்க’’ என்றவர் வருமானம் இல்லாத காரணத்தால் தன் குடும்பத்தை நடத்த ரொம்பவே சிரமப்பட்டுள்ளார்.
‘‘எனக்கும் சரி என் கணவரின் குடும்பத்தினருக்கும் பெரிய அளவு பேக்கிரவுண்ட் எல்லாம் கிடையாது. ரொம்பவே சாதாரண குடும்பம். வரும் சம்பளத்தைக் கொண்டு தான் வாழ்க்கையை நகர்த்தி வந்தோம். இப்போது இவரால் மட்டுமல்ல என்னாலும் வேலைக்கு போக முடியாத நிலை. அந்த சமயத்தில் எங்களுக்கு தெரிந்தவர்கள் கொஞ்சம் பண உதவி செய்தார்கள். மேலும் தொண்டு நிறுவனங்கள் மூலமாகவும் அரிசி, பருப்பு, எண்ணை போன்ற நிவாரணப் பொருட்கள் கிடைத்தது. அதைக் கொண்டு தான் வாழ்க்கையை சமாளிச்சோம்.
காரணம் இவருக்கு அறுவை சிகிச்சை முடிந்ததும், பழையபடி வேலைக்கு போகலாம். வாங்கிய கடனை எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக அடைச்சிடலாம்ன்னு ஒரு நம்பிக்கை இருந்தது. ஆனால் அதுவும் நீண்ட நாட்கள் நிலைக்கவில்லை. டாக்டர் அறுவை சிகிச்சை செய்தாலும் வண்டி ஓட்டக்கூடாது, அதிகம் ஸ்ட்ரெயின் செய்யக்கூடாது, சின்ன வண்டிதான் ஓட்டணும்ன்னு சொல்லிட்டார். இவரால் ஒன்பது மணி நேரம் உட்கார்ந்த நிலையிலோ அல்லது வெளியே சென்றோ வேலை செய்ய முடியாத சூழல்.
என்ன செய்றதுன்னே தெரியல. இதற்கிடையில் எங்களுக்கு மகளும் பிறந்துட்டா. அவங்க வந்த பிறகு தான் எங்களின் வாழ்க்கையில் பெரிய மாற்றமே ஏற்பட்டது. அது நாள் வரை தடைபட்டுக் கொண்டிருந்த அறுவை சிகிச்சை செய்யும் சூழலும் அமைந்தது. குழந்தை பிறந்திருந்ததால், நான் அம்மா வீட்டில் இருந்தேன். இவரை கூட இருந்து பார்த்துக் கொள்ள முடியல என்ற வருத்தம் தான் எனக்கு. இவரின் அம்மா தான் இவரை பார்த்துக்கிட்டாங்க’’ என்று கண்கலங்கிய பிரியங்காவை சமாதானம் செய்த பாலமுருகன் ெதாடர்ந்தார்.
‘‘அறுவை சிகிச்சை எல்லாம் நல்லபடியா முடிஞ்சது… எடுத்து என்ன? என்று நானும் என் மனைவியும் யோசிக்க ஆரம்பிச்சோம். உணவு சார்ந்த தொழில் செய்யலாம்ன்னு திட்டமிட்டோம். என் மனைவி நல்லாவே சமைப்பாங்க. என் சித்தி பொண்ணு பிறந்தநாளுக்கு இவங்க தான் மூன்று கிலோ சிக்கன் பிரியாணி செய்து கொடுத்தாங்க. எல்லாரும் சாப்பிட்டு நல்லா இருக்குன்னு சொல்ல… பிரியாணி கடையே திறக்கலாம்ன்னு முடிவு செய்தோம். பிரியாணி கடைகள் நிறைய இருக்கு. அதில் நாம எப்படி வித்தியாசப்படணும்ன்னு இவங்க பல முறை செய்து பார்த்து ஒரு பெஸ்ட் டேஸ்டுக்கு கொண்டு வந்தாங்க. அடுத்து கடை திறக்கணும்.
தற்கு குறைந்த பட்சம் இரண்டு லட்சம் தேவை. ஏற்கனவே நிறைய கடன் வாங்கி இருக்கோம். மறுபடியும் கேட்க சங்கடமா இருந்தது. இந்த சமயத்தில் எங்க வீட்டில் இருந்து நடக்கிற தூரத்தில் ஒரு சிக்கன் பக்கோடா கடை இருந்தது. அவங்க மாலை ஐந்து மணிக்கு தான் கடையை திறப்பாங்க. காலையில் கடை பூட்டியே இருக்கும். அவரை சந்தித்து பேசி, காலையில் நாங்க எடுத்துக் கொள்வதாகவும், கடைக்கான வாடகையை இருவரும் ஷேர் செய்துக்கலாம்ன்னு சொன்னேன். அவரும் சம்மதிக்க கையில் இருந்த காசைக் கொண்டு கடைக்கு தேவையான பொருட்கள், பாத்திரம் எல்லாம் வாங்கினோம். கடைசியில் அடுப்பு வாங்க 1500 ரூபாய் குறைவா இருந்தது.
அந்த நேரத்தில் அடுப்பு கடைக்காரர் செய்த உதவியை மறக்கவே முடியாது. என் மேல் நம்பிக்கை வைத்து பாக்கி 1500 ரூபாயை இன்ஸ்டால்மென்டில் கொடுங்கன்னு சொன்னார். இவ்வளவு பேர் என் மேல் நம்பிக்கை வைத்து உதவியதால் எங்களின் உணவும் தரமானதாக இருக்கணும்ன்னு முடிவு செய்தோம். அந்த நேரத்தில் தான் ஃபிரைட் ரைஸ் சாப்பிட்டு குழந்தை இறந்துவிட்டதாக செய்தி வந்தது. ரொம்பவே கஷ்டமா இருந்தது. ஏதோ எங்கோ நடந்த தவறு குழந்தையின் உயிரை பறிச்சிடுச்சு. அப்ப முடிவு செய்தோம், உடலுக்கு கெடுதல் தரக்கடிய எல்லா பொருட்களையும் தவிர்க்கணும்ன்னு. பாமாயில், அஜினோமோட்டோ, ஃபுட் கலர் எதுவுமே நாங்க பயன்படுத்துவதில்லை. பிரியாணி செய்ய செக்கு கடலை எண்ணை.
கத்தரிக்காய் தொக்கிற்கு நல்லெண்ணைதான் பயன்படுத்தி வருகிறோம். பிரியாணிக்கு தேவையான மசாலா கூட நாங்களே வீட்டில் தயாரிக்கிறோம். அதே போல் தயிரும் எருமை மாட்டு பாலை காய்ச்சி அதில் தயிர் உறை போட்டு பயன்படுத்துகிறோம். காய்கறி, சிக்கன் எல்லாம் தினமும் வாங்கி செய்கிறோம். அப்பதான் ஃப்ரெஷ்ஷா இருக்கும்’’ என்றவர் குடும்பமாக இதில் இறங்கி வேலை செய்கிறார்.
‘‘கடைக்கு போறது அவரின் வேலை. சமையல் நான் பார்த்துப்பேன். நாங்க இருவரும் கடைக்கு வந்திடுவதால் அம்மா குழந்தையை பார்த்துக்கிறாங்க. அது மட்டுமில்ல வெங்காயம், பூண்டு, இஞ்சி எல்லாம் முதல் நாள் இரவே உரிச்சி வச்சிடுவாங்க. பிரியாணியின் விலை ரூ.100 தான். இதில் சிக்கன் 65, வெங்காய பச்சடி, கத்தரிக்காய் எல்லாம் தறோம். ஒரு ஸ்வீட் செய்யணும்னு விருப்பம் இருக்கு. இப்ப இருக்கிற சூழலில் அது செய்ய முடியல. ஆனால் எதிர்காலத்தில் கண்டிப்பா செய்யணும்ன்னு எண்ணம் இருக்கு’’ என்ற பிரியங்கா மீண்டும் முதலில் இருந்து தங்கள் வாழ்வாதாரத்தை துவங்கி இருப்பதாக தெரிவித்தார்.
‘‘கடந்த மாதம் ஊரடங்கிற்கு மூன்று மாசம் முன்பு தான் கடையே ஆரம்பிச்சோம். முதலில் ஐந்து பேர் தான் சாப்பிட வந்தாங்க. ஐந்து பத்து பேர் வந்து சாப்பிடுவதால், பெரிய அளவில் லாபம் பார்க்க முடியவில்லை. எங்க கை காசு போட்டு தான் செய்ய வேண்டி இருந்தது. அதனால நிறுத்திடலாம்ன்னு நான் இவரிடம் சொன்னேன். இவர் தான் சுவை மற்றும் தரமான உணவு தரோம். கண்டிப்பா சாப்பிட வருவாங்கன்னு சொன்னார். மறுநாள் அவர் சொன்னது போலவே, எங்க கடையின் அருகே உள்ள நிறுவனத்தில் வேலைப் பார்ப்பவர் பிரியாணியை சாப்பிட்டு, நான் இனிமேல் உங்க கடையில் தான் சாப்பிட வருவேன். என் நண்பர்களையும் அழைத்து வருவேன் என்றார்.
மேலும் ஒரு நபர் எங்க பிரியாணி சாப்பிடவே சென்னை புரசைவாக்கத்தில் இருந்து ஆதம்பாக்கம் வந்தார். அவர் சொன்ன விஷயம் எங்களை ரொம்பவே டிஸ்டர்ப் செய்தது. ‘உங்க நிலைப் பற்றி கேள்விப்பட்டேன். என்னால் உங்களுக்கு ஒரு உதவி செய்யணும்ன்னா, 100 ரூபாய் கொடுத்து பிரியாணி சாப்பிடணும். அதற்காகவே வந்தேன்’ என்றார். இத்தனைக்கும் அவர் அந்த காசைக்கூட சில்லரையா தான் தேடி தேடி கொடுத்தார்.
எங்களுக்காகவே கடவுள் இவர்களை அனுப்பி வைத்தது போல இருந்தது. கொஞ்சம் கொஞ்சமா பிக்கப் ஆன போது மறுபடியும் ஊரடங்கு போட்டுட்டாங்க. கடையை ஆரம்பிச்ச போது தான் எங்களால் நடத்த முடியுமான்னு பயம் இருந்தது. இப்ப இல்லை. மறுபடியும் முதலில் இருந்தே ஆரம்பித்தாலும் எங்களால் முடியும்னு ஒரு நம்பிக்கை இருக்கு. அது மட்டுமில்லாமல் பிறந்த நாள், பார்ட்டி என பத்து கிலோ வரை செய்து தறோம். இப்ப கூட ஒரு சீரியல் குழுவிற்காக 50 பிரியாணி கேட்டு இருக்காங்க. அதற்கு தான் ரெடி செய்து கொண்டு இருக்கோம்’’ என்றார் பிரியாணியை கிளறியபடி பிரியங்கா.
Average Rating