வடக்கில் வாள்வெட்டு, வன்முறைகள்: ‘லீ’ பின்னணி !! (கட்டுரை)
கோண்டாவில், செல்வபுரம் பகுதியில் ஜூன் 30ஆம் திகதி இரவு 8.30 மணியளவில் இடம்பெற்ற வன்முறை சம்பவத்தில், ஒருவரின் கை துண்டாடப்பட்டதுடன் எட்டுப் பேர் படுகாயமடைந்தனர். சம்பவம் தொடர்பில் பொலிஸார், மூவரைக் கைது செய்திருந்தனர்.
அவர்களிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் , ‘ஆவா’ குழுவில் இருந்து சிலர் பிரிந்து, ‘லீ’ குழுவை ஆரம்பித்து உள்ளனர் எனவும் அந்தக் குழுவுக்கு உத்வேகம் அளிக்கும் பாடலை உருவாக்கி இணையத்தில் பதிவேற்றியமையால் தான் ‘லீ’ குழுவை சேர்ந்தவர்கள் மீது தாக்குதல் மேற்கொண்டு , பாடல் உருவாக்கிய கலையகத்தையும் (ஸ்டூடியோ) தீயிட்டு கொளுத்தியதாக வாக்குமூலம் அளிக்கப்பட்டுள்ளது.
இந்தக் குழுவுக்கு பண உதவிகள், வெளிநாட்டில் இருந்து குறிப்பாக, சுவிஸ் நாட்டில் இருந்து கிடைக்கப்பெறுவதாக பொலிஸார் கூறியிருந்தனர்.
அதேபோல், ஜூன் 30ஆம் திகதி முல்லைத்தீவு, கள்ளப்பாடு பகுதியில் வீடொன்றுக்குள் புகுந்த கும்பல், நடத்திய வாள் வெட்டுத் தாக்குதலில் ஒருவர் படுகாயமடைந்ததுடன் வீட்டில் நின்ற காரும் தீக்கிரையாக்கப்பட்டது. சம்பவம் தொடர்பில் பொலிஸார், யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஆறு பேரை ஜூலை ஆறாம் திகதி கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்களிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில், இவர்களும் ‘ஆவா’ குழுவைச் சேர்ந்தவர்கள் என்றும் இவர்களுக்கும் சுவிஸ் நாட்டில் இருந்து பணம் கொடுத்து, முல்லைத்தீவில் தாக்குதல் நடத்துமாறு கூறப்பட்டதன் அடிப்படையிலையே, தாக்குதலை இவர்கள் மேற்கொண்டதாகவும் பொலிஸார் கூறினர்.
கைது செய்யப்படுபவர்கள் யார் ?
‘ஆவா’ குழு என ஒரு குழு இயங்குவதாக, கடந்த ஏழு ஆண்டு காலமாக பொலிஸாரால் கூறப்பட்டு வரும் நிலையில்,ஏழு வருடங்கள் கடந்தும் அந்தக் குழுவை இல்லாதொழிக்க முடியவில்லை. அல்லது, அதன் செயற்பாட்டை முடக்க முடியவில்லை.
ஆரம்ப காலத்தில், ‘ஆவா’ குழுவைச் சேர்ந்தவர்கள் என அடையாளப்பப்படுத்தப்பட்ட நபர்களில் சிலர், வெளிநாடுகளுக்குத் தப்பிச் சென்று உள்ளனர். பலருக்கு யாழில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் வழக்குகள் நிலுவையில் உள்ளன. பல வழக்குகளில் அவர்கள் நிபந்தனை பிணையில் விடுவிக்கப்பட்டு உள்ளதால், அவர்கள் மீண்டும் வன்முறைகளில் ஈடுபட்டால், பிணை இரத்து செய்யப்பட்டு வழக்கு விசாரணைகள் முடிவடையும் வரையில் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்படுவார்கள். அதனால், ஆரம்ப காலத்தில் இயங்கியவர் என அடையாளப்படுத்தப்படுபவர்கள் பெரும்பாலும் விலகியே இருக்கின்றார்கள்.
‘ஆவா’ குழு என ஒரு குழு இயங்குவதாகக் கூறப்பட்டு ஏழு ஆண்டுகள் கடந்துவிட்ட போதிலும், கைது செய்யப்படும் நபர்கள் பெரும்பாலும் 25 வயதுக்கு உட்பட்டவர்களாகவே இருக்கின்றார்கள்.
ஒரு கட்டமைக்கப்பட்ட குழுவாகவோ, அமைப்பாகவே இயங்காத ‘ஆவா’ குழுவின் பெயரில் இந்த ஏழு வருட கால பகுதியில், சுமார் 500க்கும் மேற்பட்ட வாள் வெட்டு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.
அதேவேளை, யாழ்ப்பாணத்தை பொறுத்தவரை தலைமறைவு வாழ்க்கை வாழ்வதற்கு ஏற்ற சூழல் இல்லை. பெரும் காடுகளோ, பெரும் நிலப்பரப்போ இல்லை. அவ்வாறான நிலையில், இந்தக் குழுவில் இயங்குபவர்கள், வீடுகளை விட்டு வெளியேறி, ஒரு வன்முறை கும்பலாக தம்மை மாற்றிக்கொண்டவர்களும் இல்லை.
பெரும்பாலானவர்கள் யாழில் உள்ள பிரபல பாடசாலைகளில் உயர்தரம் வரை கற்ற மாணவர்களே ஆவார். அவர்கள் ஏன் வன்முறைக் கும்பலாக மாற்றப்படுகிறார்கள்? அல்லது மாறுகின்றார்கள் ? எவ்வித அரசியல், பணபலம் போன்ற பின்புலங்களைக் கொண்டிராத இந்தக் குழுவொன்றின் செயற்பாடுகளை கடந்த ஏழு ஆண்டுகளாக முடிவுக்கு கொண்டு வர முடியாமல் பொலிஸார் ஏன் திணறிக்கொண்டு இருக்கின்றார்கள் என்பது புரியாத புதிராகவே இருக்கிறது.
பொலிஸார் வாள்வெட்டு, வன்முறைகள் தொடர்பிலான சம்பவங்களை விசாரணை செய்து, சந்தேக நபர்களைக் கைது செய்கின்ற போதிலும், வாள் வெட்டு சம்பவங்கள் தொடரவே செய்கின்றன.
யார் இந்த ஆவா ?
யாழ்ப்பாணம், கோண்டாவில் பகுதியில் 2014ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வீடொன்று உடைக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் விசாரணைகளை கோப்பாய் பொலிஸார் முன்னெடுத்திருந்தனர். அதன் அடிப்படையில் 2014ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஆறாம் திகதி ஒன்பது சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து புதிய கைக்குண்டுகள் இரண்டு உட்பட வாள்கள் 12, கைகிளிப் (நக்கில்ஸ்) இரண்டு, கேபிள்கள், இரும்புக் கம்பிகள் என்பன மீட்கப்பட்டன.
குறித்த வீடுடைப்பு சம்பவத்துடன் தொடர்புடைய குழுவுக்கு, வினோதன் என்பவர் தலைமை தாங்கியவர் எனவும், அக் குழுவில் உள்ளவர்கள் 17 வயதுக்கும் 30 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்தனர். அவ்வேளையிலையே முதல் முதலாக, அப்போதைய கோப்பாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஸ்ரீநிக சஞ்ஜீவ ஜெயக்கொடி, ‘ஆவா’ எனும் பெயரை உச்சரித்திருந்தார்.
“ஆவா குழு என ஏன் அழைக்கப்படுகிறது” என பொலிஸ் தரப்பிடம் அப்போது ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பிய வேளை , ‘ஹாவா’ எனும் சிங்கள சொல்லுக்குத் தமிழில் முயல் என அர்த்தம். அதாவது, முயல் மாதிரி வேகமாக ஓட கூடியவன் தான் அக்குழுவின் தலைவனான விநோதன். அதனால் அவனை ‘ஹாவா’ (முயல்) என அழைத்திருக்கலாம் எனவும் ‘ஹாவா’ தான் பின்னர் மருவி, ‘ஆவா’ ஆனது எனவும் கூறப்பட்டது.
அதேவேளை , அக்குழுவின் தலைவன் என பொலிஸாரால் கூறப்பட்ட வினோதன் என்பவனின் வாய், படிமானமாக மூட முடியாதவாறான உதடுகள் அமைப்பை உடையவன் எனவும் அவனது வாய் ‘ஆ’ என்று இருக்கும் எனவும் அதனால் அவனை, ‘ஆ வாயன்’ என அழைப்பார்கள் எனவும் அதுவே மருவி ‘ஆவா’ என வந்ததாகவும் அப்போது கூறப்பட்டது. ஆனால், இந்தப் பெயர் எவ்வாறு வந்தது என்பது, பொலிஸாருக்கே வெளிச்சம்.
2018ஆம் ஆண்டு ஜனவரி மாத இறுதியில் யாழில் இருந்து சில இளைஞர்களை கொழும்பில் உள்ள பிரபல சிங்கள ஊடக நிறுவனம் ஒன்றுக்கு அழைத்து சென்ற நபர் ஒருவர், ‘ஆவா’ குழு தொடர்பிலான சர்ச்சைக்குரிய பேட்டியை அளித்தார். அத்தோடு, தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமை பற்றியும் அவதூறாக பேசி இருந்தார். ‘ஆவா’ குழுவின் ஒருங்கிணைப்பாளர் எனத் தன்னை அறிமுகப்படுத்தி கொண்ட குறித்த நபர், 2015ஆம் ஆண்டு முன்னிலை சோஷலிச கட்சியில் தேர்தலில் போட்டியிட்டிருந்தார்.
அத்தேர்தலில் தோல்வியடைந்த நிலையில், 2017ஆம் ஆண்டில் போதை பொருளை உடைமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு, யாழ்ப்பாண சிறைச்சாலையில் விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்த கால பகுதியில், வாள் வெட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இளைஞர்களுடன் தொடர்பினை ஏற்படுத்தி கொண்டார்.
அதன் பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்ட நிலையில், சிறையில் ஏற்பட்ட தொடர்பைப் பேணி, தன்னை ‘ஆவா’ குழு ஒருங்கிணைப்பாளர் என அறிமுகம் செய்து கொண்டார்.
‘ஆவா’ குழு ஒரு கட்டமைக்கப்பட்ட அமைப்பாக இயங்காததால் அல்லது, அதற்கு உரிமை கோர எவரும் இல்லாத காரணத்தால், இவர் தன்னை ஒருங்கிணைப்பாளர் என அறிமுகம் செய்து கொண்டார். சிங்கள ஊடகங்கள் அவற்றை நம்பி, அவருக்கு முன்னுரிமை கொடுத்தன. அப்போதைய ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேனா, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அமைச்சரான ராஜித சேனாரட்ன உள்ளிட்டவர்கள் ‘ஆவா’ குழுவின் ஒருங்கிணைப்பாளர் என அவருடன் பேச்சுகளையும் நடத்தி இருந்தனர்.
யாழில், வன்முறைகளில் ஈடுபடும் கும்பல் ஒன்றின் ஒருங்கிணைப்பாளர் தான் தான் என அறிமுகப்படுத்திய நபரை, நாட்டின் ஜனாதிபதி, பிரதமர் ஆகியோர் சந்தித்துப் பேசியது, அப்போது யாழ். மக்களிடம் கேலிக்குரிய விடயமாகப் பார்க்கப்பட்டது
‘ஆவா’ குழுவின் தலைவன் என பொலிஸாரால் கூறப்பட்ட வினோதனுக்கு நீதிமன்றங்களில் தற்போதும் வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், அவர் திருமணம் முடித்து வாழ்கின்றனர்.
அக்குழுவின் முக்கியஸ்தர்கள் எனக் கூறப்பட்ட ‘சன்னா’ என்று அழைக்கப்படும் பிரசன்னா, தேவா, பிரகாஸ் ஆகியோரில் ‘சன்னா’ தற்போது வெளிநாட்டில் வசிக்கின்றார். தேவா, பிரகாஸ் ஆகிய இருவரும் இந்தியாவுக்கு தப்பி சென்று இருந்த நிலையில், திருச்சி பொலிசாரால் உரிய ஆவணங்கள் இல்லாது நடமாடிய குற்றச்சாட்டில் 2017ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதலாம் திகதி கைது செய்யப்பட்டனர்.
அதன் பின்னர், யாழில் இருந்தவர்களில் ‘ஆவா’ குழு இரண்டாகப் பிளவுபட்டது. நிஷா விக்டர் தலைமையில் ஒரு குழுவும் தனு தலைமையில் இன்னொரு குழுவும் இயங்கியது. நிஷா விக்டர் தலைமையிலான குழு ‘Lycan’ எனவும் தனு தலைமையிலான குழு ‘Rox’ எனவும் பெயர் சூட்டிக்கொண்டனர்.
அவர்கள், தமக்குள் மாறி மாறி வன்முறைகளில் ஈடுபட்டனர். முகநூல் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் இரு குழுக்களும் தமக்குள்ளும் மோதிக்கொள்ளும்; பின்னர் வன்முறைகளில் ஈடுபடுவார்கள்.
இத்தகைய குழுக்களினால் இன்றுவரை வன்முறை, வாள்வெட்டுச் சம்பவங்கள் தொடருகின்றன.
Average Rating