என் ஓவியம்… கற்பனை… சுதந்திரம்!! (மகளிர் பக்கம்)
ஓவியக் கலைஞர் யுவதாரணியின் சொந்த ஊர் ஈரோடு மாவட்டம், பவானி. சென்னையில் ஐ.டி கம்பெனியில் வேலை செய்துகொண்டே தனது ஓவியக் கனவையும் கிடைக்கும் நேரத்தில் உயிர்ப்புடன் வைத்திருக்கிறார். சமூக வலைத்தளத்தில் ‘வெள்ளைத்தாள்’ என்ற பெயரில் இயங்கி வரும் இவரது பக்கத்தில் பென்சில் ஸ்கெட்ச், வாட்டர் கலர் ஓவியம், அக்ரிலிக் பெயிண்டிங், ஆயில் பெயிண்டிங் என அவரின் ஓவியங்களை சர்ரியலிஸம் (surrealism) கலை பாணியில் கண்டு ரசிக்கலாம்.
‘‘பள்ளி படிக்கும் வரை சாதாரணமா எல்லா குழந்தையை போலத்தான் நானும் ஒரு வீடு பக்கத்துல மரம்னு வரைஞ்சிட்டு இருந்தேன். பிறக்கும் போதே திறமையோட எல்லாம் பிறக்கல. நானா பயிற்சி பண்ணி வளர்த்துக்கிட்ட திறமைதான். 11-12வது வகுப்பு படிக்கும் போது, பார்ப்பி பொம்மை போட்ட ஒரு ஃபைல் அப்போ ரொம்ப பிரபலம். அதை வரைந்து தரச் சொல்லி நண்பர்கள் கேட்பாங்க. கல்லூரி சமயத்தில் பிடித்த நடிகர்கள், விளையாட்டு வீரர்கள்,இல்ல நண்பர்களோட புகைப்படங்களை பரிசா வரைஞ்சு கொடுக்க சொல்லுவாங்க. பதிலுக்கு நான் அவங்ககிட்ட இருந்து சாக்லெட் வாங்கிப்பேன். ஓவியம் கத்துக்க எந்த வகுப்புக்கும் போனதில்ல. நண்பர்கள் கேட்க வரைஞ்சு கொடுப்பேன், அதுவே எனக்கு இப்போ நல்ல பயிற்சியா மாறியிருக்கு” என்றவர் ஓவியத்தில் தனக்கு ஏற்பட்ட ஆர்வத்தை விவரிக்கிறார்.
‘‘கல்லூரி படிக்கும் போது, கோயம்புத்தூர் கிருஷ்ணா கல்லூரியில் நடந்த ஓவியக் கலை கண்காட்சியைப் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. அதில் பல கல்லூரிகளிலிருந்தும் திறமையான மாணவர்கள் தங்கள் கலையை வெளிப்படுத்தியிருந்தனர். நான் கலந்துகொண்ட முதல் ஓவியக் கண்காட்சி அதுதான். அங்கேயே சென்று இரண்டு நாட்கள் தங்கியிருந்து ஓவியம் வரைந்தோம். அதில் பல நண்பர்கள் கிடைத்தார்கள். அவர்கள் பல நுணுக்கங்கள் கற்றுக்கொடுத்தனர். காதுக்குப் பயன்படுத்தும் பட்ஸ் வைத்து பெயிண்டிங் செய்யலாம் என்றார்கள். இந்த கண்காட்சிக்குப் பின் தான் முழுமையாக ஓவியம் மீது ஆர்வம் உண்டானது. தொடர்ந்து யூடியூப் பார்த்தே பல நுணுக்கங்களை கற்று வந்தேன்.
கல்லூரி முடிந்ததும் சென்னையில் வேலை. சென்னை என் கனவுகளின் கதவைத் திறந்து வைத்தது. இரண்டு ஆண்டுகள் ஐ.டி கம்பெனியில் பிஸியாகவே கழிந்தாலும், கலை மீதான ஆர்வம்
மட்டும் குறையவே இல்லை. ஒரு முறை சென்னை வீக்-எண்ட் ஆர்டிஸ்ட் என்ற குழு பற்றி தெரிய வந்தது. வார-இறுதிகளில், சென்னையிலிருக்கும் ஓவியக் கலைஞர்கள் ஒரு இடத்தில் ஒன்று சேர்ந்து ஓவியம் வரைந்து தங்கள் அனுபவங்களை பகிர்ந்துகொள்வார்கள். நான் கலந்துகொண்ட ஓவியக் கூட்டம் மைலாப்பூரில் நடந்தது. பல கலைஞர்கள் தங்களுக்கு விருப்பமான நிலப்
பரப்பை அல்லது காட்சியை தேர்வு செய்து அங்கே அமைதியாக வரையத்தொடங்கிவிடுவார்கள். பல வகை ஓவியர்களும் ஒன்று கூடி வரைந்து முடித்ததும், அனுபவங்களை பகிர்ந்து சந்தேகங்களை தீர்த்துவைப்பார்கள்.
அதற்குப் பின், இன்ஸ்டாகிராம் பக்கம் ஆரம்பித்து அதில் என் ஓவியங்களைப் பதிவு செய்துவந்தேன். ஆரம்பத்தில் பென்சில் ஸ்கெட்சிங் செய்யத் தொடங்கி, அப்படியே ஆயில் பெயிண்டிங், வாட்டர் கலர், அக்ரிலிக் செய்ய கத்துக்கிட்டேன். இப்போ லைவ் பெயிண்டிங் செய்யவும் ஆரம்பித்துள்ளேன். இதற்கிடையில் நண்பர் ஒருவர் மூலமாக புத்தகத்திற்கு
அட்டை வடிவமைக்கும் வாய்ப்பு கிடைத்தது. அவர் ஏற்கனவே வெளியிட்ட புத்தகத்தை கிண்டில் பதிப்பாக வெளியிட அதற்கான ஒரு அட்டைப்படத்தை டிசைன் செய்து கொடுக்க சொன்னார். ‘ஜார் ஒழிக’ எனும் அந்த புத்தகத்தில், பத்து சிறுகதைகள் இருக்கும். அதில் ஒரு சிறுகதை என்னை மிகவும் ஈர்த்தது.
அந்த கதையை மையமாக வைத்து அட்டை படத்தை வடிவமைத்தேன். எழுத்தாளரின் சொந்த ஊர் மதுரை. 80-90களில் மதுரையில் ஒரு சுவர் எப்படி இருக்குமோ அதே போல அட்டையை வடிவமைத்தேன். பலருக்கும் இந்த கற்பனை கரு பிடித்திருந்தது. புத்தகம் வெளியானதும் மேலும் இரண்டு வாய்ப்புகள் தேடி வந்தன.
புத்தக அட்டை வடிவமைப்பைத் தொடர்ந்து மினியேச்சர் ஓவியங்களும் வரைய ஆரம்பித்துள்ளேன். கொரோனா இரண்டாம் அலை லாக்டவுனில் மினியேச்சர் ஓவியங்கள் செய்ய நேரம் கிடைத்தது. என் முதல் ஓவியமாக பாட்டில் மூடியில் வின்சென்ட் வான் கோவின் ஸ்டாரி நைட் ஓவியத்தை வரைந்தேன். இது உலகளவில் புகழ்பெற்ற அனைவரும் விரும்பும் ஒரு ஓவியம். வான் கோவின் வாழ்க்கையைப் படித்தவர்களுக்கு அந்த ஓவியத்தின் சிறப்பு புரியும். அவர் ஓவியத்தில், நிலத்தையும் வானத்தையும் உயர்ந்து வளர்ந்த பிரமாண்டமான மரங்கள் இணைத்து இருப்பது போல் இருக்கும். அவர் ஓவியத்தில் உள்ள நிறங்களும் மிகவும் பிரத்யேகமானதாக இருக்கும். அந்த காலகட்டத்தில் நீலமும் – மஞ்சளும் மிகவும் மாறுபட்ட ஒத்துப்போகாத வண்ணங்கள். பொதுவாக இந்த இரண்டு வண்ணங்களையும் ஓவியர்கள் ஒரே நேரத்தில் பயன்படுத்தமாட்டார்கள்.
அவர் அந்த நிறங்களை பயன்படுத்துவார். அவர் பயன்படுத்தியிருக்கும் நுணுக்கங்களும் மிகச் சிறப்பாக இருக்கும். வான்கோ – அவரது வாழ்நாளில் ஒரே ஓவியத்தை விற்று தன்னை தோற்றுப்போனவனாக நினைத்து மன அழுத்தத்தில் இறந்து போனவர். இன்று அவரது ஓவியங்கள் விலை மதிக்கமுடியாத பல நூறு கோடிகளுக்குச் சமம். ஓவியர் ஃப்ரீடா தன்னுடைய உருவப்படத்தை சர்ரியலிஸம் கலை பாணியில் வரைந்திருப்பார். இருவருக்குமே நிகழ்காலத்தில் பல தடைகளும் கட்டுப்பாடுகளும் இருந்தாலும், அவர்கள் சிந்தனையிலும் கற்பனையிலும் சுதந்திரமாக இருந்தார்கள்’’ என்றவருக்கு எவின்சென்ட் வான் கோ, ஃப்ரீடா காலோ இருவரும் மிகவும் பிடித்தமான ஓவியர்களாம்.
‘‘என்னைப் பொறுத்தவரை என் ஓவியங்களும் என் கற்பனை போலவே சுதந்திரமாக இருக்க வேண்டும். பொதுவாகவே பெண்களின் உடலைப் போகப்பொருளாக மட்டுமே பார்க்கும் சமூகம், அதைப் புனிதப்படுத்தி யாரும் பார்த்துவிடாமல் மறைத்துவைக்க வேண்டும் என்கிறது. பெண்ணின் உடலை ஒரு ஆண் வரைந்தால் அமைதியாக இருக்கும் சமூகம், அதே பெண் தன் உடலை வரையும் போது நவநாகரீக கேள்விகளைக் கேட்கிறது. நான் வரையும் ஓவியங்கள் அனைத்தும் என் கற்பனைக்கான உத்வேகங்கள். சினிமா பார்க்கும் போது, புத்தகம் வாசிக்கும் போது, ஒரு புகைப்படத்தை காணும் போது, பாடல் கேட்கும் போது கூட எனக்குள் ஒரு சின்ன யோசனையாக உருவாகும். அதுதான் நான் வரையும்
ஓவியங்களின் கரு என்று சொல்லலாம்.
கலைத் துறையைப் பொறுத்தவரை குறிப்பாக ஓவியர்களுக்கு தனிமையும் பயணமும் ரொம்ப முக்கியம். பயணத்தில் தான் பல மனிதர்களைச் சந்தித்து பல கதைகளை கேட்க முடியும். மாறுபட்ட இடங்கள், மாறுபட்ட காட்சிகள் நம் மனதை லேசாக்கி கற்பனையைத் தூண்டும். பெங்களூரில் ஒவ்வொரு வருடமும் கலைஞர்கள் தங்கள் ஓவியங்களை தெருவில் வரைந்து அதை அங்கேயே காட்சிப்படுத்தி விற்பனை செய்வார்கள்.
அங்கு சென்ற போது தான் அந்த ஓவியங்களை கூட விலைக்கு வாங்க ஆட்கள் இருக்கிறார்கள் என்று புரிந்தது. அப்போதிருந்து என் ஓவியங்களையும் மக்களின் பார்வைக்கு காட்சிப்படுத்த வேண்டும் என்பது என் கனவாக மாறியுள்ளது. பொதுவாகப் பல கலைஞர்களின் ஓவியங்களை அவ்வளவு எளிதாகப் பார்க்கக் கூட முடியாது. ஓவியக் கண்காட்சி நடக்கும் இடத்தை கண்டுபிடித்து அங்கே செல்ல வேண்டும். ஆனால் இப்போது சமூக வலைத்தளத்தில் அவர்களின் ஓவியங்களைப் பார்ப்பதுடன், அவர்களுடன் நேரடியாக உரையாடும் வாய்ப்பும் கிடைத்துள்ளது’’ என்றார் யுவதாரணி.
Average Rating