அறுபதில் ஆசை வரலாமா? (மகளிர் பக்கம்)
எங்கள் அப்பா, அம்மாவுக்கு நாங்கள் 3 பிள்ளைகள். நான் கடைசி பெண். எனக்கு 2 அண்ணன்கள். எல்லோருக்கும் திருமணமாகி நல்ல வேலையில் இருக்கிறோம். நான் வெளியூரில் வசிக்கிறேன். அண்ணன்கள் இருவரும் அடுத்தடுத்த தெருக்களில் இருக்கின்றனர். அதில் சின்ன அண்ணன், எங்கள் பழைய வீட்டில் இருக்கிறார். அதே வீட்டில் தான் அப்பா, அம்மாவும் இருக்கிறார்கள்.அப்பா ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர். அம்மாவும் ஆசிரியராக இருந்தவர்தான். இருவரும் 70 வயதை நெருங்கிக் கொண்டு இருக்கும் பொறுப்பான பெற்றோர். ஆசிரியர்களாக இருந்தாலும் எங்களிடம் அதிகம் கண்டிப்பு காட்டியதில்லை. அதிலும் அப்பா ஜாலியான ஆள். எப்போதும் நகைச்சுவையாக பேசிக் கொண்டு இருப்பார்.
அம்மாவிடம் அவருக்கு கொள்ளைப் பிரியம். அதனால் அம்மா இருக்கும் இடத்தில்தான் அவர் இருப்பார். அம்மா சமையலறையில் இருந்தாலும் அப்பா கூட போய் உட்கார்ந்து கொண்டு கிண்டல், கேலி என ஜாலியாக பேசிக் கொண்டு இருப்பார். அம்மா அவரிடம், ‘கிளம்புங்க… வேலை செய்ய விடுங்க ’ என்று விரட்டுவார். ஆனாலும் வெளியில் வந்து உட்கார்ந்து கொண்டும் அம்மாவிடம்தான் பேசிக் கொண்டு இருப்பார். அப்படி ஜாலியாக பேசிக் கொண்டேதான் குடும்ப விஷயங்களிலும் முடிவு எடுப்பார்கள். அதே நேரத்திலும் எங்களுடனும் நெருக்கமாக இருப்பார். குடும்பத்துடன் அடிக்கடி வெளியில் சென்று வருவோம். ‘சினிமா பார்க்க வேண்டும்’ என்றாலும் தடை சொல்ல மாட்டார். படி, படி என்றும் கட்டாயப்படுத்த மாட்டார்.
அவர் வேலை செய்த பள்ளியில் மாணவர்களும் அவரிடம் நெருக்கமாக இருந்தார்கள். சந்தேகம் என்றால் நேராக வீட்டுக்கு வந்து விடுவார்கள். அவரும், அவர்களை உட்கார வைத்து பொறுப்பாக, பொறுமையாக சொல்லித் தருவார். இப்படி அவரைப்பற்றி தெரிந்ததெல்லாம் நல்ல, ஒழுக்கமான தோற்றம்தான். நாங்கள் என்றில்லை… வெளியில் அவரது நண்பர்கள், எங்கள் உறவினர்கள் என்று யாரும் அவரைப்பற்றி தவறாக பேசி கேள்விப்பட்டதில்லை. ஏன் வாக்குவாதம் செய்துக் கூட பார்த்ததில்லை.
எங்கள் அம்மாவிடம் நாங்கள் வாக்குவாதம் செய்வது, சண்டை போடுவதை ரசிக்க மாட்டார். அவர் முகமே மாறிவிடும். அதே நேரத்தில் அவரிடம் வாக்குவாதம், சண்டை போட்டால் எங்களை கொஞ்சியே சமாதானம் செய்து விடுவார். அம்மாவது எங்களை அடித்து இருக்கிறார். ஆனால் அப்பா எங்களை திட்டியது கூட கிடையாது.ஓய்வு பெற்ற பிறகு அம்மாவை தினமும் பள்ளிக்கு அழைத்துச் செல்வது, அழைத்து வருவது அவரின் வேலை.
கூடவே பேரன், பேத்திகள் வந்த பிறகு இன்னும் ஜாலியான ஆளாகி விட்டார். அவர்களும் அவருடன் இருப்பதைதான் விரும்புவார்கள். எனது பிள்ளைகள் கூட விடுமுறை முடிந்து ஊர் திரும்ப வேண்டியிருந்தால், தாத்தாவை பிரிகிறோமே என்று அழுது அடம்பிடிப்பார்கள். இப்படி எல்லோருக்கும் பிடித்த அப்பாவை பற்றி இன்று வரும் விவரங்கள் எல்லாம் கவலை அளிக்கின்றன. எங்கள் அம்மாவுக்கு 2 ஆண்டுகளுக்கு முன்பு பக்கவாதம் வந்து நடமாட்டம் குறைந்து விட்டது. அம்மாவுடன் தான் அப்பா எப்போதும் இருக்கிறார்.
இப்போதும் ஜாலியாக எங்கள் அம்மாவை கேலி , கிண்டல் செய்கிறார். உடம்பு சரியில்லாதவரிடம் போய் அப்படி பேசலாமா என்று அக்கம் பக்கத்தினர் சுட்டி காட்டினர். நாங்களும் ‘அப்படி பேசாதீங்கப்பா ’ என்று சொன்னோம். ஆனால் அவர் கேட்பதாக இல்லை. ஒருநாள் இது குறித்து பக்கத்து வீட்டுக்கார்கள், பேசிக் கொண்டு இருப்பது அப்பாவுக்கு கேட்டு இருக்கிறது. உடனே அவர்களிடம் சண்டை போட்டிருக்கிறார். கூடவே ‘என் மனைவியிடம் எப்படி பேசினால் உங்களுக்கு என்னடா…. உங்கள் மனைவியிடமா அப்படி பேசினேன்’ என்று திட்டியுள்ளார். அவர் அப்படி பேசியது அவர்களுக்கு மட்டுமல்ல எங்களுக்கும் அதிர்ச்சிதான். யாரையும் அவர் எடுத்தெறிந்து பேசியவரில்லை.
தெருவிலும் சண்டை போட்டதில்லை. முக்கியமாக இந்த சண்டைக்கு பிறகும், எங்கள் அம்மாவிடம் ஜாலியாக பேசுவதை அப்பா குறைக்கவில்லை. அந்த பிரச்னைக்கு பிறகு அவரிடம் யாரும் ஏதும் கேட்க முடியவில்லை. ஆனால் எங்கள் அண்ணி அடிக்கடி போன் செய்து அங்கு நடக்கும் விவரங்களை சொல்வார். அப்பா, அம்மாவும் ‘குசுகுசு’ வென்று பேசிக்கொண்டு, சிரிக்கிறார்களாம். இளம் காதல் ஜோடிகளை போல் அப்பா எப்போதும் அம்மாவுடனேயே இருக்கிறாராம். அதனால் அம்மாவை சரியாக கவனிக்க முடியவில்லை என்று அண்ணி புலம்புவார்.
கூடவே பகல் நேரங்களில் அம்மாவை வீட்டுக்கு வெளியே உள்ள தாழ்வாரத்தில் உட்கார வைத்திருப்போம். வீட்டுக்குள்ளேயே அடைந்து இருக்க வேண்டாம் என்று அப்படி வெளியில் உட்கார வைப்போம். கூடவே பிசியோதெரபி செய்பவர், நடக்க வைக்கவும் வசதியாக இருக்கும் என்பதால் அப்படி செய்வோம். அப்படி வெளியில் உட்கார்ந்திருக்கும் அம்மாவிடம் வழக்கம் போல் அப்பா ஜாலியாக பேசிக் கொண்டு இருக்கிறாராம். அதனால் அக்கம் பக்கத்தில் இருப்பவர்கள் அவர்களை ‘இளஞ்ஜோடிகள்’ என்று கிண்டல் செய்கின்றனர். அம்மாவுக்கு உடம்பு சரியில்லாமல் போன பிறகு வாராவாரம் அவர்களை பார்க்கப் போவேன். அப்படி போகும் போது தெரிந்தவர்கள், பக்கத்து வீட்டுக்கார்கள் ‘என்னம்மா, இளஞ்ஜோடிகளை பார்க்க வந்திருக்கிறாயா’ என்ற கிண்டல் செய்கின்றனர். அதனால் வெளியில் இருக்க வேண்டாம் ‘உள்ளேயே அம்மாவை உட்கார வைக்கலாம்’ என்று அண்ணன்களும், நானும் நாசுக்காக சொல்லி பார்த்தோம்.
ஆனால் அப்பா கேட்கவில்லை. ‘வெளியில் உட்கார்ந்தால் அவளுக்கு மனசு கொஞ்சும் ரிலாக்சாக இருக்கும். அவள் மேல் தினமும் வெயில் பட வேண்டும் என்று டாக்டர் சொல்லியிருக்கிறார்’ என்று அப்பா சொல்லிவிட்டார். ஆனால் நாங்கள் தொடர் வலியுறுத்தவே, அப்பா கோபமாகி எங்களை திட்ட ஆரம்பித்து விட்டார். அதன்பிறகு நாங்கள் ஒன்றும் சொல்லவில்லை. இப்படி விவாதம் வரும் போது அம்மா ஏதும் சொல்ல மாட்டார். அப்பாவை பார்த்துக் கொண்டு இருப்பார். அதனால் அம்மா தனியாக இருக்கும்போது, மெல்ல விஷயத்தை ஆரம்பித்தேன். அதற்கு அம்மா, ‘அவர் ஒண்ணும் தப்பா பேசல, பழைய விஷயங்களை பேசறார். கல்யாணம் ஆன புதுசுல ரொம்ப மகிழ்ச்சியாக இருந்தோம் அதைதான் நினைவுபடுத்துவார்’ என்று சொல்கிறார். அவரிடமும் ஒன்றும் பேச முடியவில்லை.
கடந்த சில மாதங்களாக அண்ணன், அண்ணிகள் எல்லோரும் வீட்டில் இருந்து வேலை செய்கின்றனர். அதனால் ஒருத்தர் மாற்றி ஒருத்தர் அப்பா ஏதும் பேசிவிடக் கூடாது என்பதற்காக அம்மா பக்கத்திலேயே உட்கார்ந்து கண்காணித்துக் கொண்டு இருக்கின்றனர். இடையில் ஒருநாள் அப்பா, அம்மாவுக்கு முத்தம் கொடுத்துள்ளார். அதை வீட்டில் இருந்த அண்ணன் பசங்க பார்த்து விட்டார்கள்.
அவர்கள் உடனே ‘தாத்தா, பாட்டிக்கு முத்தம் தராருன்னு’ சத்தமாக சிரித்துள்ளனர். அது வீட்டில் உள்ளவர்களுக்கு மட்டுமின்றி வெளியில் இருப்பவர்களுக்கும் கேட்டு விட்டது. இப்போது அதையும் அக்கம்பக்கத்தினர் அண்ணிகளிடம் விசாரிக்க ஆரம்பித்து விட்டனர். இப்படி வெளியாட்களின் கேலி கிண்டல்களுக்கு இடையில் நாங்கள் சங்கடப்பட்டுக் கொண்டு இருக்கிறோம். ஆனால் அப்பா எதைப்பற்றியும் கவலைப்படாமல் தன் வழக்கப்படி இருக்கிறார். அவரிடம் ஏதும் பேச முடியவில்லை. எனக்கு தெரிந்தவர்கள், ‘வயதுக்கு மீறி ஏதாவது செய்கிறார்கள் என்றால் அது கட்டாயம் மனநிலை பாதிப்பாகத்தான் இருக்கும். மற்றவர்கள் குறித்து கவலைப்படவில்லை என்றால் அவருக்கு ஏதோ பிரச்னை இருக்கிறது’ என்று சொல்கிறார்கள். கூடவே மனநல மருத்துவரிடம் காட்டுங்கள் என்றும் ஆலோசனை சொல்கின்றனர்.
எங்களுக்கும் அது சரியென்று தோன்றுகிறது. ஆனால் அவரை என்னச் சொல்லி மனநல மருத்துவரிடம் அழைத்துச் சொல்வது. அவர் ஒன்றும் தெரியாதவர் அல்ல. முதுகலை பட்டதாரி. தலைமை ஆசிரியராக இருந்தவர். வீட்டிலேயே அவருக்கு ஏதாவது மனநல சிகிச்சை தர முடியுமா? அதற்கு வாய்ப்பு இருக்கிறதா தோழி? முக்கியமாக இந்த வயதிலும் மனைவியே கதியென்று ஏன் இருக்கிறார்? கம்பீரமாக வலம் வந்தவர், இப்போது அக்கம்பக்கத்தினரின் கேலிக்கு ஆளாவதை ஏற்க முடியவில்லை தோழி! என் அப்பா பழைய கம்பீரத்துடன் இருக்க எனக்கு ஒரு வழி காட்டுங்கள் தோழி!
இப்படிக்கு, பெயர் வெளியிட விரும்பாத வாசகி.
நட்புடன் தோழிக்கு,
உங்கள் கடிதத்தை படிக்கும் போது உங்கள் அப்பா மதிப்புமிக்க ஆசிரியராக இருந்து ஓய்வு பெற்றுள்ளது தெரிகிறது. அவருக்கு இயல்பாகவே நகைச்சுவை உணர்வு இருப்பதும், உங்கள் அம்மாவுடன் அன்னியோன்யமாகவும் இருப்பதும் புரிகிறது. எல்லோரிடமும் நல்ல பெயர் பெற்றிருந்த அவர், இப்போது மற்றவர்களின் கேலிக்கு ஆளாகி வருகிறார். கூடவே உங்கள் அப்பாவின் செயல்கள், உங்களுக்கு நெருடலாக உள்ளது. எத்தனை வயதானாலும் அவர்கள் கணவன்-மனைவி. வயதாகி விட்டால் மனைவியை கொஞ்சக் கூடாது, மனைவியிடம் ஜாலியாக பேசக்கூடாது என்று சொல்ல முடியாது. அதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். வயதானாலும், உடல் நலிவுற்றாலும் உடன் இருந்து மனைவியை கவனித்துக் கொள்வது பாராட்டுக்குரியது.
கூடவே உடல்நலம் பாதித்த மனநிலையை கொஞ்சுவது இயல்புதான். ஆனால் சில நேரங்களில் அவரை கேலியும் செய்கிறார். அண்டை வீட்டாருடன் சண்டைக்கு செல்கிறார். கொஞ்சுவது வயதிற்கு ஏற்றார் போல் இல்லை என்று நீங்கள் நினைக்கிறீர்கள். ஆனால் தன் கணவர் ஜாலியாக பேசுவது குறித்து உங்கள் அம்மா என்ன நினைக்கிறார். அவருக்கு பிடித்திருக்கிறதா, எரிச்சலாக இருக்கிறதா, குறையாக சொல்கிறாரா என்பவைதான் முக்கியம். அதனால் நேரில் பார்க்காமல், உங்கள் அப்பாவிற்கு பிரச்சனை உள்ளதா? இல்லை அவரது இயல்பு கொஞ்சம் அதிகமாக வெளிப்படுகிறதா? என்பதை சொல்ல முடியாது. அவர் அப்படி இருப்பதில் உங்கள் தாயாருக்கு ஒரு பிரச்சனையும் இல்லை என்றால், அதை நாம் வித்தியாசமான செயலாக பார்க்கத் தேவையில்லை. உங்கள் அண்ணி சொல்வதை விட, நீங்களே அருகிலிருந்து பார்த்து, உங்கள் தாயாரையும் கேட்டு விசாரித்த பிறகுதான் முடிவுக்கு வரவேண்டும்.
சில சமயங்களில் வயது முதிர்ச்சியின் போது அவருடைய இயல்பான குணங்கள் மாறுவதற்கு வாய்ப்புண்டு. முன்பு பொறுப்புடனும் அக்கறையுடனும் நகைச்சுவையுடனும் இருந்தவர்… இப்பொழுது சமூகத்தில் மற்றவர்கள் நம்மை என்ன நினைப்பார்கள்… நாம் நடப்பது சரி தானா… என்ற புரிதல் இல்லாமலும் இருக்கலாம். அதற்கு இரண்டு வகையான காரணங்கள் இருக்கலாம்..
1. வயது முதிர்ச்சியின் போது மூளையில் ஏற்படும் தேய்மானம் மற்றும் வேறு சில மாற்றங்களினால் இவ்வாறு நடந்து கொள்ளலாம். இதை ஆர்கனிக் மெண்டல் இல்னஸ் (Organic Mental Illness) என்று சொல்வார்கள்.
2. எந்த வித உடல் பாதிப்பும் மூளை பாதிப்பும் இல்லாமல் குணத்தில் மாற்றம் ஏற்பட்டால் முதன்மை மனநோய் என்று கூறுவார்கள்.எனவே உங்கள் அப்பாவை நேரடியாக பரிசோதனை செய்யாமல் அவருக்கு உண்மையில் மூளையில் ஏதும் பிரச்சினை உள்ளதா? இல்லை மனதளவில் பாதிக்கப்பட்டுள்ளாரா? என்று கூறுவது கடினம். அதனை கண்டறிய, நீங்கள் சொல்வதை போல அவரை மனநல மருத்துவரிடம் அழைத்துச் செல்லலாம். அதற்கு நீங்கள், ‘பொதுவான உடல் பரிசோதனை செய்யலாம்’ என்று ஏதாவது காரணம் சொல்லி அழைத்துக் கொண்டு போகலாம். அதை அவர் சம்மதத்துடன் செய்ய வேண்டும்.
அவரின் வயது அதிகம் என்பதால் ஓரிரு நாட்களில் அல்லது உடனே இயல்பு நிலைக்குத் திரும்புவார் என்று கூறமுடியாது. அவரது உடல் மருந்து மாத்திரைகளுக்கு எவ்வாறு செயலாற்றுகிறது… அவரின் நோயின் தன்மை என்ன…. மூளையில் ஏற்பட்ட பிரச்சனையா…. இல்லை முதன்மை மனநோயா என்று பார்க்க வேண்டும். கூடவே நரம்பியல் மருத்துவரின் பரிசோதனையும் தேவைப்படலாம். அவ்வாறு பரிசோதனை செய்தபிறகு மருந்து மாத்திரைகள் பரிந்துரைக்கப்பட்டால், அதை வீட்டில் இருந்தே கொடுக்கலாம். அவற்றை சத்து மாத்திரைகள் என ஏதாவது காரணம் சொல்லி அவரை சாப்பிடச் சொல்ல வேண்டும்.
நீங்கள் புரிந்துகொள்ள வேண்டியது, அவர் வேண்டுமென்றே அப்படி செய்யவில்லை. அக்கம் பக்கத்தினர் என்ன சொல்கிறார்கள் என்பது குறித்து நீங்கள் கவலைப் பட வேண்டாம். அவரை பரிசோதனைக்கு அழைத்துச் செல்லுங்கள். மருத்துவரின் ஆலோசனைப்படி நீங்கள் செயல்படுங்கள். நிச்சயம் உங்களுக்கு ஒரு தீர்வு கிடைக்கும்.
Average Rating