ஒவ்வொரு கதாபாத்திரத்தின் உணர்வுகளையும் அனுபவிப்பது பிடித்திருக்கு!! (மகளிர் பக்கம்)

Read Time:7 Minute, 53 Second

தமிழ் யூ டியூப் சேனல்களில் டாப் டென்னில் இருப்பது ‘நக்கலைட்ஸ்’. சமகால பிரச்னைகள், அரசியல், நாம் ஒவ்வொருவரும் கடந்து வந்த நிகழ்வுகளை நினைவூட்டுதல் என அத்தனையையும் கொங்கு ஸ்லாங்கில் அட்டகாசம் செய்து கொண்டிருக்கிறார்கள் நக்கலைட்ஸ் குழு. இந்தக் குழுவின் ஒரு பிரதிநிதியாக இருக்கும் நடிகை ஸ்ரீஜா, தனக்கு நடிப்பின் மீது ஆசை வரக் காரணம், நக்லைட்ஸ் அனுபவங்கள் போன்ற சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்டார்.

“சொந்த ஊர் தேனி. அங்க தான் படித்து வளர்ந்ததெல்லாம். அடுத்து கல்லூரி படிப்பிற்காக கோவை வந்தேன். பி.எஸ்.ஜி கலை அறிவியல் கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் போது ‘நிலாமுற்றம்’ அமைப்பில் இணைந்தேன். அங்குதான் எங்கள் கல்லூரி தமிழ் பேராசிரியர் ராமராஜ் சார் குழுவுடன் இணைந்து வீதி நாடகம் நடிக்க ஆரம்பித்தேன். அப்படித்தான் நடிக்க ஆசை வந்தது. ஆரம்பத்தில் நடிப்பதற்கான எந்த முகாந்திரமும் என்னிடம் இல்லை. நிலா முற்றத்தில் எப்போதும் நாடகம் அரங்கேற்றம் செய்வோம். எங்கள் சீனியர்ஸ் வெளில போகும் போது, அடுத்த பேட்ஜ் நாங்கதான். அப்படிதான் நடிக்க போனேனே தவிர, பெருசா ஆசையோ ஆர்வமோ இல்லாமல்தான் போனேன்.

அடுத்து வருபவர்கள் வரை நாம் தான் கொண்டு போகணும், நடிப்பில் நிஜமாகவே ஆர்வம் இருக்கிறவர்கள் வரும் வரை நம்ம இதை ஹோல்டு பண்ணி வச்சுக்கணும், நடிப்பின் மீது ஆசை இருக்கிறவர்கள் தயங்காமல் வர்றதுக்காக நம்ம ஒரு ஸ்டெப் எடுக்கணும்னுதான் போனேன். அப்படி போய் நடிக்க நடிக்க எனக்கும் நடிப்பின் மீது ஆசை வந்தது.

ஆர்வமும் அதிகமானது. நடிப்பு துறை சார்ந்தவர்களோடு பேசுவது, கதை சொல்வது, அதை பற்றி விவாதிப்பது, புத்தகம் படிப்பது என நடிப்பதில் கொஞ்சம் கொஞ்சமாக ஈடுபாடு கொண்டு தீவிரமாக செயல்பட ஆரம்பித்தேன். அந்த நேரத்தில்தான், நாடகவியலாளர் முருகபூபதி மேற்பார்வையில், ‘நீர் நாடோடிகள்’ என்ற நாடகம் எங்கள் கல்லூரியில் அரங்கேற்றினோம்” என்று தனக்கு நடிப்பின் மீது ஆர்வம் வந்ததற்கான காரணத்தை கூறிய ஸ்ரீஜா, நக்கலைட்ஸ் குழுவுடன் எப்படி இணைந்தார் என்பது பற்றி கூறினார்.

‘‘யூ.ஜி முடிச்சுட்டு அடுத்து பி.ஜி வேற கல்லூரியில் படிக்கும் போது, என்னால் தொடர்ந்து நாடகம் போன்ற நிகழ்வுகளில் பங்கேற்க முடியவில்லை. இதனால் வெறுமையாக உணர்ந்தேன். வாழ்க்கையில புதுசா நல்லா இருந்ததே, இப்ப என்ன இப்படி ஒன்னுமே இல்லாத மாதிரி இருக்கே! வறோம் கல்லூரி போறோம், படிக்கிறோம் இதுமட்டும் தானா? இதை தாண்டி வேறு எந்த செயலும் இல்லையா?

எதுக்குள்ளேயும் போகாம இருக்கோம். படிக்கிறோம் அதை தாண்டி பேசுவதற்கோ, விவாதிப்பதற்கோ, நடிப்பு பற்றி இன்னும் தெரிந்து கொள்வதற்கோ வாய்ப்பு இல்லாமல் இருக்கே…! என்ற யோசனை மட்டும் தொந்தரவு செய்து கொண்டே இருந்தது. அந்த நேரத்தில் தான் ‘நக்கலைட்ஸ் குழுவில் நடிக்க ஆட்கள் வேண்டும்னு ஆடிசன் வைக்கிறாங்க. நீயும் போய் பாரு’னு நக்கலைட்ஸ் தனம் அம்மா சொன்னாங்க.

போய் சும்மா ஆடிசன்ல கலந்துக்கலாம்னு நானும், எங்க நாடக குழுவில் இருந்தவங்களும் போனோம். ஜாலியாதான் போனோம், ஆனா எல்லாருமே செலக்ட் ஆகிட்டோம். எல்லோராலயும் ஏதோ ஒரு காரணத்தினால் தொடர்ந்து இயங்க முடியவில்லை. நான் மட்டும் தொடர்ந்து நக்கலைட்ஸ் குழுவோடு இணைந்து பயணிச்சிட்டு இருக்கேன்” என்கிறார் ஸ்ரீஜா.

‘‘நடிக்க ஆரம்பித்த பிறகு என்னோட ஆசையெல்லாம் மற்றொரு உருவமா, உடலா வாழணும்” என்று கூறும் ஸ்ரீஜா, “நடிப்பு பற்றி கொஞ்சம் கொஞ்சமாக புரிய ஆரம்பித்து… வேறொரு ஆளாக மாறி திரையில் தோன்றுவது பிடித்திருக்கிறது” என்கிறார். ‘‘நாம் நம்மில் இருந்து மற்றொருவருக்காக அழுவது, சிரிப்பது, கோவப்படுவது பாவப்படுவது என நடிக்கும் போது செய்கையில் அந்த ரெஸ்பான்ஸ் நல்லா இருக்கு. நான் ஏற்கும் ஒவ்வொரு கதாபாத்திரத்தின் உணர்வுகளையும் அனுபவிப்பது பிடித்திருக்கிறது. அப்படி அனுபவித்து நடிக்கும் போதுதான் என் நடிப்பு முழுமையடைந்ததாக நம்புகிறேன்” என்று கூறும் ஜாவின் கனவு, பள்ளியில் குழந்தைகளுக்காக கதை சொல்லும் டீச்சர் ஆக வேண்டுமாம்.

‘‘குழந்தைங்க எல்லோருமே ஆசைப்பட்டு, ‘எனக்கு ஸ்ரீஜாமிஸ்னா பிடிக்கும்’னு சொல்ற மாதிரி இருக்கணும். ஒரு நல்ல டீச்சர் ஆகவேண்டுமென்ற கனவு தான் இருந்தது. அதுவும் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு குழந்தைகளுக்கு நல்ல கதை சொல்லியா இருக்கணும். வரும் காலத்தில் பள்ளிகளுக்கு போய் வேலை பார்ப்பேனா என்பது தெரியாது. டியூசன் சென்டர் ஆரம்பித்து அதன் மூலம் பண்ணலாம் என்கிற யோசனை இருக்கிறது” என்று கூறும் ஸ்ரீஜா, ‘கமலி ஃப்ரம் நடுக்காவேரி’ திரைப்படத்தில் செக்கெண்ட் லீடாக நடித்திருக்கிறார்.

‘‘நடிகர், நடிகைக்கும் சில பொறுப்புகள் இருப்பதாக பார்க்கிறேன். ஒரு நல்ல உணர்வுகளை கொண்டு போய் சேர்க்கணும். நல்ல கதாபாத்திரம் தேர்வு செய்து நடிக்கணும். தப்பான ஒரு அடையாளமா யாருக்கும் இருந்திடக் கூடாது. நக்கலைட்ஸ் நடித்த பிறகு எங்கு போனாலும், அவங்க வீட்டில் ஒரு பெண்ணா பார்க்குறாங்க. இதில் வரும் ஒவ்வொன்றும் நம்ம வீட்டில் நடக்கும் ஒரு நிகழ்வு போல் இருப்பதால் ஈசியா கனைக்ட் பண்ணிக்கிறாங்க. அது ரொம்ப சந்தோஷமா இருக்கு” என்கிறார் நடிகை ஸ்ரீஜா.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நம்ம ஹீரோக்கு எல்லாமே ஸ்லொவ் மோஷன்ல தான் தெரியும்!! (வீடியோ)
Next post ஹேப்பியா இருக்க… யோகா செய்யலாம்! (மகளிர் பக்கம்)