மலை, ஆறுகளை தாண்டிய ஆசிரியரின் பள்ளிப் பயணம்!! (மகளிர் பக்கம்)
காலையில் எழுந்து கிளம்பியதும், பள்ளிக்கு செல்ல ஆட்டோ அல்லது பள்ளி பேருந்து வரும். நாமும் அதில் பள்ளிக்கு குழந்தைகளை அனுப்பி வைத்திடுவோம். ஆனால் கேரளாவை பிறப்பிடமாக கொண்ட உஷா குமாரி டீச்சர் தினமும் மலை, ஆறு எல்லாம் கடந்துதான் அந்த பள்ளிக்கு செல்கிறார்.
Agasthya Ega Adhyapaka Vidyalaya பள்ளிக்கு 51 வயது நிரம்பிய உஷா குமாரி தான் ஒரே ஆசிரியர். ஒன்றாம் வகுப்பு முதல் நான்காம் வகுப்பு வரை 15 மாணவர்கள் படிக்கும் இந்த பள்ளிக்கு இவர் தான் ஆசிரியர், தலைமையாசிரியர், மேற்பார்வையாளர், மேலாளர் அனைத்தும்.
‘‘திருவனந்தபுரம், குன்னத்துமலா பகுதியில் காட்டிற்கு நடுவே தான் அந்த பள்ளி அமைந்திருக்கிறது. அங்கு பயில வரும் மாணவர்கள் அனைவருமே, காட்டையே தங்கள் இருப்பிடமாக்கிக் கொண்டு வசிக்கும் பழங்குடி மக்களின் குழந்தைகள். நான் தினமும் அந்த பள்ளிக்குச் சென்று வர நான்கு மணி நேரமாகும்.
காலையில் ஏழு மணிக்கு தயாராயிடுவேன். என் ஸ்கூட்டியை ஸ்டார்ட் செய்து மூன்று கி.மீ பயணம் செய்தா… நடுவில் ஒரு ஆறு வரும். அதை கடந்து மறுகரைக்கு போகணும். ஸ்கூட்டியை இக்கரையிலேயே நிறுத்திடுவேன்.
ஆற்றைக் கடக்க அங்கு படகு இருக்கும். சில சமயம் ஆட்கள் படகு ஓட்ட உதவிக்கு இருப்பாங்க. இல்லைன்னா நானே ஓட்டி மறுகரைக்கு போயிடுவேன். படகு சவாரிக்கு பிறகு ஒரு சின்ன மலை ஏறணும். செங்குத்தாக இருக்கும் அந்த மலையை ஏற கையில் ஒரு கம்பைத் தவிர வேறு எதுவும் இருக்காது.
ஏன் ஒரு சரியான பாதையும் கிடையாது. காட்டுப் பகுதி என்பதால், குரங்கு மற்றும் பாம்பின் தொல்லைகள் இருக்கும். ஆள் நடமாட்டமே இல்லாத மலையை கடக்க கொஞ்சம் தைரியம் மற்றும் உடல் வலிமையும் அவசியம் வேணும். கம்பின் உதவியுடன் செங்குத்தான மலையில் ஏறியதுமே என் வருகைக்காக மாணவர்கள் காத்துக் கொண்டு இருப்பார்கள். அவர்களையும் அழைத்துக் கொண்டு சரியாக 9.30க்கு எல்லாம் நாங்க பள்ளிக்கு சென்றிடுவோம்’’ என்றவர் இந்த பள்ளியில் 17 ஆண்டுகளாக ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார்.
‘‘மலைவாழ் பகுதியைச் சார்ந்த பழங்குடி மக்களுக்கு கல்வியை கொண்டு போய் சேர்க்க வேண்டும் என்பதற்காகவே 1999ல் ஆரம்பிக்கப்பட்ட பள்ளிதான் Agasthya Ega Adhyapaka Vidyalaya. 2002ல் நான் இங்கு பள்ளி ஆசிரியரா நியமிக்கப்பட்டேன்.
17 வருஷமாச்சு. இத்தனை ஆண்டுகள் இப்படித்தான் என்னுடைய ஆசிரியர் பணி தொடர்ந்துக் கொண்டு இருக்கிறது. ஆசிரியராக பணியில் ேசர்ந்த போது, ஆரம்பத்தில் வயதானவர்களுக்குத்தான் பாடம் சொல்லிக் கொடுத்து வந்தேன். அதற்காக ‘சக்ஷரத புராஸ்கரம்’ என்ற விருதும் கிடைத்தது. அதன் பிறகு கல்வி கற்பித்தலில் எனக்கு ஈடுபாடு அதிகமாச்சு.
அந்த சமயத்தில், கேரள அரசு, திருவனந்தபுரத்தில், பள்ளிக்கு செல்லாத மற்றும் கல்வியை பாதியிலேயே நிறுத்திய குழந்தைகள் என அனைவரையும் கண்டுபிடித்து, அவர்களுக்காக ஒரு பள்ளி, ஒரு ஆசிரியர் என்ற சிறப்பு திட்டத்தை கொண்டுவந்தது. அதில் பழங்குடியினருக்கும் கல்வி அவசியம் என்று முடிவானது. அம்பூரி பழங்குடியின கிராம தலைவர் மூலம் அவர்கள் இன மக்களுக்கு கல்வியின் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதன் அடிப்படையில் தான் 1999ம் ஆண்டு இவர்களுக்கான பள்ளியினை அவர்கள் வாழும் இடத்திலேயே அமைக்கப்பட்டது’’ என்றவர் 2002ம் ஆண்டு இந்த பள்ளிக்கு ஆசிரியராக மாற்றலாகி வந்துள்ளார்.
‘‘என்னதான் விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும், குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப மறுத்து வந்தனர். புத்தகங்களை கொடுத்தாலாவது அவர்கள் வருவார்கள் என்று நினைத்தோம். அவர்களோ புத்தகங்களை வீசியெறிந்து விடுவார்கள். இல்லை என்றால், எரித்துவிடுவார்கள். நாங்கள்
சோர்வடையாமல் ஒவ்வொரு வீடாக சென்று, கல்வியின் அவசியத்தையும், குழந்தைகளின் எதிர்காலத்திற்கும், வாழ்வாதாரத்திற்கும் கல்வியின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தோம். 17 வருடங்கள் ஓடிவிட்டது. இவர்களும் கல்வியின் அவசியத்தை புரிந்துகொண்டனர்.
இப்போது தாமாகவே முன் வந்து குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பிவைக்கிறார்கள். அது மட்டும் இல்லை ஆசிரியர்- பெற்றோர் சந்திப்பிற்கும் தவறாமல் வராங்க’’ என்கிறார் மகிழ்ச்சி பொங்க.இப்படி தினமும் இவ்வளவு தூரம் பயணம் செய்து போவது கடினமாக இல்லையா என்று கேட்டதற்கு, “முதல்ல ரொம்ப கஷ்டமாகத்தான் இருந்துச்சு. ஆனா, வேலைக்கு போக வேண்டிய சூழல். மலை ஏறி செல்லும் போது வழி எல்லாம் பாம்பு நெளிந்து ஓடுறதை பார்க்கும் போது பயமாகத்தான் இருக்கும்.
ஆனால் அந்த மாணவர்களை பார்த்த அடுத்த நிமிடம் என்னுடைய களைப்பு, பயம் எல்லாமே மறைந்திடும். இப்போ எனக்கும் வயசாயிடுச்சு. முன்ன மாதிரி வலிமை இல்லைதான். சிரமமா இருந்தாலும், மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுடன் ஒரு அழகான உறவு உருவாகியிருக்கு. அவங்களும் என் குழந்தைகள்தான். எவ்வளவு மழை, வெயில் அடிச்சாலும் பள்ளிக்கூடம் போயிருவேன். எனக்கு இயற்கை, அமைதி எல்லாமே ரொம்ப பிடிக்கும். அதனால, அதையெல்லாம் ரசித்தபடியே செல்வேன்” என்கிறார் சிரித்தபடி.
‘‘பல நாள் மாலை நேரம், திரும்பி மலை இறங்க முடியாம இருக்கும். அப்போ என் மாணவர்கள் வீட்டில் தங்கிடுவேன். என்னுடன் மாணவர்களுக்கு சமையல் செய்ய ஒருவர் இருக்கார். நாங்க இருவரும் சேர்ந்து தான் அந்த பள்ளியை பார்த்துக் கொள்கிறோம். குழந்தைகள் பள்ளிக்கு வர முக்கிய காரணம், கல்விக்கு அடுத்ததா, சாப்பாட்டிற்குத்தான். சில சமயம் பள்ளிக்கான நிதி தாமதமாக வரும்.
அதற்காக குழந்தைகளை பட்டினி போட முடியாது. அந்த சமயம் என் சொந்த செலவுல, அவங்களுக்கு சாப்பாடு தயாராகும். இங்கு நான்காம் வகுப்பு வரை மட்டுமே என்பதால், அதற்கு பிறகு அவர்கள் வேறு பள்ளிக்கு படிக்க போயிடுவாங்க. பழங்குடி இனத்தவர் என்று நாம் இவர்களை சாதாரணமாக எடை போட்டுவிட முடியாது. காரணம் என் பள்ளியில் படிக்கும் எல்லா குழந்தைகளுமே திறமைசாலிகள்தான்’’ என்றவர் தனி ஆளாக பல சிரமங்களை சந்தித்துள்ளார்.
‘‘ஒரே ஆளா இது எல்லாமே செய்யுறது ரொம்ப கஷ்டம். உடல்நிலை சரியில்லாமல் போனாலும், பள்ளிக்கு வரவேண்டிஇருக்கும். நான் ஒரு நாள் விடுமுறை எடுத்தாலும், 15 மாணவர்களுக்கும் அன்னிக்கு விடுமுறையாகிடும். எனக்கு போக முடியாத சூழ்நிலையில், சமையல் செய்பவரிடம் முன்கூட்டியே சொல்லி, மாணவர்களுக்கு உணவு மட்டும் எப்படியாவது கொடுக்க ஏற்பாடு செய்திடுவேன்.
ஆனால்,இந்த பள்ளிக்கு பெரும்பாலும் ஆசிரியர்கள் வர விரும்ப மாட்டாங்க. காடு, மலை எல்லாம் தாண்டி ரிஸ்க் எடுத்து வருவது கஷ்டம்தான்” என்றார்.ஒரு முறை மலை ஏறி செல்லும் போது, தவறி கீழே விழுந்து, பலத்த காயம் கூட ஏற்பட்டதாகவும் சொல்கிறார் உஷா டீச்சர்.
“மழை காலத்துல மலை ஏறுவதும், இறங்குவதும் ரொம்ப சிரமமா இருக்கும். அந்த மாதிரி ஒரு சமயத்துல, சறுக்கி விழுந்ததுல, கால் முட்டியில ரொம்பவே அடிபட்டுடுச்சு. குணமாகும் வரை பள்ளிக்கு செல்ல முடியல. எங்க வீட்டில் ‘இப்படி ஒரு ரிஸ்க் தேவையா? வேற பள்ளிக்கு மாறி போயிடலாம்’ன்னு கூட சொன்னாங்க. என்னால் இவர்களை விட்டு செல்ல மனசு வரல. என்னுடைய மாணவர்கள் பட்டப்படிப்பு முடித்து ஐ.டி மற்றும் நல்ல நிறுவனத்தில் வேலைப் பார்த்து வருகிறார்கள்’’ என்று பெருமை ெபாங்க சொல்லும் உஷா டீச்சர், உண்மையிலேயே ஒரு ஹீரோதான்.
Average Rating