நடிப்பதே தெரியக்கூடாது! (மகளிர் பக்கம்)
கத்தரி பூவழகி
கரையா பொட்டழகி
கலரு சுவையாட்டம்
உன்னோட நெனப்பு அடியே
சொட்டாங்கல்லு ஆடையில
புடிக்குது கிறுக்கு…’
இளைஞர்களின் ரிங், காலர் டோனாக, வாட்ஸ் அப் ஸ்டேட்டசாக ஒலித்துக் கொண்டிருக்கும் இந்தப் பாடலின் நாயகிக்கென்று தனியாக ஆர்மி ஆரம்பமாகிஉள்ளது. ‘அசுரன்’ படத்தின் முன்கதையில் வரும் காட்சிகளிலெல்லாம் பட்டாம்பூச்சி போல் பார்வையாளர்களை தன் வசமாக்கியிருக்கும் அபிராமி, எப்படி அம்மு அபிராமி ஆனார் என்ற பிளாஸ்பேக்.
“சிறுவயதிலிருந்தே நடிக்க வேண்டுமென்ற ஆசை. ஐந்தாம், ஆறாம் வகுப்பு படிக்கும் போதே தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சி தொகுப்பாளினியாக இருந்துள்ளேன். சினிமாவில் நடிக்கணும்னு என்னோட ஆசையை அப்பாவிடம் சொன்னேன். அப்ப நான் ஒன்பதாம் வகுப்பு படிச்சிட்டு இருந்தேன். அப்பாவும் கலை உலகை சார்ந்தவர்.
காலா, கபாலி உள்ளிட்ட பல படங்களுக்கு சவுண்ட் இன்ஜினியரா வேலை பார்த்து இருக்கார். நான் என் விருப்பத்தை சொன்னதும், அவர் சொன்ன ஒரே வார்த்தை ‘10த்ல 95% மேல எடுத்தா, எனக்கு ஓ.கே’ன்னு சொல்லிட்டார். அப்பாவின் ஆசை மட்டும் இல்லை என்னுடைய எண்ணமும் நிறைவேறணும்னு படிப்பில் மட்டுமே கவனம் செலுத்தினேன். அதே போல் அப்பா எதிர்பார்த்த மதிப்பெண் எடுத்தேன். அப்பாவும் பச்சைக்கொடி காட்டினார். அப்படித்தான் நான் சினிமாவில் அடி எடுத்து வைத்தேன்’’ என்றவர் ராட்சசன் படத்தில் நடிக்கும் வாய்ப்பு எதார்த்தமாக
கிடைத்ததாக கூறினார்.
‘‘ஒரு நாள் தியேட்டருக்கு படம் பார்க்க குடும்பத்தோடு போய் இருந்தோம். அப்போது ராட்சசன் படத்தின் உதவி இயக்குநர்களும் அங்கு வந்திருந்தாங்க. என்னைப் பார்த்தவங்க, அப்பாவிடம், ‘ஒரு படம் பண்றோம். அதில் உங்க மகளை போன்ற ஒரு கதாபாத்திரம் தேவைப்படுறாங்கன்னு சொன்னாங்க. அப்பா சரின்னு சொல்ல, ஆடிஷனுக்கு போனேன். தேர்வும் ஆனேன். அப்படித்தான் அபிராமி அம்முவாக மாறினேன். அந்தப் படத்தில் என்னுடைய அம்மு கதாபாத்திரம் மக்கள் மத்தியில் எனக்கான ஒரு அடையாளத்தை ஏற்படுத்திக் கொடுத்தது. இப்போது, அபிராமி ஆகிய நான், அம்மு அபிராமியாக உங்கள் முன் இருக்கிறேன்” என்றார்.
பாலாஜி சக்திவேலின் ‘யார் இவர்கள்’, ‘தீரன் அதிகாரம் ஒன்றி’ல் கார்த்தியின் தங்கை, ‘என் ஆளோட செருப்பக் காணோம்’ போன்ற படங்களில் நடித்திருக்கும் அபிராமிக்கு, அசுரனில் எப்படி வாய்ப்புக் கிடைத்தது என்பது பற்றிக் கூறும் போது, “கலைப்புலி தாணு சார் தயாரிப்பில், விக்ரம் பிரபு சார் நடிப்பில் உருவாகி வரும் ‘துப்பாக்கி முனையில்’ ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன்.
அதில் என் நடிப்பை பார்த்த தாணு சார்தான் வெற்றிமாறன் சார் கிட்ட என்னைப் பத்தி சொல்லி, இந்த கதாபாத்திரத்திற்கு பொருத்தமா இருக்கும்னு பரிந்துரை பண்ணாங்க. இந்த இடத்தில் தாணு சாருக்கு ரொம்ப ரொம்ப தேங்க்ஸ் சொல்லிக்கிறேன்.
துப்பாக்கி முனையில் இருந்து நான் நடித்த ‘பூவென்று சொன்னாலும் நீ பசும்பொன்னென்று சொன்னாலும்’ பாட்டை பார்த்திட்டு வெற்றிமாறன் சார் என்னை வரச்சொன்னார். நானும் போனேன். என்னைப் பார்த்தவர் ஐந்து கிலோ எடையை குறைக்க சொன்னார். லுக் டெஸ்ட் எல்லாம் கூட பண்ணாங்க. அதன் பிறகு அவர்களிடம் இருந்து அழைப்பு வரல. ஆனால் அசுரன் படத்தின் ஷூட்டும் ஆரம்பிச்சுட்டாங்க. நான் அந்த கதாபாத்திரத்துக்கு சரியாக இருக்க மாட்டேன், அதனால் தான் கூப்பிடல… இல்லைன்னா கூப்பிட்டு இருப்பாங்கன்னு நான் என்னையே சமாதானம் செய்து கொண்டேன்.
ஒரு நாள் காலை எனக்கு போன் வந்தது. அதில் ‘அசுரன் படக் குழுவில் இருந்து பேசுறோம். இன்னிக்கு ஈவ்னிங் ஷூட் இருக்கு வந்துருங்கன்’னு சொன்னாங்க. எனக்கு ஒன்னும் புரியல. என்ன கதாபாத்திரம், யார் எல்லாம் இருக்காங்க, நான் யாருடன் நடிக்க போறேன்னு… எதுவுமே எனக்கு தெரியாம சொன்ன நேரத்துக்கு போய் நின்னேன். அதன் பிறகு வெற்றிமாறன் சார் எனக்கான பகுதியை ஷூட் செய்யும்போது எனக்கு அழைப்பு வரும். நானும் போய் நடிப்பேன். இரண்டு மூணு நாள் ஷூட்டிங்கிற்குபிறகுதான் என்னுடைய கதாபாத்திரம் என்ன என்றே எனக்கு புரிந்தது” என்று
கூறும் அபிராமி தனுஷுடன் நடித்த அனுபவத்தைப் பகிர்கிறார்.
“தனுஷ் சாரிடம், ஒரு நடிகர் என்பதைத் தாண்டி எல்லாவற்றையும் கற்றுக்கொள்ளலாம். கேமரா ஆங்கிள், லென்ஸ், எப்படி லைட் வாங்கி நடிக்க வேண்டும், ஒரு கதாபாத்திரமாக எப்படி மாற வேண்டும் என பல விஷயங்கள் தெரிந்த ஒரு சென்சிபிள் பெர்சன். அதனால் அவர் கூட ஒர்க் பண்றதுங்குறது ஒரு அற்புதமான அனுபவம். அதே மாதிரி நம்ம நல்லா ஒர்க் பண்ணா தட்டி கொடுப்பாங்க. அசுரன் படத்தில் நான் ஒரு சீன்ல நல்லா நடித்ததுக்கு தோளில் தட்டிக்கொடுத்து நல்லா நடிச்சிருக்கேன்னு சொன்னாங்க” என்றார்.
கத்தரி பூவழகி பாடலில் எதார்த்தமான நடனமாடியிருக்கும் அபிராமிக்கு நடனம் என்றாலே அலர்ஜியாம், “இந்தப் பாடலுக்கான ஷூட் முழுக்க சென்னையில் செட் போட்டு எடுத்தாங்க. சதீஷ் மாஸ்டருக்குதான் தேங்ஸ் சொல்லணும். ஏன்னா, டான்ஸ் மேல ஒரு கான்பிடன்ட் இல்லாம இருந்தேன். இப்பதான் டான்ஸ் கிளாஸ் போய்ட்டு இருக்கேன்” என்று கூறும் அபிராமி, நடிக்கும் போது நடிக்கிற மாதிரியே தெரியக்கூடாது. அந்த கதா
பாத்திரமாகவே மாற வேண்டும்” என்கிறார்.
“முன்பெல்லாம் ஒரு படம் பார்த்தால் சாதாரணமாகக் கடந்து விடுவேன். இப்பெல்லாம் ஒவ்வொரு கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நடிகர்களின் முகபாவம் முதல் அவர்களின் ஒவ்வொரு அசைவுகளையும் நுணுக்கமா பார்க்கிறேன். அவர்களை மாதிரியே நடிக்காமல், அதில் எனக்கு எது உதவும் என்பதைக் கவனிக்கிறேன்” என்று கூறும் அபிராமிக்கு பிடித்த நடிகர்கள் ரேவதி, விஜய் சேதுபதி, பகத் பாசிலாம்.
நடிகர் விஜயின் தீவிர ரசிகையான அபிராமி, ‘‘நான் தளபதியோட தீவிரமான ஃபேன். அப்பா இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன்கிட்ட சவுண்டு இன்ஜினியரா இருக்காங்க. `பைரவா’ படத்தோட பாட்டைப் பாடுறதுக்காக விஜய் சார் ஸ்டுடியோக்கு வந்திருக்கார்னு அப்பா சொன்னதும், நான் அவசர அவசரமா கிளம்பிப் போனேன்.
என்னைப் பார்த்ததும் அவர், `எப்படிமா இருக்க; என்ன பண்ற’ னு கேட்டார். அதெல்லாம் என் காதில் விழவேயில்லை. அவர்கிட்ட, `சார் ஒரு போட்டோ’னு மட்டும்தான் கேட்டுட்டே இருந்தேன். அன்னைக்கு நான் அவர்கிட்ட பேசின அந்த ஒரு மொமென்ட்டை என்னால் மறக்கவே முடியாது” என்றார்.
ஜீத்து ஜோசப் இயக்கத்தில் ஜோதிகா, கார்த்தி நடித்திருக்கும் படத்தில் முக்கியமான கதாபாத்திரம் ஒன்றில் நடித்திருக்கும் அம்மு அபிராமிக்கு, புத்தகம் படிப்பதிலும் ஆர்வம் அதிகமாம். “தற்போது ஆங்கில நாவல்கள், சிறுகதைகள் படித்துக் கொண்டிருக்கிறேன். விரைவில் தமிழ் இலக்கியங்கள் மீதும் கவனம் செலுத்துவேன்” என்கிறார்.
“இதுவரைக்கும் நல்ல கதைகள் மட்டுமே தேர்வு செய்து நடித்துள்ளேன், இனிமேலும் அப்படித்தான். அதற்கேற்றார் போல் மக்களும் என்னை ஒரு நல்ல பரிமாணத்தில் பார்ப்பாங்க. தற்போது மணிபாரதி சார் இயக்கத்தில் ஒரு படம் நடித்து வருகிறேன். அசுரன் படத்தில் என்னோட கதாபாத்திரத்திற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறதை பார்க்கும் போது ரொம்பவே மகிழ்ச்சியா இருக்கு’’ என்றார் அபிராமி.
Average Rating