பெரும் சாபக்கேடுகள் !! (கட்டுரை)
‘சிங்கப்பூரின் சிற்பி’ லீ க்வான் யூவின் நேர்காணல்கள் அடங்கிய நூலொன்று 1998இல் வௌியானது. அதில், லீ க்வான் யூ, இலங்கை பற்றிப் பேசியிருக்கும் விடயமும் பதிவாகியிருக்கிறது.
‘எங்கள் செயல்களின் விளைவுகளுடன் நாம் வாழ வேண்டியிருக்கிறது. எங்கள் சொந்த மக்களுக்கு நாங்கள் பொறுப்பு. அவர்களுக்காகச் சரியான முடிவுகளை எடுக்கிறோம். நீங்கள் பழைய பிலிப்பைன்ஸைப் பாருங்கள். பழைய இலங்கையைப் பாருங்கள். பழைய கிழக்கு பாகிஸ்தான் மற்றும் பலவற்றைப் பாருங்கள். நான் இந்த நாடுகளுக்கும் இடங்களுக்கும் சென்றிருக்கிறேன். 1956 ஆம் ஆண்டில், நான் முதன்முறையாக கொழும்புக்குச் சென்றபோது, அது சிங்கப்பூரை விடச் சிறந்த நகரமாக இருந்தது. ஏனெனில், சிங்கப்பூர் மூன்றரை ஆண்டுகள் ஜப்பானிய ஆக்கிரமிப்பில் இருந்தது.
கொழும்பு மவுண்ட்பட்டனில், தென்கிழக்கு ஆசியா கட்டளையின் மையம் அல்லது தலைமையகமாக இருந்தது. அவர்களிடம் ஸ்டெர்லிங் (அந்நியச் செலாவணி) கையிருப்பு இருந்தது. அவர்களிடம் இரண்டு பல்கலைக்கழகங்கள் இருந்தன. போருக்கு முன்பு, படித்த திறமைகளின் அடர்த்தியான அடுக்கு இருந்தது. எனவே, அமெரிக்க தாராளவாதிகள் அல்லது பிரிட்டிஷ் தாராளவாதிகள் சொன்னதன் படி, அது செழித்திருக்க வேண்டும். ஆனால், அது நடக்கவில்லை. ஒரு நபருக்கு ஒரு வாக்கு என்பது, சிறுபான்மை தமிழர்கள் மீது, சிங்களப் பெரும்பான்மையின ஆதிக்கத்துக்கு வழிவகுத்தது.
அது தீவிரமாகவும் சுறுசுறுப்பாகவும் உழைத்த புத்திசாலித்தனமான தமிழர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது போலானது. மேலும் ஆங்கிலம் வெளியேற்றப்பட்டது. அவர்கள் ஆங்கிலத்திலேதான் கல்வி கற்றனர். சிங்களம் உட்கொண்டுவரப்பட்டது. அவர்களுக்கு இரண்டு பல்கலைக்கழகங்களில் ஒதுக்கீடு முறையில் இடம் கிடைத்தது. இப்போது அவர்கள் வெறித்தனமான புலிகளாக மாறிவிட்டனர். மேலும், நாடு மீண்டும் ஒருபோதும் ஒன்றிணைக்கப்படாத நிலை ஏற்பட்டுவிட்டது. யாராவது அவர்களிடம் சொல்லியிருக்க வேண்டும் – அமைப்பை மாற்றவும், தளர்த்தவும் அல்லது முறித்துக் கொள்ளவும். அவர்கள் பலவீனமான அல்லது தவறான தலைவர்களைக் கொண்டிருந்ததால் அவர்கள் தோல்வியடைந்தனர்’ என்று லீ க்வான் யூ இலங்கை பற்றிச் சொன்னதைக் அந்தப் புத்தகத்தில் பதிவுசெய்திருக்கிறார்கள்.
லீ க்வான் யூ சொன்னவற்றில் நான்கு விடயங்கள் இன்றும் பொருத்தப்பாடு உள்ளனவாகவே இருக்கின்றன.
முதலாவது, இலங்கையின் இனவாத, அல்லது இன-மைய அரசியல், இலங்கையின் ஒற்றுமைக்கும் வளர்ச்சிக்கும் முன்னெற்றத்துக்கும் பெரும் முட்டுக்கட்டையாக இருக்கின்றது என்பதுடன் மூளைசாலிகளின் வௌியேற்றத்துக்கும் வழிவகுத்தது. இலங்கையின் வளர்ச்சிக்கும் மேன்மைக்கும் உதவியிருக்கக்கூடிய இந்த மூளைகள், வளர்ந்த நாடுகளை வளர்ப்பதற்குப் பயன்பட்டுக்கொண்டிருக்கின்றன.
இரண்டாவது, இலங்கையின் அந்நியச் செலாவணி கையிருப்பு பற்றியது. சர்வதேசத்தில் கேள்வி நிறைந்த பொருட்களின் உற்பத்தியால் ஏற்பட்ட ஏற்றுமதிகளின் விளைவால், அந்நியச் செலாவணி கையிருப்பைக் கொண்ட நாடாக இலங்கை இருந்தது. இன்று அந்நியச் செலாவணி கையிருப்புத் தீர்ந்து போய், வங்குரோத்தாகும் நிலையில் இலங்கை நின்று கொண்டிருக்கிறது.
மூன்றாவது, அன்றே, பெரும் பல்கலைக்கழகத்தைக் கொண்டு அறிவுச் சமூகமாக வளர்ந்துகொண்டிருந்தது இலங்கை. இன்று, உலகத் தரவரிசையில் முதல் ஆயிரத்துக்குள் கூட இலங்கையின் ஒரு பல்கலைக்கழகமும் இல்லை என்ற நிலையில்தான் இலங்கையின் உயர்கல்வித் தரம் இருக்கிறது.
நான்காவது, இலங்கையின் எல்லாப் பிரச்சினைகளுக்கும் அடிப்படைக் காரணமாக அமைந்தது, பலவீனமானதும் தவறான தலைமைகளைக் கொண்டிருந்ததுமாகும்.
இயற்கை வளம் நிறைந்த பூமி; கடல் வளம், கனிம வளம், மண் வளம், மலை வளம், நீர் வளம், மழை வளம், இயற்கைக் காடுகள், அருமையான சுவாத்தியம் என இயற்கை ஆசீர்வதித்த தீவு இலங்கை என்று சொன்னால் அது மிகையல்ல.
ஆனால், ‘சுதந்திரம் அடைந்து’ 73 ஆண்டுகள் கடந்து, இன்று நாடு வங்குரோத்தாகும் நிலையில் நிற்கிறதென்றால் அதற்கு யார் பொறுப்பு என்ற கேள்வி எழுவது தவிர்க்க முடியாதது. ஒட்டுமொத்தமாகச் சொல்வதானால் இந்தத் தீவின் இந்த நிலைக்கு, இந்தத் தீவில் வாழும் மக்கள் அனைவருமே ஏதோ ஒரு வகையில் பொறுப்பாளிகள் ஆகிறார்கள்.
ஆனால், இந்தத் தீவின் பெரும் சாபக்கேடு, இந்தத் தீவுக்கு அமைந்த தலைமைகள். அவர்களைத் தலைமைகள் என்று விளிப்பதுகூட தலைமைத்துவத்தைக் கேவலப்படுத்துவதாகவேதான் அமையும்.
ஒரு வேளை, இந்நாட்டின் தலைமைகள் இனவாத அல்லது இன-மைய அரசியலை முன்னெடுக்காது, நாட்டைச் சமூக, பொருளாதார ரீதியில் முன்னேற்றுவதற்கான நடவடிக்கைகளை, சுதந்திரகாலம் முதல் மேற்கொண்டிருந்தால், இன்று இலங்கையின் நிலை வேறானதாக இருந்திருக்கும்.
ஆனால், தாம் அதிகாரத்துக்கு வந்துவிட வேண்டும்; அதிகாரத்தைத் தக்கவைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக, இனவாத அரசியல் எனும் குறுக்கு வழியைத் தேர்ந்தெடுத்து, இன்று முழுநாட்டையும் தோல்வியடையும் அரசாக மாற்றிக்கொண்டிருக்கிறார்கள்.
இலங்கை அரசியலின் பெரும் சாபக்கேடு எஸ்.டபிள்யு.ஆர்.டீ. பண்டாரநாயக்கவுடன் ஆரம்பிக்கிறது. தான் ஆட்சியைக் கைப்பற்ற வேண்டும் என்ற சுயநலத்தில், பெரும்பான்மை இனத்தேசியவாத அரசியலுக்கு, அரசியலரங்கின் முன்வரிசையில் ஆசனமிட்டுக்கொடுத்த பண்டாரநாயக்க, இந்நாட்டின் தலைவிதியை மாற்றியெழுதினார். இவர்கள் செய்த அரசியலின் விளைவு, அவரின் இரண்டாம் தலைமுறை கூட, இந்நாட்டில் வாழாது, வளர்ந்த நாட்டுக்குக் குடிபெயர்ந்து வாழ்கிறது.
தங்கள் வாரிசுகளுக்கு வௌிநாட்டு வாழ்க்கை எனும் மாற்றுத்திட்டத்தை வைத்துக்கொண்டு, இந்நாட்டை தமது சுயநல அரசியலுக்கும், அதிகார வேட்கைக்குமாக சீரழித்துவிடும் அரசியல் தலைமைகள்தான் இந்நாட்டின் சாபக்கேடு. உன் பிள்ளைகள், பேரப்பிள்ளைகள் கூட வாழாத, வாழ விரும்பாத நாட்டுக்கு, நீ தலைவன் என்பது எவ்வளவு பெரிய வெட்கக்கேடு!
என்றோ ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர், யாரோ சில மன்னர்கள் இந்தத் தீவை இப்படி ஆண்டார்கள் என்ற பழங்கதைகளையும் பிரசாரங்களையும் வைத்துக்கொண்டு, 21ஆம் நூற்றாண்டில் இந்தத் தீவின் அரசியலை முன்னெடுப்பதெல்லாம் அபத்தத்தின் அபத்தம்.
மனித குலம் முன்னோக்கிச் செல்வதைப் பற்றி சிந்திக்கையில், இந்தத் தீவின் தலைமைகள் பின்னோக்கிச் சிந்தித்துக் கொண்டிருக்கிறார்கள். தமது சுயநல அரசியலுக்காகவும் அதிகார வேட்கைக்காகவும் அப்பாவி மக்களிடம் மற்றையவர்கள் என்ற அடையாளப்படுத்தப்படுவோர் மீதான வெறுப்பையும் துவேசத்தையும் காழ்ப்புணர்வையும் பாதுகாப்பின்மை உணர்வையும் விதைத்து, தமக்கான வாக்குகளை அறுவடை செய்கிறார்கள்.
ஆனால், இவையெல்லாம் இந்த நாட்டையும், சமூகத்தையும், அரசியலையும் கொஞ்சம் கொஞ்சமாக உள்ளிருந்து அழுகச் செய்துகொண்டிருக்கிறன என்பதை மக்கள் உணர்வதாகவும் தெரியவில்லை. இந்த அரசியல் தலைமைகள், இவற்றை அறிந்திருந்தும், இவை பற்றிக் கவலைப்படுவதாகவும் தெரியவில்லை.
தன்னுடைய மக்களிடையே அச்சம், சந்தேகம், வெறுப்பு, துவேசம் ஆகியவற்றை வளர்த்துவிடும் தலைமைகள் ஆளும் நாடு, ஒருபோதும் வளாச்சிப் பாதையில் செல்லாது. எத்தகைய வளம் மிக்க நாடாயினும், இதுபோன்ற அரசியல், அந்நாட்ச்டை சீரழித்து, சின்னாபின்னமாக்கிவிடும். இந்த வளம் மிக்க தீவுக்கும் இதுதான் நடந்துகொண்டிருக்கிறது.
வங்குரோத்து நிலையின் எல்லைக்கோட்டில் திணறிக்கொண்டிருக்கும் நிலையில் கூட, இந்தத் தீவின் மக்கள் இங்கு நடந்துகொண்டிருக்கும் அரசியலின் அபத்தத்தைப் புரிந்துகொள்ளவில்லை என்றால், இந்தத் தீவுக்கு ஒருபோதும் விமோசனம் என்பது கிடையாது.
வங்குரோத்து நிலைக்கு ஒரு நாட்டைக் கொண்டு வந்த பின்னர், பழங்கதைகளும் போலி இனப் பெருமைகளும் யாருக்கு என்ன நன்மையைத் தரப்போகிறது?
ஒரு கணமேனும், இந்நாட்டை ஆண்ட ஒரு தலைமையேனும் ஆக்கபூர்வமாகச் சிந்தித்திருந்தால், மக்களிடையேயான வெறுப்பையும் துவேசத்தையும் கசப்பையும் காழ்ப்புணர்வையும் இன-மத அடைப்படைகளில் வளர்த்துவிடும் அரசியல் எல்லாருக்கும் ஆபத்தானது; அது எல்லாருக்கும் அழிவையும், நாசத்தையுமே ஏற்படுத்தும் என்ற் யதார்த்தத்தை உணர்ந்திருந்தால், தமது சுயநலத்தைத்தாண்டி அந்த யதார்த்தத்தை சுவீகரித்திருந்தால் இந்நாட்டுக்கு ஒரு புதிய வசந்தத்தின் தொடக்கமாக அது அமைந்திருந்திருக்கும்.
ஆனால் இந்நாட்டின் சாபக்கேடு, இதுநாள் வரை அப்படி யோசிக்கும், செயற்படும் தலைமைகள் இந்தத் தீவுக்கு அமையவில்லை. மாறாக நான் “இந்த இனத்தவன்”, “இந்த மதத்தவன்” என்று வெற்றுப் பெருமை பேசும் தலைமைகள்தான் இங்கு அரசியல் செய்துகொண்டிருக்கிறார்கள்.
இவர்கள் இந்த நாட்டின் ஆன்மாவை சீரழித்துக்கொண்டிருக்கிறார்கள். இதுதான் இந்நாட்டின் பெரும் பெரும் சாபக்கேடு. இந்நாட்டு மக்கள் இதனைப் புரிந்துகொள்ளும் வரையில், இதற்கு சாப விமோசனம் கிட்டாது.
Average Rating