நாய்க்கு ஆன்லைனில் உணவு!! (மகளிர் பக்கம்)
ஆளில்லாத அந்த வீட்டின் வெளியே தெரு நாய் ஒன்று நின்று கொண்டிருக்கிறது. பைக்கில் அந்த இடத்துக்கு வந்த ஆன்லைன் உணவு சப்ளை நிறுவனத்தை சேர்ந்த ஊழியர் போனில் தனக்கு உணவு ஆர்டர் செய்தவரை தொடர்பு கொண்டு பிரியாணி கொண்டு வந்திருப்பதாகவும், அதை யாரிடம் தர வேண்டும் என்று வினவினார். அதற்கு எதிர்முனையில் உள்ளவர் கேட்டின் முன்பு இருக்கும் அந்த அடுக்குமாடி குடியிருப்பின் காவலாளி அறையினுள் வைக்க சொல்கிறார்.
உணவு சப்ளை செய்ய வந்தவரும் அப்படியே அந்த உணவு டப்பாவை காவலாளியின் அறையில் வைத்துவிட்டு, விநியோகம் செய்து விட்டேன் என குறுஞ்செய்தி அனுப்பி விட்டு சென்றுவிடுகிறார். சற்று நேரத்தில் வீட்டுக்காவலாளி வருகிறார். அந்த உணவு டப்பாவை அழகாக திறந்து வைக்கிறார். அந்த அடுக்கு மாடி குடியிருப்பில் இருக்கும் நாய் ஒன்று தனக்கு வழங்கப்பட்ட உணவினை சுவைத்து சாப்பிட்டு விட்டு மறுபடியும் குடியிருப்புக்குள் சென்றுவிடுகிறது. காவலாளியும் அந்த இடத்தை சுத்தம் செய்து விட்டு செல்கிறார்.
நம்பும் படியா இருக்கிறது என்று கேட்கிறீர்களா?
உண்மைதான். இந்த சம்பவம் நடப்பது கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள கவுதியார் நகரில். இந்த பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வசித்து வரும் வர்கீஸ் ஓம்மன் என்ற சுற்றுலா வழிகாட்டி வீட்டில் தான் இந்த சம்பவம் அடிக்கடி நடப்பதை காணமுடிகிறது. வர்கீஸ் தனது குழந்தைகளுடன் வெளியே சென்றிருந்தபோது அங்கே தவித்தபடி நின்றிருந்த தெருநாய் ஒன்றை பார்த்துள்ளார்.
அவரின் குழந்தைகளும் அதை வீட்டிற்கு அழைத்து செல்லலாம் என்று கூற, அந்த நிமிடம் முதல் அந்த தெருநாய் அவர்கள் வீட்டின் ஒரு உறுப்பினராக மாறியது. ஷேடோ என்று பெயர் சூட்டப்பட்டு அவர் அந்த நாயினை பராமரித்து வருகிறார். இந்நிலையில் வர்கீஸ் அடிக்கடி சுற்றுலா தொடர்பான விஷயங்களுக்காக வெளியூர் செல்வது வழக்கம். அது அவரின் தொழில் என்பதால், அவர் அவ்வப்போது குடும்பத்தினருடன் வெளியே செல்லும் நேரங்களில் அவரால் ஷேடோவுக்கு உணவு வழங்க முடியாமல் போயுள்ளது.
இதை நினைத்து வருந்திய வர்கீஸ் தான் வெளியூர் செல்லும் நேரங்களிலும் ஷேடோவை பட்டினி போடக்கூடாது என்று தீர்மானித்தார். அதற்கு தொழில்நுட்பம் அவருக்கு கை கொடுத்துள்ளது. விளைவு வர்கீஸ் இல்லாத நேரத்தில் ஷேடோவிற்கு ஆன்லைனில் உணவினை ஆர்டர் செய்துவிடுகிறார். இதுகுறித்து வர்கீஸ் கூறுகையில், “வீட்டில் யாரும் இல்லாத நேரங்களில் ஷேடோவுக்கு உணவு அளிக்க முடியவில்லை. இதனால் ஆன்லைனில் ஷேடோவின் பெயரில் ஒரு கணக்கு தொடங்கி, நான் ஊரில் இல்லாத நேரங்களில் அதில் அதற்கு உணவு ஆர்டர் செய்து வருகிறேன்.
ஷேடோ ஃபாஸ்ட் ஃபுட் உணவை உண்ணாது. பிரியாணியை தான் சாப்பிடும். அதனால் பிரியாணியை ஆர்டர் செய்து டெலிவரி பாயிடம் யாரிடம் கொடுக்க வேண்டும் என்று சொல்லிடுவேன். என் அபார்ட்மென்ட் காவலர் ராதாகிருஷ்ணன் அதை பிரித்து ஷேடோவுக்கு கொடுத்து விடுவார்” என்கிறார் வர்கீஸ்.
Average Rating