வாழ்க்கையை அதன் போக்கில் வாழுங்க!! (மகளிர் பக்கம்)
மும்பை, சிஞ்ச்போக்லி என்ற பகுதியில் தினமும் மாலை நான்கு மணிக்கு டிராபிக் ஜாம் ஏற்படுவது சகஜம். டிராபிக்ஜாம் என்றால் நமக்கு வாகன நெரிசல்தான் நினைவுக்கு வரும். ஆனால் இந்தப் பகுதியில் வாகன நெரிசலுக்கு பதில் மக்களின் கூட்ட நெரிசல்தான் அதிகமா இருக்கு. அலைபாயும் அந்த கூட்டத்திற்கு காரணம், கவிதா. இவர் பெரிய பிரபலமோ அல்லது சினிமா நடிகையோ கிடையாது. அந்தப் பகுதியில் வடாபாவ் மற்றும் ரகடா பாட்டி ேபான்ற ஸ்நாக்ஸ் உணவுகளை தள்ளுவண்டியில் விற்பனை செய்யும் சாதாரண பெண். இவரின் சுவையான வடா பாவ் சாப்பிடுவதற்காகவே மாலை நான்கு மணிக்கெல்லாம் மக்கள் வந்து காத்திருக்க ஆரம்பித்து விடுகிறார்கள்.
எவ்வளவு கூட்டம் வந்தாலும், அதே புன்சிரிப்புடன் அவர்களுக்கு வடாபாவ் பரிமாறுகிறார் கவிதா. இவரை அங்குள்ளவர்கள் எல்லாரும் கவிதா டாய் (Tai) என்றுதான் அழைக்கிறார்கள். ‘டாய்’ என்றால் மராத்தியில் ‘அக்கா’ என்று அர்த்தமாம். ‘‘என்னோட சொந்த ஊர் சிந்துதுர்க் மாவட்டம் கோகன்ட் தாலுகாவில் உள்ள மால்வன் கிராமம். அப்பா மோகன் பரப், அம்மா மாதுரி பரப். நான் ஒரே மகள். உடன் பிறந்தவர்கள் யாரும் கிடையாது. அப்பா பிறந்து வளர்ந்தது எல்லாம் சிஞ்ச்போக்லி தத்தாராம் லார் மார்க், பாவ்லா காம்பவுண்ட் பகுதியில்தான். அப்பாக்கு 1973ம் ஆண்டு அம்மாவுடன் திருமணமானது.
எங்க வீடு சிஞ்ச்போக்லி ரயில் நிலையத்தில் இருந்து ஒன்றரை கிலோ மீட்டர் தொலைவில் இருந்தது. நாங்க குடிபெயர்ந்த போது இங்கு பெரிய அளவில் வீடுகள் எல்லாம் இல்லை. எல்லாமே குடிசை வீடுகளாதான் இருந்தது. அப்பா எங்க பகுதியில் இருந்த மில்லில் வேலை பார்த்து வந்தார். எங்களின் குடும்பமும் பிரச்னை இல்லாமல் நகர்ந்தது. பிரச்னை இல்லாத வாழ்க்கை என்றுமே இருக்காது. ஏதாவது ஒரு கட்டத்தில் ஒரு பிரச்னை தலைதூக்கும், அதை சமாளித்து முன்னேறினால்தான் வாழ்க்கையும் சுவாரஸ்யமாக இருக்கும். எங்களுக்கு வந்த பிரச்னை… அப்பா வேலை பார்த்து வந்த மில் நஷ்டத்தில் போனதால், அந்த மில்லை மூடிட்டாங்க. அப்பாக்கு வேலை இல்லாமல் போயிடுச்சு.
ஆனா, அப்பா மனம் தளரல. இந்த வேலை இல்லைன்னா என்ன… வேறு வேலை கிடைக்காமலா போயிடும்னு உறுதியா இருந்தார்’’ என்றவர் அதன் பிறகு அவரின் தந்தை சுயமாக தொழில் துவங்கியுள்ளார். ‘‘என்னதான் நாம் ஒருவரிடம் வேலை பார்த்தாலும், அந்த வேலை எவ்வளவு காலம் நிரந்தரம்ன்னு சொல்ல முடியாது. அதனால, மத்தவங்களிடம் கைகட்டி வேலை பார்ப்பதை விட்டுட்டு சொந்தமா தொழில் துவங்கலாம்னு அப்பா முடிவு செய்தார். அம்மாவிடம் சொல்ல அவங்களும் சம்மதம் தெரிவிக்க எங்க வீட்டிற்கு வெளியே 1985ம் ஆண்டு ரகடா பெட்டிஸ் மற்றும் வடாபாவ் சிற்றுண்டி கடையை திறந்தார்.
அம்மாதான் அப்பாக்கு எல்லா சப்போர்ட்டும். கடைக்கு தேவையான எல்லா பொருளும் அம்மாதான் தயார் செய்து தருவாங்க. காலையில் கடைக்கு சென்று தேவையான பொருட்களை அப்பா வாங்கிட்டு வந்திடுவார். அம்மா தயார் செய்ய, மாலை ஐந்து மணிக்கெல்லாம் கடை திறந்திடுவாங்க.
எந்த ஒரு உணவு சார்ந்த தொழிலும் சுவை மற்றும் தரம் நல்லா இருந்தாதான் வாடிக்கையாளர்கள் திரும்ப வருவாங்க. அதுவும் அந்தக் காலத்தில் விளம்பரம் செய்யும் அளவுக்கு வசதியும் கிடையாது. வாய் வார்த்தையாகத்தான் எங்களின் கடை கொஞ்சம் கொஞ்சமா வளர ஆரம்பிச்சது. படிப்படியாக வாடிக்கையாளர்கள் அதிகரிக்க ஆரம்பிச்சாங்க, காரணம், தரமான பொருள், சுத்தமான எண்ணெய் மற்றும் சுவை…
இந்த மூன்றிலும் அப்பா காம்பிரமைஸ் ஆக மாட்டார்’’ என்று நிறுத்தியவரின் வாழ்வில் மற்றுமொறு பேரிடி விழுந்தது. ‘‘கடை ஆரம்பித்த ஐந்தே ஆண்டுகளில் அப்பா திடீரென மாரடைப்பால் உயிரிழந்தார். இதனால் அம்மா ரொம்பவே நொடிஞ்சு போயிட்டாங்க. ஒரு கட்டத்தில் நானும் அம்மாவும் அப்படியே ஒரே இடத்தில் நின்று விட்டது போன்ற உணர்வு ஏற்பட்டது. அதன் பிறகு அம்மா சுதாரிச்சு, வாழ்க்கை அப்படியே நின்றுவிடாது. அதன் போக்கில் நகரவேண்டும் என்று முடிவு செய்தாங்க. அப்பா ஆரம்பிச்ச கடையை எக்காரணம் கொண்டும் கைவிட்டு விடக்கூடாதுன்னு உறுதியா இருந்தாங்க. அதனால் அம்மாவே அந்தக் கடையை தனியாக எடுத்து நடத்த ஆரம்பிச்சாங்க.
ஒரு பெண் இந்த சமுதாயத்தில் தனியாக வாழ்வதே கடினம். அதிலும் தனியாக ஒரு பெண் குழந்தையுடன் தொழில் செய்யும் போது… அதனால் ஏற்படும் பிரச்னைகள் பற்றி சொல்லவே வேண்டாம். பலர் அம்மாவை உதாசீனம் செய்தாங்க. கடையில் அவங்க நின்று விற்பனை செய்வதை தவறா பேசினாங்க. இது போதாதுன்னு மாநகராட்சி மூலமாக பல பிரச்னைகளை அம்மா சந்திச்சாங்க. ஆனா, அதை எல்லாவற்றையும் அவங்க சாதுரியமாக கையாண்டாங்க. அப்ப நான் சின்னப் பெண் என்பதால், என்னால் முடிந்த உதவியை அம்மாக்கு செய்து தருவேன். அப்பா இருந்தவரைக்கும் ஒரு தொழிலை நிர்வகிப்பது குறித்து எனக்கு தெரியல. அதில் உள்ள கஷ்டங்கள் மற்றும் பிரச்னைகள் எல்லாமே அம்மா நிர்வகிக்க ஆரம்பிச்ச போதுதான் புரிந்தது.
அம்மா பொறுப்பேற்று 30 வருஷமாச்சு. எங்க ஏரியா முழுக்க அம்மாவின் வடாபாவ் ரொம்பவே பிரபலம்’’ என்றவர் தன் திருமணத்திற்கு பிறகு இந்தக் கடையின் பொறுப்பை ஏற்றுக் கொண்டுள்ளார். ‘‘அப்பாதான் கடையை ஆரம்பிச்சார். ஆனால் அவருக்கு பிறகு அம்மாதான் இந்த கடையின் பொறுப்பை முற்றிலும் ஏற்றுக் கொண்டாங்க. வீட்டு வேலை மட்டும் இல்லாமல், கடையின் வேலை எல்லாமே அம்மாதான் பார்த்துக்கிட்டாங்க. ஏன் கடைக்கு தேவையான பொருட்கள் கூட அம்மாதான் மார்க்கெட் போய் வாங்குவாங்க. அம்மாவுடன் நானும் சேர்ந்து கடைக்கு போவேன். மாலை நேரத்தில் சிறிது நேரம் நானும் அம்மாவுடன் கடையில் அவங்களுக்கு உதவியா இருப்பேன்.
அப்படித்தான், ஒரு உணவகத்தை நடத்தும் திறன் என எல்லாவற்றையும் கற்றுக் கொண்டேன். படிப்பு முடிச்ச கையோடு அம்மா எனக்கு திருமணம் பேசி முடிச்சாங்க. 2009ம் ஆண்டு கிரீஸ் சாவந்த் என்றவருடன் எனக்கு திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்கு பிறகு எனக்கு அம்மாவை தனியாக விட்டு செல்ல மனமில்லை. என்னுடைய எண்ணம் என் கணவருக்கும் புரிந்தது. அதனால் அவர் எங்களுடன் இங்கேயே வந்து தங்கிட்டார். இப்ப அவரும் எங்களுடன் சேர்ந்து இந்தக் கடையை பார்த்துக் கொள்கிறார். இப்ப அம்மாவுக்கும் வயதாகிவிட்டது. அவங்களால முன்பு போல கடையில் நின்று வேலை பார்க்க முடியல. அதனால் கடையின் பொறுப்பை நானும் என் கணவரும் எடுத்துக் கொண்டோம்.
அம்மா உணவுக்கு தேவையான அனைத்து விஷயங்களையும் வீட்டில் இருந்தே செய்து கொடுத்திடுவாங்க. இப்ப மூணு வருஷமா நான் இந்தக் கடையை நடத்தி வரேன். அப்ப இருந்தது போலவே இன்னும் எங்க கடையை ேதடி சாப்பிட வராங்க. அதற்கு முக்கிய காரணம் அன்று அப்பா கடைபிடித்த தரம், சுகாதாரம் மற்றும் சுவை என்ற மூன்று விஷயம்தான். சிஞ்ச்போக்லி மட்டும் அல்ல பக்கத்தில் உள்ள லால்பாக், பைகுல்லா உட்பட பல்வேறு பகுதிகளில் இருப்பவர்களும் இங்கு சாப்பிட வராங்க. வடாபாவ் மட்டும் இல்லை, ரகடா பேட்டிஸ், சமோசா, மிளகாய் பஜ்ஜி, உருளைக்கிழக்கு பஜ்ஜி, வெங்காய பஜ்ஜியும் விற்பனை செய்றோம். இதில் ரகடா பேட்டிஸ் இரண்டு மணி நேரத்தில் காலியாயிடும்.
அதுமட்டும் இல்லை… எந்த ஒரு பொருளையும் நாங்க மறுநாள் வரை வைத்திருப்பது கிடையாது. அன்று செய்வதை அன்றே விற்றிடுவோம். இங்க கவிதா ஸ்நாக்ஸ்ன்னு சொன்னா போதும், அதற்கான வழியை அங்குள்ளவங்க காண்பிச்சிடுவாங்க. இன்னும் தள்ளுவண்டியில்தான் செய்து வருகிறோம். எங்க கடைக்கு நாங்க போர்டு கூட பிக்ஸ் செய்தது இல்லை’’ என்கிறார் எண்ணெயில் சமோசாவை பொரித்தபடி கவிதா அக்கா.
Average Rating