கீரை என்கிற பச்சைத்தங்கம்!! (மருத்துவம்)

Read Time:10 Minute, 16 Second

உணவு வகைகளில் கீரைக்கென்று இருக்கும் பிரத்யேகமான பெருமைகள் என்ன?

கீரைகள் எளிதாக செரிமானமாகக்கூடிய சத்தான ஓர் உணவுப் பொருள். ஒவ்வொரு கீரையுமே ஒவ்வொரு வகையில் சிறந்ததாகவும், தனித்துவம் கொண்டதாகவும் உள்ளது. உதாரணத்துக்கு, முருங்கைக் கீரையில் அதிகப்படியான இரும்புச்சத்து உள்ளதால் ஹீமோகுளோபின் பிரச்சனை உள்ளவர்கள் இதை உட்கொள்ளலாம். இதுபோல் ஒவ்வொரு கீரைக்கும் பல மருத்துவ குணங்கள் இருப்பதால் தொடர்ந்து கீரையை உணவில் சேர்த்துக் கொள்கிறவர்களின் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் கரைக்கப்பட்டு உடல் பருமன் பிரச்னை சரிசெய்யப்படுகிறது.

முக்கியமாக, பெண்களுக்கு 40 வயதுக்கு மேல் ஏற்படும் ஹீமோகுளோபின் பிரச்னை, கால்சியம் குறைபாடு, மூட்டுவலி போன்றவற்றுக்கு கீரை நல்ல நிவாரணம் தரும். அடிக்கடி கீரையை உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் மேற்கண்ட நோய்களின் தாக்கத்திலிருந்து தப்பிக்க முடியும். குறிப்பாக, தினசரி உணவில் கீரை சேர்த்துக் கொள்வதனால் குழந்தைகளுக்கு நல்ல நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கும்.’’

குழந்தைகளுக்கு எந்த வயதிலிருந்து கீரையை உணவாகக் கொடுக்க ஆரம்பிக்கலாம்?

இப்போதுள்ள பெரும்பாலான குழந்தைகளுக்குக் கீரைகள், காய்கறிகள் பிடிப்பதில்லை. அதனாலேயே சாப்பிட மறுக்கின்றனர். காரணம், சிறு குழந்தை முதலே நாம் அவற்றை பழக்கப்படுத்தாததுதான். முதலில் பெரியவர்களான நாம் தினசரி உணவில் கீரைகளை சேர்த்து, சாப்பிடப் பழகிக் கொள்ள வேண்டும். அதன்பிறகு, நம்மைப் பார்த்து அவர்களும் சாப்பிடப் பழகுவார்கள்.

குழந்தைகளைப் பொறுத்தவரையில் பிறந்த 6 மாதத்துக்குப் பிறகு இட்லி, காய்கறிகள், பழங்கள் போன்றவற்றைக் கொடுத்துப் பழக்கப்படுத்துகிறோம். அதே காலகட்டத்தில் கொஞ்சம் கொஞ்சமாக வேகவைத்த கீரையின் சாறுகளையும் கொடுத்துப் பழக்கப்படுத்தலாம். 8 மாதங்களுக்குப் பிறகு சாதத்துடன் கொஞ்சம் கீரை சேர்த்து கொடுக்கலாம். இப்படி தொடர்ந்து செய்து வந்தால் 2 வயதுக்குப் பிறகு தானாகவே குழந்தைகள் கீரைகளை விரும்பி உண்ண ஆரம்பித்துவிடுவார்கள்.

கீரைகளை உணவில் சேர்த்துக் கொள்ள சரியான வேளை எது?

பொதுவாக, கீரைகளை காலை உணவுடன் எடுத்துக்கொள்வது சிறந்தது. குறிப்பாக முதியவர்களும், உடல் நலம் குன்றியவர்களும் கீரை உட்கொள்ள காலை நேரமே உகந்தது. கீரைகளை இரவு வேளையில் உண்ணக்கூடாது என்று ஒரு கருத்து உள்ளது. ஆனால், இன்றைய சூழ்நிலையில் தினசரி உணவில் கீரை கட்டாயம் என்பதால் வேலைக்குச் செல்பவர்கள், வெளியில் உண்பவர்களால் காலை உணவில் கீரை சேர்ப்பது என்பது இயலாதது. எனவே, இரவில் நேரமும், வாய்ப்பும் கிடைக்கும்பட்சத்தில் கீரை சாப்பிடுவதால் தவறு எதுவும் இல்லை.

இரவில் கீரை சேர்த்துக்கொள்ள நேரிடும்போது 8 மணிக்குள் சாப்பிட்டுவிட வேண்டும் என்பதை மனதில் பதிய வைத்துக்கொண்டால் போதும். ஆனால், தாமதமாக இரவு 10 மணி, 11 மணிக்கு உண்பது பெரிய தவறு. இதனால் செரிமானக் கோளாறு உள்பட சில பிரச்னைகள் ஏற்படக் கூடும்.
அதேபோல் கீரையை சமைத்த வேளையிலேயே உட்கொள்ள வேண்டும். காலையில் சமைத்த கீரையை ஃப்ரிட்ஜில் வைத்து இரவு உட்கொள்வது தவறு. இதனால் தேவையில்லாத வயிற்றுக் கோளாறு, நோய்த்தொற்று ஏற்பட வாய்ப்பு உண்டு. இரவுக்கு புதிதாக வேண்டுமானால் சமைத்து சாப்பிடலாம்.’’

மழைக்காலங்களில் கீரை சாப்பிடக் கூடாது என்று சொல்கிறார்களே…

கீரை மழைக்காலங்களில் செரிமானமாவது கடினம் என்பதால் அப்படி ஒரு கருத்து உருவாகி இருக்கிறது. ஆனால், நம் நாட்டைப் பொறுத்தவரை அதிக வெப்பமான சூழ்நிலை நிலவுவதால் எந்த பருவ காலத்திலும் கீரையை உட்கொள்ளலாம். குளிர்பிரதேசங்களில் கூட தினசரி உணவில் கீரையை சேர்த்துக் கொள்வது அவசியமே. பருவ கால மாற்றங்களுக்கும் கீரையை உண்பதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. மழைக்காலங்களைப் பொறுத்தவரை நோய்த்தொற்று ஏற்பட வாய்ப்பு அதிகம் என்பதால் கீரையை சரியாக சுத்தம் செய்து சமைத்து உணவில் சேர்க்க வேண்டும். கீரைகள் கிடைக்காதபோது அதற்கு மாற்றாக ப்ரக்கோலியையும் உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.’’

எந்த வயதினர் கீரையைத் தவிர்ப்பது நல்லது?

கீரையைப் பொறுத்தவரை இவர்கள் சாப்பிடக்கூடாது, இவர்கள் சாப்பிடலாம் என்பதும் தவறான கருத்துதான். அனைத்து வயதினருமே கீரையை உட்கொள்ளலாம். கீரையில் அதிகப்படியான சத்துகள் உள்ளதால் அனைத்து வயதினரும் உணவில் சேர்த்துக் கொள்வது கட்டாயம் என்று கூட சொல்லலாம். உடல் நலம் குன்றியவர்கள் நோயின் தன்மையைப் பொறுத்து கீரையை எடுத்துக் கொள்வது பற்றி மருத்துவரிடம் ஆலோசித்த பிறகு சாப்பிடலாம். நீரிழிவு நோயாளிகள் கூட அதை கட்டுக்குள் வைத்திருப்பவர், மருத்துவரின் அறிவுரைப்படி குறைவாக எடுத்துக் கொள்வதில் தவறு எதுவும் இல்லை.

வீட்டிலேயே கீரை வளர்க்க ஆசைப்படு கிறவர்களுக்கான தங்களின் ஆலோசனை என்ன?

இப்போது சந்தைகளில் கிடைக்கும் பெரும்பாலான கீரைகள் அதிகப்படியான பூச்சிக்கொல்லி மருந்துகள் தெளிக்கப்பட்டு விற்பனைக்கு வருகின்றன. அதனாலேயே சுவையாகவும் இருப்பதில்லை. அதனால், வீட்டிலேயே கீரை வளர்ப்பது நல்ல விஷயம்தான். இட வசதி உள்ளவர்கள், கிராமங்களில் வசிப்பவர்கள் எளிதாக வளரக்கூடிய முருங்கைக் கீரை, முளைக்கீரை, வெந்தயக்கீரை போன்றவற்றை வீட்டிலேயே வளர்க்கலாம். அதை எடுத்து சுத்தம் செய்து சமைக்கலாம். இதனால் ஆர்கானிக் மற்றும் பூச்சிக்கொல்லி தெளிக்காத கீரையை நம் வீட்டு குழந்தைகளுக்கு கொடுக்க முடியும். சந்தைகளில் வாங்கும் கீரையை அதன் தண்டுப்பகுதியை நீக்கி சரியாக இரண்டு மூன்று முறை தண்ணீரில் சுத்தம் செய்த பிறகு சமைக்கலாம்.’’

கீரையை சரியாக சமைப்பதற்கென்று ஏதேனும் முறைகள் இருக்கிறதா?

தினசரி கீரையை உட்கொண்டாலும் எந்த பயனும் இல்லை, கால்சியம் குறைபாடு, ஹீமோகுளோபின் குறைபாடு போன்றவற்றுக்கு தீர்வு ஏற்படவில்லை என்று சிலர் கூறுவார்கள். அதற்குக் காரணம் கீரையைப் பொறுத்தவரை சரியாக சமைக்காததுதான். அதனால் கீரையை சமைக்கும் முறையானது மிகவும் முக்கியம். கீரைகள் சமைக்கும் போது அதன் தன்மை மற்றும் அதன் பச்சை நிறம் மாறாமல் சமைக்க வேண்டும். அதை அதிகம் வேக வைத்து எடுத்து சமைக்கும்போது அது கரும்பச்சை நிறத்தில் மாறி விடுகிறது.

இவ்வாறு நிறம் மாறக்கூடாது. நிறம் மாறினால் அதிலிருந்து அனைத்து சத்துகளும் வெளியேறிவிட்டது என்று பொருள். அதை உட்கொண்டாலும் எந்த பயனும் இல்லை. எனவே அதை அதிகம் வேக வைக்காமல் சாதாரணமாக கீரை வெந்தவுடனேயே அதை சமைக்க வேண்டும். சிலர் கீரையை குக்கரில் சாதத்துடனேயே வேகவைத்து சமைக்கிறார்கள். அது தவறு. குக்கரில் சாதத்துக்காக 3 விசில் விடுவதால் கீரைகள் மிகவும் வெந்து அதன் சத்துகள் அனைத்தும் வீணாகிவிடுகின்றன. எனவே, குக்கரில் கீரை சமைப்பதையும் தவிர்க்க வேண்டும்!

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தாம்பத்திய உறவுக்கு தடை போடும் குறைபாடு!! (அவ்வப்போது கிளாமர்)
Next post நோய்எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் முருங்கை கீரை!! (மருத்துவம்)