தாம்பத்திய உறவுக்கு தடை போடும் குறைபாடு! (அவ்வப்போது கிளாமர்)
காமாட்சிநாதனுக்கு 45 வயது. தோற்றம் நடுத்தர வயது போல இருக்காது… முதுமைத் தோற்றம். எப்போதும் முகத்தில் ஒரு களைப்பும் உடலில் சோர்வும் தெரியும். அலுவலகத்தில் வேலைகளை இழுத்துப் போட்டுச் செய்வார். சரியான உணவுப் பழக்கம் இல்லை. கண்ட நேரத்தில் சாப்பிடுவார். தனக்கு நீரிழிவு பிரச்னை இருப்பது அவருக்குத் தெரியும்… அதை அவர் பெரிதாக எடுத்துக் கொண்டதில்லை. ஒரு கட்டத்தில் பிரச்னை அதிகமானது. நண்பர் ஒருவர், நீரிழிவுக்கு தீர்வு கிடைக்கும் என்று ஒரு போலி மருத்துவரின் முகவரியைச் சொல்ல, அங்கே சென்றார். அந்த மருத்துவர் சில இலைகளைக் கொடுத்தார். ‘இரவில் ஒரு தம்ளர் தண்ணீரில் இதைப் போட்டு வைத்து, காலையில் நீரைக் குடியுங்கள். நீரிழிவு ஓடிவிடும்’ என்றார். காமாட்சிநாதன் அதை நம்பினார்… தினமும் மூலிகைத் தண்ணீரைக் குடித்துப் பார்த்தார். எந்தப் பயனும் இல்லை. முக்கியமாக அவரால் செக்ஸில் முழுமையாக ஈடுபட முடியவில்லை. விறைப்புத் தன்மையை அடைவதிலேயே பிரச்னை! வேறு வழியில்லாமல் நீரிழிவு நிபுணரை அணுகினார். பரிசோதித்த டாக்டர், காமாட்சி நாதனின் உடலில் சர்க்கரை அளவு அநியாயத்துக்கு அதிகமாகியிருக்கிறது என்பதைச் சொன்னார்… கடிந்து கொண்டார். ஆரம்ப கட்டத்திலேயே முறையான சிகிச்சைகளை மேற்கொண்டிருந்தால், தாம்பத்தியத்தைப் பாதிக்கும் அளவுக்கு இந்தப் பிரச்னை வளர்ந்திருக்காது என்பதை சுட்டிக் காட்டினார். நீரிழிவை கட்டுக்குள் வைத்திருக்காவிட்டால் கண்கள் பாதிக்கப்படும்… சிறுநீரகங்கள் பாதிப்புக்குள்ளாகும்… இதய நோய்கள் ஏற்படும்… பாதங்களில் புண்கள் வரும். இவை அனைவரும் அறிந்தவை. சரி… நீரிழிவு, செக்ஸ் வாழ்க்கையை பாதிக்குமா? ஆம்… நிச்சயமாக… எப்படி? ரத்தத்தில் சர்க்கரையின் அளவு கூடுவதையே ‘சர்க்கரை நோய்’ அல்லது ‘நீரிழிவு பிரச்னை’ என்கிறோம். நமது ரத்தக்குழாய்களில் மூன்று பகுதிகள் உள்ளன. உட்பகுதி ‘எண்டோதீலியம்’ என்று அழைக்கப்படும். இதனுள் பல ரசாயன மாற்றங்கள் நடைபெறுகின்றன. நீரிழிவு நோய் ஏற்பட்டால் Advanced glycation end products எனும் பொருட்கள் உருவாகி ரத்தக்குழாயின் உட்சுவரை அடைத்துக் கொள்ளும். மற்ற உறுப்புகளுக்குப் போக வேண்டிய ரத்த ஓட்டம் இதனால் குறையும். நீரிழிவு பிரச்னையுடன் கொழுப்பும் அதிகமாகிவிட்டால் ரத்தக்குழாய்களின் சுவர்கள் மேலும் குறுகிவிடும். மது, சிகரெட் போன்ற கெட்ட பழக்கங்கள் இருந்தால் நிலைமை இன்னும் மோசம். ஆணுறுப்பில் நிறைய காலி இடங்கள் உள்ளன. செக்ஸ் உணர்வுக்கு உட்படும் போது உடலின் மற்ற இடங்களில் உள்ள பெருமளவு ரத்தம், காலியான இடங்களில் சேர்ந்து ஆணுறுப்பை பலூன் போல விரிவடைய செய்கிறது… விறைப்புத் தன்மையை ஏற்படுத்து கிறது. இப்படி ஆணுறுப்புக்கு வரும் ரத்த ஓட்டத்தின் அளவு குறைந்தால், விறைப்புத்தன்மை அடைவதில் பிரச்னை ஏற்படும். சரியாக உறவில் ஈடுபட முடியாது. தாமதமாக விந்து வருவது, விந்து வராமல் போவது, மூத்திரப்பைக்குள் விந்து போய்விடுவது போன்ற பிரச்னைகளும் உண்டாகும். பெண்களுக்கு ‘கிளிட்டோரிஸ்’ எனப்படும் யோனிமலரில் ரத்த ஓட்டம் குறைவாக இருந்தால் செக்ஸில் முழுமையான சுகத்தை அடைய முடியாது. பெண் உறுப்பில் நீரும் சுரக்காது. ‘டயாபடிக் நியூரோபதி’ பிரச்னையில் நரம்புகள் பாதிக்கப்பட்டு உடல் பலவீனமாகும். நீரிழிவு பிரச்னையால் செக்ஸ் வாழ்க்கையில் பிரச்னை அடைந்த ஆண்கள் அதற்காகக் கவலைப்படத் தேவையில்லை. நரம்புகளைத் தூண்டிவிடும், விறைப்புத் தன்மையை அடைய வைக்கும் மருந்துகளும் மாத்திரைகளும் இப்போது கிடைக்கின்றன. அவற்றை மருத்துவரின் ஆலோசனைக்குப் பிறகே உட்கொள்ளவேண்டும். சரியான நேரத்தில் உணவு எடுத்துக் கொள்வது, அத்தியாவசியமான உடற்பயிற்சி களை மேற்கொள்வது, பொரித்த, வறுத்த உணவு வகைகளை தவிர்ப்பது, வேக வைத்த உணவுகளை சாப்பிடுவது ஆகியவற்றை முறையாகக் கடைப்பிடிக்க வேண்டும். ஆரம்பத்திலேயே நீரிழிவை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துவிட்டால், தாம்பத்தியத்தில் எந்தப் பிரச்னையும் ஏற்படாது. பிரச்னை உள்ளவர்கள் உடனே அணுக வேண்டியது சரியான நீரிழிவு நிபுணர் ஒருவரை!
Average Rating