கிணறு குடித்த ‘சிறுநீர்’ !! (கட்டுரை)
உலகில் அனைத்துப் பகுதிகளிலும் குழந்தைகளைத் துன்புறுத்தும் சம்பவங்கள் நாளும் பொழுதும் இடம்பெற்றுக்கொண்டுதான் இருக்கின்றன. உறவினர்கள், அயலவர்கள், அந்நியர்கள் போன்றோரிடம் குழந்தைகளும் சிறுவர்களும் சிக்குப்பட்டு சின்னாபின்மாகும் பல சம்பவங்களை தினமும் ஊடகங்கள் ஊடாக அறிந்து மனம்வெதும்புகின்றோம். சிலசம்பவங்கள், பெற்றெடுத்த தாய், தந்தையர் மூலமாக நிகழ்வதை அறிந்து, அந்தப் பெற்றோர்கள் மீது, ஆத்திரமும் ஆவேசமும் அடைகின்றோம்.
அடித்து துன்புறுத்தல், சூடு வைத்தல், கடின வேலைகளைக் கொடுத்தல் போன்ற காரியங்களுடன், குழந்தைகளை கொல்லும் அளவுக்கு பெற்றோரின் மனநிலை மாறி இருப்பதை மனநோய் என்றுதான் கருதவேண்டும்.
அவ்வாறான நிலையில்தான், மக்களை சோகத்தில் ஆழ்த்திய சம்பவங்கள் இரண்டு, வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில், தந்தையர்களால் குழந்தைகள் கிணற்றில் வீசப்பட்டு கொலை செய்யப்பட்ட சோகச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
கடந்த ஜூலை மாதம் 10 ஆம் திகதி, வாழைச்சேனை, பிறைந்துறைச்சேனை ஐஸ் மோல் பின் வீதியிலுள்ள கிணற்றில், உயிரிழந்த நிலையில் சிறுவன், சடலமாக மீட்கப்பட்ட சம்பவம், அந்தப் பகுதியைப் பெரும் சோகத்தில் ஆழ்த்தியது.
சம்பவம் இடம்பெற்ற அன்றைய தினம், இரவு தூக்கத்தில் இருந்த தங்களுடைய பிள்ளை திடீரென்று காணாமல் போனதாகவும் பிள்ளையைத் தேடி அலைந்து திரிந்து, பின்னர் கிணற்றில் பார்த்தபோது, பிள்ளை உயிரிழந்த நிலையில் காணப்பட்டதாகவும், பொலிஸார் மேற்கொண்ட ஆரம்பகட்ட விசாரணைகளின் போது பெற்றோர் வாக்குமூலம் கொடுத்திருந்தனர்.
குறித்த சப்பவம் தொடர்பாக, பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்ட போது, சிறுவனின் தந்தையின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதை அடுத்து, தந்தையைக் கைது செய்த பொலிஸார், தொடர் விசாரணைகளை மேற்கொண்டனர்.
உயிரிழந்த சிறுவனின் தந்தை, ஏற்கெனவே பெண் ஒருவரைத் திருமணம் முடித்து, பிறந்த தனது பிள்ளை ஒன்றைச் சித்திரவதை செய்ததக் காரணமாகத் தண்டனை அனுபவித்தவர் என்று உறவினர்கள் மூலம் தெரியவந்தது.
தண்டனை அனுபவித்த பின்னர், அவர் வேறொரு பெண்ணைத் திருமணம் முடித்து, நான்கு பிள்ளைகளுடன் வாழ்ந்து வந்த நிலையில், தனது மூன்றாவது பிள்ளையான நான்கு வயதுடைய ஹாபில் எனும் சிறுவனையே இவ்வாறு கிணற்றுக்குள் வீசிக் கொலை செய்துள்ளார்.
இறந்த சிறுவன், இரவு நேரத்தில் படுக்கையில் சிறுநீர் கழிக்கிறான் எனக் காரணம் கூறி, சிறுவனின் ஆணுறுப்பில் சிறுவனின் தந்தை தாக்கிதால், சிறுவன் சிகிச்சை பெற்று வந்ததாகவும் அச்சம்பவத்தை அறிந்து கொண்ட நபர்கள் கவலையுடன் தெரிவித்தனர்.
ஜூன் ஒன்பதாம் திகதி இரவு 11 மணி அளவில், கிணற்றில் வீசப்பட்டு கொலை செய்யப்பட சிறுவன், மறுநாள் மதியம் ஒரு மணிக்குப் பின்னரே, கிணற்றிலிருந்து மீட்கப்பட்டான். அதுவரை, சிறுவனின் தந்தை கொஞ்சம்கூட பதட்டம் அடையாமலும் கண்கலங்காமல் தனது அன்றாட வேலைகளைச் செய்து கொண்டு திரிந்ததை, அப்பகுதி மக்கள் ஆச்சரியத்துடன் பார்க்கின்றனர்.
கொஞ்சிக் கொஞ்சி வளர்க்க வேண்டிய பச்சிளம் பாலகனை, ஈவிரக்கமின்றிக் கொலை செய்த அக்கொடூரத் தந்தை, தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். சிறுவனின் தாயார், மூன்று பிள்ளைகளுடன் தனது குடும்ப உறுப்பினர்களிடம் அடைக்கலம் புகுந்துள்ளார்.
இதேபோன்றுதான், வாழைச்சேனை, மாவடிச்சேனை, பாடசாலை வீதி எனும் முகவரியில், தாய் இல்லாமல் தந்தையின் பராமரிப்பில் வாழ்ந்து வந்த அஸிமுல் தாஹியா (வயது 07), அஸிமுல் ஹக் (வயது 10) ஆகிய இரண்டு குழந்தைகளும் 2020ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 14ஆம் திகதி கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டனர்.
இச் சம்பவம் தொடர்பில், 45 வயதான குழந்தைகளின் தந்தை முஹம்மது லெப்பை சுலைமா லெப்பை என்பவர், பொலிஸாரால் கைது செய்யப்பட்டு, இன்றுவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இரண்டு பிள்ளைகளின் தாய், சம்பவம் இடம்பெறுவதற்கு ஐந்து வருடங்களுக்கு முன்னர், நீண்டகாலம் சுகவீனம் காரணமாக மரணமடைந்துள்ளார். அன்றிலிருந்து, இரண்டு பிள்ளைகளையும் பிள்ளைகளின் தந்தையான முஹம்மது லெப்பை சுலைமா லெப்பை என்பவர்தான் மிகுந்த பாசத்துடன் வளர்த்து வந்துள்ளார்.
குழந்தைகளின் கல்வி, ஆரோக்கியம் போன்ற விடயங்களில் சுலைமா லெப்பை அதிக கரிசனை காட்டி வந்ததாக உறவினர்களும் அயலவர்களும் புகழ்ந்து கூறினார்கள்.
ஏன், எதற்காக இப்படியான காரியத்தை சுலைமா லெப்பை செய்தார் என்று இன்றும் கூட, விடை காண முடியாமல் அனைவரும் திகைத்துப்போய் உள்ளனர்.
இவ்வாறு கொலைக் குற்றத்துக்காகக் கைது செய்யப்பட தந்தை, தன்னை யாரோ கொலை செய்ய வருவதாகவும், தான் கொல்லப்பட்டால் குழந்தைகள் அனாதையாகி விடுவார்கள் என்ற காரணத்தால் தான் தான் இக்காரியத்தை செய்துள்ளதாகவும் மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில் பொலிஸாரின் வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.
தாய் இல்லாமல், வறுமை நிலையில் இரண்டு குழந்தைகளையும் பராமரிப்பதற்கு சிரமப்படுவதை அறிந்து கொண்ட பலர், குழந்தைகளைத் தத்தெடுத்து வளர்க்கக் கேட்ட போது, “குழந்தைகளை என்னிடமிருந்து பிரிக்க முடியாது; அவர்கள் இருவரும் ஒன்றாகவே இருக்க வேண்டும்” என்று அந்தத் தந்தை கூறிய சம்பவத்தைப் பலரும் இன்றும்கூட கண்ணீர்மல்கக் கூறுகின்றனர்.
எது எவ்வாறாயினும், இவ்வாறு குழந்தைகள் கொலை செய்யப்படுவதை, யாரும் ஏற்றுக்கொள்ள முடியாது. இனிமேலும் இவ்வாறான சம்பங்கள் நடக்காமல் இருக்க, சமூகத்திலுள்ள அனைவரும் விழிப்புடன் இருக்க வேண்டும்.
தனது பிரதேசத்தில் என்ன நடக்கிறது, தனது பக்கத்து வீட்டில் என்ன நடக்கிறது, பிள்ளைகளை எவ்வாறு பெற்றோர்கள் வழி நடத்துகிறார்கள் என்பன போன்ற விடயங்களை, கட்டயாமாக நாம் ஒவ்வொருவரும் அறிந்திருக்க வேண்டும். இவ்வாறான விடயங்களில், நாம் கவனம் செலுத்தினால் மாத்திரமே, இவ்வாறான கொலைச் சம்பவங்களில் இருந்து சிறுவர்களைக் காப்பாற்ற முடியும்.
நாம் அனைவரும், தனக்கு ஏன் இந்தப் பிரச்சினை என்றெண்ணி ஒதுங்கி இருக்காமல், இவ்வாறன சம்பவங்களை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தி, சிறுவர்களுக்கு உரிய பாதுகாப்புகளை வழங்க முன்வர வேண்டும்.
Average Rating