எளிது எளிது வாசக்டமி எளிது!!! (அவ்வப்போது கிளாமர்)
பந்தல்குடியில் மளிகைக்கடை வைத்திருக்கும் ராமசாமிக்கு வயது 40. மனைவி ரத்னா… மூன்று பெண் பிள்ளைகள். ‘இனி குழந்தை பெறும் நிலையில் ரத்னாவின் உடல்நிலை இல்லை… கருத்தடை அறுவை சிகிச்சை செய்து கொள்ள முடியாத அளவுக்கு பலவீனம். ‘ராமசாமிதான் கருத்தடை அறுவை சிகிச்சை செய்து கொள்ள வேண்டும்’ என்று சொல்லிவிட்டார் மருத்துவர். அதைச் செய்தால், ‘ஆண்மை போய்விடுமோ, உறவில் ஈடுபட முடியாமல் போய்விடுமோ’ என்றெல்லாம் பயந்து, குழம்பினார் ராமசாமி.
அவர் மட்டுமல்ல… நன்கு படித்த ஆண்களே கூட கருத்தடை அறுவை சிகிச்சை செய்துகொள்ள பயப்படுகிறார்கள். ஆண்களுக்கான கருத்தடைக்கு ‘வாசக்டமி’ என்று பெயர். ஆண்களுக்கு சுரக்கும் விந்தில் மூன்று பொருட்கள் உள்ளன… உயிரணுக்கள், செமினல் வெசிகிளில் இருந்து சுரக்கும் திரவங்கள், புரோஸ்டேட் சுரப்பியின் திரவங்கள். பெண் கருத்தரிக்க தேவை உயிரணுக்கள். உயிரணுக்கள் ஆரோக்கியத்தோடு இருக்க செமினல் வெசிகிள் திரவங்கள் தேவை.
அப்படியென்றால் புரோஸ்டேட் சுரப்பியின் திரவங்களின் வேலை என்ன? பெண் ஜனன உறுப்பில் சுரக்கும் திரவம் எந்தக் கிருமிகளும் பரவாதபடி அமிலத்தன்மையோடு இருக்கும். புரோஸ்டேட் சுரப்பியின் திரவங்களில் உள்ள அல்கலைன் அமிலத்தன்மையை சமன் செய்துவிடுகிறது. இப்படி அமிலத்தன்மை சரிசெய்யப்படாவிட்டால் விந்தில் இருக்கும் உயிரணுக்கள் பெண்ணின் ஜனன உறுப்பில் நுழையும் போதே அழிந்துவிடும்.
உயிரணுக்கள், வாஸ் டெஃபரன்ஸ் குழாய் மூலமாக மற்ற இரண்டு சுரப்பிகளின் திரவங்களோடு சேர்ந்து விந்தாக வெளியேறுகிறது. இந்த வாஸ் டெஃபரன்ஸ் குழாயின் சிறிய பகுதியை துண்டித்து, தடை செய்து முடிச்சிட்டு விடுவதே ‘வாசக்டமி’. இதனால், வெளிவரும் விந்தில் உயிரணுக்கள் இருக்காது. இன்றைய நவீன வசதிகளின் உதவியால் 5 நிமிடங்களில் இந்த சிகிச்சையை செய்து கொண்டு வேலைக்கும் போய் விடலாம். பல காலமாக நிலவி வரும் தவறான கருத்துகளாலேயே ஆண்கள் ‘வாசக்டமி’ செய்துகொள்ள பயப்படுகிறார்கள்.
சில சினிமாக்களில் ஆண் கருத்தடை செய்து கொள்வதை நகைச்சுவையாகக் காட்டி தவறான பிம்பத்தை ஏற்படுத்தியிருக்கிறார்கள். தேவையற்ற கர்ப்பம் உண்டாகிவிடுமோ என்ற பயமில்லாமல் உறவில் ஈடுபடுவதால், வேகமும் இன்பமும் அதிகரிக்குமே தவிர, குறையாது. வாசக்டமிக்குப் பிறகு எடை தூக்கக் கூடாது, அதிக உடல் உழைப்பு தேவைப்படும் வேலைகளில் ஈடுபடக் கூடாது என்று சொல்வார்கள். இதுவும் தவறான கருத்தே. முன்பு ஒருவர் எந்த வேலையைச் செய்தாரோ, அதையே சிகிச்சைக்குப் பிறகும் தொடரலாம்.
வாசக்டமி செய்து கொண்டால் விந்து வராது என நினைக்கிறார்கள். இதுவும் தவறு. விந்தில் உயிரணுக்கள் இருக்காதே தவிர, வெளிவரும் விந்தின் அளவில் எந்த மாற்றமும் இருக்காது. விந்தில் 1 சதவிகிதம் மட்டுமே உயிரணுக்கள் இருக்கும். 69 சதவிகிதம் செமினல் வெசிகிள் திரவங்களும், 30 சதவிகிதம் புரோஸ்டேட் சுரப்பியின் திரவங்களும் இருக்கும். வாசக்டமி செய்த பின் மூன்று முறை விந்து பரிசோதனை செய்ய வேண்டும். ‘உயிரணுக்கள் இல்லை’ என்ற சோதனை முடிவு வருவதற்கு முன் உறவு கொண்டால் ஆணுறை போன்ற கருத்தடைச் சாதனங்களை பயன்படுத்த வேண்டும்.
பாதுகாப்பு இல்லாமல் உறவு கொண்டு விட்டு, மனைவி கருவுற்ற பின் ‘இதற்கு காரணம் நான் இல்லை’ என சந்தேகப்பட்ட சம்பவங்களும் உள்ளன. இவற்றைத் தவிர்க்க சரியான மருத்துவரிடம் அறுவை சிகிச்சை செய்துகொள்வதும், முறையான பரிசோதனையை மேற்கொள்வதும் அவசியம். பெண்களுக்கான கருத்தடை அறுவை சிகிச்சையை விட வாசக்டமி எளிமையானது. மனைவியை நேசிக்கும் ஆண்கள் தாராளமாக வாசக்டமி செய்து கொள்ளலாம். பரஸ்பர நெருக்கம் இன்னும் அதிகரிக்கும்.
Average Rating