ரசம், கருணைக்கிழங்கு வறுவல் எப்ப கொடுத்தாலும் சாப்பிடுவேன்!! (மகளிர் பக்கம்)
‘‘சாப்பாடு, என்னைப் பொறுத்தவரை லைஃப்ன்னு தான் சொல்லணும். உங்களின் மனநிலையை அப்படியே மாத்தக்கூடிய திறன் சாப்பாட்டுக்கு மட்டும் தான் இருக்கு. நல்ல சுவையான சாப்பாடு சாப்பிடும் போது ஒரு மனநிறைவு ஏற்படும். அதற்கு ஈடு இணையே கிடையாது. அதுக்காக கிடைக்கிறது எல்லாம் சாப்பிடக்கூடாது. அதற்கும் ஒரு லிமிட் இருக்கு’’ என்று தன் உணவுப் பயணத்தைப் பற்றி பேச துவங்கினார் டப்பிங் கலைஞரான ரவீணா. ‘‘நான் சின்ன வயசில் சாப்பாடே சாப்பிட மாட்டேன்னு அம்மா சொல்லுவாங்க.
அப்படியே சாப்பாடு கொடுத்தாலும் துப்பிடுவேன். ரொம்ப ஒல்லியாதான் இருப்பேன். நாலரை வயசு வரை தாய்ப்பால் குடிச்சதா அம்மா சொல்லுவாங்க. அம்மா டப்பிங் தியேட்டர்ல இருக்கும் போது அப்பா தான் என்னை வெளியே வைத்திருப்பார். அப்ப பாட்டிலில் பால் தருவார். குடிக்காமல் அடம் பிடிப்பேன். அதனால் அப்பா சிரெஞ்சில் என் மூக்கை பிடித்து தருவார். அங்க இருக்கிறவங்க எல்லாரும் இப்பக்கூட சொல்லி சிரிப்பாங்க. என்ன நான் ஒல்லியா இருந்தாலும், எனக்கு எதிர்ப்பு சக்தி அதிகமா இருக்கு, என்னை திடமாகவும் வச்சு இருக்கு. அதன் பிறகு பத்தாம் வகுப்பு படிக்கும் போது தான் நான் திடமான உணவே சாப்பிட ஆரம்பிச்சேன்.
கீரை, காய்கறி எல்லாம் அப்பதான் கொஞ்சம் கொஞ்சமா சாப்பிட ஆரம்பிச்சேன். சமோசா, சிப்ஸ், பஜ்ஜி போன்ற எண்ணையில் பொரித்த ஸ்னாக்ஸ் ரொம்ப பிடிக்கும். அப்புறம் செரலாக். அதுவும் ரொம்ப காலம் வரை சாப்பிட்டு இருந்தேன். இப்ப எல்லா விதமான உணவுகளை சாப்பிட பழகிட்டேன். ஏன் சில சமயம் வித்தியாசமான உணவும் டிரை செய்து பார்ப்பேன்’’ என்றவர் தென்னிந்திய முழு மீல்ஸ் உணவான சாம்பார், காரக்குழம்பு, ரசம், மோருக்கு அடிமையாம். ‘‘எங்க பூர்வீகம் கேரளா என்பதால், விடுமுறை நாட்களில் அங்கு போவது வழக்கம். அங்கு போனா கண்டிப்பா எங்க வீட்டில் மீன் குழம்பு இருக்கும். அம்மாவும் மீன் குழம்பு ரொம்ப நல்லா செய்வாங்க.
அதுவும் அதை அவங்க இரண்டு விதமா செய்வாங்க. தென்னிந்திய ஸ்டைல் அப்புறம் கேரளா ஸ்டைல். இரண்டு வகையான மீன் குழம்புக்கும் நிறைய வித்தியாசம் இருக்கு. பெரும்பாலும் எல்லா கேரளா உணவிலும் தேங்காய் இல்லாமல் இருக்காது. சாம்பாரிலும் தேங்காயை அரைச்சு விடுவாங்க. மீன் குழம்பும் தேங்காய் அரைச்சு தான் செய்வாங்க. ஆனால் தென்னிந்திய வகை மீன் குழம்பில் தேங்காய் அரைச்சு சேர்க்க மாட்டாங்க. அப்புறம் வெந்தயம் சேர்த்து தாளிப்பாங்க. என்னதான் மீன் குழம்பாக இருந்தாலும் சுவை வித்தியாசமா இருக்கும். எனக்கு மீன் குழம்பு எப்படி இருந்தாலும் பிடிக்கும். ஆனால் சுவையா இருக்கணும். மீன் விரும்பி சாப்பிடும் அளவுக்கு நான் சிக்கனை சாப்பிடுவதில்லை.
குறிப்பா பாய்லர் கோழின்னா தவிர்த்திடுறேன்’’ என்றவரின் வீட்டில் ஓணம் பண்டிகையின் போது முழு சத்யா உணவு இருக்குமாம். ‘‘வீட்டில் நாங்க மூணு பேரும் வாரத்தில் ஒரு நாள் ஒன்றாக இருந்தால் அதிசயம் தான். எல்லாரும் காலையில் வேலைக்கு கிளம்பிட்டா மாலை தான் வருவோம். அதனால் பெரும்பாலும் சினிமா புரொடக்ஷன் உணவு தான் சாப்பிடுவோம். ஆனால் ஓணம் என்றால் யாரும் எந்த வேலையும் வச்சுக்க மாட்டோம். அம்மா அன்னிக்கு முழு சத்யா சாப்பாடு செய்வாங்க. சாம்பார் முதல் ஓலன், தோரன், பச்சடின்னு எல்லாம் இருக்கும். அம்மா ரொம்ப நல்லா சமைப்பாங்க.
நான் கல்லூரியில் முதலாமாண்டு படிக்கும் போதே டப்பிங் பேச ஆரம்பிச்சுட்டேன். அங்க தான் எனக்கு பல விதமான உணவகங்கள் பற்றி தெரிய வந்தது. டப்பிங் போது துணை இயக்குனர்கள் தான் உடன் இருப்பாங்க. அவங்க தான் எங்க எந்த உணவகம் நல்லா இருக்கும்னு சொல்வாங்க. அவங்க சொல்லும் போது அந்த உணவகம் போய் கண்டிப்பா சாப்பிட்டே ஆகணும்னு எண்ணம் தூண்டும். உடனே நானும் என் தோழிகளுடன் சேர்ந்து அங்க போய் சாப்பிடுவோம். எனக்கு தெரிந்து மயிலாப்பூரில் இருக்கும் டவுசர் கடை முதல் திருவல்லிக்கேணியில் இருக்கும் காசி விநாயகா மெஸ் வரை எல்லா உணவகங்களுக்கும் போய் சாப்பிட்டு இருக்கேன்.
டவுசர் கடையில் மட்டன் சுக்கா அப்புறம் மீன் வறுவல் நல்லா இருக்கும். காசி விநாயகா மெஸ்சில் அசைவ உணவு சாப்பாடு பிடிக்கும். கல்லூரி படிக்கும் போது, கடலூரில் இருக்கும் என்னோட தோழியின் வீட்டுக்கு நாங்க ஃபிரண்ட்ஸ் எல்லாரும் சேர்ந்து போனோம். அப்ப பாண்டிச்சேரி வழியாக தான் போகணும். அந்த வழியை கடக்கும் போது அங்குள்ள காமாட்சி மெஸ்சில் உணவு நல்லா இருக்கும்னு என் தோழி சொல்லி இருக்கா. போற வழிதானேன்னு அங்க சாப்பிட்டோம். அங்க ஜீரக சம்பாவில் பிரியாணி சாப்பிட்டேன். ரொம்ப வாசனையா வித்தியாசமான சுவையில் இருந்தது. அப்புறம் அசைவ உணவு ஃபுல் மீல்ஸ் சாப்பிட்டேன். காரசாரமா ரொம்ப நல்லா இருந்தது.
இதை தவிர மீன் வறுவல் மற்றும் சிக்கன் ஃபிரையும் சாப்பிட்டேன். அதன் சுவை கிராமத்தில் வீட்டில் ஆச்சி செய்வது போல இருந்தது. சென்னையை பொறுத்தவரை இப்ப புதுசா தி.நகரில் குமார் மெஸ் திறந்து இருக்காங்க. அங்க மீன் குழம்பும் சாப்பாடும் சாப்பிட்டேன். எனக்கு சிக்கன் மேல் அவ்வளவு ஈடுபாடு இல்லை என்பதால், எந்த உணவகம் போனாலும் மீன் குழம்பு, மீன் வறுவல் தான் விரும்பி சாப்பிடுவேன். மீன் எந்த வகையில் இருந்தாலும் எனக்கு பிடிக்கும். பெரும்பாலும் நான் பெரிய ஓட்டலில் சாப்பிட விரும்பமாட்டேன். சாதாரணமா சாலையில் இருக்கும் சின்ன கடையில் தான் சாப்பிட பிடிக்கும். அங்க தான் சாப்பாடு ஃபிரஷ்ஷா இருக்கும்.
சுவையும் வீட்டு சாப்பாடு போல இருக்கும். அப்படி நான் உணர்ந்தது தி.நகரில், திருப்பதி தேவஸ்தானத்தின் அருகே ஒரு சின்ன தெருவில், வண்டிக் கடைதான். அங்க தோசை, கலந்த சாதம் ரொம்ப நல்லா இருக்கும். எப்போதுமே அந்த கடையில் கூட்டம் இருக்கிறதை பார்க்கலாம். நிறைய பேர் காரில் வந்துக்கூட பார்சல் வாங்கிட்டு போவாங்க. மயிலாப்பூர்னு சொன்னா, கபாலிக் கோயிலை சுத்தி இருக்கிற எல்லா கடையிலும் சாப்பிட்டு இருக்கேன். சைவ உணவு தான் அவ்வளவு பிரமாதமா இருக்கும். கோயில் வாசல் இருக்கும் தெருவில் இருக்கிற பாரதி மெஸ்சில் மீல்ஸ் பிரமாதமா இருக்கும். அவங்க பாரம்பரிய முறையில் தான் சமைப்பாங்க.
கண்டிப்பா சாப்பாட்டுடன் கம்பு, கேழ்வரகுன்னு ஏதாவது ஒரு களி இருக்கும். அதே போல் மாலை நேரத்தில் பால் பணியாரம், உளுந்தக் கஞ்சி, கொழுக்கட்டைன்னு பாரம்பரிய உணவினை இன்றைய தலைமுறையினருக்கு திரும்பவும் கொண்டு வராங்க. அப்புறம் அதே பகுதியில் இருக்கும் கர்ப்பகாம்பாள் மெஸ். அங்க தோசை, கிச்சடி, அரிசி பொங்கல் நல்லா இருக்கும். நெய் இல்லாமல் அங்கு இருக்காது. மார்கழி மாசம் துவங்கிட்டா போதும், டி.டி.கே சாலையில் இருக்கும் நாரதகான சபாவில் என்னைப் பார்க்கலாம். கச்சேரி சமயத்தில் அங்கு சாப்பாடுக்கான ஸ்டால் இருக்கும். அங்க சாப்பிடவே போவேன்’’ என்று கூறும் ரவீணா வட இந்திய உணவையும் விரும்பி சாப்பிடுவாராம்.
‘‘மும்பையில் மூணு மாசம் தங்கி இருந்தேன். நாங்க அங்க போன நாள் முதல் மும்பை தெருவில் உள்ள அனைத்து உணவுகளையும் டிரை செய்தேன். மும்பை என்றால் அங்குள்ள ஸ்ட்ரீட் உணவுகள் தான் ஃபேமஸ். அங்கு வடா பாவ் முதல் பஞ்சாபி கிரில், லசி என எல்லா உணவும் கிடைக்கும். பல வகையான வெரைட்டி தோசை மற்றும் பராத்தா அங்கு ஃபேமஸ். அதை தயிருடன் சாப்பிடணும். அவ்வளவு சுவையா இருக்கும். காரணம் தயிர் கூட அங்க கிரீமியா திக்கா இருக்கும். அங்கிருந்த மூணு மாசமும் ஒரு உணவு கடை விடாமல் ஆராய்ந்துட்டேன்.
சென்னையில் உயர்நீதிமன்றத்திற்கு எதிரே உள்ள சின்ன தெருவில் ஒரு சின்ன கடை. அங்கு குஜராத்தி உணவுகள் ஃபேமஸ். சப்பாத்தி அவ்வளவு மிருதுவா இருக்கும். அப்படிப்பட்ட மிருதுவான சப்பாத்தியை நான் வேற எங்கேயும் சாப்பிட்டது இல்லை. அந்த சப்பாத்திக்கு பனீர் பட்டர் மசாலா தருவாங்க. சொல்லும் போதே எனக்கு சாப்பிடணும்னு தோணுது’’ என்று சொன்னவருக்கு ஆல்டைம் ஃபேவரெட் உணவு என்றால் ரசம் கருணைக்கிழங்கு வறுவலாம். ‘‘நான் நிறைய வெளிநாடுக்கு போனதில்லை. துபாய் மட்டும் போயிருக்கேன். அங்கு எல்லா விதமான அசைவ உணவுகள் கிடைக்கும். அட்லாண்டிஸ் பகுதியில் சாப்பிட போய் இருந்தோம்.
லெபனான், சைனீஸ், இத்தாலியன், ஸ்ரீலங்கன், அரேபியான்னு பலதரப்பட்ட உணவுகளை பரிமாறி இருந்தாங்க. எல்லாமே அவங்க பாரம்பரிய முறையில் தயார் செய்திருந்தாங்க. இத்தாலியன் உணவுன்னா பாஸ்தா, பீட்சா அப்புறம் கார்லிக் பிரட்ன்னு இருக்கும். காரம் இல்லாமல் சப்புன்னு தான் இருக்கும். லெபனன் உணவுகள் நல்ல காரசாரமா இருக்கும். அரேபிய உணவில் பேரீச்சை பழத்தால் ஒரு வித இனிப்பு வகைகள் இருந்தது. அங்கு தான் நான் முதல் முறையா ஜப்பான் உணவான சூஷி சாப்பிட்டேன். ஸ்டிக்கி சாதத்தில் உள்ள பச்சை மீனை வச்சு தருவாங்க. நான் இரண்டு சாப்பிட்டேன். முதல்ல வெறுமனே அதை சாப்பிட்டேன். மீன் வாயில உயிரோட இருந்த மாதிரி இருந்தது.
அப்புறம் சில்லி சாஸ் மற்றும் வினிகர் கொண்டு சாப்பிட்டு பார்த்தேன். நல்லா இருந்தது. அந்த உணவும் அதை சாப்பிடக் கூடிய விதத்தில் சாப்பிடணும். அப்பதான் அதன் உண்மையான சுவையை உணர முடியும். என் தோழியின் திருமணத்திற்காக நான் ராஜஸ்தான் மற்றும் சண்டிகர் போயிருந்தேன். திருமண விழா ஐந்து நாட்கள் கோலாகலமா நடக்கும். அதில் உணவு தான் பிரதானமா இருக்கும். காலை சிற்றுண்டி பராத்தா தயிர் மற்றும் ஊறுகாய் இருக்கும். அது சாப்பிட்டாலே வயிறு நிரம்பிடும். ஆனா நம்மல விடமாட்டாங்க. அடுத்து அடுத்து ஸ்னாக்ஸ் கொடுத்திட்டு இருப்பாங்க.
மதியம் சாப்பாடே பல வெரைட்டி இருக்கும். நெய் சோறு, புதினா ரைஸ், ஜீரா ரைஸ் ஒரு பக்கம் என்றால் அதற்கான சைட் டிஷ் மறுபக்கம் இருக்கும். கடைசியாக டெசர்ட் வகைகள்… ரசகுல்லாவில் ஆரம்பித்து குலாப்ஜாமூன், காஜு கத்லின்னு அது ஒரு ரகம் அடுக்கி வச்சிருப்பாங்க. ராஜஸ்தான் போன போது அங்கு மலாய் கேவர்ன்னு ஒரு ஸ்வீட் சாப்பிட்டேன். அதன் சுவையை சொல்ல வார்த்தை இல்லை. வட்டமா அடுக்கு அடுக்கா இருக்கும் அதன் மேல் திக்கான மலாய் சேர்த்து தருவாங்க. நாங்க இங்க தேடிப் பார்க்கிறேன், ஒரு கடையில கூட இங்க விற்பனையில் இல்லை’’ என்றவர் இம்மாத இறுதியில் மலேசியா செல்ல இருக்கிறார். அங்கு பல வித உணவுகளை சுவைக்க தயாராக இருக்கிறாராம்.
‘‘விடுமுறைக்காக மலேசியா, சிங்கப்பூர் போறேன். நாங்க போகும் போதே சாப்பாடு கொஞ்சம் கவனமா சாப்பிட சொல்லி இருக்காங்க. அங்க நிறைய ஸ்ட்ரீட் உணவு இருக்குமாம். பெரும்பாலும் சைனீஸ் மற்றும் இலங்கை உணவகங்கள் இருக்கும்னு சொன்னாங்க. பார்க்கலாம் அந்த உணவும் எப்படி இருக்கும்னு சுவைத்து தான் பார்ப்போமே. அப்புறம் சென்னையில் கோட்டூர்புரத்தில் ‘சாய் சொய்’ன்னு ஒரு உணவகம் பார்த்து இருக்கேன். சிவப்பு நிறக் கட்டிடம். அங்கு என்ன உணவகம்னு தெரியல. ஒருநாள் அங்கு போய் சாப்பிடணும்’’ என்று தன் பக்கெட் லிஸ்டில் அதனை சேர்த்துக் கொண்டார்’’ ரவீணா.
Average Rating