ஏழைகளின் ஊட்டச்சத்து சுரங்கம் முருங்கைக்கீரை!! (மருத்துவம்)

Read Time:17 Minute, 9 Second

இந்தியாவை பிறப்பிடமாகக் கொண்ட முருங்கை மரமானது, உலகின் வெப்பமண்டல மற்றும் துணை வெப்பமண்டல பகுதிகளில் வளர்கிறது. இது பொதுவாக ‘முருங்கைக்காய் மரம்’ அல்லது ‘‘ஹார்ஸ்ரேடிஷ் ட்ரீ’ என்று அழைக்கப்படுகிறது. முருங்கை கடுமையான வறட்சியிலும் மற்றும் லேசான குளிர் நிலைமைகளைத் தாங்கக்கூடியது. எனவே உலகம் முழுவதும் பரவலாக பயிரிடப்படுகிறது. மரத்தின் ஒவ்வொரு பகுதியும் ஊட்டச்சத்து மிக்கது என்பதால், மருத்துவ மதிப்பை அறிந்து தற்போது வணிக ரீதியாகவும் பயிரிடப்படுகிறது. முருங்கைக்கீரை 300 வகையான நோய்கள் வராமல் தடுக்கவும், 67 வகையான நோய்களைக் குணப்படுத்துவதாகவும் ஆயுர்வேத மருத்துவமும் குறிப்பிடுகிறது. முருங்கைக் கீரையில் 90 வகையான சத்துக்கள் இருப்பதாக ஆய்வுக்குறிப்புகள் கூறுகின்றன. இலைகளில் தாதுக்கள், வைட்டமின்கள் மற்றும் பிற அத்தியாவசிய பைட்டோ கெமிக்கல்கள் நிறைந்துள்ளன. முருங்கைக்கீரையில் உடலுக்குத் தேவையான 9 அமினோ அமிலங்கள் உள்ளன.

மற்ற எந்த தாவர உணவிலும் இதில் இருப்பது போன்ற முக்கிய நுண் அமினோ அமிலங்கள் இல்லை. மேலும், முருங்கையில் மற்ற தாவர உணவுகளில் இருப்பதைவிட 25 மடங்கு இரும்புச்சத்து அதிகம் உள்ளது. இரும்புச்சத்து ரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் அளவை அதிகப்படுத்துகிறது. செயற்கையான இரும்புச்சத்து மாத்திரைகளைவிட, முருங்கைக்கீரையில் இயற்கையாக அமைந்துள்ள இரும்புச்சத்தை நம் உடல் எளிதில் கிரகித்துக் கொள்ளும். நம் நாட்டில் ஏழைக் குழந்தைகளும், பாலூட்டும் தாய்மார்களும், கர்ப்பிணிகளும் ஊட்டச்சத்து இழப்பால் நோய்வாய்ப்படுகின்றனர். எனவேதான் முருங்கை இலைகளை காயவைத்து பொடியாக்கி பாட்டிலில் அடைத்து இப்போது வணிகம் செய்கிறார்கள். இதை ஊட்டச்சத்துக் குறைபாட்டிற்கு சிகிச்சையளிக்கப் பயன்படுத்துகின்றனர், 1 வயது முதல் 3 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு 1 டேபிள்ஸ்பூன் அதாவது 8 கிராம் உலர்ந்த முருங்கை பவுடர் கொடுப்பதன் மூலம் அவர்களுக்கு 1 நாளைக்குத் தேவையான 14 சதவீதம் புரதச்சத்தும், 40 சதவீதம் கால்சியம் சத்தும், 23 சதவீதம் இரும்புச்சத்தும், தேவையான வைட்டமின் ஏ சத்தும் கிடைக்கும் என ஆராய்ச்சிக் குறிப்புகளில் கூறப்பட்டுள்ளன.

பாலூட்டும் தாய்மார்களின் தாய்ப்பாலை அதிகரிக்கின்றன. இது சாத்தியமான ஆக்ஸிஜனேற்ற, புற்றுநோய் எதிர்ப்பு, அழற்சி எதிர்ப்பு, ஆன்டி டியாபெடிக் மற்றும் ஆன்டி மைக்ரோபியல் முகவராகப் பயன்படுத்தப்படுகிறது. எனவேதான் வெளிநாடுகளில் முருங்கை இலை உணவுகளை கர்ப்பிணிப் பெண்கள், விளையாட்டு வீரர்கள் ஆகியோருக்கு மொரிங்கா பவுடர் என்ற பெயரில் ஆரோக்கிய உணவாக பரிந்துரைக்கின்றனர். தற்போது முருங்கை இலைப்பவுடர் பல நாடு களுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு, அதன் ஏற்றுமதி வணிகம் சக்கை போடு போடுகிறது. மக்களிடத்தில் ஏற்படும் குறைபாடுகள், தேசிய பொருளாதார வளர்ச்சி மற்றும் தனிப்பட்ட மனித ஆற்றலின் வளர்ச்சி ஆகிய இரண்டையும் தடுக்கின்றன. மற்ற காய்களைவிட, முருங்கை இலைகளில் மொத்த கரோட்டின் அளவு 23791.91 மிலிகிராம் ஆகும். குறிப்பாக முருங்கை இலையை எடுத்துக் கொள்வதால் வைட்டமின் ஏ குறைபாட்டை ஒழிக்கலாம். பீட்டா-கரோட்டின் உள்ளடக்கத்தைத் தவிர, அஸ்கார்பிக் அமிலம், கால்சியம், பாஸ்பரஸ், வைட்டமின் ஈ ஆகியவற்றின் நல்ல மூலமாகவும் முருங்கைக்கீரை இருக்கிறது.

முருங்கைக்கீரை, ஆரோக்கியமான பார்வை, எலும்புகள், ரத்தம் மற்றும் சருமத்திற்கு அவசியமான பாதுகாப்பு ஊட்டச்சத்துக்களின் வளமான ஆதாரமாகும். இவற்றில், பல்வேறு பாலிபினால்கள் நிறைந்துள்ளன. அவை ஆக்ஸிஜனேற்றிகளாக செயல்படுகின்றன என்பதால், ரத்தநாள அடைப்புகளிலிருந்து பாதுகாக்க பரிந்துரைக்கப்படுகின்றன. பழங்கள் மற்றும் காய்கறிகளில் உள்ள வைட்டமின் ஏ / கரோட்டினாய்டுகளை அதிக அளவு உட்கொள்வது இருதய நோய், வயது தொடர்பான தசை சிதைவு நோய் மற்றும் சில புற்றுநோய்கள் உள்ளிட்ட பல நாட்பட்ட நோய்களின் அபாயத்தை குறைக்கிறது என்று தொற்றுநோயியல் ஆய்வுகள் தொடர்ந்து காட்டுகின்றன. முருங்கை ஊட்டச்சத்து குறைபாட்டிற்கு ஒரு சிறந்த தீர்வாகும். முருங்கை மரத்தின் இலைகள், காய்கள் மற்றும் விதைகள் என அனத்திலுமே பல்வேறு வகையான அத்தியாவசிய பைட்டோ கெமிக்கல்கள் இருப்பதால் ஊட்டச்சத்து நிறைந்துள்ளது. உண்மையில், முருங்கையில், ஆரஞ்சைவிட 2.5 மடங்கு அதிக வைட்டமின் சி, கேரட்டை விட 5 மடங்கு அதிக கரோட்டினாய்டுகளை கொண்டுள்ளது.

முருங்கையை நம் வீட்டின் பின்புறம் கூட வளர்க்கமுடியும் என்பது ஊட்டச்சத்து குறைபாட்டிற்கான ஒரு நிலையான தீர்வாக அமைகிறது. செனகல் மற்றும் பெனின் போன்ற நாடுகள் குழந்தைகளுக்கு முருங்கை இலை சிகிச்சையளிக்கின்றன. தாய்ப்பால் இழந்த குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாட்டின் அறிகுறிகளைக் காட்டுகின்றன. பால் உற்பத்தியை அதிகரிக்க பாலூட்டும் தாய்மார்களுக்கு லாக்டோகாக்ஸ் பொதுவாக பரிந்துரைக்கப்படுகிறது. பைட்டோஸ்டெரோல்களால் ஆன லாக்டோகாக், இனப்பெருக்க வளர்ச்சிக்குத் தேவையான ஹார்மோன்களுக்கு மூலமாக செயல்படுகிறது. முருங்கையில் ஹார்மோன்களுக்கான முன்னோடிகளான ஸ்டிக்மஸ்டிரால்(Stigmasterol), சிட்டோஸ்டெரால்(Sitosterol) மற்றும் கம்பெஸ்டெரால்(Kampesterol) போன்ற பைட்டோஸ்டெரால்கள் நிறைந்துள்ளன. இந்த கலவைகள் ஈஸ்ட்ரோஜன் உற்பத்தியை அதிகரிக்கின்றன. இதன் விளைவாக பால் உற்பத்தி செய்ய பாலூட்டி சுரப்பி குழாய்களின் பெருக்கத்தைத் தூண்டுகிறது.

இதன்மூலம் தாய்ப்பால் அருந்தும் 3 வயதுக்கு குறைவான குழந்தைகளுக்கு ஊட்டச்சத்துக் குறைபாட்டிற்கு சிகிச்சையளிக்கப் பயன்படுகிறது. மேலும், முருங்கையிலைப்பொடி, கர்ப்பம் மற்றும் பாலூட்டலின் போது அவசியம் தேவைப்படும் கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு மற்றும் புரதச்சத்தை பெற உதவும் முருங்கை மரத்தின் ஒவ்வொரு பகுதியும் முக்கியமான ஊட்டச்சத்துக்கள் மற்றும் நுண்ணுயிர் எதிர்ப்பிகளின் களஞ்சியமாகும். முருங்கை இலைகளில் கால்சியம், பொட்டாசியம், துத்தநாகம், மெக்னீசியம், இரும்பு மற்றும் தாமிரம் போன்ற தாதுக்கள் நிறைந்துள்ளன. வைட்டமின் ஏ, பீட்டா கரோட்டின் போன்ற வைட்டமின்கள், ஃபோலிக் அமிலம், பைரிடாக்சின் மற்றும் நிகோடினிக் அமிலம் போன்றவையும் வைட்டமின் பி, வைட்டமின் சி, டி மற்றும் ஈ போன்றவையும் முருங்கைக்கீரையில் உள்ளன. நீரிழிவு நோயாளிகளிடத்தில் சர்க்கரையை குறைக்கும் பைட்டோகெமிக்கல்களான (Phytochemicals) டானின்கள் (Tannins), ஸ்டெரோல்கள் (Steriols), டெர்பெனாய்டுகள் (Terpenoids), ஃபிளாவனாய்டுகள் (Flavonoids), சப்போனின்கள் (Saponins ), ஆந்த்ராகுவினோன்கள் (Anthraquinones), ஆல்கலாய்டுகள் (Alkaloids) மற்றும் புற்றுநோய்க்கு எதிராக செயல்படும் குளுக்கோசினோலேட்டுகள் (Glucosinolates), ஐசோதியோசயனேட்டுகள் (Isothiocyanates), கிளைகோசைடு கலவைகள் (Glycoside compounds )மற்றும் கிளிசரால் -1-9-ஆக்டாடெக்கானோயேட்களும் (Glycerol-1-9-octadecanoate) முருங்கைக்கீரை உள்ளன.

முருங்கைக்கீரையில் குறைந்த கலோரி மதிப்பைக் கொண்டுள்ளதால், அவற்றை உடல்பருமனை குறைப்பதற்காக உணவில் அதிகமாக பயன்படுத்தலாம். முருங்கைக்காய்கள் நார்ச்சத்து கொண்டவை மற்றும் செரிமான பிரச்னைகளுக்கு சிகிச்சையளிக்கவும் பெருங்குடல் புற்றுநோயைத் தடுக்கவும் உதவுகின்றன. பிஞ்சு முருங்கைக்காய்களில் சுமார் 46.78 சதவீதம் நார்ச்சத்து மற்றும் 20.66 சதவீதம் புரதச்சத்து இருப்பதாக ஒரு ஆராய்ச்சி சொல்கிறது. காய்களில் 30 சதவீதம் அமினோ அமிலமும், இலைகளில் 44 சதவீத்மும் மற்றும் பூக்களில் 31 சதவீதமும் அமினோ அமிலங்கள் உள்ளன. முருங்கை பிஞ்சுகளிலும், பூக்களிலும் இதே அளவு பால்மிட்டிக், லினோலெனிக், லினோலிக் மற்றும் ஒலிக் அமிலங்கள் உள்ளன. முருங்கைக்கீரையில் உடல் வளர்ச்சிக்கு அவசியமான தாதுக்கள் நிறைய உள்ளன. அவற்றில் கால்சியம் மனித வளர்ச்சிக்கான முக்கியமான தாதுக்களில் ஒன்றாக கருதப்படுகிறது. 8 அவுன்ஸ் பாலில் 300-400 மி.கி கால்சியமும், 100 கிராம் அளவு முருங்கைக்கீரையில் 314 மி.கி கால்சியம் கிடைக்கிறது. 100 கிராம் முருங்கைக்கீரையில், ரத்த அழுத்த கட்டுப்பாட்டிற்கு தேவையான 397 மிலி கிராம் பொட்டாசியம் உள்ளது.

விளையாட்டு வீரர்கள் பயிற்சியின்போதும், போட்டிகளின் போதும் அவர்கள் இழக்கும் எலக்ட்ரோலைட்டை நிரப்புகிறது. 100 கிராம் முருங்கைக்கீரையில் 68 கலோரிகள், 6.5 கிராம் புரோட்டீன், 8.2 கிராம் நார்ச்சத்து இருப்பதால், உடல்பருமன், நீரிழிவு, இதயநோயாளிகள் மற்றும் மலச்சிக்கல் உள்ளவர்களும் இதனை உணவில் தாராளமாக சேர்த்துக் கொள்ளலாம். மேலும் செரிமானக்கோளாறு உள்ளவர்களுக்கும் மருந்தாக பயன்படுகிறது. பருவமாற்றங்கள் முருங்கைக்கீரையின் ஊட்டச்சத்து உள்ளடக்கத்தை பாதிக்கின்றன. சூடான ஈரமான பருவத்தில் வைட்டமின் ஏ ஏராளமாகக் காணப்படுவதாகவும், குளிர்ந்த உலர்ந்த பருவத்தில் வைட்டமின் சி மற்றும் இரும்புச்சத்து அதிகம் இருப்பதாகவும் ஆய்வு சொல்கிறது. ஆப்பிள், கொய்யா, இஞ்சி மற்றும் வெள்ளரி போன்ற பழங்களுடன் முருங்கை இலைப்பொடியை சேர்த்து உட்கொள்வதால், இந்த கொரோனா தொற்றுநோய்க்கு, நோயெதிர்ப்பு ஊக்கியாக செயல்படும். பீட்டா கரோட்டின் மற்றும் துத்தநாகம் (Zinc) மிக அதிகமாக உள்ளது. கொரோனா தாக்கிய நோயாளிகளுக்கான சிகிச்சையில் துத்தநாக சத்து மாத்திரை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கொடுக்கப்படுகிறது.

அதிக நார்ச்சத்து மற்றும் பொட்டாசியம் உள்ளடக்கம் எடை குறைக்க உதவுகிறது. ரத்த அழுத்த கட்டுப்பாடு, ரத்த குளுக்கோஸையும் மேம்படுத்துகிறது. இதய மற்றும் நீரிழிவு நோயாளிகளுக்கு பயன்படும் இந்த மதிப்புமிக்க முருங்கைக்கீரையை அன்றாட உணவில் சேர்த்துக் கொள்வதை வழக்கப்படுத்திக் கொள்ளுங்கள். வளரும் குழந்தைகள், கர்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களின் ஆரோக்கியமான எலும்புகளுக்கும், வயதானவர்களுக்கு தேவையான பயனுள்ள உயர் பாஸ்பரஸ் மற்றும் கால்சியம் முருங்கைக்கீரையில் உள்ளது. ரத்த சோகையை போக்க உதவும், ஃபோலிக் அமிலம் மற்றும் இரும்புச்சத்து முருங்கைக்கீரையில் அதிக அளவு உள்ளது. தற்போது முருங்கைக்கீரை பவுடரை பயன்படுத்தி மசாலா சப்பாத்தி மிக்ஸ், ரொட்டி மிக்ஸ், சாதப்பொடி, சத்துபானம், குக்கீஸ் வகைகள் சூப் மிக்ஸ் உள்பட 21 வகையான உணவுகள் செய்யலாம். இத்தகைய சிறப்பு வாய்ந்த முருங்கைக் கீரையைப் பயன்படுத்தி வீட்டிலேயே சிம்பிளாக முருங்கை சூப் செய்யும் முறையை சமையல் கலைஞர் நித்யா நடராஜன் செய்து காண்பிக்கிறார்.

முருங்கைக்கீரை சூப்

தேவையான பொருட்கள்

முருங்கைக்கீரை 1 கப்
சின்ன வெங்காயம் 2
தக்காளி 1
பூண்டு 2 பல்
மிளகு ½ டீஸ்பூன்
தனியா ½ டீஸ்பூன்
சீரகம் ½ டீஸ்பூன்
உப்பு தேவைக்கேற்ப.

செய்முறை

வெங்காயம் மற்றும் தக்காளியை நறுக்கி வைக்கவும். மிளகு, சீரகம், தனியாவை ஒரு கடாயில் லேசாக வறுத்து பொடி செய்து வைத்துக் கொள்ளவும். இப்போது கடாயில் கீரை, வெங்காயம், பூண்டு மற்றும் தக்காளி போட்டு லேசாக வதக்கி மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும். பின் அதே கடாயில் அடுப்பை சிம்மில் வைத்து அரைத்த விழுதுடன் மிளகு, சீரகப்பொடி, உப்பு சேர்த்து தேவையான நீர் விட்டு, ஒரு கொதி வந்ததும் இறக்கினால் முருங்கைக்கீரை சூப் தயார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சரும சுருக்கம் நீக்கும் சக்கரவர்த்தி!! (மருத்துவம்)
Next post ஒரு வார்த்தை கூட வராமல் திணறினேன்..பாரதி பாஸ்கர் உரையாடல்!! (வீடியோ)