குடும்ப ஒற்றுமையை காக்க நினைக்கும் சித்தி!! (மகளிர் பக்கம்)

Read Time:12 Minute, 6 Second

‘சித்தி’யை மறக்க முடியுமா என்ன? 90’ஸ் கிட்ஸுகளுக்கு இப்போதும் இனிக்கும் சீரியல் அது. உங்கள் சன் டி.வி.யில் இரவு 9.30 மணியானால் தமிழகத்தின் பட்டிதொட்டி தெருக்கள் கூட வெறிச்சோடிப் போயிருக்கும். எல்லா வீதிகளிலிருந்தும் ‘சித்தி’ என குரல் ஒலிக்க, ‘கண்ணின் மணி.. கண்ணின் மணி நிஜம் கேளம்மா…’ என நித்ய பாடல் ஒலிக்கும். உலக தமிழர்களின் உள்ளங்களில் இன்றும் பசுமையான நினைவலைகளை ஏற்படுத்தும் ‘சித்தி’, இப்போது 2020 கிட்ஸையும் மகிழ்விக்க வருகிறது. சன் டி.வி.யில் 27ம் தேதி முதல் நாள்தோறும் இரவு 9 மணிக்கு ‘சித்தி2’வாக வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது. மயிலாப்பூரில் உள்ள ஒரு பிரமாண்ட வீட்டில் இதன் படப்பிடிப்பு பரபரக்கிறது. ராதிகா, பொன்வண்ணன், ஷில்பா, அருள்மணி, நிகிலா, மகாலட்சுமி, வெண்பா, அஸ்வின், சரவணன், நந்தக்குமார் என ஏகப்பட்ட நட்சத்திர கூட்டம் ஜொலிக்கிறது. சந்தோஷம் பொங்கும் ‘சித்தி’ குடும்பத்தினரை சந்தித்தோம்.

மீண்டும் ‘சித்தி’யானதில் மகிழ்கிறார் ராதிகா. ‘‘உங்ககிட்ட மொதல்ல ஒரு விஷயத்தை தெளிவுபடுத்திடுறேன். இது, அப்போ வந்த ‘சித்தி’யின் தொடர்ச்சி கதை கிடையாது. இது ரொம்பவே ஃப்ரெஷ்ஷான தனிக்கதை. அதாவது இது இன்னொரு சித்தியின் கதை’’ என்ற அறிமுகத்தோடு வரவேற்கிறார் ராதிகா. இதில் அவரது கேரக்டர் பெயர் சாரதா. ‘‘ ‘சித்தி2’ புரொமோஷன் சன் டி.வி.யில் வர ஆரம்பிச்சதும், அவ்ளோ ரெஸ்பான்ஸ். எல்லாருமே வெல்கம் பண்றாங்க. சந்தோஷமா இருக்கு. ‘சித்தி’ ஆரம்பிக்கும் போது அது இவ்ளோ பெரிய ஐகானிக் சீரியலாகும்னு நாங்க யாருமே நினைச்சதில்ல. வழக்கமான சீரியலாக இல்லாமல், வித்தியாசமான தொடரா, ஒரு எண்டர்டெயின்மென்டா, டெலிவிஷனில் இன்னொரு உயரத்துக்கு போகக்கூடிய ஒரு தொடரா பண்ணணும்னு எண்ணி ஆரம்பிச்சோம். எங்களோட சிவகுமார் சார், ஷில்பா, யுவராணி, வாசுவிக்ரம், அஜய்ரத்னம், டேனியல் பாலாஜினு ஏகப்பட்ட ஸ்டார் காஸ்ட் அதுல இருந்தாங்க.

நல்ல ஒரு பிரமாதமான டீம் அமைஞ்சது. எல்லாருமே சேர்ந்து கடுமையா உழைச்சாங்க. வெற்றியாச்சு. இது கம்ளீட் நியூ ஸ்டோரி. குடும்பம் ஒற்றுமையா இருக்கணும்னு நினைக்கற ஒரு நடுத்தர பெண்ணின் கதை. இந்த ‘சித்தி’ வெறும் சீரியலா இல்லாமல், நம்ம எல்லோர் குடும்பத்திலும் நடக்கற விஷயங்களின் தொகுப்பா, ஒவ்வொருத்தருமே எளிதா கனெக்ட் ஆகக் கூடிய ஒரு கதையா இருக்கும். எனக்கு ஜோடியா பொன்வண்ணன் நடிக்கறார். ‘அண்ணாமலை‘க்கு பிறகு சினிமாவில் பிசியானவர், மறுபடியும் சீரியல் பக்கம் வரல. ‘சித்தி’யோட கதையை கேட்டதும் இம்ப்ரஸாகிட்டார். இப்போ அவர் மறுபடியும் ‘சித்தி’க்காக வந்திருக்கார்.

தொடர்ல நிறைய சஸ்பென்ஸ் வச்சிருக்கோம்’’ என்கிறார் சித்தி. ‘‘ராதிகா மேடம் சொன்னது போல, இது இன்னொரு சித்தியின் கதை. 90ஸ் கிட்ஸ் சித்தியை எவ்ளோ விரும்பினாங்களோ.. அதைவிட அதிகமா ‘சித்தி2’வை இந்த 2020ஸ் கிட்ஸும் விரும்புவாங்க..’’ – உற்சாகம் பொங்க பேச ஆரம்பிக்கிறார் சீரியலின் இயக்குநர் சுந்தர் கே.விஜயன்.‘‘இந்த சித்திக்கும் அதே டைட்டில் இருக்கணும்னு சன் நெட் ஒர்க்கின் சேர்மன் கலாநிதிமாறன் சார் விரும்பி வச்சாங்க. புரொமோஷன் ஒளிபரப்பான அடுத்த விநாடியே, அதோட ரீச்சை பார்த்து பிரமிப்பாகிடுச்சு.

இந்த கதைக்கும் இப்படி ஒரு டைட்டில் வச்சதுக்காகவே, சேர்மன் சார் அவர்களுக்கு ஸ்பெஷல் தேங்க்ஸ் சொல்லிக்கறேன். ‘சித்தி’யில் ஒலித்த அதே குரல்கள் இதோட ஓபனிங்லேயும் இருக்கணும் என்றும் அவங்க விரும்பினாங்க. சார் ஏன் அப்படி அதே டோன் கேட்டிருக்காங்கனு ஆரம்பத்துல எனக்கு புரியல. ஆனா, இது இவ்ளோ ரீச் ஆனதுக்கு அதான் மிகப்பெரிய ஒரு காரணமாக இருந்திருக்கு. சாரோட கணிப்பை பார்த்து ஆச்சரியமாகிடுச்சு. ‘சித்தி2’ புரொமோஷன் யூடியூப்ல வெளியானதும், கமெண்ட்ஸ் எல்லாம் படிச்சு பார்த்தேன். இதை பார்த்த அத்தனை பேருக்குமே அதே நெகிழ்ச்சி. அதே எதிர்பார்ப்பு. ‘சித்தி’னு குரலை கேட்டதும் மறுபடியும் மலரும் நினைவுக்கு போயிட்டோம். ‘வெல்கம் சித்தி’னு பாசிட்டிவ்வான கமெண்ட்ஸ் குவிஞ்சிருந்தது.

சன் டி.வி. ராதிகா மேம் காம்பினேஷன்ல இதுக்கு முன்னாடி ‘அண்ணாமலை’யில் ஐநூறு எபிசோடுகள் ஒர்க் பண்ணியிருக்கேன். புரோமோஷனுக்கு கிடைச்ச வரவேற்பை பார்த்து, இன்னும் பொறுப்பா, கூடுதல் சுவாரஸ்யத்துடன் கொண்டு போவோம். சீரியல் பார்க்கறது மாதிரியே இருக்காது. இந்த ஜென்ரேசன் கிட்ஸையும் பார்க்க கவர்கிற ஸ்கிரிப்ட் இது. ‘சித்தி’யில இருந்த ராதிகா மேம்- சிவகுமார் சார் கணவன் – மனைவி கெமிஸ்ட்ரியை விட, பல மடங்கு சாரதா- சண்முகப்ரியன் தம்பதியின் கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆகியிருக்குனு நினைப்பீங்க. ராடன் டீம் இதிலும் காஸ்ட்டிங்கை ரொம்ப நல்லா அமைச்சிருக்காங்க. பொன்வண்ணன் சார், பாக்யராஜ் சார், சமுத்திரகனி, ரூபிணி, பையன்கள் ரெண்டு பேர் கேரக்டர், மகள் கேரக்டர், ஒரு பாட்டி, ‘சித்தி’யில் சாத்தப்பனா நடிச்ச நந்தக்குமார், அருள்மணினு பர்ஃபெக்ட் காஸ்ட்டிங், அருமையான கேரக்டர்ஸ்னு அமைஞ்சிருக்கு. எல்லார்கிட்டேயும் ராதிகா மேடமே பேசி, கமிட் பண்ண வச்சாங்க’’ என இயக்குநர் சுந்தர் கே.விஜயன் சொல்லிவிட்டு, ஷாட்டுக்குள் திரும்ப, நம் பக்கம் வந்தார் பொன்வண்ணன்.

நீண்ட வருட இடைவெளிக்கு பின் சின்னத்திரை பக்கம் வந்த அவருக்கு ஒரு வெல்கம் பொக்கே நீட்டினோம். ‘‘நானும் ராதிகா மேமும் ஒரு அந்நியோன்யமான ஒரு தம்பதி. எனக்கு ரெண்டு பசங்க, ஒரு பொண்ணு. குடும்பத்தில் நிலவும் ஏற்ற இறக்கங்களைக் கடந்து, குடும்பப் பொறுப்பிற்காக ஏங்கும் ஒரு கணவனா நடிக்கறேன். இந்தக் கதையை ராதிகா மேம் சொன்னதும், வெறும் கேரக்டரா மட்டும் இல்லாமல் நடிப்பிற்கும் என் அனுபவத்திற்கு ஏற்ற ஒரு பாத்திரமா தெரிஞ்சது. மறுபடியும் சந்தோஷமா சின்னத்திரைக்குள் வந்திருக்கேன்’’ – என ஆனந்தமாகிறார் பொன்வண்ணன். இதில் அவரது தங்கையாக நடிக்கும் ஷில்பா, ‘பார்ட் ஒன்’ சித்தியில் பிருந்தாவாக கலக்கியவர்.

‘‘ ‘சித்தி’க்கு அப்புறம் நிறைய சீரியல்கள் நடிச்சிட்டேன். ஆனா, எங்கே ஷூட்டிங் போனாலும் என்னை பார்க்குறவங்க.. ‘சித்தியில் வரும் பிருந்தா தானே நீங்க?’னு ஆர்வமா வந்து விசாரிப்பாங்க. சந்தோஷமா இருக்கும். மறுபடியும் ‘சித்தி’ வந்தால் நல்லா இருக்கும்னு சில சமயம் நினைச்சிருக்கேன். ஆசைப்பட்டது மாதிரியே கனவுகள் நனவாகியிருக்கு. இந்த ‘சித்தி’யிலும் நல்ல கேரக்டர். மிகப்பெரிய எதிர்பார்ப்புள்ள ஒரு தொடரா மாறியிருக்கு. ஒவ்வொரு கேரக்டரின் நடிகர்களின் தேர்வுல இருந்து லுக், மேக்கப் வரை அத்தனையிலும் ராதிகா மேம் இன்ஸ்ட்ரஸ்ட் எடுத்து பார்த்து பார்த்து செலக்ட் பண்ணி, கவனிக்குறாங்க’’ என்கிறார் ஷில்பா.

அவரது கணவராக நடிக்கும் அருள்மணி, திரைப்பட கல்லூரி மாணவர். ஏராளமான படங்களில் கலக்கியவர். ‘‘சீரியல்ல நடிச்சா சினிமா வாய்ப்புகள் வராதுனு நினைச்சே, சின்னத்திரை பக்கம் வராமல் இருந்தேன். இப்ப, ராடன்ல இருந்து கூப்பிட்டாங்க. சன் டிவி. தயாரிக்குது தெரிஞ்சதும்… சந்தோஷமா நடிக்க வந்துட்டேன். எல்லோர் வீட்டுக்குள்ளும் இனி நானும் இருக்கறதால, ‘சித்தி’ என்னை உலகம் முழுவதும் பிரபலமாக்கும்’’ என உற்சாகமாகிறார் அருள்மணி. அவர் மட்டுமல்ல.. புதுவரவு நட்சத்திரங்களும் குஷியாக மிளிர்கிறார்கள்.

சட்டென நம் பக்கம் வந்தார் இயக்குநர் சுந்தர் கே.விஜயன். ‘‘சன் குடும்ப விருதுகள்ல ராதிகா மேமுக்கு ‘சிங்கப்பெண்’ அவார்டு கொடுத்தாங்க. ஆனா, அவங்க சிங்கப்பெண் இல்ல. குழந்தை மனசுக்காரர்’’ என கலகலத்தவர், மானிட்டரின் எதிரே வலதுபுறம்.. ‘ரெட்’ கேமராவில் ஆங்கிள் பார்த்துக்கொண்டிருந்த ஒளிப்பதிவாளர் சீனுவை கூப்பிட்டு அறிமுகப்படுத்தி வைத்தார். திரைக்கதையை சேக்கிழாரும், வசனத்தை வசுபாரதியும் எழுதுகிறாங்க. இந்த ‘சித்தி’ நிஜமாகவே செம விறுவிறுப்பா இருக்கும். நல்ல நல்ல திருப்பங்கள் இருக்கு. எந்த இடத்திலும் தொய்வு இருக்காது. நல்ல ஒரு குடும்பக் கதையை பார்க்கப் போறீங்க..’’ என இயக்குநர் சொல்லவும், அதை ஆமோதித்து புன்னகைக்கிறார் சித்தி! வெல்கம் சித்தி!

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கற்பனைக்கே எட்டாத அசுர பலத்துடன் வரும் மாயன்!! (வீடியோ)
Next post அடுத்த டயானா வேண்டாம்! (மகளிர் பக்கம்)