கற்பித்தல் என்னும் கலை!! (மகளிர் பக்கம்)
‘‘புத்தகங்கள்தான் நம் சிறந்த நண்பன்’’ என்று நாம் அனைவருமே அறிந்திருப்போம். புத்தக அறிவை ஆசிரியர் மூலம் பெறும் மாணவர்கள்தான் ஆசிரியர்
களின் சிறந்த நண்பர்களாகவும், தோழிகளாகவும் முக்கியமான நேரங்களில் நம்மிடம் அக்கறை காட்டும் அன்புச் சகோதர, சகோதரிகளாகவும் திகழ்கிறார்கள் என்பதற்கு எத்தனையோ சம்பவங்களைக் குறிப்பிடலாம். கற்பிப்பவர் பாடம் கற்பித்தலோடு மட்டும் விட்டு விடாமல், பிள்ளைகளிடம் மனம் திறந்து பாராட்டி, சிறிய சிறிய தவறுகளை திருத்தச் செய்யலாம்.
குறைகளையே சொல்லிக்கொண்டிருக்காமல், அவர்களின் நல்ல குணங்களைப் பற்றி அதிகம் பேசலாம். குறையைக்கூட நிறைவான வார்த்தைகளில் பேசுவது என்பதும் கலைதான். அதைத்தான் ஆங்கிலத்தில் ‘பாஸிடிவ் அப்ரோச்’ என்பார்கள். ‘‘இதை ஏன் இப்படிச் செய்தாய்?’’ என்பதற்குப் பதிலாக ‘‘இப்படிக்கூட இதைச் செய்திருக்கலாமே!’’ ‘‘பரவாயில்லை, இனி பார்த்துக்கொள்ளலாம்’’ என்றெல்லாம் சொல்லும்பொழுது கண்டிப்பாக மனம் ஆறுதல் அடையும். ஏனென்றால் முதல் மதிப்பெண் மட்டுமே ஒருவரை உயர்த்திவிட முடியாது. மதிப்பெண்ணிற்காக பிள்ளைகளை துன்புறுத்தத் தேவையில்லை. சுமாராக படித்தாலும், பல்வேறு திறமைகளைக் கொண்ட எத்தனையோ சிறுவர்களை நம்மால் கண்டுபிடிக்க முடியும். அவர்களிடம் ஒளிந்து கிடக்கும் ஞானத்தை கண்டுபிடித்தால் போதும்!
ஒரு சிறுவன் பார்ப்பதற்கு மிகவும் சாதுபோலவும், ஒன்றும் தெரியாத அப்பாவி போலவும் காணப்பட்டான். அகில இந்திய வானொலியில் ‘சிறுவர் பூங்கா’ நிகழ்ச்சிக்காக மாணவர்களை தயார் செய்துகொண்டிருந்தோம். மொழி பெயர்ப்பு நாடகம் ஒன்றிற்காக ஒரு அமைதியான பாத்திரம் தேவைப்பட்டது. சாதுப் பையனை அழைத்து ‘நடிக்க முடியுமா’ என்றோம். அவனும் முயற்சி செய்வதாகக்கூறி, அவன் பேச வேண்டியதெல்லாம் எழுதிக்கொண்டான். மறுநாள் வந்து நடித்துக் காட்டினான். உண்மையில் அவன் சாதுவாக இல்லை. வில்லன் போன்று நடிக்க ஆரம்பித்துவிட்டான். அவன் நடிப்பில் அசந்துபோய், அவனுக்கு முக்கியமான கதாபாத்திரத்தை தந்துவிட்டோம். அன்று முதல் நாங்களும் சிலவற்றைப் புரிந்துகொண்டோம். அமைதியாக, மற்றவர்களால் கண்டுகொள்ளப்படாத மாணவர்களை அடையாளம் கண்டு அவர்களின் திறமைகளை வெளிக்கொண்டுவர நினைத்தேன். சிலர் நன்கு பேசி, படித்து தன் அறிவாற்றலைக் காட்டுவர்.
தங்கள் திறமை மூலம் பிரபலம் அடைந்துவிடுவர். ஆனால் பலர் வெளியே காட்டத்தெரியாமல் தன் திறமைகளை உள்ளடக்கியிருப்பர். அவர்களை யாரேனும் கண்டுபிடித்து அடையாளப்படுத்தினால் உற்சாகம் மேலிட, அவர்கள் நன்கு உழைத்துதான் பெருமையை தேடிக்கொள்வதோடு, கற்பிப்பவர்க்கும் பெருமை சேர்ப்பர். அதுபோல், கல்லூரி அளவில், ‘பாண்ட்’ (Band) மூலம், முதல் பரிசைப் பெற்று சிறந்த ‘பாடகக்குரு’வாகத் திகழும் பிள்ளைகளால் பெருமைப்படுகிறோம்.
பள்ளி மட்டுமல்லாது, வெளியே பல்வேறு கலை நிகழ்ச்சிகளுக்குப் பிள்ளைகளை தயார் செய்யும்பொழுது, விதவிதமான அனுபவங்கள் நிறையவே கிடைத்துக்கொண்டிருக்கும். நாடகம், நாட்டியம், பாடல் மற்றும் மாறு வேடம் தரித்து நடித்துக் காட்டுதல் என பல போட்டிகளுக்காக நிறைய மாணவர்களை பல்வேறு இடங்களுக்கு அழைத்துச்செல்லும்பொழுது அவர்களின் உண்மையான குணம் நமக்குத் தெரிய வரும்.
வகுப்பறைகளில் அதிகபட்சமாக ஒருமணி நேரம் அவர்களுடன் இருப்போம். வெளியில் அழைத்துச்செல்லும்பொழுது, முழு நேரமும் அவர்களை கண்காணிக்க நேரிடும். அவர்கள் சாப்பிட்டார்களா, ஒருவருக்கொருவர் பகிர்ந்து சாப்பிடுகிறார்களா, சண்டை போடுகிறார்களா, விட்டுக்கொடுத்து சகஜமாகப் பழகுகிறார்களா என்றெல்லாம் நன்றாகவே புரிந்துகொள்ள முடியும். உண்மையில் இதுபோல், பிள்ளைகளுடன் சேர்ந்து பயணிப்பது ஒரு அற்புதமான அனுபவம். பொதுவாக, உல்லாச யாத்திரை, ஒருநாள் சுற்றுலா, பாட சம்பந்தப்பட்ட இடங்களைப் பார்வையிடச் சுற்றுலா என்றெல்லாம் நடப்பதுண்டு.
கலை நிகழ்ச்சிகளுக்காகவே, நிறைய இடங்களுக்கும், வானொலி நிலையம், தொலைக்காட்சி நிலையம் போன்ற இடங்களுக்கும் அடிக்கடி பயணித்ததுண்டு. பிள்ளைகளுக்கு ஒரு சந்தோஷமென்றால், பெற்றோருக்கும் அதில் அதிக பங்குண்டு. மறுநாள் பிள்ளைகள் ஒரு நிகழ்ச்சிக்குப்போகப் போகிறார்களென்றால், முதல் நாளே என்னென்ன வாங்கித்தரலாம், எவ்வளவு பேருக்குத் தரலாம் என்றெல்லாம் யோசிக்க ஆரம்பிப்பார்கள். வகுப்பிலிருந்து தப்பி வெளியே போகிறோம் என்கிற சந்தோஷம், அத்துடன் நண்பர்களுடன் சேர்ந்து ‘பிக்னிக்’ போன்று மகிழப்போகிறோம் என்கிற குதூகலம் வேறு. ஆறாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் நான்கு குழுக்களாகப் பிரிக்கப்படுவார்கள்.
பள்ளியின் விருப்பத்தைப் பொறுத்து நான்கு பூக்களின் பெயர்கள், கற்களின் பெயர் அல்லது நிறங்களின் பெயர்கள் என அமைந்திருக்கும். ஒவ்வொரு
பிரிவிற்கும் ஆசிரியர்களும் நியமிக்கப்படுவார்கள். கலை நிகழ்ச்சி சம்பந்தப்பட்ட போட்டிகள், விளையாட்டுப் போட்டிகள் போன்றவை இதன் அடிப்படையிலேயே நடைபெறும். வருடம் முழுவதும் நடைபெறும் போட்டி முடிவுகள் கணக்கெடுக்கப்பட்டு, இறுதியாக வெற்றி பெறும் அணி அறிவிக்கப்படும். அது முடிவதற்குள், அப்பாடா, பிள்ளைகளுக்குள் எத்தனை சர்ச்சைகள், ஆர்ப்பாட்டங்கள், போட்டிகள் என்ன எண்ணிலடங்கா விவாதங்கள் நடைபெறுவதுண்டு. அது ஆசிரியைகள் வரை தொடரும். ‘யார் முதலிடம்’ என்பது இங்கேயே தொடங்கிவிடுகிறது. ஒரு தடவை நாடகப் போட்டிக்காக, தலைப்பு தேர்ந்தெடுப்பதில் சிக்கல் எழுந்தது. பள்ளித்தலைவர் முன்னிலையில் நான்கு அணியினரும் வரவழைக்கப்பட்டு குலுக்கல் முறையில் தலைப்பு வழங்கப்பட்டது.
எங்களுக்குக் கிடைத்த தலைப்பு – ‘‘இயற்கை உணவும் ஆரோக்கியமும்’’ என்பதாகும். தயாரித்து வழங்குவதற்கு பத்துப்பதினைந்து நாட்கள் ஒதுக்குவார்கள். காலத்திற்கேற்ற தலைப்பு என்பதால், நிறைய ஆதாரங்களுடன் கருத்தையும் புகுத்தி, நகைச்சுவையுணர்வையும் புகுத்தினோம். ஒவ்வாத உணவை சாப்பிடுவதாலும், ஆரோக்கியமற்ற பொருட்களை உட்கொள்வதாலும் ஏற்படும் தீமைகளை நிறைய விளக்கிச் சொன்னோம். அப்பொழுது ஏற்படும் சில நோய்களின் பெயரை புதுமையாகச் சொன்னோம். அரங்கம் முழுவதும் சிரிப்பு! உதாரணத்திற்கு, வெளி உணவை அதிகம் உண்டதால் ஒருவனுக்கு ‘பெப்ஸோ மேனியா’ வந்ததாகச் சொன்னோம். அந்தப் பையன் அவ்வளவு அழகாக நடித்துக் காட்டினான். இறுதியில் அவனை அவ்வியாதி வெகுநாட்கள் படுக்கையில் போட்டதாக காட்டியிருந்தோம்.
அந்த ஆஸ்பத்திரி பெயர்கூட ‘வாடா, போடா’ என்று குறிப்பிட்டிருந்தோம். ஆஸ்பத்திரிக் காட்சியின் வாசலிலேயே அத்தகையப் பெயரைப் பார்த்து சிரிக்காதவர்கள் இல்லை. எந்தவித வியாதியாக இருந்தாலும், ‘இங்கு வாடா’, நன்கு குணமாகி இங்கிருந்து ‘போடா’ என்னும் அர்த்தமும் நாடகத்திலேயே விளக்கப்பட்டது. வந்த நடுவர்களும் மிகவும் பாராட்ட, நாடகம் முதற் பரிசை தட்டிச்சென்றது. இதுபோன்ற நிகழ்வுகள் என்றும் மனதை விட்டு நீங்காமல், மலரும்
நினைவுகளாகவே இன்றும் மனதில் நிற்கிறது. இதுபோன்று மாணவர்களுடன் சேர்ந்து பழகும்போது நம்மையறியாமலேயே வயதை மறந்து, அவர்கள் வயதையொத்தவர்களாக மாறி விடுவோம். அன்பைக்காட்டி நம்மை திக்கு முக்காடச் செய்துவிடுவார்கள்.
பள்ளியிலிருந்து, நிகழ்ச்சி நடத்தும் இடம் சென்றடையும் வரை பஸ்சில் ஒவ்வொருத்தராக, சாப்பாட்டுப் பொருட்களை பங்கிட ஆரம்பித்துவிடுவார்கள். அந்தச்சமயம் அவர்கள் ஏதோ பெற்றோர்கள் போலவும், ஆசிரியைகள் அவர்கள் குழந்தைகள்போலவும் காட்டும் அக்கறை ரொம்பவும் அற்புதமானது.
பிள்ளைகள் சாப்பிடும் பொருட்கள் அனைத்தையும் நம் வாயில் திணிக்காத குறைதான். அவர்களின் வெகுளித்தனமான அன்பிற்கு முன்னால், நாம் அவசியம் இறங்கித்தான் போக வேண்டும். உறவுகளிடம் என்னதான் மனம் விட்டுப் பேசினாலும், ஏதாவது பிரச்னைகள்தான் தலை தூக்கும். ஆனால் மாணவர்கள் நமக்கு ‘அரண்’ போன்று திகழ்வர். பயங்கர குடிநீர் பஞ்சம் தலை தூக்கியிருந்த சமயம். இதுபோன்ற ஒரு நாடக நிகழ்ச்சியில், நாங்கள் மையமாகக் கொண்ட பொருள் ‘கூவம் குடிநீர்’ என்பதாகும். அந்தப்பெயரில் எவ்வளவு நகைச்சுவை புகுத்த முடியுமோ, அவ்வளவையும் புகுத்தி நடித்தனர்.
கூவம் நீர் பாட்டில்களை, இரும்பு ‘பீரோ’வில் பூட்டி வைத்திருப்பவர்களையெல்லாம், தேடித்தேடி பிடித்தனர். ‘உயர்நீதி மன்றம்’ போன்று மேடை
அமைத்தோம். மாணவர்கள் வக்கீல், நீதிபதி போன்ற வேடங்களில் கலக்கினார்கள். சிறப்பு விருந்தினரும், தனியாள பாராட்டுக்களைப் பொழிந்தார். முக்கியமான விஷயம் என்னவென்றால், தமிழில் அழகாக நடித்தவர்கள், வேற்று மொழிக்காரர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஏதோ பாடம் கற்பித்தோம் – முடிந்தது என்றில்லாமல், மாணவர்களோடு ஒன்றிணைந்து பல்வேறு துறைகளிலும் சேர்ந்து பயணிப்பது என்பது, நாம் நிறைய கற்றுக்கொள்ள உதவுகிறது. நம் எண்ணத்திற்குத் தோன்றாத பல புதிய விஷயங்கள், மாணவர்களிடமிருந்து நமக்குக் கிடைக்கலாம். நாம் சிறுபிள்ளைகளாக இருந்து கற்றுக்கொண்டதைவிட, இன்றைய பிள்ளைகள் மிக அதிகமாகக் கற்கிறார்கள்.
நாளைய உலகம் எப்படியிருக்கும் என்பது நம் பிள்ளைகளின் பிள்ளைகள் கையில்தான் உள்ளது. இருப்பினும், இளைஞர் இளைஞிகளுடன் அதிகமாக பொழுது செலவழித்து, என்றும் மனதளவில் இளமையாக இருப்பதில் ஆசிரியர்களுக்கு முதலிடம் என்றுதான் சொல்ல வேண்டும். வகுப்பில் பின்தங்கியவர்கள், வெளிக்குத் தெரியாத திறமைசாலிகள், இவர்களை ஊக்கப்படுத்தவே நம் முதல் கடமையாகக்கொள்ளலாம். அத்துடன், தமிழ் தெரியாத வேற்று மொழிக்காரர்களுக்கு நம் தமிழை புரிய வைப்பதோடு அவர்களை நடிக்க வைத்தல் என்பது நல்ல ஒரு சாதனை எனச் சொல்லலாம். குழந்தைகள் பிறந்தது முதல் அதன் பரிமாண வளர்ச்சி என்பது எப்படி ஒரு அழகான- அலுக்காத சந்தோஷத்தைத் தருமோ, அதுபோல் ஒரு மாணவன், மாணவியின் சிறிய சிறிய முன்னேற்றங்களும் ஆசிரியை, ஆசிரியர்களுக்கு சந்தோஷத்தைத் தரவல்லது.
மாணவர்களுடன் சேர்ந்து பயணிக்கும்பொழுது மற்றொரு சுவாரஸ்யமான விஷயம் உண்டு. புதிய உணவுப் பொருட்கள் சந்தைக்கு வரும்பொழுது, விளம்பரங்களை தொலைக்காட்சிகளில் நாம் பார்ப்பதுண்டு. பொருட்களை நேரே பார்க்க வேண்டுமானால் அது நம் பிள்ளைகள் கையில்தான். எப்படிப்பட்ட விலையுயர்ந்த ‘சாக்லெட்’, ‘பிஸ்கட்’ ஆக இருப்பினும் முதலில் பிள்ளைகள் அதை வாங்கி வந்துவிடுவார்கள். பெயர்கூடத் தெரியாத நாம், பிள்ளைகளிடமிருந்து புதியனவற்றையெல்லாம் கற்றுக்கொள்கிறோம். இவற்றையெல்லாம் வெறும் எழுத்திலோ, பேச்சிலோ சொல்லிவிட முடியாது. பிள்ளைகளோடு உறவாடி பயணித்தால்தான் முடியும். ஏனெனில் அது ஒரு சுகமான அனுபவம் நம் ‘கற்பித்தல்’ என்னும் கலையில்!
Average Rating