காலி துறைமுக கடற்படைத்தளத்தின் மீது கடற்புலிகள் தாக்குதல்
தென்னிலைங்கையில் காலி துறைமுகத்த அண்மித்த கடற்படைத் தளத்தின் மீது இன்று காலை தாக்குதல் நடத்திய விடுதலைப்புலிகள், அங்கு சில கடற்படைப் படகுகளுக்கு சேதம் ஏற்படுத்தியதாக இராணுவம் அறிவித்துள்ளது. காலி கடற்படைத் தளத்தை நோக்கி சுமார் 5 படகுகளில் வந்ததாகக் கூறப்படும் கடற்கரும்புலிகள் (தற்கொலையாளிகள்), அங்கு கடற்படையினருடன் சண்டையில் ஈடுபட்டதாகவும், அவர்களால் தளத்தினுள் நுழைய முடியாவிட்டாலும், அவற்றில் இரண்டு தற்கொலைப் படகுகள், அங்கிருந்த இரண்டு அல்லது மூன்று கடற்படைப்படகுகளுக்கு சேதமேற்படுத்தியதாகவும் இராணுவப் பேச்சாளர் பிரிகேடிய பிசாத் சமரசிங்க தெரிவித்துள்ளார்.
இரண்டு கடற்புலிப்படகுகள், கடற்படைப்படகுகளுடன் மோதி தம்மை வெடிக்கவைத்துக் கொண்டதாகவும், ஏனைய மூன்று படகுகளையும் கடற்படையினர் தாக்கி அழித்ததாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
அதேவேளை இந்தத் தாக்குதலில் ஒரு கடற்படைச் சிப்பாய் கொல்லப்பட்டதாகவும், 2 பேரைக் காணவில்லை என்றும், 11 சிப்பாய்கள் காயமடைந்துள்ளதாகவும் கடற்படையினர் தெரிவித்துள்ளனர். 2 கடற்படைப் படகுகளுக்கு பலத்த சேதம் ஏற்பட்டதாகவும், 1 படகுக்கு சிறிதளவு சேதம் ஏற்பட்டதாகவும் பாதுகாப்புத் தரப்பினர் கூறியுள்ளனர்.
இதேவேளை இந்த மோதலில் காயமடைந்த 15 பொதுமக்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அங்கிருந்துவரும் செய்திகள் கூறுகின்றன.
உள்ளூர் தொலைக்காட்சிகளில் காண்பிக்கப்படும், தொலைவில் இருந்து எடுக்கப்பட்ட படங்களில், அந்தப் பகுதியில் இருந்து புகை வந்து கொண்டிருப்பதைக் காணக்கூடியதாக இருந்ததாக கொழும்பில் இருந்து வரும் செய்திகள் கூறுகின்றன.
சில தமிழர் கடைகள் தாக்கப்பட்டன
இந்தத் தாக்குதல் சம்பவத்தை அடுத்து காலி நகரில் கிட்டங்கிப் பகுதியில் உள்ள சில தமிழர்களின் கடைகளை, சில காடையர்கள் தாக்கியதாகவும், அவர்களை கலைக்க பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் 3 பேர் காயமடைந்ததாகவும் கூறப்படுகிறது.
காலியில் ஊரடங்கு உத்தரவு
அதேவேளை, இந்தத் தாக்குதலை அடுத்து, காலி பிராந்தியத்தில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும், பொதுமக்கள் தமது வீடுகளில் அமைதியாக இருக்குமாறு கேட்கப்பட்டுள்ளதாகவும், காலி நகருக்கான பொலிஸ் அத்தியட்சகர் கீர்த்தி டி சில்வா கூறியுள்ளார். காலியில் தற்போது மேலதிக படையினர் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் தற்போது அங்கு நிலைமை கட்டுப்பாட்டில் இருப்பதாகவும் அவர் கூறினார்.
இன்று காலை 7.40 மணியளவில் காலி துறைமுகத்தை அண்மித்த கடற்படை இணைப்பு அலகை இலக்கு வைத்தே புலிகள் இந்தத் தாக்குதலை நடத்தியதாக, இலங்கை இராணுவ விவகாரங்கள் குறித்துப் பேசவல்ல அமைச்சர் கெகலிய ரம்புக்வெல்ல கூறியுள்ளார்.
மட்டக்களப்பில் விமானத் தாக்குதல்
மட்டக்களப்பு மாவட்டத்தில் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள கரடியனாறு பிரதேசத்தில் இன்று முற்பகல், இலங்கை விமானப்படை விமானங்கள் நடத்திய குண்டுத் தாக்குதலில் பெண் ஒருவர் கொல்லப்பட்டு, 10 வயது சிறுவன் ஒருவன் உட்பட இருவர் காயமடைந்துள்ளதாக விடுதலைப்புலிகள் கூறியுள்ளனர்.
6 வீடுகள் இந்தத் தாக்குதலில் சேதமடைந்ததாகவும், தமது தரப்புக்கு எந்தவிதமான சேதமும் ஏற்படவில்லை என்றும் விடுதலைப்புலிகள் அமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட அரசியல் துறையின் துணைப் பொறுப்பாளர் சீராளன் கூறுகிறார்.
ஆனால் புலிகளின் இலக்குகள் மீதே தாக்குதல் நடத்தப்பட்டதாக இலங்கை இரானுவம் கூறுகிறது.