எல்லாமே எதிர்கொள்ள பழகுவோம்!! (மகளிர் பக்கம்)
“முட்டக் கண்ணு, சுருள் முடி இந்த தோற்றத்தில் இருக்கும் எனக்கு நெகட்டிவ் ரோல் கிடச்சா நல்லா பண்ணுவேன்” என்கிறார் நடிகை வலீனா பிரின்ஸ்.
திரைத்துறைக்கு வருவதற்கான எந்த ஒரு பின்புலமும் இல்லாமல், தனி ஆளாக நின்று நடிகை என்ற அடையாளத்தை உருவாக்கியிருக்கும் வலீனாவின் சொந்த ஊர் பெங்களூர். நடிப்பின் மீதிருக்கும் ஈர்ப்பினால் வீட்டில் சொல்லாமல் கொள்ளாமல் சென்னை வந்தவர். இவரை மக்களிடம் பரவலாகக் கொண்டு சென்றது, நடிகர் போஸ் வெங்கட் இயக்கத்தில் வெளியான கன்னி மாடம் திரைப்படம்.
“ஐந்தாறு வயதில் டி.வி பார்க்கும் போது, அந்த டிவி-க்குள் நாமும் வந்தால் நல்லா இருக்கும் என்று சின்னச் சின்ன குட்டி ஆசை. அதனாலேயே என்னவோ பத்தாவது படிக்கும் போதே நடிக்கத்தான் போவேன் என்று வீட்டில் அடம்பிடிக்க ஆரம்பித்தேன். அப்பதான் என் அக்காவின் கணவர் மூலமாக குறும்பட இயக்குநர் ஒருவர் அறிமுகமானார். படிப்பை பாதியில் நிறுத்த கூடாது என்று வீட்டில் சொன்னதால், பன்னிரண்டாம் வகுப்பு வரை படிச்சு முடிச்சேன். அதற்கு மேல் என்னால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. பெங்களூரிலிருந்தே திரைப்படங்களில் நடிப்பதற்கு முயற்சிகள் செய்தேன். ஆனால், அங்கு ஏதும் நடக்காததால் வீட்டில் யாரிடமும் சொல்லாமல் சென்னை நோக்கி புறப்பட்டேன். இங்கு வந்து பி.ஜி ஹாஸ்டலில் தங்கினேன்.
முன் பின் தெரியாத சென்னை தெருக்களின் பெயர்கள் எல்லாம் அறிமுகமாயின. ஒவ்வொரு நாளும் பல சினிமா ஆபீஸ்களுக்கு ஏறி இறங்கினேன். பல இடங்களில் கிளாமர் அப்படி இப்படினு சொல்வாங்க. அதெல்லாம் பிடிக்கவே பிடிக்காது. சோர்ந்து போய் உட்கார்ந்த போது ஃபேஸ்புக்கில் ஒருவர் குறும்படம் இயக்கப் போகிறேன், அதில் நடிக்கிறீங்களா என்று கேட்டிருந்தார். பெரிதாக வாய்ப்புகள் ஏதும் கிடைக்காத அந்த நேரத்தில் என்னுடைய பொருளாதார தேவைக்காக அதில் சும்மா டைம் பாஸுக்குதான் நடித்தேன். ஆனால், அந்த குறும்படம் நல்ல வரவேற்பு அடைந்து, சினிமா வட்டாரத்தில் நான் ஒரு நடிகையாக பதிவானேன்” என்று கூறும் வலீனா திரைப்படங்களில் நடித்த அனுபவத்தைப் பகிர்ந்தார்.
“நான் பட்ட கஷ்டங்களுக்கும், தொடர்ந்து எடுத்த முயற்சிக்கும் முதல் வெற்றிப் படியாக அமைந்தது ஆடுகளம் முருகதாஸ் சாருக்கு ஜோடியாக நடித்த ‘ராஜா மகள்’ திரைப்படம். இது எனக்கான தைரியத்தையும், அடையாளத்தையும் கொடுத்தது. அந்த படத்தின் போஸ்டர்கள், புகைப்படங்களை ஃபேஸ்புக்கில் பதிவிட்ட போது, அதன் மூலம் அடுத்தடுத்த வாய்ப்புகள் கிடைத்தது. அப்படித்தான் என் ஃபேஸ்புக் நண்பரான போஸ் சார், ‘கன்னி மாடம்’ படத்திற்கான வாய்ப்பினை கொடுத்தார். அந்த படத்தில் செகெண்ட் லீடாக நடித்தேன். கன்னி மாடம் படத்திற்காக அரை மணி நேரத்தில் ஆட்டோ ஓட்ட கற்றேன். டிரைவிங் எனக்கு ரொம்ப பிடிக்கும். அதனால் ஈசியா கத்துக்க முடிஞ்சது.
போஸ் சார் ஸ்பார்ட்டில் ரொம்ப ஸ்ட்ரிக்ட். அந்த படத்திலேயே நான் தான் அதிகமா திட்டு வாங்கியிருப்பேன். ஆனால், அந்த ஒவ்வொரு திட்டும் எனக்கான பாடமா அமைஞ்சது. நம்ம கவனம் முழுதும் நடிப்பில்தான் இருக்கனும், சின்சியரா எப்படி இருக்கனும் போன்ற விஷயங்களை எல்லாம் போஸ் சாரிடமிருந்து கற்றுக் கொண்டேன். ஒவ்வொரு நிமிஷமும் சினிமாவில் பணம் போயிட்டே இருக்கும். அதனால் நம் வேலையைச் சரியாக செய்யணும். நாம் பார்க்கும் வேலையில் கொஞ்சம் சின்சியரா இருந்தா வாழ்க்கையில் நல்லா இருக்கலாம் என்பதை புரிந்து கொண்டேன்” என்கிறார் வலீனா.
“நல்லதை தேடித் தேடி நிறையக் கஷ்டப்பட்டால் பின்னாடி அதற்கான பலன் இருக்கும்” என்று கூறும் வலீனா, திரைத்துறையில் கிடைத்த பாடத்தினை பகிர்ந்தார். “நீ ஒரு பொண்ணா தனியா போய் என்ன பண்ண போற, வேற துறையா இருந்தாலும் பரவால. சினிமா…?’ என்று வீட்டில் கவலைப்பட்டாங்க. எந்த துறையாக இருந்தாலும் நம் இருப்பை பொறுத்துத்தான் என்பதைக் கொஞ்சக் கொஞ்சமாகத் தெரிந்து கொண்டேன். எனக்கு எந்த ஒரு பயமும் கிடையாது. பையன் மாதிரி எல்லாமே எதிர்கொள்ளப் பழகினேன். ஒரு கெட்டவன் இருக்கிறார் என்றால், ஒரு நல்லவனும் இருக்கும் உலகம் இது. அதனால் நல்லதை மட்டுமே எடுத்துக் கொள்வோம்.
எனக்கு ரோல் மாடல் ஜோதிகா மேம். ஒரு சின்ன சீன் கொடுத்தாலும் அதில் பத்து விதமான பாவனைகள் கொடுத்துடுவாங்க. அவங்கள மாதிரி நிறைய நடிப்பில் கற்றுக் கொள்ளனும். வித்தியாசமான நிறையக் கதாபாத்திரங்களில் நடிக்கனும். அதுதான் என் ஆசை” என்றார்.
Average Rating