இதுவும் கடந்து போகும்! (மகளிர் பக்கம்)

Read Time:10 Minute, 28 Second

‘இது போன்ற நிலை இதற்குமுன் எப்போதும் யாரும் கண்டதும் இல்லை கேட்டதுமில்லை…’

கண்ணுக்கே புலப்படாத ஒன்று உலகம் முழுவதையும் புரட்டிப் போட்டுக் கொண்டு இருக்கிறது. நினைத்தே பார்த்திராத நடைமுறைகள் பழகிவிட்டன. எல்லோருடைய வாழ்க்கையிலும் சில மாதங்கள் காணாமல் போகும் என்று யாராவது ஜோதிடம் சொல்லியிருந்தால் நம்பியிருக்க மாட்டோம். ஆனால் நிதர்சனமான உண்மை இது. உலகத்திலேயே அமெரிக்காவில்தான் கொரோனா வைரஸால் அதிகம் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். அந்த நாட்டில் இதுவரை இருபது லட்சத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மரணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை ஏறக்குறைய லட்சத்தை தொட்டு விட்டது. இந்த நிலையிலிருந்து மீளுவதற்கு லாக்டவுன் அறிவிக்கப்பட்டு கடுமையாகவும் அமல்படுத்தப்பட்டிருக்கிறது.

சின்னத் திரை, பெரிய திரை கலைஞர்களின் வாழ்க்கையில் இதுபோன்ற தேக்க நிலை வருவது மிகவும் கொடுமை. ஏற்கனவே தயார் நிலையில் இருக்கும் படங்களை திரை அரங்குகளில் வெளியிட முடியாத சூழ்நிலை. பெரிய முடக்கநிலை இது. பொருளாதார நெருக்கடி நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழலில் மக்கள் என்னதான் செய்வார்கள்? நிலைமை மறுபடியும் சீர்படக் கூடும் என்ற நம்பிக்கையில் நாட்களை கடத்திக்கொண்டு இருக்கிறார்கள். யாருடைய வீட்டிற்கும் போகாமல், யாரும் நம் வீட்டிற்கு வராமல், யாரையுமே சந்திக்காமல், கல்யாணம் மற்றும் பண்டிகை போன்ற விசேஷங்களில் கலந்துகொள்ளாமல் நான்கு சுவர்களை பார்த்துக்கொண்டு வீட்டிலேயே மூன்று மாதங்களுக்கு மேலாக சிறையில் இருக்கும் நிலை. கற்பனைக்கும் எட்டாத நிலை.

ஆனால் வந்து விட்டது! அதை எதிர்கொள்வதில், பரிகாரம் காண்பதில்தான் நம்முடைய திறமையும் சாமர்த்தியமும் இருக்கின்றன. விரைவில் இதற்கான தடுப்பூசி கண்டுபிடிக்கப்படும் என்று நம்புவோமாக. மார்ச் மாதம் 7ம் தேதி அன்று சியாட்டில் விமான நிலையத்திற்கு நானும் என் கணவரும் வந்து சேர்ந்தோம். அப்போது இவ்வளவு தீவிரமாக கொரோனா பற்றிய புரிதலோ, பாதிப்போ இருக்கவில்லை. பிராங்க்பர்ட் வழியாக பயணித்த போதும், தீவிரமாக பரிசோதனை செய்யவில்லை. வந்து சேர்ந்த இரண்டு நாட்களில் சமூக இடைவெளி, மாஸ்க் அணிதல், கையை அடிக்கடி கழுவுதல் போன்றவை வலியுறுத்தப்பட்டன. குழந்தைகளுக்கு ஜூம் மீட்டிங்கில் கல்வி கற்பிப்பது, வீட்டிலிருந்தே வேலை பார்ப்பது போன்றவை தவிர்க்க இயலாதவை ஆகிவிட்டன.

அலுவலகம் மற்றும் பள்ளிக்குச் செல்லத் தேவையில்லை. எந்தப் பரபரப்பும் அடைய வேண்டாம். குழந்தைகளுக்கு அவசர அவசரமாக மதிய உணவு கட்டித் தரவேண்டிய அவசியம் இல்லை. என்ன கொடுப்பது என்று யோசிக்கத் தேவையில்லை. ரிலாக்ஸ்ட் ஆக, அந்தக் கால இல்லத்தரசிகள் போல் நிம்மதியாக இருக்கலாம் என்று மூச்சு விட்டுக்கொண்டாலும், நாளடைவில் சோர்வு மனப்பான்மை வந்து விடும் வாய்ப்பு இருக்கிறது. அன்றாட வேலைகளுக்கு இடையிலும் தமக்கென்று ஒரு பொழுதுபோக்கை வைத்துக்கொண்டு இருந்தவர்களுக்கு இப்போது அவற்றுக்கு நேரம் கிடைக்காமலும் போகலாம்.

அதே சமயத்தில் குடும்பத்தில் எல்லோரும் ஒன்றாக இருப்பது, அவரவர்களின் செல்போன்களில் மூழ்கிப் போகாமல் கலந்துரையாடுவது, வீட்டு வேலைகளை பகிர்ந்து கொள்வது… கெட்ட காலத்திலும் ஒரு நல்லது என்பது போல் பார்க்கத் தோன்றுகிறது. படிக்க வேண்டிய புத்தகங்கள், பார்க்க வேண்டிய திரைப்படங்கள் என்று செய்ய விட்டுப் போனவற்றை முடிக்கக் கூடிய நல்ல வாய்ப்பாக எனக்கு அமைந்திருக்கிறது என்று தான் நான் சொல்லணும். இந்த மூன்று மாதங்களுக்கு பிறகு, நாங்கள் இருக்கும் இஸக்குவா பகுதியில் இப்பொழுதுதான் சிலர் மீண்டும் நடைபயிற்சி மேற்கொள்ளத் தொடங்கியிருக்கிறார்கள். மாஸ்க் அணிந்து நடை பயிலுகிறார்கள். ஆனாலும் எல்லாமும் மாறிவிடவில்லை என்று தான் சொல்லணும். நடைப்பயிற்சி தவிர வெளியே கடைக்கோ அல்லது ஓட்டலுக்கு சென்று சாப்பிடவோ முடியாது.

வீட்டுக்கு தேவையான மளிகை, பால் போன்றவற்றை ஆன் லைனில் ஆர்டர் செய்தால் வீட்டிற்கே டெலிவரி செய்கிறார்கள். அல்லது கார் பார்க்கிங் இடத்திலேயே வந்து ஆர்டர் செய்த பொருட்களை கார் ‘பூட்’டில் வைத்து விடுகிறார்கள். வாடிக்கையாளரை நேரில் சந்திக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை.
அந்தந்த கம்யூனிட்டிகளில் குரூப் ஏற்பாடு செய்துகொண்டு தங்களிடம் உள்ள மாஸ்க், சானிடைஸர் போன்ற அத்தியாவசியப் பொருட்களை தேவையானவர்களுக்குப் பகிர்ந்து வருகிறார்கள். மருத்துவத் துறையில் இருக்கும் நர்ஸ், டாக்டர்கள் போன்றவர்களின் குழந்தைகளுக்காகக் காப்பகங்கள் தனிப்பட்ட முறையில் செயல்பட்டு வருகின்றன. கொரோனா ஒரு பக்கம் இருந்தாலும், பலருக்கு நீரிழிவு மற்றும் ரத்த அழுத்தம், பல் சார்ந்த பிரச்னைகள்… என வேறு சில பிரச்னைகள் இருக்கத்தான் செய்கிறது.

இதற்கு நாம் நினைக்கும் நேரத்தில் முன்பு போல் மருத்துவரை நேரில் காண முடியாத சூழல் என்பதால், முடிந்த வரையில் மருத்துவர்கள் வீடியோ மூலம் நோயாளிகளுக்கு ஆலோசனை வழங்கி மருந்து எழுதித் தருகிறார்கள். மிகவும் அவசியம் என்ற நிலையில் மட்டுமே நேரில் பார்க்கிறார்கள். டாக்டரை நேரில் பார்த்தால் தான் உடல் குணமாகும் என்ற நிலை மாறி டாக்டரை போனிலாவது தொடர்பு கொண்டால் போதும் என்ற நிலைக்கு இங்கு எல்லாரும் தள்ளப்பட்டு இருக்கிறோம். ஒரு பக்கம் இது போன்ற சூழலை இலகுவாக்க சுபகாரியங்களும் நடைபெற்று வருகிறது. எங்களுக்கு தெரிந்தவர்கள் வீட்டுப் பெண்ணுக்கு தலைப்பிரசவமாகி குழந்தை பிறந்திருக்கிறது. பிரசவத்திற்கு இந்தியாவிலிருந்து பெற்றோர் வர முடியாத சூழ்நிலை. சொந்தபந்தங்களை தாண்டி நண்பர்கள், அக்கம் பக்கத்தினரும் தானா முன் வந்து அந்த பெண்ணிற்கு அன்றாடம் பத்தியச் சாப்பாடு அனுப்பி வைக்கிறார்கள்.

சென்னையில் ஒரே அடுக்குமாடி கட்டிடத்தில் வசித்தாலும், பக்கத்து வீட்டில் யார் இருக்கிறார்கள் என்று தெரியாத நிலையில்… இங்கு அந்த பெண்ணிற்கு தினமும் தவறாமல் பத்திய சாப்பாடு ஒவ்வொருவரின் வீட்டில் இருந்தும் வருவதை பார்க்கும் போது, மனிதநேயம் அழியவில்லை என்று தான் சொல்லணும்.
கொரோனா உலகளவில் பொருளாதார ரீதியாக பல மாற்றங்களை ஏற்படுத்தி இருந்தாலும், குடும்பம் என்ற அமைப்பை பலப்படுத்தியுள்ளது என்றுதான் சொல்லணும். ஒருத்தர் ஒருத்தர் புரிந்து கொண்டு எதையும் நிதானமாக கையாள வேண்டும் என்ற மனப்பான்மை ஏற்பட்டுள்ளது. இந்த தொற்றுக்கான தீர்வுகள் கண்டுபிடிக்கப்படுகின்றன. அது குறித்து பல ஆராய்ச்சிகளில் உலகளவில் பல நாடுகள் ஈடுபட்டு வருகிறது. நம்மால் எந்த விதமாகவும் நிலைமையை மாற்ற முடியாது என்ற போது மௌனமாக இருப்பது போன்ற உத்தமம் வேறேதும் இல்லை. நிலைமை சீராகும் வரையில் பொறுத்திருப்போம். இதுவும் கடந்து போகும்…

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post எல்லாமே எதிர்கொள்ள பழகுவோம்!! (மகளிர் பக்கம்)
Next post கொஞ்சம் நிலவு… கொஞ்சம் நெருப்பு…!! (அவ்வப்போது கிளாமர்)