இங்கிலாந்து ஓட்டலில் நம்மூர் பழையதுதான் சிற்றுண்டி! நடிகை நிரஞ்சனி அகத்தியன்!! (மகளிர் பக்கம்)

Read Time:14 Minute, 13 Second

சாப்பாடு, என்னைப் பொறுத்தவரை ஒரு ஸ்ட்ரெஸ் பஸ்டர்னுதான் சொல்வேன். நம்முடைய எந்த ஒரு டிப்ரெஷனையும், சாப்பாட்டின் மணம் ஒரே நொடியில் போக்கிடும். நாம வெளியே போகலாம்ன்னு நினைச்சாகூட நம்முடைய மனதில் முதலில் தோன்று வது, ஒரு நல்ல உணவகத்திற்கு செல்ல வேண்டும் என்பதுதான். அது ஒரு ஃபீல் குட் விஷயம். அதுவும் இந்த லாக்டவுன் நாட்களில் நானே வீட்டில் சமைக்க ஆரம்பிச்ச போது, அதன் மேல் ஒரு தனி ஈடுபாடே வந்துடுச்சு’’ என்று தன் உணவு குறித்த உணர்வுகளை பகிர்ந்தார் நடிகை மற்றும் காஸ்ட்யூம் டிசைனரான நிரஞ்சனி அகத்தியன்.

‘‘நான் முதன் முதலில் சுவைத்த உணவு பற்றி எல்லாம் எனக்கு நினைவு இல்லை. எல்லாருக்குமே அம்மாவின் சமையல்ன்னா ஒரு தனி சுவை தான். என்னோட அம்மா இப்ப இல்லை. ஆனா அவங்க செய்யும் ரசம் மற்றும் உருளைக்கிழங்கு ஃபிரை எனக்கு ரொம்ப பிடிக்கும். கல்லூரி படிப்புக்கு பிறகு நான் நிறைய ஊர்களுக்கு பயணம் செய்து இருக்கேன். நிறைய ஊர்களுக்கு டிராவல் செய்ய பிடிக்கும். அதே போல் அந்தந்த ஊர் லோக்கல் உணவினை சுவைக்கவும் பிடிக்கும். சிலர் எங்கு போனாலும், அங்க நம்மூர் உணவைத் தேடுவாங்க. நான் அப்படி இல்லை. அந்தந்த ஊர் உணவினை சுவைத்து பார்க்கணும்ன்னு விரும்புவேன். அப்படித்தான் நான் ெசன்ற எல்லா ஊர்களிலும் அந்தந்த உணவினை சுவைத்து பார்த்திருக்கேன்.

என்ன அவங்க ஊரில் நாம சாப்பிடுவது போல் மசாலா எல்லாம் அதிகம் இருக்காது. காரம் குறைவா தான் இருந்தாலும், சுவையாக இருக்கும். எனக்கு சாதம் ரொம்ப பிடிக்கும். மூன்று வேளையும் சாதம் குழம்புன்னு தென்னிந்திய உணவு கொடுத்தா நான் ரொம்பவே விரும்பி சாப்பிடுவேன். இப்பதான் கொஞ்சம் டயட்டில் இருக்கலாம்னு சாப்பாட்டை குறைச்சிருக்கேன். சென்னையில் நான் பல ஓட்டல்களில் சாப்பிட்டு இருக்கேன். அதில் குறிப்பிட்டு சொல்லணும்னா ஓட்டல் தாஜில் உள்ள சதர்ன் ஸ்பைஸ் உணவகம். அங்கு முழுக்க முழுக்க தென்னிந்திய உணவு தான் இருக்கும். பெரிய தாளி, ஆப்பம், சிக்கன் 65, பிரான் மசாலா என்னுடைய ஃபேவரெட். சாப்பாட்டுக்கு பிறகு ஒரு பில்டர் காபி தருவாங்க. வயிறு முட்ட சாப்பிட்டு அந்த காபியை குடிக்கும் போது…. அவ்வளவு அமிர்தமா இருக்கும். எனக்கு நான் சாப்பிடுறதை விட மத்தவங்களுக்கு சமைச்சு கொடுக்க பிடிக்கும். இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டில் நானே புதுசு புதுசா சமைச்சு பார்த்தேன்.

அதுவும் என் அக்கா பசங்களுக்காக பர்கர், பாவ் பானி, சைனீஸ் உணவுன்னு. ரொம்பவே என்ஜாய் செய்து சமைச்சு கொடுத்தேன். இப்ப எனக்கு சமைப்பது மேல் ஒரு தனி ஈடுபாடு வந்திருக்கு. அதனால் நேரம் கிடைக்கும் போது ஏதாவது சமைக்கலாம்ன்னு முடிவு செய்திருக்கேன்’’ என்றவர் முதன் முதலில் கல்லூரியில் படிக்கும் போது தான் நண்பர்கள் சூழ வெளியே உணவகத்திற்கு சென்றுள்ளார். ‘‘பள்ளியில் படிக்கும் போது அப்பா, அம்மா, அக்காவோட வெளியே சென்று சாப்பிட்டு இருக்கேன். கல்லூரியில் படிக்க ஆரம்பித்த பிறகு தான் நண்பர்களுடன் சென்று வெளியே சாப்பிட பழகினேன். அப்பெல்லாம் பட்ஜெட் எல்லாம் ரொம்ப பெரிய அளவில் இருக்காது. 100 ரூபாய் இருந்தாலே பெரிய விஷயம் தான். அதனால் நாங்க பெரும்பாலும், காபி ஷாப் போவோம், இல்லைன்னா பிரியாணி வாங்கி சாப்பிடுவோம். அப்புறம் செனடாப்பில் உள்ள பஞ்சாபி தாபா எங்களின் ஃபேவரெட் ஸ்பாட். அடிக்கடி அங்க போவோம்.

அந்த ஓட்டலின் சூழல் ரொம்ப நல்லா இருக்கும். அங்க எனக்கு பட்டர் நான், பட்டர் சிக்கன் ரொம்ப பிடிக்கும். இங்கு மட்டும் இல்லை கோடம்பாக்கத்திலும்
ஒரு தாபா இருக்கு. சின்ன தாபாதான். அங்கேயும் அடிக்கடி போவோம். படிப்பு முடிச்சிட்டு நான் சினிமாவில் காஸ்ட்டியூம் டிசைனரா வேலைக்கு சேர்ந்த பிறகு சென்னையில் ஷூட்டிங் இருந்தா, ஸ்பாட்டில் சாப்பிட மாட்டேன். எப்படி இருந்தாலும் வீட்டுக்கு வந்திடுவேன். எனக்கு வீட்டு சாப்பாடு ரொம்ப பிடிக்கும் என்பதால் வீட்டுக்கு வந்திடுவேன். அது மட்டும் இல்லை. அந்த சமயத்தில் ஓட்டலுக்கு போய் சாப்பிடுவதற்கு பதில் வீட்டிலேயே போய் சாப்பிடலாம்ன்னு வந்திடுவேன். சில சமயம் சாதம் சாப்பிடணும்ன்னு தோணுச்சுன்னா, ஷூட்டிங் சாப்பாடு ஃபுல் மீல்சை ஒரு பிடி பிடிப்பேன். ஒரு முறை ஷூட்டிங்காக காரைக்குடிக்கு போய் இருந்தேன். அங்க ‘பங்களோ’ன்னு ஓட்டலில் தங்கி இருந்தேன்.

மிகவும் பாரம்பரிய முறையில் அங்கு அறைகள் அமைக்கப்பட்டு இருக்கும். அறைகள் மட்டுமில்லை உணவும் அவ்வளவு ருசியா இருக்கும். அவங்களே சமைச்சு தருவாங்க. முழுக்க முழுக்க செட்டிநாடு உணவு தான். எனக்கு கடல் சார் உணவு ரொம்ப பிடிக்கும், அதனால் அவங்ககிட்ட பிரான் ஃபிரை செய்ய சொல்லி கேட்டு சாப்பிட்டேன். அது அவ்வளவு சுவையா இருந்தது. ரொம்பவே வித்தியாசமா இருந்தது. நான் தனிப்பட்ட முறையில் தான் வெளிநாடு போய் இருக்கேன். அங்கு போனாலும் அங்குள்ள உணவுகளை சாப்பிடுவேன். பெரும்பாலும் கிரில் சிக்கன், பாஸ்தா, சைனீஸ் உணவுகள்தான் அதிகம் விரும்பி சாப்பிடுவேன். எனக்கு பீட்சா மற்றும் பர்கர் மேல் அவ்வளவு ஈடுபாடு இல்லை’’ என்றவர் அதிகம் விரும்பி சாப்பிடுவது தாய் உணவாம்.

‘‘எனக்கு தாய் உணவு ரொம்ப பிடிக்கும். சென்னையில் ‘பெஞ்சராங்’ன்னு தாய் உணவகம் இருக்கு. பல வருஷமா அங்கு சாப்பிட்டு இருக்கேன். அவங்க உணவில் அதிக அளவு லெமன் கிராஸ் சேர்ப்பாங்க. அந்த ஃபிளேவர் ரொம்ப பிடிக்கும். அப்புறம் கிரின் கறின்னு சிக்கன், ஃபிஷ், இறால் மூன்றிலும் இருக்கும். அதுவும் ரொம்ப நல்லா இருக்கும். அண்ணாசாலையில் உள்ள பார்க் ஓட்டலில் இருக்கும் லோட்டஸ் என்ற தாய் உணவகமும் என்னுடைய அடுத்த ஃபேவரெட். சென்னையை பொறுத்தவரை பெரும்பாலான உணவகத்தில் நான் சாப்பிட்டு இருக்கேன். ஈ.சி.ஆர் சாலையில் கிப்ளிங்ன்னு காஃபி ஷாப். அங்கு கான்டினென்டல் உணவு நல்லா இருக்கும். அப்புறம் தலப்பாக்கட்டி பிரியாணி என்னுடைய ஆல்டைம் ஃபேவரெட். மெயின்லாண்ட் சைனா உணவகத்தில் டிம்சிம் ரொம்ப பிடிக்கும். ஸ்பினாச் கிராக்கில், கீரையில் செய்யப்படும் ஒரு வகையான ஸ்டார்டர். மொறுமொறுன்னு சூப்பரா இருக்கும். எப்ப அங்க போனாலும் ஆர்டர் செய்து சாப்பிடாமல் இருக்க மாட்டேன்.

வெளிநாட்டிற்கு போன போது, அங்கும் மறக்க முடியாது, இடம் என்றால் பாரீஸ் தான். அங்கு பெரும்பாலும் சாலை ஓரங்களில் தான் உணவகங்கள் இருக்கும். அதாவது சாலைக்கு இரண்டு பக்கமும் உணவகங்கள் வரிசையாக இருக்கும். நாம் விரும்பும் உணவினை அங்கேயே அமர்ந்து சாப்பிடலாம். சிங்கப்பூரிலும் இதே முறையில் உணவகங்கள் இருக்கும். பிரட் முதல் பீட்சா, பர்கர், ஷவர்மா என எல்லா உணவுகளும் கிடைக்கும். சிங்கப்பூரில் ஃபாஸ்ட் ஃபுட் உணவகம் தான் ஃபேமஸ். அங்கு ஸ்னாக்ஸ் மட்டும் இல்லாமல் பிரைட் ரைஸ், பிராங்கி மற்றும் ரோல் கிடைக்கும். சிலர் அப்படியே வாங்கி சாப்பிட்டு போவாங்க. சிலர் அலுவலகம் முடித்துவிட்டு வீட்டுக்கு போகும் வழியில் சாப்பிட வருவாங்க. சுவிட்சர்லாந்து போன போது, அங்கும் சாலையோர உணவகங்கள் தான் பிரபலம். ஆனால் அங்கு எவ்வளவு நேரம் வேண்டும் என்றாலும், அந்த உணவகத்தில் அமர்ந்து சாப்பிடலாம்.

அங்கு சென்ற போது, பிரைட் ரைஸ் மற்றும் ஸ்பிரிங் ஆனியன் சாப்பிட்டேன். நாம நம்ம ஸ்டைல் பிரைட் ரைசுக்கு பழகி இருப்போம். அங்கு கொஞ்சம் வித்தியாசமா இருந்தது. நான் இங்கிலாந்து சென்ற போது அங்கு நான் பார்த்து வியந்த விஷயம், அவங்க மெனுவில் நம்ம ஊர் பழைய சாதம், கருவாடு, மோர் மிளகாய் இருந்தது தான். விசாரிச்ச போது, அதை அவங்க ரெகுலரா மெனுவில் சேர்த்து இருப்பது தெரிந்தது. பழையதை பார்த்ததும் ரொம்பவே சந்தோஷமாயிடுச்சு எனக்கு. அப்பறம் பேன்கேக் ரொம்ப பிடிக்கும். அதில் தேன் சேர்த்து சாப்பிடும் போது அதன் சுவையே தனிதான். காலை சிற்றுண்டியாக சாப்பிட நல்லா இருக்கும். இப்ப நானும் என் இரண்டு சகோதரிகளும் சேர்ந்து பாலி சென்று இருந்தோம். அவங்க என்னை மாதிரி இல்லை. நம்மூர் சாப்பாடா தான் தேடிப் போய் சாப்பிடுவாங்க. அப்படித்தான் நான் ஒரு உணவகத்தில் சாப்பிட்டோம். பெரிய நட்சத்திர ஓட்டல் எல்லாம் இல்லை. சாதாரண ஓட்டல் மாதிரி தான் இருந்தது. கடல்சார் உணவுகள் பிரபலம் என்பதால், கண்ணில் தென்பட்ட கடல் உணவுகளை ஆர்டர் செய்தோம்.

அதில் பெரிய லாப்ஸ்டரும் எங்க லிஸ்டில் இருந்தது. நல்லா சாப்பிட்டு பில் பார்த்தா ஷாக் ஆயிடுச்சு. நம்ம இந்திய ரூபாய் கணக்கு படி 30 ஆயிரம் வந்திருந்தது. ஒரு நிமிஷம் எங்களுக்கு என்ன செய்றதுன்னே தெரியல. பில்லைக் கட்டிட்டு வந்தோம். என்னதான் ஓட்டலில் சாப்பிட்டாலும், நான் வீட்டு சாப்பாட்டுக்கு அடிமை. அப்பா ரொம்ப நல்லா சமைப்பார். நான் ஷூட்டிங்காக வெளியூர் போயிட்டு திரும்பி வரும் போது, அப்பா மீன் குழம்பு, ரசம், மீன் வறுவல், இறால்ன்னு எனக்கு பிடிச்ச உணவுகள் எல்லாம் சமைச்சு வைத்திருப்பார். எனக்கு பெரும்பாலும் ரூஃப் டாப் உணவகத்தில் தான் சாப்பிட பிடிக்கும். அங்க பொறுமையா எந்த வித ஆரவாரம் இல்லாமல் தனிமையை ரசித்துக் கொண்டு சாப்பிடலாம். இந்த ஊரடங்கு காலத்தில் நான் அதை ரொம்பவே மிஸ் செய்றேன். எப்ப தடைகள் நீங்கும்ன்னு காத்திருக்கேன். ஓட்டல்கள் திறந்தவுடன் ஒரு ரூஃப் டாப்பில் அமர்ந்து, பொறுமையா சாப்பிடணும். அந்த நாளுக்காக காத்திருக்கேன்’’ என்றார் தன் வசீகர புன்னகையுடன் நடிகை நிரஞ்சனி.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மாரடைப்பு, பக்கவாதம் வராமல் தடுக்கும் பழங்கள்! (மருத்துவம்)
Next post வாழ்வென்பது பெருங்கனவு – கண்ட கனவுகளும் நிஜமாகியவையும்! (மகளிர் பக்கம்)