எனக்கு அடையாளத்தை கொடுத்தது இசைஞானியின் இசை!! (மகளிர் பக்கம்)
எந்த ஒரு சூழலையும் இயல்பாக மாற்றக் கூடிய வல்லமை இசைக்கு உண்டு. அதிலும் ஒரு சில இசைக் கருவிகளிலிருந்து வரும் ஒலிகள் நம்மை மெய் மறக்கச் செய்யும். அந்த வித்தையை தன் விரல்கள் மூலமாக நம்மைக் கட்டிப் போடுகிறார் புல்லாங்குழல் கலைஞர் அஸ்வினி கௌசிக். “நான் இசைக் குடும்பத்தைச் சேர்ந்தவள். அப்பா-அம்மா இரண்டு பேருமே பாடுவாங்க. சின்ன வயதில் அக்கா வயலின் கத்துக்க போகும் போது என்னையும் அவளோடு அனுப்புவாங்க. அதில் ஆர்வமே இல்லாம சும்மா கூட மட்டும் போயிட்டு வந்திட்டு இருந்தேன். அந்த நேரத்துல ‘மால்குடி டேஸ்’-னு ஒரு நிகழ்ச்சி டி.டி சேனலில் வந்தது. அதோட டைட்டில் பாட்டுல ஒரு புல்லாங்குழல் பிட் வரும். கேட்டதுமே அதன் மீது காதல் ஏற்பட்டது. நானும் அதை மீட்க ஆசைப் பட்டேன்.
ஆசை நிறைவேற்றுவது போலவே சரியா அந்த நேரம் பார்த்து, வீட்டு பக்கத்திலேயே ஒரு புல்லாங்குழல் வாத்தியார் குடிவந்தாங்க. ஏழே வயதான என் பிஞ்சு விரல்களில் புல்லாங்குழல் கொடுத்து ‘சும்மா ஊது’ என்றார். முதல் முறையிலேயே சத்தம் வந்தது. பொதுவாகக் கம்பி கருவிகளில் முதலில் சத்தம் வந்திடும், ஆனால் அதைக் கற்றுக் கொள்வது கடினம். ஆனால், காற்று கருவிகளில் முதலில் காற்றுதான் வரும். அதிலிருந்து சத்தம் வருவது சவாலாக இருக்கும். கற்றுக் கொள்வது எளிது. இதுதான் இரண்டுக்கும் உள்ள வித்தியாசம். நான் முதலில் வாசித்ததுமே சத்தம் வந்தது ஆச்சரியமும், அதே சமயம் எனக்குள் ஒரு உத்வேகமும் அளித்தது. அதனால் தொடர்ந்து பயிற்சி எடுக்க ஆரம்பிச்சேன்.
அந்த சமயத்தில், நியூஸ் பேப்பரில் ஒரு விளம்பரம்…CCRT (Centre For Cultural Resources And Training), இந்திய கலைகளில் ஏதாவது ஒன்றை கற்றுக் கொள்ள 100 நபர்களுக்கு ஸ்காலர்ஷிப் தருவதாக குறிப்பிட்டு இருந்தது. அதை பெற தேர்வு எழுதணும். நானும் எழுதினேன் வெற்றியும் பெற்றேன். பள்ளிப்படிப்போடு புல்லாங்குழலும் கற்று வந்தேன். 13 வருடங்கள் ஸ்காலர்ஷிப் கிடைத்தது. அதன் பின் மூன்று ஆண்டுகள் ஹுமன் ரிசர்ச் டெவலப்மெண்ட், ஸ்டைஃபண்ட் கிடைத்தது. அப்போதுதான் சங்கீத கலாநிதி டாக்டர் என். ரமணி அவர்களிடம் கற்கும் வாய்ப்பு அமைந்தது. இதற்காக ஒவ்வொரு வாரமும் சென்னைக்கு வருவேன்’’ என்றவர் பல கச்சேரிகளில் பங்கு பெற ஆரம்பித்துள்ளார்.
‘‘சென்னை வரும் நேரங்களில் சீசன் கச்சேரிகளில் என்னை இணைத்துக் கொண்டேன். எங்குப் போனாலும் இசையின் கலாச்சாரம் என்னை ஆக்கிரமித்தது. காலை 8மணிக்குப் போனால், இரவு வரை நான்கு ஐந்து கச்சேரிகளில் வாசிப்பேன். சில சமயம் கச்சேரி பார்க்க போவேன். அப்போது அந்த கச்சேரிகளில் இசையைக் கேட்கும் போது அவ்வளவு சுகமாக இருக்கும். கச்சேரியில் பங்கு பெருவது மட்டும் இல்லாம, பல போட்டிகளிலும் பங்கெடுத்தேன். பெங்களூரில் பல பெரிய பெரிய ஆளுமைகளின் மேடைகளில் அங்கம் வகித்திருக்கிறேன். கச்சேரி, போட்டுன்னு தொடர்ந்துக் கொண்டு இருந்தது. ஒரு கட்டத்தில், நான் யார் என்ற கேள்வி என்னுள் எழுந்தது. எனக்கான அடையாளம் என்ன என்று நான் தேடிக் கொண்டு இருந்த நேரம் அது. எனக்கான அடையாளம் என்ன என்று என் கணவர் தான் வழிகாட்டினார். என்னை நான் கண்டு கொண்டதில் அவருடைய பங்கு அதிகம்.
கிலாசிக்கல் இல்லாமல், மற்ற புல்லாங்குழல் கலைஞர்களின் ஒலியைக் கேட்க வைத்தார். நான் கற்றதிலிருந்து இதற்கு மாறுவதற்கு நேரமானது. இருபது வருடங்களுக்கு மேல் கற்றுக் கொண்டிருந்தாலும், இவர்களது கேட்கும் போது இன்னும் பல தூரம் நான் போக வேண்டும் என்பதை உணர்ந்தேன். ஐந்து வருடம் எங்கேயும் போகாமல், வெஸ்ட்டர்ன் கற்றுக் கொண்டேன். பல்வேறு விதங்களில், பல கலைஞர்கள் வாசிப்பதைக் கேட்டுக் கேட்டு… அதைப் பழகினேன். அந்த சமயம் பல மாறுதல்கள் என்னுள் ஏற்பட்டது. இதற்கு முதன்மை காரணம் ராஜா சார் (இசையமைப்பாளர் இளையராஜா). அவரது புல்லாங்குழலின் நுணுக்கங்கள் கர்நாடிக் இசையின் அப்லிகேஷன் தான். நான் கற்றதை அங்குப் பயன்படுத்தும் வாய்ப்பு அதிகமாக இருந்தது. இது ஒரு த்ரிலிங் மூமண்ட். அதை எப்படி சாமானிய மக்களும் கேட்டு ரசிக்கும்படி அமைத்திருக்கிறார். அதனால் தான் அவர் ஜீனியர்ஸ். ஒரு பாட்டில் 35 நொடிகள் மட்டுமே புல்லாங்குழலின் சத்தம் இடம் பெற்றிருந்தாலும் அதை அவ்வளவு அழகாகவும், நேர்த்தியாகவும் கையாண்டிருப்பார்.
இதையெல்லாம் கேட்டு, கேட்டு வாசித்துக் கொண்டிருந்த போது சோலோவாக நிகழ்ச்சி பண்ண ஆயத்தமானேன். அதற்கு கை கொடுத்தது ராஜா சார் இசை. திட்டமிட்டதுமே முதல் வேலையாக ராஜா சாருக்கு ராயல்டி கொடுக்க சினி மியூசிக் அகெடமி தலைவர் தினா சாரை அணுகினோம். அவரும் ராஜா சாரிடம் பேசி அனுமதி வாங்கி கொடுத்தார். அவரிடமிருந்து அனுமதி கிடைத்ததே அந்த ஷோ வெற்றி என்று நினைத்து கொண்டேன். நிகழ்ச்சியும் அரங்கேறியது. அதன் வீடியோக்கள் தற்போது யூடியூபில் பிரபலமாகியுள்ளது. நான் யார் என்று தேடிக் கொண்டிருந்ததற்கான விடையும் கிடைத்தது” என்கிறார் அஸ்வினி. 180க்கும் மேற்பட்ட கன்னட திரைப்படங்களில் புல்லாங்குழல் வாசித்திருக்கும் அஸ்வினிக்கு, இளையராஜாவை நேரில் பார்ப்பதோடு அவர் இயக்கத்திலும், பெரிய இங்லீஸ் ஆர்கெர்ஸ்ட்ராவோடும் புல்லாங்குழல் வாசிக்க ஆசையாம்.
Average Rating