இதயம் காக்கும் எளிய வழிகள்! (மருத்துவம்)
பட்டாம்பூச்சி படபடப்பதற்கும் கடல் கொந்தளிப்பதற்கும் தொடர்பு உண்டு என்ற கேயாஸ் தியரி கேள்விப்பட்டிருப்போம். அதேபோன்றதுதான் நம் உடலின் உள்ளுறுப்புகள் செயல்பாடும். கல்லீரல், கணையம், இதயம் என்று ஒவ்வொன்றும் வெவ்வேறு உறுப்புகளாக நாம் உணர்ந்தாலும் ஒவ்வொன்றும் இன்னொன்றுடன் நெருங்கிய தொடர்பு கொண்டவை. இதனால்தான், ஏதேனும் ஓர் உறுப்பில் உண்டாகும் பாதிப்பு சம்மந்தமே இல்லாமல் மற்றொன்றையும் பாதிக்கும் என்கிறார்கள் மருத்துவர்கள்.
இந்த உண்மையை அமெரிக்காவைச் சேர்ந்த துலானே(Tulane) பல்கலைக்கழக ஆராய்ச்சி மாணவர்கள் சமீபத்திய ஆய்வின் மூலம் மீண்டும் நிரூபித்துள்ளனர். பித்தப்பை கற்களுக்கும் இதயத்துக்கும் என்ன தொடர்பு என்று துலானே மாணவர்கள் ஆராய்ச்சி செய்தார்கள். இந்த ஆய்வில் 8 லட்சத்து 40 ஆயிரம் பேர் கலந்து கொண்டார்கள். இதய நோய் கொண்ட 51 ஆயிரம் பேரை பரிசோதனை செய்தபோது அவர்களில் 23 சதவிகிதம் பேருக்குப் பித்தப்பையில் கற்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
அதேபோல் பித்தப்பை கற்கள் கொண்டவர்களுக்கு இதய பாதிப்பு ஏற்படும் அபாயம் இருப்பதும் கண்டுபிடிக்கப்
பட்டிருக்கிறது. இந்த ஆய்வு பற்றியும் இதயம் காக்கும் வழிகள் பற்றியும் இதய சிகிச்சை மருத்துவர் அமல் லூயிஸிடம் பேசினோம்.‘‘American heart association journal இதழ் வெளியிட்டிருக்கும் அந்த ஆய்வை நானும் படித்தேன். பித்தப்பைக் கற்கள்தானே என்று அலட்சியமாக இருக்காதீர்கள் என்ற எச்சரிக்கையை ஆய்வாளர்கள் இறுதியாகக் கூறியிருக்கிறார்கள்.
World heart day என்று செப்டம்பர் 29ம் தேதியைக் கொண்டாடும் நேரத்தில் இது மக்களுக்கு நல்ல எச்சரிக்கை செய்தியாகவும் இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. பித்தப்பை கற்களுக்கும் இதய பாதிப்புக்கும் இருக்கும் தொடர்பு பற்றி இன்னும் ஆராயும்போது பல உண்மைகள் தெரியவரலாம்’’ என்றவரிடம் இதயம் காக்கும் எளிய வழிகள் பற்றிக் கேட்டோம்.‘‘இதயத்தில் உள்ள ரத்தக்குழாயில் கெட்ட கொலஸ்ட்ரால் பிசுபிசுப்பாக ஒட்டிக்கொள்ளும். இதனால், ரத்த குழாய்களின் பைப் துருப்பிடித்தது போன்று காணப்படும்.
ஆனால், உள்ளுக்குள் நடக்கும் இந்த செயல் நமக்குத் தெரியாது. பெரும்பாலும் 20 வயதுகளிலேயே ரத்தக்குழாயில் கொழுப்பு ஒட்டிக்கொள்ளத் தொடங்கும். இவ்வாறு ரத்தக்குழாயில் ஒட்டிக்கொள்கிற கொழுப்பு அளவு குறைவாக இருந்தால் பாதிப்பு இல்லை. அதேபோல் சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் போன்ற பிரச்னைகள் இல்லாமல் இருந்தாலும் பாதிப்பு இல்லை. இதுபோல கொலஸ்ட்ரால் படிந்தாலும் 60, 70 வயதுவரை இதயத்தில் பெரிதாக எந்தப் பிரச்னைகளும் இல்லாமல் வாழலாம். அதுமட்டுமில்லாமல், ரத்த ஓட்டமும் சீராகவே இருக்கும்.
60 சதவீதம் முதல் 70 சதவீதம் வரை ரத்தக்குழாயில் அடைப்பு இருந்தாலும் பாதிப்புகள் பெரும்பாலும் வராது. ஆனால், 70 சதவீதத்துக்கும் அதிகமாக அடைப்பு இருக்கும்போதுதான் ரத்த ஓட்டம் தடைபடும். இதனால், இதயத்தின் செயல்பாடு மெல்ல மெல்லக் குறையும். நெஞ்சு வலிக்க ஆரம்பிக்கும். மூச்சு இறைக்கும். ரத்தக்குழாயைக் கொழுப்பு முழுவதுமாக அடைத்துவிட்டால், எதிர்பாராத சமயத்தில் மாரடைப்பும் உண்டாகும்.
பித்தப்பைக்கற்களும் இதயபாதிப்புக்கு காரணம் என்பது தெரியவந்திருப்பதால் பித்தப்பையில் கற்கள் இருப்பது பரிசோதனையில் தெரியவந்தால், தொடர்ந்து ரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ரால் அளவை பரிசோதித்து வர வேண்டும். உடற்பயிற்சி செய்தல், உணவுக் கட்டுப்பாடு, மருத்துவர் ஆலோசனைப்படி மாத்திரைகள் சாப்பிட்டு வருவதன் மூலமாக, ரத்தகுழாயில் அடைப்பு உண்டாவதைத் தடுக்கலாம். அதேவேளையில், மாத்திரைகள் சாப்பிட்டு வருவதன் மூலமாக ரத்தகுழாய் அடைப்பை குணப்படுத்த முடியாது’’ என்றவரிடம் ஆஞ்சியோபிளாஸ்டி, ஸ்டெண்ட் போன்றவை எப்போது அவசியம் என்று கேட்டோம்.
‘‘ரத்தக்குழாயில் 70 சதவீதம் வரை அடைப்பு இருந்தாலும் அறுவை சிகிச்சை அவசியம் இல்லை. 70 சதவீதத்துக்கும் மேல் அடைப்பு இருந்தால், அதனை ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை மூலம் சரி செய்யலாம். வீட்டில் உள்ள தண்ணீர் குழாயில் அடைப்பு உண்டானால், அப்பகுதியை மட்டும் அகற்றிவிட்டு, வேறு குழாய் பொருத்தி அடைப்பை சரி செய்வோம். அதேபோன்றுதான் ரத்தகுழாயில் ஏதேனும் அடைப்பு ஏற்பட்டு இருந்தால், Stent எனப்படும் சிறுகுழாயை ரத்தக்குழாய்க்கு உள்ளே இணைத்து, ரத்தகுழாயை விரித்து விடுவோம்.
இதனால் ரத்த ஓட்டம் சீராகும். ஸ்டென்ட்(Stent) சிகிச்சை முறையில், நோயாளிக்கு மயக்க மருந்து கொடுக்க வேண்டிய தேவை கிடையாது. உடலை அறுக்க வேண்டிய கட்டாயம் இல்லை. சிறுவயது தொடங்கி, 95 வயது உள்ளவருகும் இச்சிகிச்சையை செய்யலாம். கை அல்லது காலில் உள்ள ரத்தக்குழாய் வழியாக இச்சிகிச்சை செய்யப்படும். ஆரம்பத்தில் துளை போடும்போது மட்டும் வலி இருக்கும். அதன்பின்னர், வலி இருக்காது. சிகிச்சை முடிந்த இரண்டே நாளில் வீட்டுக்கு செல்லலாம்.
வேலைக்கு செல்பவர்கள் ஒரு வாரத்தில் வேலைக்கு செல்லலாம். வண்டி ஓட்டலாம். இயல்பு வாழ்க்கைக்கு ஒரு வாரத்தில் திரும்பலாம். இதயத்தில் உள்ள ரத்தகுழாய்களில் உண்டாகும் அடைப்பு பெரிதாக அல்லது பல இட்ங்களில் இருந்தால், Stent பொருத்தியோ, ஆஞ்சியோ பிளாஸ்டி எனப்படும் பலூன் செலுத்தியோ அடைப்பை சரிசெய்ய முடியாது. அது மாதிரியான நேரங்களில் பைபாஸ் சர்ஜரி செய்வதன் மூலம் அடைப்பை சரி செய்யலாம். இதயத்தில் உள்ள அடைப்பை சரி செய்ய சிகிச்சை செய்து கொண்டவர்களுக்கு உணவு கட்டுப்பாடு அவசியம்.
ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்து இருக்க வேண்டும். அதிகம் அரிசி உணவு, எண்ணெய் பண்டங்கள், ரெட் மீட் என்று சொல்லப்படுகிற மட்டன் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். உணவில் காய்கறிகள் அதிகளவில் சேர்த்து கொள்ள வேண்டும். நிறைய தண்ணீர் குடிப்பது நல்லது. முட்டை சாப்பிடலாம். பித்தப்பையில் கற்கள் உள்ளவர்கள் ரத்தக்குழாயில் அடைப்பை வரும்முன் தடுப்பது நல்லது. இதற்கு உணவுக்கட்டுப்பாடு, உடற்பயிற்சி செய்தல் மிகவும் அவசியம். தினமும் குறைந்தது 30 நிமிடம் நடக்க வேண்டும்.
வருடத்துக்கு ஒருமுறை மாஸ்டர் ஹெல்த் செக்கப், ஈசிஜி டெஸ்ட், Tread Mill Test(நடக்க வைத்து பரிசோதித்தல்) போன்ற உடல் பரிசோதனைகளைத் தவறாமல் மேற்கொள்ள வேண்டும். இந்தப் பரிசோதனைகளை 40 வயதுக்குப் மேல் உள்ள ஆண்களும், 45 வயதுக்குப் மேல் உள்ள பெண்களும் அவசியம் செய்ய வேண்டும். ஏனென்றால், பெண்களுக்கு ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் 45 வயதுவரை சுரக்கும். இந்த ஹார்மோன் ரத்தகுழாயில் அடைப்பு ஏற்படுவதை தடுக்கும். ஆண்களுக்கு இப்பாதுகாப்பு கிடையாது. எனவே, 40 வயதைக் கடந்த ஆண்கள் மாஸ்டர் ஹெல்த் செக்கப் பண்ணுவது அவசியம்’’என்கிறார்.
Average Rating