குழந்தைகளிடம் உரையாடத் துவங்குவோம்..! (மகளிர் பக்கம்)

Read Time:14 Minute, 15 Second

பறவையின் சிறகு உதிர்ந்து விழுந்தால் கூட அதிர்ந்து சத்தம் கேட்கும் அளவுக்கு அமைதியாக அமர்ந்திருக்கின்றனர் நூற்றுக்கணக்கான பள்ளிக்குழந்தைகள். இடையிடையே வடிவேலு காமெடி பார்த்ததுபோல ஆரவாரமான சிரிப்பலைகள். உற்சாகமான கைத்தட்டல்கள். எங்கும் சிதறாத கவனம். ஏதோ ஒரு பெரிய மைதானத்தில் திரையைக் கட்டி குழந்தைகளுக்குப் பிடித்தமான கார்ட்டூன் சினிமாவை ஒளிபரப்பிக் கொண்டிருக்கிறார்கள். அதை அவர்கள் ஆர்வமாக பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்று நினைத்துவிட வேண்டாம். இவை அரங்கேறியது சென்னையில் உள்ள ஓர் அரசுப்பள்ளியின் விசாலமான மைதானத்தில். அமைதிக்குக் காரணம் உஷா குழந்தைகளிடம் நடத்திய உரையாடல்.

‘‘இப்படியொரு உரையாடல் நிகழ்ந்தால்… சாதிக்கலாம், சண்டையாகலாம், சமாதானமாகலாம், அறிவுத் தேடலாம், நட்பாகலாம், அன்பு செய்யலாம்… என்று அடுக்கி கொண்டே போகலாம். இப்போது பெரும்பாலானோர் வாழ்வில் உரையாடல் என்பது அரிதாகி வருகிறது. அது அவசியம் நடக்க வேண்டும்…’’ என்கிறார் குழந்தைகளோடு இயங்கி வரும் உஷா. “சொந்த ஊர் அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பக்கத்தில் ஒரு கிராமம். அப்பா சைக்கிளில் காய்கறி பழங்கள் விற்பவர். எனக்கு மேல ஐந்து அக்காங்க. நாங்க ஆறு பேரும் வீட்டில் ஒண்ணா இருந்த நாட்களை எண்ணிவிடலாம். பத்தாவது தேர்வில் தேர்ச்சி பெற்ற அடுத்த நாளே அப்பா அக்காங்கள வேலைக்கு அனுப்பிட்டாங்க. நாங்க குடும்பமா ஒண்ணா நின்னு போட்டோ எடுத்தது, ரெண்டு வருசத்துக்கு முன் நடந்த என் கல்யாணத்துல தான்.

எங்களுக்குள் உரையாடலே இல்லை. ஸ்கூலுக்குப் போய் வந்தாலும் மாலையில் ஏதாவது வேலைக்குப் போயிடுவோம். வாழ்க்கையைக் கடத்திட்டு போறதே பெரிய விஷயமா இருந்தது. நானும் பத்தாம் வகுப்பு வந்தேன். அடுத்து நாமும் வேலைக்குத்தான் என்று முடிவாயிருந்தபோது, அக்காங்க எல்லாம் ஒண்ணு சேர்ந்து, “நீ மட்டும் நல்லா மார்க் எடு, நாங்க படிக்க வைக்கிறோம்…” என்றார்கள். உற்சாகமா படிச்சு ஸ்கூல்லயே இரண்டாவது மாணவியாக வந்தேன்.
அப்பா வேலைக்கு அனுப்ப தயாரான போது, அக்காங்க எல்லாம் தடுத்து அடுத்து படிக்க வைக்க முடிவெடுத்தாங்க. அப்பாவும், வறுமை என்ற ஒரே காரணத்தால் தான் வேலைக்கு அனுப்பினாரே தவிர, எங்கள் அடிப்படை சுதந்திரத்தில் அவர் தலையிட்டது கிடையாது. பிளஸ் 2 முடிச்சேன். அதன் பிறகு கல்லூரியில் சேர்ந்து படிக்க வசதி இல்லை. அதனால் நானும் வேலைக்கு போக ஆரம்பிச்சேன். இடையே சித்தாள் வேலைக்காக கடலூர் வந்துட்டேன். அந்த சமயத்தில் பள்ளியிலிருந்து, “சென்னையில் ஒரு அறக்கட்டளை இருக்கு. அங்க எழுதி போட்டா இலவசமா படிக்க வைக்கிறாங்க. எழுதி போடுங்க…”னு போன் பண்ணி சொல்லி இருக்காங்க. அப்பாவும், ‘‘எழுதி போடுவோம், கிடைச்சா பார்த்துக்கெல்லாம்…’’னு சொல்லிட்டாங்க.

எங்க ஊரிலிருந்து மூணு பேர் அந்த அறக்கட்டளை மூலம் படிக்க தேர்வானோம். அதில் நானும் ஒருத்தி. ஆனால் அப்பாவுக்கு அடுத்து படிக்க வைக்கவும் மற்றும் சென்னை போன்ற நகரத்திற்கு அனுப்ப யோசனையாக இருந்தது. அக்காங்கதான் ஆதரவா நின்னாங்க. அவங்க என்னிடம், ‘சின்னக்குட்டி, அப்பா எங்கள நம்பிதான் உன்னை படிக்க அனுப்பி வைக்கிறாங்க. அங்க போய் ஒழுங்கா படிக்கணும்…’னு ஒரே குரலில் சொன்னாங்க. இதை இன்று ஒரு பொறுப்
பெடுப்பதன் விளைவாகத்தான் பார்க்கிறேன்…” என்கிற உஷா, சென்னை வாழ்க்கை அனுபவத்தை பகிர்ந்தார். “அகரம் அறக்கட்டளை மூலமாக யூ.ஜி டிகிரி படித்து முடித்தேன். படிக்கும்போதே அகரம் செயல்பாடுகளில் ஈடுபடவும் ஆரம்பித்தேன். கிராமத்திலிருந்து வந்ததால் கணினி, ஆங்கிலம் ஏதும் சரளமாக தெரியாது. ஆனால் கற்றுக் கொள்ள முடியும் என்று எனக்குள் குட்டி தைரியம் மட்டும் இருந்தது.

அகரத்தில் எல்லோருடைய முகம், பெயர் மட்டும்தான் தெரியும். ஒவ்வொரு நாளும் அவர்களைக் கடக்கும் போது, அவர்கள் மற்றவர்களுக்காக எதற்கு வேலை செய்கிறார்கள்? இவங்க எல்லாம் இல்லை என்றால் நாம் என்னவாகியிருப்போம்? என்ற கேள்வி மனசுக்குள் எழுந்துகொண்டே இருக்கும். இதை அவர்களிடமே கேட்ட போது, “நாங்களும் முதல் தலைமுறையாக படிக்க வந்து அதன் மூலமாக வேலைக்கு போயிட்டு இருக்கிறோம். நாங்கள் நல்லா வந்திருப்பதால் மற்றவர்களுக்கும் வழிகாட்ட நினைக்கிறோம்…” என்றார்கள். இது ஒரு சங்கிலி.

தமக்கு கிடைத்ததை மற்றவர்களுக்கு அப்படியே கை மாத்திட்டே இருக்காங்க. சங்கிலியில் அடுத்தடுத்து இணைத்துக் கொண்டே போவதை பார்த்தேன். அகரம் ஒர்க் ஷாப் நிறைய அட்டன் பண்ணதால், மற்ற வேலைகளுக்குப் போக விருப்பமில்லாமல் குழந்தைகளோடு வேலை பார்க்கணும்னு தோணுச்சு. காரணம், நிச்சயமில்லாத இரவு. அடுத்த நாள் காலை வீட்டில் இருப்பேனா… இருக்க மாட்டேனா என்று பல இரவுகளைக் கடத்தியிருக்கிறேன். என்னை மாதிரியே எத்தனை பேர் வீட்டில் இப்படி இரவைக் கடத்திக் கொண்டிருப்பார்கள்.

அவர்களுக்காக ஏதாவது செய்யணும்னு நினைச்சேன். இதனால் பி.எட் படிக்க முடிவெடுத்தேன். பி.எட் பயிற்சி வகுப்புகளில், அங்குள்ள குழந்தைகளோடு இருக்கும்போது நான் படித்த பள்ளியாக அது இல்லை. எங்கேயும் ஓர் உரையாடல் இல்லாத வெறுமை. இந்த வெறுமை குடும்பமாக இருந்தாலும் சரி, பார்க்கிற இடமாக இருந்தாலும் சரி… எல்லா இடங்களிலும் நிரம்பி இருந்தது. ஆனால், அகரம் அறக்கட்டளையில் உரையாடும் வாய்ப்பு கிடைத்தது…” என்று கூறும் உஷா, கல்வி சம்பந்தமான வேலைகளில் தன்னை இணைத்துக் கொண்டது பற்றி பேசினார். “பள்ளி மாணவர்கள் எதனால் இடையிலேயே பாதி படிப்பில் நின்றுவிடுகிறார்கள்? அந்த குழந்தைகள் இழந்தது என்ன? கிடைக்க வேண்டுமென்று எதை நினைக்கிறார்கள் ? என்ற கேள்விகளோடு ஒவ்வொரு ஊராக சென்றோம். அவர்களை அடையாளம் காண்பது சவாலாக இருந்தது. 18 வயதிற்கு மேல் உள்ளவர்களுக்கு அந்தந்த கிராமங்களிலேயே ஒரு நாள் பயிற்சி கொடுத்தோம். அடுத்து அவர்களை சென்னை அழைத்து அகரம் அறக்கட்டளை மூலமாக பத்து நாட்கள் ஸ்கில் டெவலப்மென்ட் பயிற்சி அளித்து, அவர்களுக்கான வேலை வாய்ப்புகளை உருவாக்கினோம்.

இந்த பத்து நாட்களில் மூன்று விஷயங்களை உணர்ந்தேன். ஒன்று குழந்தைகளை மதிப்பிடக்கூடாது, இரண்டு மற்றவர்கள் முன் அவர்களுக்கு வருவதையும், வராததையும் பகிரக்கூடாது. மற்றொன்று மீண்டெழுதல். சமூகம் உங்களை எவ்வளவு கீழே தள்ளினாலும் அதிலிருந்து எவ்வாறு மீண்டு வருவது. இடைநிற்றலாகி உள்ள மாணவர்கள் ஏதோ ஒரு இடத்தில் வேலைக்குப் போய் பணம் சம்பாதிப்பவர்களாக இருக்கின்றனர். இதுபோக அவர்கள் தவறான விஷயங்களுக்கும் அடிமையாகி இருப்பதுதான் வருத்தம். அவர்களுக்கென்று தனியாக ஒரு கூட்டத்தையும் உருவாக்குகிறார்கள்.

அதிலிருந்து அவர்களை வெளியே கொண்டுவருவது அவ்வளவு எளிதல்ல. பெற்றோர்களும் அவனுக்கு எதுவும் வரவில்லை என்று சொல்லி சொல்லியே கல்வியைத் தொடரவிடுவதில்லை. வேலைக்கு போய் பணம் சம்பாதிப்பதினால், தங்கள் வறுமைக்கு ஓர் ஆறுதல் என்று பெற்றோர்களே அதை ஊக்குவிக்கிறார்கள். கல்வியின் மூலமாக அடுத்த கட்டத்திற்கு தங்கள் குழந்தைகளை நகர்த்த பெற்றோர்களுக்கு விருப்பமில்லை. இதில் பெற்றோர்களையும் ஒன்று சொல்ல முடியாது. காரணம் அதற்கான வழிகாட்டுதலும் விழிப்புணர்வும் இல்லாத கையறு நிலையில்தான் அவர்களும் இருக்கின்றனர்.

இதை நாம் ஒப்புக்கொண்டுதான் ஆகவேண்டும். ஒப்புக்கொள்வதுதான் வளர்ச்சியின் புள்ளி. அன்று என் அப்பா என்னை மேலும் படிக்க விடாமல் தடுத்து இருந்தால், இன்று வெளியே வந்து என்னால் இவ்வளவு தூரம் வந்திருக்க முடியாது. அதேபோல் எதை ஒப்புக்கொள்ள வேண்டுமென்பதும் இருக்கிறது. நம் எல்லோருடைய கதையிலும் ஏதோ ஒரு விதத்தில் ஒப்புக்கொள்வது இருந்திருக்கும்…” என்கிற உஷா தனது கள செயல்பாடுகள் மூலமாக பெற்றோருக்கும் குழந்தைகளுக்குமான உறவு எவ்வாறு அமைய வேண்டும் என்பதைப் பற்றியும் விளக்கினார்.

“குழந்தைகளுக்கு திணிக்கிறோம் அல்லது அதிக சுதந்திரத்தை அளிக்கிறோம். இரண்டு தலைமுறைகளாக பெற்றோர், குழந்தைகளுக்கான உறவானது எப்படி இருக்கிறது என்று பார்த்தோம் என்றால் ரொம்ப கவலையாக இருக்கிறது. குழந்தைகள் காலையில் பள்ளிக்கு கிளம்புகிறார்கள். மாலை டியூசன் நேரம். அது முடிந்து இரவு சாப்பிடும் நேரம் மட்டுமே பெற்றோர்களோடு குழந்தைகள் இருக்கிறார்கள். இது ஒரு சுழற்சியாக சுழன்று கொண்டிருக்கிறது.

இதில் எங்கேயுமே உரையாடல் நிகழ்வதில்லை. ஐந்து வயதில் ஒரு குழந்தைக்கு என்ன வேண்டும்-வேண்டாம் என்பதை பெற்றோர்தான் முடிவெடுக்கின்றனர். அவன் முடிவெடுத்தாலும் அவனது நட்புக்குழுவைப் பார்த்துதான் எடுக்கிறான். இது தேவையா, தேவையில்லையா என்கிற உரையாடலே இங்கு நடப்பதில்லை.
குழந்தைகள் கேட்கின்றனர் என்று பெற்றோர்கள் வாங்கித் தருகின்றனர்.

இல்லை பெற்றோர்கள் வாங்கித் தருவதை குழந்தைகள் எடுத்துக் கொள்கின்றனர். கஸ்டமர் ஹேண்ட்லிங் மாதிரிதான் இருக்கிறது. ‘அப்பா கலர் பென்சில் வேணும்’னு குழந்தை கேட்கிறான் என்றால், அந்த கலர் பென்சிலை வைத்து என்ன வரைகிறான், அதை அடுத்த கட்டத்திற்கு கொண்டு போவதற்கான உரையாடல் நடப்பதில்லை. குழந்தைகளுக்காக புதுசா ஏதும் செய்ய வேண்டாம். இருப்பதை கையில் கொடுத்தாலே போதும். அவர்களுடன் உரையாடுவோம். அந்த உரையாடல் அவர்களுக்கும் நமக்கும் இடையே ஒரு புரிதலை கொண்டு வரும். குறைந்தபட்சம் சமூகத்திற்காகவும், மற்றவர்களுக்காகவும் குழந்தைகள் மீது போலியாக எதையும் திணிக்காமலாவது இருப்போம்…” என்று அழுத்தமாக முடித்தார் உஷா.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post முழு நடிகையாக ஏற்றுக்கொள்ள கூச்சமாக இருந்தது!! (மகளிர் பக்கம்)
Next post பயாலஜிக்கல் பேஸ்மேக்கர்!! (மருத்துவம்)