காய்கறி பாட்டி! (மகளிர் பக்கம்)

Read Time:6 Minute, 9 Second

காய்கறிகளின் சுவைகளை மீண்டும் உணர ஆரம்பித்திருக்கிறோம். வாங்கி குவித்த காய்கறிகளைக் குளிர்சாதனப் பெட்டியில் போட்டு வைத்து இத்தனை நாட்கள் புழங்கி வந்தோம். இந்த கொரோனா காலத்தில், குளிர் சாதன கடைகளில் காய் வாங்குவதைத் தவிர்த்து, தினம் தினம் வீடு தேடி வரும் காய்கறிகளை வாங்கி பழகியுள்ளோம். அதே போல் இந்த மூன்று மாதத்தில் வீட்டிலேயே இருக்கும் பலர் வீட்டுத் தோட்டங்கள் அமைத்து காய்கறிகளை ஃப்ரஷ்ஷாகவும் பயன்படுத்தி வருகின்றனர். அப்படி தனக்காக மட்டும் பயன்படுத்தாமல் ஒரு ஊரையே காய்கறி கிராமமாக மாற்றியிருக்கிறார் இந்த 83 வயது இளைஞி. “எல்லோரும் என்னைக் காய்கறி பாட்டினுதா கூப்பிடுவாங்கோ. ஏன்னா, வூடு வூட்டுக்கு போய் அவிங்களுக்கு செடி வச்சு கொடுத்து, இந்த மாதிரி தண்ணி ஊத்துங்கோ, உரம் எப்படி போடணும்னு… இந்த மக்களுக்கெல்லாம் சொல்லி கொடுக்குறதால காய்கறி பாட்டின்னு தான் பெரியவர்கள் முதல் சின்ன குழந்தைகள் வரை எல்லாரும்

அன்போட கூப்பிடுறாங்க. ஒரு வாக்கிங் மாதிரி தினமும் எங்க கிராமத்துல இருக்குற வூடுங்கள போய் பார்க்கும் போது, “அம்மா காய்கறி பாட்டி உங்க காய் காய்க்குதம்மா… சந்தோஷமா நாங்க சாப்புடுறோம்மா” என்று எல்லோரும் சொல்லும் போது ‘நீங்க நல்லா இருந்தா போதும்’னு சொல்லி போட்டு, இன்னும் எதாச்சும் வேணும்னா சொல்லுங்கன்னு வேறு காய்கறி செடிகளை கொண்டாந்து கொடுக்குறேன். அவங்க இடத்துக்கு ஏற்ப அதை பயிர் செய்ய சொல்வேன். மறுபடியும் கேக்கறவைங்களுக்கும் கொண்டு வந்து தறேன். அது மட்டும் இல்லாமல் நான் செடிகளை கொடுத்த எல்லா வீட்டிற்கும் தினமும் போய் காய்கறிகளையும் ஒரு நோட்டம் விட்டுட்டு, அவிங்களுக்கு என்ன வேணுமோ அதை கொடுப்பேன்” என்கிறார் கோவையைச் சேர்ந்த நஞ்சம்மாள் பாட்டி. “பாட்டி சொல்லி கொடுத்தபடி வச்சோம் நல்லா வந்திருக்கு. இந்த கொரோனா காலத்துல வெளிய போனா ரிஸ்க்னு சொல்லிட்டு வீட்டில் இருக்குற காய்கறியே நல்லா யூஸ்ஃபுல்லா இருக்கு. அதே எங்களுக்கு சத்துள்ளதாகவும் இருக்கிறது” என்கின்றனர் பாட்டியின் மூலம் பயனடைந்தவர்கள்.

“இந்த கொரோனா வந்ததுக்கு காய்கறிக்கே அலை அலைனு அலஞ்சு அந்த நஞ்ச காய வாங்கிட்டு வர்றத விட நம் வூட்டிலேயே, நம்ம நாட்டு மக்கோ
எல்லோரும் செடி வச்சு இது மாதிரி காய் எடுத்துட்டா எந்த நோவும் வராம சத்தான காய், கீரைகள் எல்லாம் கொழந்தகளுக்கு கொடுத்து நல்ல சந்தோஷமா இருக்கலாம். அது மாதிரி பண்ணுங்கன்னு தான் இப்ப எல்லாருக்கும் சொல்லிட்டு இருக்கேன்” என்கிறார் நஞ்சம்மாள் பாட்டி. “தற்சார்பு காய்கறி கிராமம் என்பது இந்த திட்டம்” என்கிறார் பாட்டியின் மகன் பாரதி சின்னசாமி. இது குறித்து மேலும் கூறுகையில், “இந்த திட்டத்தின் முக்கியமான விஷயங்கள் ஒன்று வீட்டுத் தோட்டம், மற்றொன்று மகளிர் சுய உதவிக்குழு தோட்டம். இதே போல் ஒரு நான்கு வகையான தோட்டங்களை உருவாக்குவதன் மூலம் தற்சார்பு காய்கறி கிராமங்களை உருவாக்க முடியும் என்பதுதான் எங்களது திட்டம். கோவை மாவட்டம் தொப்பம்பட்டி பூங்கா நகரில் 40 குடும்பங்களுக்கு மேல் வீட்டுத் தோட்டம் உருவாக்கி இருக்கிறோம். எல்லோருக்கும் இலவச கத்திரி செடிகள், வெண்டைக்காய், பாகற்காய் விதைகள் கொடுத்துள்ளோம்.

அதுபோக மற்ற காய்கறிகளும் வளர்க்கப்பட்டு பயன் அடைந்து வருகிறோம். அம்மாவின் கடந்த பிறந்த நாள் அன்று, அவங்க பிறந்த ஊரான ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வட்டத்தில் உள்ள அனையப்பாளையம் கிராமத்திலும் இலவச காய்கறி திட்டத்தைத் துவங்கி வைத்தோம். இதன் மூலம் ஒவ்வொரு குடும்பமும் வாரத்தில் ரூ.100 முதல் ரூ.200 வரை மதிப்பிலான காய்கறிகளை வீட்டிலேயே உற்பத்தி செய்வது மட்டுமல்லாமல், அதற்காகும் செலவினை மிச்சப்படுத்த முடியும். வருடத்தில் ரூ. 6,000 வரையிலும் காய்கறிகள், பழங்கள், கீரைகள் வாங்குவதற்கான செலவினை மிச்சப்படுத்தலாம். இது போன்ற செயல்களில் சிறுவர், சிறுமியர், இளைஞர்கள் ஈடுபட முன் வர வேண்டும்” என்றார் பாரதி சின்னசாமி.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வீதி நாடகம் மூலம் விழிப்புணர்வு!! (மகளிர் பக்கம்)
Next post மகா மட்டமான நாளை அனுபவித்த துரதிஷ்டசாலிகள்!! (வீடியோ)