எய்ட்ஸை கண்டறிய புதிய கருவி! (அவ்வப்போது கிளாமர்)
இன்றைய தினம் உலகத்தையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் எபோலாவைப் போல சென்ற நூற்றாண்டில் மக்களைப் பீதியடையச் செய்த மிகக் கொடிய நோய் எய்ட்ஸ் (AIDS). முதன்முதலில் 1981ம் ஆண்டில் அமெரிக்காவில் கண்டுபிடிக்கப் பட்டது. 1985ம் ஆண்டில் இந்தியாவுக்கும் வந்து விட்டது.
எய்ட்ஸ் கிருமிகள் உடலுக்குள் நுழைந்ததும்‘உடலின் பாதுகாப்புப் படை’ என்று அழைக்கப்படுகிற நோய் எதிர்ப்பு மண்டலத்தைச் (Immune System) சிறிது சிறிதாக அழித்து விடுகின்றன.
அப்போது காசநோய், நிமோனியா உள்ளிட்ட பல்வேறு தொற்றுநோய்களும் புற்று நோய்களும் உடலைப் பாதிக்கின்றன. இவற்றை எதிர்த்துப் போராட உடலில் ஆற்றல் இல்லாத காரணத்தால் இந்த நோயைப் பெற்றவர் மரணம் அடைகிறார்.இது ஒரு கடுமையான தொற்றுநோய் என்பதால், ஆரம்பநிலையில் இதைக் கண்டுபிடித்தால் மட்டுமே ஒருவரிடமிருந்து மற்றவர்களுக்கு இது பரவாமல் தடுக்க முடியும். அதற்கான வழிகளைத் தேடி அலைந்தது மருத்துவ உலகம்.
எய்ட்ஸ் கிருமிகள் உடலுக்குள் நுழைந்த பிறகு 4 முதல் 12 வாரங்களுக்குள் நோயாளியின் ரத்தத்தில் இந்தக் கிருமிகளுக்கு எதிர் அணுக்கள் (Anti bodies) உருவாகும். இந்த எதிர் அணுக்கள் இருந்தால் ஹெச்ஐவி கிருமிகள் ஒருவரைத் தாக்கியுள்ளது என்று பொருள். ஆகவே, இந்த எதிர் அணுக்களைக் கண்டுபிடிக்கும் பரிசோதனை வழிகளைத் தேடினார்கள் ஆராய்ச்சியாளர்கள்.
1985-ல் எலிசா (Enzyme Linked Immuno Sorbent Assay ELISA ) எனும் பரிசோதனை கண்டுபிடிக்கப்பட்டது. இது ஒரு எளிய பரிசோதனை என்றாலும் சில நேரங்களில் தவறான முடிவுகளைத் தந்துவிடும். எனவே, 1987-ல் வெஸ்டர்ன் பிளாட் (Western Blot) எனும் பரிசோதனை கண்டு பிடிக்கப்பட்டது. இது ஒரு நுட்பமான பரிசோதனை. இதில் தவறு ஏற்பட வழியில்லை. இன்றுவரை எய்ட்ஸ் நோயைக் கண்டுபிடிக்க உதவும் முக்கியமான பரிசோதனை இதுதான்.
இந்த இரண்டு பரிசோதனைகளிலும் உள்ள ஒரே குறை, இந்தப் பரிசோதனைக் கருவிகள் எல்லா மருத்துவமனைகளிலும் இருப்பதில்லை. கட்டணமும் அதிகம். எனவே, இந்தக் குறைகளை நிவர்த்திக்கும் வகையில் ஒரு பரிசோதனை தேவைப்பட்டது. அது இப்போது நிறைவேறியுள்ளது.அமெரிக்காவில் உள்ள கொலம்பியா பல்கலைக்கழகத்தின் பயோ மெடிக்கல் பொறியியல் துறைத் தலைவர் சாமுவேல் கே.சியா தலைமையில் நடந்த ஆராய்ச்சியில், பழைய கிராமபோன் மாடலில் உள்ளங்கையில் அடங்கும் அளவில் ஒரு புதிய எலெக்ட்ரானிக் கருவியைக் கண்டுபிடித்துள்ளார்கள்.
‘‘நீரிழிவு நோயுள்ளவர்களுக்கு ரத்த சர்க்கரையை அளக்கப் பயன்படும் குளுக்கோமீட்டர் இயங்குகிற மாதிரிதான் இதுவும். இதற்கென பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட வட்ட வடிவ பிளாஸ்டிக் கேசட்டில் 5 ரசாயனங்கள் தடவப்பட்டிருக்கும். அந்த கேசட் இந்தக் கருவியின் வெளிப்புறத்தில் கீழ்ப்பகுதியில் பொருத்தப்பட்டிருக்கும். பரிசோதிக்கப்பட வேண்டியவரின் ரத்தத்தை அவர் விரல் நுனியிலிருந்து ஒரு துளி எடுத்து இந்த கேசட்டின் மையத்தில் வைக்க வேண்டும்.
ரத்தம் கேசட்டில் உள்ள ரசாயனங்களோடு வினைபுரிந்து அதன் முடிவை இந்தக் கருவிக்குள் ஏற்கனவே செட் செய்யப்பட்டுள்ள சாஃப்ட்வேருக்கு அனுப்பும். அது ரத்தத்தை மேலும் ஆராய்ந்து எய்ட்ஸ் கிருமிகளுக்கான எதிர் அணுக்கள் இருக்கின்றனவா, இல்லையா என்று முடிவு செய்துவிடும். இந்தக் கருவியை ஒரு ஸ்மார்ட்போனில் அல்லது கணினியில் இணைத்துவிட்டால் இதன் முடிவைத் தெரிவித்துவிடும். அப்படி இருந்தால் அவருக்கு எய்ட்ஸ் நோய் உள்ளது என்று 100 சதவீதம் உறுதி செய்யலாம்.
இந்தப் பரிசோதனைக்கு மொத்தமே 15 நிமிடங்கள்தான் ஆகும். செலவும் மிகக் குறைவு. இந்தக் கருவி மூலம் ‘சிபிலிஸ்’ எனும் பால்வினை நோயையும் கண்டுபிடிக்க முடியும். பொதுவாக எய்ட்ஸ் நோயுள்ளவர்களில் பலருக்கும் சிபிலிஸ் நோயும் இருப்பதால் ஒரே நேரத்தில் இந்த இரண்டு நோய்களையும் இந்த ஒரே கருவியால் பரிசோதித்துத் தெரிந்துகொள்ளலாம். இக்கருவியை ஸ்மார்ட் போனில் அல்லது கணினியில் இணைத்து ரீ சார்ஜ் செய்து கொள்ளலாம். இதை எங்கு வேண்டுமானாலும் எடுத்துச் செல்லலாம்.
கிராமங்களுக்கு வரும் சுகாதாரப் பணியாளர்கள் இதை எளிதில் பயன்படுத்த முடியும். கர்ப்பிணிகளுக்கு இந்தப் பரிசோதனை மூலம் எய்ட்ஸ் உள்ளதைத் தெரிந்துகொண்டால், அந்தக் கர்ப்பத்தைத் தவிர்ப்பதன் மூலம் குழந்தைக்கு இந்த நோய் வராமல் தடுத்துவிடலாம். ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார மையங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் நடத்தப்படும் நோய் முன் கண்டுபிடிப்பு முகாம்களில் இதைப் பயன்படுத்தி, எய்ட்ஸ் நோயை ஆரம்பத்திலேயே அறிந்து தகுந்த சிகிச்சையை மேற் கொண்டால், விரைவிலேயே எய்ட்ஸ் இல்லாத உலகத்தைப் படைக்கலாம்’’ என்கிறார் இக் கருவியை உருவாக்கிய சாமுவேல் சியா.
Average Rating