மேல்நோக்கி நகரும் மரண வரைபு !! (கட்டுரை)
கொவிட்-19 பெரும்தொற்றின் மூன்றாவது அலையால், இலங்கையில் ஏற்பட்டுள்ள தாக்கம் குறித்த உண்மையான தரவுகள் மறைக்கப்படுகின்றன என்றும், உயிரிழப்புகள் நிஜத்தில் இதைவிட அதிகமாக இருக்க வேண்டும் என்றும் பல்வேறு கருத்துகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
நாட்டில், கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கையும் நாளாந்த மரண வீதமும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்ற சூழலில், மக்களுக்கு உண்மையான தகவல்கள் வழங்கப்படுவதே, அவர்கள் அவதானத்துடன் செயற்பட வழிவகுக்கும் என்ற தோரணையிலேயே இந்தக் கருத்துகள் எழுகின்றன.
ஆனபோதும், உருமாறிய புதியரக வைரஸ்கள், இலங்கையில் எந்தளவுக்கு வீரியத்தன்மையுடனும் பெருவீச்சுடனும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன என்பதை, மக்கள் புரிந்துகொள்வதற்கு, அரசாங்கம் உத்தியோகபூர்வமாக வெளியிடுகின்ற தகவல்களே போதுமானவை என்பதைக் குறிப்பிட்டாக வேண்டும்.
இதுவரையான, கொவிட்-19 மரணங்களின் எண்ணிக்கை 1,700ஐத் தாண்டிவிட்டன. தினமும் 30 இற்கு குறையாத மரணங்கள் நிகழ்கின்றன. எல்லாச் சமூகங்களிலும் இறப்பு எண்ணிக்கைகள் அதிகரித்துள்ளன. மரண வரைபு, மேல்நோக்கி வேகமாக நகரத் தொடங்கியுள்ளது.
அதிலும் குறிப்பாக, முஸ்லிம்கள் கொரோனாவால் மரணிக்கும் போக்கு, மீண்டும் உயர்வடைந்துள்ளதாக முஸ்லிம் சிவில் அமைப்புகள் சுட்டிக்காட்டியுள்ளமை கவனத்தில் எடுத்துக்கொள்ளப்பட வேண்டியதாகும்.
கொரோனா வைரஸ் பரவலின் 1ஆம், 2ஆம் அலைகளால் ஏற்பட்ட பொருளாதார பின்னடைவு, அரசியலமைப்பின் 20ஆவது திருத்தம், 3ஆவது அலைக்கு நடுவில் சூசகமாக நிறைவேறிய துறைமுக நகர சட்டமூலம், கொழும்பு கடலில் ‘எக்ஸ்பிரஸ் பேர்ள்’ கப்பல் தீப்பிடித்து மூழ்கிக் கொண்டிருப்பதால் ஏற்பட்டுக் கொண்டிருக்கும் சூழலியல், பொருளாதார எதிர்விளைவுகள் என ஏகப்பட்ட நெருக்கடிகளுக்கு மத்தியிலேயே, 3ஆவது அலையைக் கட்டுப்படுத்த இத்தேசம் முழுமூச்சாகப் பாடுபடுகின்றது.
அந்தவகையில், பயணக் கட்டுப்பாடு என்ற பெயரில் தொடர்ச்சியாக, கடந்த மூன்று வாரங்களாக பிரகடனப்படுத்தப்படாத ஊரடங்கு ஒன்றை அரசாங்கம் நடைமுறைப்படுத்தி வருகின்றது. இன்னும் இதனை நீட்டிப்பதற்கான வாய்ப்புகளும் உள்ளன.
இக்கட்டுப்பாடு, வைரஸ் மேலும் பரவாமலும் புதிய கொத்தணிகள் உருவாகாமலும் தடுப்பதற்கு பெரிதும் உதவியிருக்கின்றது. ஆயினும், கொரோனாவின் தாக்கம் குறைந்தபாடில்லை. உத்தியோகபூர்வமாக வெளியிடப்படுகின்ற தரவுகளில் தொற்றாளர்கள், மரணித்தோரின் தொகை அதிகரிக்கின்ற போக்கையே அவதானிக்க முடிகின்றது.
இந்தப் பின்னணியில், குறிப்பாக முஸ்லிம்கள் தொற்றுக்குள்ளாகி மரணிக்கின்ற சதவீதம் மீண்டும் அதிகரிப்பதாக, முஸ்லிம் சிவில் அமைப்புகளும் அவதானிகளும் சுட்டிக்காட்டியுள்ளன.
இங்கு நோய்த் தொற்றையும் மரணத்தையும் கட்டுப்படுத்தும் விடயத்தில் இன, மத பேதங்கள் இல்லை. யார் இறந்தாலும் ஓர் உயிர் போகின்றது. அதன்மூலம் நாட்டின் மனிதவளம் ஒன்றை இழக்கின்றோம்.
மிக முக்கியமாக, மரணிக்கின்ற நபருடைய குடும்பத்தினர், ஓர் உறவை, தமது குடும்பத்துக்குப் பிராணவாயு வழங்கும் ஒரு குடும்பத் தலைவனை பறிகொடுக்கின்றனர். இது மனநிலை ரீதியாக மட்டுமன்றி, வீட்டுப் பொருளாதாரத்திலும் பெரும் பின்னடைவை ஏற்படுத்துகின்றது.
ஆகவே, முஸ்லிம் ஒருவர் இறந்தாலும் தமிழரோ, சிங்களவோ, வேடுவ சமூகத்தைச் சேர்ந்தவரோ என எவர் மரணித்தாலும், இழப்பின் கனதி சமமானது என்பதே அடிப்படையான விடயமாகும்.
எனவே, ஒவ்வொரு சமூகமும் இது விடயத்தில் சிரத்தையுடன் செயற்பட வேண்டும். முஸ்லிம்கள் இதுவிடயத்தில், சற்று அதிக கவனம் செலுத்த வேண்டியுள்ளது. இதற்குக் காரணம், முஸ்லிம்களை முதன்மைப்படுத்துவது அல்ல. மாறாக, அநாவசியமான நெருக்கடிகளையும் விமர்சனங்களையும் தவிர்த்துக் கொள்வதாகும்.
முஸ்லிம் சமூகத்தை இனவாதிகளும் தேசியவாத சக்திகளும் பார்க்கின்ற கோணம் வித்தியாசமானது. எது நடந்தாலும், அந்தப் பழியை முஸ்லிம்கள் மீது போடுவதற்கான சந்தர்ப்பத்துக்காக இவ்வாறான சக்திகள் காத்துக் கொண்டிருக்கின்றன.
இலங்கையில் ஆரம்பத்தில் கொவிட்-19 தொற்றுக்கு உள்ளானவர்களும் கணிசமாக இறந்தவர்களும் முஸ்லிம்களாவர். இப்போது போலல்லாமல் அப்போது வேறு நோயின் காரணமாக மரணித்தோரும் கொரோனா கணக்கில் சேர்க்கப்பட்டதாகச் சொல்லப்பட்டதுண்டு.
இவ்வாறு, முஸ்லிம்கள் அதிகளவில் தொற்றுக்குள்ளாகின்றனர் என்ற தோற்றப்பாடு காண்பிக்கப்பட்டதாலும், பல முஸ்லிம் பிரதேசங்கள் நீண்டநாள்களாக முடக்கப்பட்டதாலும், எல்லோருக்கும் பொதுவான தொற்று என்பதையும் கடந்து, வேறுவிதமான விமர்சனம் எழுந்தது.
இந்தியாவைப் போல, இலங்கையிலும் கூட முஸ்லிம்களே பெரும்பாலும் நோய்க் காவிகளாக இருப்பதான ஒரு தோற்றப்பாட்டை மேற்படி சக்திகள் தோற்றுவிக்க முனைந்தன.
ஆனால், பின்னர் ஏனைய இன மக்கள் வாழும் பிரதேசங்களில் அதிக தொற்றாளர்கள் கண்டுபிடிக்கப்பட்டதாலும் குறிப்பாக சிங்கள சமூகத்தில் இருந்து கொத்துக் கொத்தாக தொற்றாளர்கள் கண்டுபிடிக்கப்பட்டதாலும் முஸ்லிம் சமூகத்தின் மீது, தாம் கொண்டிருந்த கருத்துநிலை தவறானது என்பதை, சம்பந்தப்பட்ட தரப்பினர் உணர்ந்தனர்.
இப்போது நாட்டில், பொதுவாகவே மரணங்கள் அதிகரித்து வருகின்றன. இனிவரும் நாள்களின் இந்த எண்ணிக்கை இரு மடங்காகும் என்று ஆய்வாளர்கள், மருத்துவத் துறையினர் கூறுகின்றனர். இந்நிலையில், மீண்டும் முஸ்லிம்களின் மரணங்கள் அதிகரிப்பதாகக் கூறப்படுவது ஓர் அபாய சமிக்கையாகும்.
இன, மத பேதமற்று அனைவரது உயிர்களும் சமமாக மதிக்கப்பட்டு காப்பாற்றப்பட வேண்டும். அதனையும் தாண்டி, முஸ்லிம் சமூகம் இது விடயத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியது அவசியமாகவுள்ளது. இல்லாவிடில், இன்னுமொரு பழிச்சொல்லுக்கு ஆளாக நேரிடலாம்.
முதலாம், இரண்டாம் அலைகளின் போது ஒப்பீட்டளவில் முஸ்லிம் சமூகத்திலேயே அதிக கொரோனா மரணங்கள் பதிவாகின. இருதய நோய், சர்க்கரை வியாதி, சளித்தொல்லை, நெஞ்சுவலி போன்ற நோய்சார் சிக்கல்நிலை இருந்தோர் எனப் பலர் உயிரிழந்தனர்.
சிலர் கொரோனா வைரஸ் காரணமாக மட்டும் உயிரிழந்தனர். வேறு பல நோய்களையும் கொண்டிருந்த சிலர், மரணித்த பின்னர் ‘கொவிட் பொசிடிவ்’ நோயாளாளிகளாக வகைப்படுத்தப்பட்டனர். இவர்கள் எல்லோரும், ‘கொரோனா மரணப் பட்டியலில்’ சேர்க்கப்பட்டார்கள். மருத்துவ ரீதியாக, அது தவறு என்றும் கூற முடியாது.
அதன்பிறகு, 3ஆவது அலை தாக்கம் செலுத்தத் தொடங்கியிருந்தாலும், மே நடுப்பகுதி வரையான காலப்பகுதியில் முஸ்லிம் சமூகத்துக்குள் மட்டுப்படுத்தப்பட்ட மரணங்களே பதிவானதாகச் சொல்ல முடியும். ஓட்டமாவடிக்கு அடக்கம் செய்வதற்காக வந்த ஜனாஸாக்களின் எண்ணிக்கையில் இருந்து, இதனை அறிந்து கொள்ள முடியும். இதற்குப் பல காரணங்கள் கூறப்பட்டன.
முதலாவது, புதுவருடக் கொத்தணி பரவக் காரணமாக அமைந்த பண்டிகைக் காலத்தில், முஸ்லிம்கள் நோன்பு நோற்கத் தொடங்கியிருந்ததால் பயணங்கள், ஒன்றுகூடல்களில் கலந்து கொள்ளவில்லை.
இரண்டாவது, பள்ளிவாசல்களில் இறைவணக்கங்களும் பெருமளவுக்கு மட்டுப்படுத்தப்பட்டிருந்தன. நோன்புப் பெருநாள் காலப்பகுதியில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. மூன்றாவது, பெருநாளைக்குப் பிறகு கூட, சுற்றுப் பயணங்கள் போவதற்கான வாய்ப்புகள் இம்முறை முஸ்லிம்களுக்கு கிடைக்கவில்லை.
இவ்வாறான காரணங்களால், தொற்றுக்குள்ளாவோரின் எண்ணிக்கையில் முஸ்லிம்களின் பங்கு முன்னரை விடச் சற்றுக் குறைந்திருந்ததாகக் குறிப்பிட முடியும். ஆனால், நிலைமை இப்போது மாறத் தொடங்கியுள்ளது.
இது தொடர்பாக, கூட்டாக அறிக்கையொன்றை விடுத்துள்ள முஸ்லிம் சிவில் அமைப்புகள், முஸ்லிம் சமூகத்துக்குள் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றமை குறித்து, கவலை வெளியிட்டுள்ளன. செயற்றிறன் மிக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையை இவ்வமைப்புகள் வலியுறுத்தியுள்ளன.
சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றுமாறும் நோய் அறிகுறி ஏற்பட்டால், உடனடியாக உரிய தரப்பைத் தொடர்பு கொள்ளுமாறும் கூட்டாக கோரியுள்ள இவ்வமைப்புக்கள், தடுப்பூசி பெற்றுக் கொள்வதற்குப் பள்ளிவாசல் நிர்வாகங்கள் ஊக்குவிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளன. இது கவனிக்கத்தக்க விடயமாகும்.
ஏனெனில், ஆரம்பத்தில் உயர்ந்த மட்டத்தில் காணப்பட்டு பின்னர், குறைவடைந்திருந்த மரண வீதம், மீண்டும் அதிகரிக்கின்றது என்பதாகும். அத்துடன், முஸ்லிம்களைப் பழிசொல்வதற்கு, இனவாதிகளுக்கும் அவர்களது கழுகுக்கண் ஊடகங்களுக்கும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கவும் கூடாது.
சிங்கள மக்களை விட, முஸ்லிம்கள் செறிவாக வாழ்கின்ற சமூகமாகும். எனவே, இந்தப் புதிய ரக வைரஸ், வீரியமாகப் பரவத் தொடங்கினால் நிலைமைகளை கட்டுப்படுத்துவது, ஒரு கட்டத்துக்கு மேல் சாத்திமற்றுப் போகலாம் என்பது நினைவிருக்கட்டும். ஆகவே, முஸ்லிம் சமூகம், சற்று அதிக கரிசனையுடன் செயற்பட வேண்டும்.
ஆனாலொன்று, இது முஸ்லிம் மக்களுக்கு மட்டுமே உரிய அறிவுரையல்ல. மாறாக, ஏனைய இன மக்களும், கொரோனா தொற்றுப் பரவுவதையும் மரணங்கள் நிகழ்வதையும் தடுப்பதற்கு பிரயத்தனப்பட வேண்டும். கொரோனோ வைரஸூக்கு இன, மத பேதங்கள் இல்லை.
Average Rating