வாழ்வென்பது பெருங்கனவு! (மகளிர் பக்கம்)
‘‘கல்வி ஒன்றே பெண்களுக்கு இருண்ட வாழ்வில் ஒளி ஏற்றுகிறது. சமூகத்தில் கல்வியும், கல்வியினால் கிடைக்கும் பணியும், அதனால் கிடைக்கும் பொருளாதார தற்சார்பும் பெண்களுக்கு வாழ்வின் மீது பெரும் நம்பிக்கையை கொடுக்கிறது’’ எனச் சொல்லும் ஆசிரியை சுபாஷினி தன்னுடைய வாழ்வின் பெருங்கனவை நம்மோடு பகிர்ந்துகொள்கிறார்.
“அப்பா மில் தொழிலாளி, அம்மா பள்ளி பக்கமே செல்லாதவர். தான் படிக்கவில்லை எனினும் பிள்ளைகளை படிக்க வைக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர். பத்தாம் வகுப்பு வரை புதுச்சேரியில் தனியார் மேல்நிலைப்பள்ளியில் படித்தேன். பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 94 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றேன். +2 அரசுப் பள்ளியில் படிச்சேன். அதில் 87% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றேன். படிக்கும் பொழுது
பள்ளியில் படிப்பில் படு சுட்டி நான்.
சிறுவயதிலிருந்தே பள்ளிகளில் நடைபெறும் அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்று விடுவேன். பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டி, திருக்குறள் மனப்பாடம் செய்தல், கைவினை என அனைத்துப் போட்டிகளிலும் பரிசை வென்று விடுவேன். ஆனால் விளையாட்டு என்று வரும்போது மட்டும் வீட்டில் பெரிய தடை வரும். ஷார்ட்ஸ் போடக்கூடாது, லேட்டா வீட்டுக்கு வரக்கூடாதுன்னு இப்படி நிறைய கட்டுப்பாடுகள் மத்தியில் தான் நான் வளர்ந்தேன்.
எனக்கு விளையாட்டு மேல் உள்ள ஆர்வத்தை பார்த்த உடற்கல்வி ஆசிரியர், என்னை பாஸ்கட் பால் டீமில் சேரச் சொன்னார். எனக்கு விருப்பம்தான். ஆனால், வீட்டில் சொல்வதற்கு பயம். எங்கே என்னை அனுமதிக்க மாட்டார்களோன்னு அவர்களின் அனுமதியின்றி விளையாட்டில் கலந்து கொண்டேன். ஒரு நாள் பயிற்சியின் போது வீட்டிற்கு செல்ல தாமதமானதும் என் அப்பா பள்ளிக்கு என்னை தேடி வந்துவிட்டார்.
ஷார்ட்ஸ் அணிந்து கொண்டு மைதானத்தில் இருந்த என்னை கோபத்துடன் வீட்டிற்கு அழைத்து வந்தார். “படிப்பதோடு நிறுத்திக்கனும். இந்த ஷார்ட்ஸ் போட்டு விளையாடுவது போன்ற வேலையெல்லாம் வச்சுக்க கூடாது” ன்னு சொல்லிட்டார். இது போதாது என்று நான் படிச்சதும் கோ-எஜுகேஷன் பள்ளி வேறு. உடன் படிக்கும் ஆண் நண்பர்களுடன் பேசவோ பழகுவதற்கும் எங்க வீட்டில் தடை இருந்தது. இப்படி பலதரப்பட்ட தடைகளால், விளையாட்டில் ஆர்வம் இருந்தும், அதற்கான வாய்ப்பு கிடைச்சும் என்னால் அதில் ஈடுபடமுடியவில்லை’’ என்றவருக்கு படிப்பு முடிச்ச கையோடு திருமணமும் முடிந்தது.
‘‘நல்ல வரன் வந்துள்ளதுன்னு +2 தேர்ச்சி பெற்றதும், எனக்கு திருமணம் செய்துவைத்துவிட்டனர் என் பெற்றோர். என்னுடைய விருப்பத்தை தேர்வு செய்யும் உரிமை எதுவும் எனக்கு அப்போது இல்லை. வாழ்க்கை என்பது புரியாத புதிராக இருந்தது. எது சரி எது தவறு என்பது குழப்பமாக இருந்தது. பெற்றோர் எது செய்தாலும் சரியாகத்தான் இருக்கும் என நம்பினேன். திருமணமாகிச் சென்ற பிறகு வாழ்க்கையில் அடுத்து என்ன என்று தயங்கி எதிர்காலமே சூனியம் போல தோன்றியது. இதற்கிடையில் குழந்தையும் பிறந்தான். திருமணம், குழந்தை என்று அப்படியே இருந்துவிடவும் எனக்கு விருப்பமில்லை. என்னிடமிருந்த ஒரே நம்பிக்கை கல்வி. படிப்பை தொடர வேண்டும் என முடிவு செய்து, ஆசிரியர் பயிற்சியில் சேர்ந்தேன்.
குழந்தையை அம்மா வீட்டில் விட்டுவிட்டு படிப்பை தொடங்கினேன். கணவரும் எனக்கு முழு ஆதரவாய் இருந்தார். படிப்பை முடித்ததும் காரைக்காலில் பணி. மூன்று வயது மகனை அம்மாவிடமும், கருவில் மூன்று மாத குழந்தையுடன், காரைக்காலில் வேலைக்கு சேர்ந்தேன். ஆறு மாதத்தில் புதுச்சேரிக்கு மாற்றலானது.
அந்த மாற்றம் எனக்குள் பெரிய மாற்றத்ைத ஏற்படுத்தியது. நாம் யாருக்காக வேலை செய்கிறோம் என்ற கேள்வி என்னுள் எழுந்தது. இந்த சமூகத்தில் இருக்கக்கூடிய ஏற்றத்தாழ்வுகளை களைய வேண்டும் எனில் மாற்றம் கல்வியில் இருந்து தொடங்க வேண்டும் என்று எண்ணினேன். புதுச்சேரியில் ‘நரம்பை’ என்னும் ஒரு கடலோர கிராமத்தில் தான் நான் முதன் முதலாக ஆசிரியப் பணியைத் தொடங்கினேன் என்று சொல்லலாம். காரணம் என் பணி பற்றிய ஒரு புரிதல் இல்லாமல் இருந்தேன். அந்த குழந்தைகளுடன் பழக பழக மேலும் என் பணி சார்ந்து கற்றுக்கொள்ள வேண்டும் என்பதை உணர்ந்தேன்’’ என்றவர் அதற்காக தன்னைத் தயார் படுத்திக் கொள்ள ஆரம்பித்தார்.
‘‘அரசு பணி என்றால் மாற்றம் கண்டிப்பாக இருக்கும். 2016ம் ஆண்டு நோணாங்குப்பம் தொடக்க பள்ளிக்கு மாற்றலானேன். அங்கு சென்ற போது பள்ளிக்கூடம் இருந்த நிலையை பார்த்து நான் அதிர்ந்துவிட்டேன். கட்டிடம் சிதிலமடைந்து இருந்தது. உடனே பெற்றோர் மற்றும் ஆசிரியர் சங்கத்தை அழைத்து பேசினேன். குறிப்பாக பெற்றோருக்கு பள்ளியைப் பற்றிய புரிதலை ஏற்படுத்தினேன். அடுத்து தொகுதி சட்டமன்ற உறுப்பினரிடம் கோரிக்கை வைத்து புதிதாக பள்ளி கட்டிடம் அமைத்தேன். இப்பொழுது எங்க பள்ளி மூன்று மாடிக் கட்டிடமாக மாறியுள்ளது.
மேலும் ஆசிரியர்கள், பெற்றோர் மற்றும் பொதுமக்களின் பங்களிப்புடன் பள்ளி சுவர்களின் குழந்தைகளை ஈர்க்கும் சுவரோவியங்களை அமைத்தேன். அடுத்து குழந்தைகளுக்கு தரமான கல்வி அளிக்க வேண்டும் என்பதற்காக, கற்பித்தல் முறைகளை தேடித்தேடி பயிற்சி எடுத்தேன். குழந்தைகளின் உளவியலை அறிந்தேன். ஐயா மாடசாமி அவர்களின் புத்தகங்கள் எனக்கு ஒரு புதிய பார்வையை கொடுத்தது.
புதிய புதிய கற்பித்தல் முறைகளை வகுப்பறையில் பயன்படுத்த துவங்கினேன். அச்சம் இல்லாமல் நம்பிக்கையோடு என்னை அணுகும் அளவிற்கு ஒரு ஆசிரியராக இருக்கிறேன்’’ என்றவர் சமூகத்தில் நிகழும் பிரச்னைகள் குறித்தும் குழந்தைகளுடன் கலந்து ஆலோசித்து வருகிறார்.
‘‘கல்வி மூலம் சமூகத்தில் பல வித மாற்றங்களை ஏற்படுத்த முடியும். இன்றும் சாதி மதம் பாலின பாகுபாடு போன்ற பிரச்னைகள் இருந்து தான் வருகிறது. இதனை போக்க குழந்தைகளுக்கு ஆரம்ப நிலையிலேயே அது குறித்து ஒரு புரிதல் ஏற்படுத்த வேண்டும். அவர்களுடன் மட்டுமல்லாமல் பெற்றோர்களுடனும் ஒரு கலந்துரையாடல் செய்கிறேன். குழந்தைகளுக்கான புத்தக வாசிப்பை மேம்படுத்த புதுச்சேரியில் உள்ள ரோமன் ரோலண்ட் நூலகத்தில் அவர்களை உறுப்பினராக சேர்த்துவிட்டேன்.
பள்ளி வளாகம் மற்றும் மொட்டை மாடியில் மாடித்தோட்டம் அமைத்தது மட்டுமல்லாமல், களப்பயணமாக உள்ளூர் விவசாயிகளை நேர்காணல் செய்வது, விதை முளைத்தல், நீர்பாசன முறைகளை அறிதல் மற்றும் பல தொழில்களை பற்றிய அறிதல் என பல்வேறு பாடப்பொருள்களை இணைத்து பிராஜக்ட் முறையில் கற்றலில் ஈடுபடுத்தி வருகிறேன். மாணவர்களை நேரடியாக தபால் நிலையம், அகில இந்திய வானொலி நிலையம் சென்று அதன் பணி முறைகளை விளக்கியிருக்கிறேன். மேலும் எங்கள் குழந்தைகள் வானொலியில் பல்சுவை நிகழ்ச்சி நடத்தியிருக்கிறார்கள்.
கற்றல் திருவிழா, நாடகத் திருவிழா, உணவு திருவிழா, விதைதிருவிழா, வாசிப்பு திருவிழா என பல்வேறு நிகழ்வுகளை திட்டமிட்டு நடத்துவதன் மூலம் குழந்தைகளின் கற்றல் மேம்படுகிறது. கலந்துரையாடல் மூலம் குழந்தைகள் அவர்களுக்கான வகுப்பறை விதிகளை அவர்களே உருவாக்குகிறார்கள். என் வகுப்பு என் உரிமை என்னும் கருத்து சுதந்திர பெட்டியின் மூலம் தங்களின் குறைகள் மற்றும் கருத்துக்களை வெளிப்படுத்துகிறார்கள்.
குழந்தைகளின் பாதுகாப்பிற்காக குழந்தைகளுக்கு மட்டும் கற்றுக்கொடுப்பதோடு அல்லாமல் பெற்றோரையும் அழைத்து அவர்களுடன் குழந்தைகள் பாதுகாப்பு விஷயங்களைப் பற்றி உரையாடி வருகிறேன். குழந்தைகள் ஒரு ஆசிரியரிடம் பயமில்லாமல் நம்பிக்கையோடு அணுகுவதை உறுதி செய்யவே இம் மாதிரியான செயல்பாடுகளை திட்டமிட்டு செயல்படுத்தி வருகிறேன். குழந்தைகள் மதிக்கப்பட வேண்டியவர்கள்… அவர்கள் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும்.
கல்வி என்பது சுயமாக முடிவு எடுத்தல், தங்கள் உரிமைகளை அறிதல், கடமைகளை சரியாக செய்தல், சமூக அவலங்களை எதிர்த்து கேள்வி எழுப்புதல், வேறுபாடுகளை மதித்தல், ஆதரவற்றோருக்கு கரம் கொடுத்தல் , பகுத்தறிவோடு செயல்படுதல், அறிவை விரிவு செய்தல் என பன்முகத்தன்மையுள்ள ஒரு ஆளுமையாக வளர்த்தெடுக்க உதவ வேண்டும் என்னும் நோக்கத்தோடு ஜனநாயக வகுப்பறையை நோக்கி பயணம் செய்து கொண்டிருக்கிறேன்” என முத்தாய்ப்பாய் பேசி முடித்தார் ஆசிரியை சுபாஷினி.
Average Rating