எல்லாவற்றையும் தள்ளிப் போடுகிறீர்களா?! (அவ்வப்போது கிளாமர்)
எந்த வேலையாக இருந்தாலும் கடைசி நேரத்தில் செய்வது உங்கள் பழக்கமா? அப்படி என்றால் உங்களுக்கு இருப்பது Errand paralysis. பாரலிசிஸா… இது என்ன முடக்குவாதத்தில் புதுவகையா என்று கவலைப்பட வேண்டாம். ‘மில்லினியல்ஸ்’ எனப்படும் 1980- 2000-களில் பிறந்தவர்களுக்கு இருக்கும் புதுவகை பிரச்னை இது.
இன்றைய இளைஞர்களுக்கு எதற்கெடுத்தாலும் டென்ஷன்… டென்ஷன்தான். இதற்காக இவர்களிடம் இருக்கக்கூடிய வேலையை தள்ளிப்போடும் குறைபாட்டுக்குத்தான் புதிதாக இப்படி ஒரு பெயர் சூட்டியிருக்கிறார் பிரபல எழுத்தாளரான அன்னே ஹெலன் பீட்டர்சன். இவர் அமெரிக்காவின் மிசவுலா பகுதியைச் சார்ந்தவர்.
சமீபத்தில் Buzz feed செய்தித்தாளில் Errand paralysis என்ற தலைப்பில் மில்லினியல்ஸ் பற்றி இவர் கவலையுடன் எழுதிய கட்டுரை இணையதளத்தில் மிகப்பெரிய வைரல் ஆனது. இந்த கட்டுரையை பல உளவியல் மருத்துவர்களும் பாராட்டியதும் அதன் மதிப்பு இன்னும் அதிகமாகிவிட்டது. அப்படி அந்த கட்டுரையில் என்ன எழுதப்பட்டிருந்தது, மில்லினியல்ஸ் பிரச்னை பற்றி மருத்துவர்கள் சொல்வது என்னவென்று பார்ப்போம்…
மெயில் செக் செய்வது, எலக்ட்ரிசிட்டி பில் கட்டுவது, மொபைல் ரீசார்ஜ் செய்வது, எக்ஸாம் ஃபீஸ் கட்டுவது போன்ற எளிமையான பணிகளுக்கு ஆங்கிலத்தில் Mundane task என்று பெயர். இந்த சின்னச்சின்ன பணிகளைக் கூட நிறைவு செய்ய முடியாத திறனற்ற தன்மையையே Errand Paralysis (தள்ளிப்போடும் முடக்கம்) என்கிறார்கள் உளவியலாளர்கள். அன்னே ஹெலன் சொல்வதும் இதைத்தான்.
ஆரம்பத்தில் ஒரு சின்ன வேலையைக் கூட அடுத்த நாளோ, அடுத்த வாரமோ பார்த்துக் கொள்ளலாம் என்று தள்ளிப்போடுவதில் ஆரம்பிக்கிறது இந்த சிக்கல். பின்பு அதே சின்ன வேலை அதற்கடுத்த மாதமும் தொடர்ந்து, பின்னர் எப்போதும் செய்யாமலேயே தலைக்கு மேல் தொங்கும். மேலே சொன்ன அந்த வேலைகளெல்லாம் ‘தினசரி வாழ்வில் சாதாரணமாக செய்யக்கூடியவை என்றாலும் எரிச்சலூட்டக் கூடியவை. ஆனால், அத்தியாவசியமான வேலை.
இதற்கு Millennial-burnout என்ற பெயரும் உண்டு. இப்படி வேலையைத் தள்ளிப் போடுவதால் இளைஞர்கள் சோம்பேறித்
தனமானவர்கள் என்று முடிவு கட்டிவிட முடியாது. ஏனெனில், மில்லினியல்ஸ் கடின உழைப்பாளிகளாகவே இருக்கிறார்கள். அதிகப்படியான வேலைச்சுமை, பணியிட மன அழுத்தம், போக்குவரத்து நெரிசலில் நீண்டநேர அலுவலகப் பயணம், இதற்கு நடுவில் குடும்பத்தை நிர்வகிப்பது, நேரமின்மை இவையெல்லாம் இளைஞர்களை அழுத்துவதால், சாதாரண வேலைகளைக்கூட நாளைக்கு செய்து கொள்ளலாம் என்று சாதாரணமாகத்தான் தள்ளிப்போட ஆரம்பிப்பீர்கள். ஆனால், அதற்கு இப்படி ஒரு பின்விளைவுகள் இருப்பது பற்றி அவர்
களுக்குத் தெரியாது.
சரி… எனக்கு இந்தப் பிரச்னை இருப்பதை ஒருவர் எப்படி அறிந்து கொள்வது?
* ஒரு புத்தகம் படிக்க வேண்டும் என்று ஆசையாக வாங்கி வருவேன். ஆனால், அதை படிப்பதற்கு நேரம் இருக்காது. இப்படியே அலமாரியில் புத்தகங்களின் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டே போகிறது.
* குடும்பத்தினரின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய முடியவில்லை.
* கடைக்குச் சென்று மளிகை சாமான் வாங்கக் கூட எரிச்சலாக இருக்கிறது.
*காலையில், காஃபி குடிக்காமல் எந்த வேலையையும் தொடங்க முடியவில்லை.
* அடிக்கடி பஸ், ரயிலை தவற விடுகிறேன்.
* சாதாரணமாக அவ்வப்போது வீட்டை சுத்தம் செய்யும் வேலையைக்கூட அடுத்தவாரத்திற்கு தள்ளிப்போடுகிறேன். இதனால் வீட்டில் எங்கு பார்த்தாலும் பொருட்கள் சிதறிக்கிடக்கின்றன.
* ஆன்லைனில் கட்ட வேண்டிய பில்களை கடைசி நாளன்று கட்டுகிறேன் அல்லது அதன்பின் தண்டனைத் தொகையோடு சேர்த்து (penalty) கட்டுகிறேன்.
*எனக்கு பிடித்த வேலையை செய்ய முடியவில்லை.
* எப்போதுமே அவசர அவசரமாகத்தான் ஓடிக்கொண்டிருக்கிறேன்.
*இரவில் தூக்கம் மிகக்குறைவு. ஆபீசில் எப்போதும் தூங்கி வழிந்து கொண்டிருக்கிறேன்.
மேலே சொன்னவையெல்லாம் இருந்தால், உங்களுக்கு கண்டிப்பாக Errand paralysis இருக்கிறது.
இதற்கெல்லாம் கண்டிப்பாக நேரமின்மையைக் காரணமாகச் சொல்வீர்கள். நிச்சயம் நேரம் காரணமில்லை. நேரத்தை சரியாக நிர்வகிக்கத் தெரியாமல் நீங்கள் திண்டாடுகிறீர்கள் என்பதே சரி. Lack of Direction, not lack of time- என்பது இவரின் கருத்து.
இவற்றுக்குத் தீர்வு என்னவென்றும் சொல்கிறார் ஹெலன் பீட்டர்சன்…
* இன்று, இந்த வாரம், இந்த மாதம் செய்யவேண்டிய வேலைகள் வரிசையாக ஒரு To do லிஸ்ட் போடுங்கள்.
* பில் கட்டவும், மளிகை சாமான் வாங்கவும், காய்கறி வாங்கவும் நாமே நேரில் செல்ல வேண்டியதில்லை. நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தினால் நேரம் மிச்சம்.
* ஃபேஸ்புக் சாட்டிங், வாட்ஸ்அப் மெஸேஜ், செல்ஃபிகளுக்கு ஒதுக்கும் நேரத்திலிருந்து ஒவ்வொரு நாளும் 20- 30 நிமிடங்களை மிச்சப்படுத்துங்கள். அந்த நேரத்தில் தலைக்குமேல் நிற்கும் வேலைகளை ஒவ்வொன்றாக செய்து முடித்துவிடலாம்.
* ஒரே வேலையை தொடர்ந்து 3, 4 மணிநேரம் தொடர்ச்சியாக செய்வதால் மூளை களைத்துவிடும் என்கிறது நரம்பியல் மருத்துவம். எனவே, அவ்வப்போது ஒரு 10 நிமிடங்கள் ஒதுக்கி பில் கட்டுவது, மெயில் அனுப்புவது என சின்னச்சின்ன வேலைகளை செய்யுங்கள். மூளைக்கு ஒரு ப்ரேக் கிடைத்து மனநிலையும் சீராகிவிடும். வேலைக்கு நடுவே சின்னச்சின்ன வேலைகளைச் செய்தது போலவும் ஆகிவிடும்.
வீட்டிலிருந்தே அலுவலக வேலை செய்பவர்கள் என்றால், துவைத்த துணிகளை மடிக்கலாம். கலைந்து கிடக்கும் அலமாரியை சரி செய்யலாம்.தேவையில்லாமல் பொருட்களை சேர்த்து வீட்டை குடோனாக்கிவிட வேண்டாம். முடிந்தவரை பொருட்களின் தேவையை குறைத்துக் கொள்ளுங்கள். அதிகப்படியாக இருக்கும் துணிகள், பொருட்களை தேவைப்படுபவர்களுக்கு கொடுத்து விடுங்கள். பின்னர் வீட்டை சுத்தம் செய்ய நேரம் இல்லை என்று புலம்ப வேண்டியிருக்காது.
இளைஞர்களின் மிகப்பெரிய தடை இரவு 2 மணி வரை இன்டர்நெட்டில் இருப்பது, டி.வி பார்ப்பது என விழித்திருந்துவிட்டு காலை லேட்டாக எழுவது. 6 மணிக்கு எழுந்தால் நிறைய நேரம் கிடைக்கும். அதற்கு முதல் நாள் இரவு சீக்கிரம் தூங்க வேண்டும்!
Average Rating