எந்த நாட்டுக்குப் போனாலும் நம்மூர் உணவை தேடிப் போவேன்! (மகளிர் பக்கம்)
‘சாப்பாடு எனக்கு சின்ன வயசில் இருந்தே மிகவும் பழக்கப்பட்ட விஷயம். காரணம், அப்பா எங்க சொந்த ஊரான பழனியில் ஓட்டல் வச்சி நடத்திட்டு இருந்தார். அது மட்டும் இல்லை அம்மாவும் நல்லா சமைப்பாங்க. வீட்டில் சமையல் செய்தாலும், சில சமயம் ஓட்டலில்தான் சாப்பிடுவோம். அதனால் எனக்கு ஓட்டல் சாப்பாட்டை விட வீட்டு சாப்பாடு மேல் தான் தனி ஈடுபாடு’’ என்று தன் உணவுப் பயணம் குறித்து பேசத் துவங்கினார் நடிகர் ஆரி அர்ஜுனா.
‘‘நாற்பது வருஷமா அப்பா ஓட்டல் பிசினஸ் செய்து வந்தார். ஓட்டல் துறையில் இருந்ததால் எங்க வீட்டில் எல்லாருக்கும் சாப்பாட்டு மேல் தனி ஈடுபாடு உண்டு. அம்மாவும் நல்லா சமைப்பாங்க. அவங்களின் அசைவ உணவுக்கு நாங்க மட்டும் இல்லை, எங்க வீட்டு சொந்தக்காரங்க எல்லாரும் அடிமைன்னு சொல்லலாம்.
எங்க வீட்டுல எந்த விழாவா இருந்தாலும், அம்மாவோட சமையல் தான் இருக்கும். மீன் வறுவல், சிக்கன் கிரேவி, முட்டை தொக்கு என எல்லா அசைவ உணவும் அம்மா ரொம்ப நல்லா சமைப்பாங்க. அவங்க சமைப்பதில் எனக்கு ரொம்ப பிடிச்சது பால் கொழுக்கட்டை. அப்புறம் இடியாப்பம். நான் எப்ப வீட்டுக்கு போனாலும் அம்மா முதலில் எனக்காக செய்வது பால்கொழுக்கட்டை தான்.
இப்ப அவங்க இல்லை என்றாலும், என் மனைவி வீட்டில் பால் கொழுக்கட்டை செய்தாலும் அம்மாவின் நியாபகம் தான் வரும். அம்மாவைவிட எங்க பாட்டி ரொம்ப நல்லா சமைப்பாங்க. அவங்க கைப்பக்குவத்துக்கு தனி ருசி உண்டு. கழனிபுளிச்சாறுன்னு வைப்பாங்க. அரிசி கழுவிய தண்ணீரில் புளியை கரைச்சு அதில் மிளகாய் அரைச்சு ஒரு குழம்பு செய்வாங்க. அதற்கு துவையல்தான் காம்பினேஷன். எவ்வளவு சாப்பிடுறோம்ன்னே தெரியாது. அப்புறம் வெண்டைக்காய் புளிக்கூட்டு. அதுவும் எனக்கு ரொம்ப பிடிக்கும். மொச்சைப் பருப்பில் அந்த பருப்பை மட்டும் தனியா எடுத்து பருப்பு தாளிச்சு தருவாங்க. சூடான சாதத்தில் நெய் சேர்த்து சாப்பிட்டா அவ்வளவு சுவையா இருக்கும். உளுந்தங்களி, நல்லெண்ணை, வெல்லம் சேர்த்து தருவாங்க. இப்படி தான் நான் அம்மா, பாட்டி சமையல் சாப்பிட்டு வளர்ந்தேன்.
சில சமயம் வீட்டில் அம்மா சமைக்கலைன்னா நாங்க எல்லாரும் ஓட்டலுக்கு சாப்பிட போயிடுவோம். அங்க பூரி மசால், மசாலா தோசை, பரோட்டா, பொடி தோசைன்னு வெரைட்டியா சாப்பிட்டு வருவோம். இவை எல்லா நேரங்களிலும் கிடைக்கும் உணவாக இருந்தாலும், அந்த நேரத்தில் குடும்பமா போய் சாப்பிடும் போது மனசுக்கு ரொம்ப குஷியா இருக்கும். மேலும் எங்க ஓட்டலில் தேங்காய் சட்னியுடன் சர்க்கரை சேர்த்து தருவாங்க.. காரம் இனிப்பு கலந்து அது தோசைக்கு சேர்த்து சாப்பிடும் போது, ஒரு வித்தியாச சுவை இருக்கும்’’ என்றவர் பால்கோவா சாப்பிடுவதற்காகவே பள்ளியில் முதல் மார்க் வாங்குவாராம்.
‘‘எங்க ஓட்டலுக்கு எதிரில் ஒரு சின்ன தள்ளுவண்டியில் ஸ்வீட் கடை இருக்கும். காலை ஒன்பது மணிக்கு அந்த வண்டிக்கடை வரும். இரவு வரை அவர் கடையில் கூட்டம் இருந்து கொண்டே இருக்கும். பால்கோவா, ஜாங்கிரி, லட்டுன்னு எல்லா விதமான ஸ்வீட்டும் அவர் அந்த வண்டியில் விற்பனை செய்வார். அதில் எனக்கு ரொம்ப பிடிச்சது பால்கோவா தான். அப்பா நான் பள்ளித் தேர்வில் முதல் மார்க் வாங்கினா எனக்கு பிடிச்ச அந்த பால்கோவா வாங்கித் தருவார். அதுக்காகவே நான் முதல் மார்க் வாங்குவதை தவறினதே இல்லை. நான் முதன் முதலில் எங்க ஓட்டலை தவிர வெளியே போய் சாப்பிட்டதுன்னா அம்சவள்ளி ஓட்டல்னு சொல்லலாம். அங்க பிரியாணி ரொம்ப நல்லா இருக்கும். பிரியாணி சாப்பிடணும்ன்னு தோணுச்சுன்னா அங்க தான் போவோம். அப்புறம் பழனி பஸ் நிலையத்தில் திருமால்சாமி கடைன்னு இருக்கும். அங்க பரோட்டா ரொம்ப ஃபேமஸ்.
பரோட்டாவை பிச்சு அதில் சால்னாவை சேர்த்து தருவாங்க. பரோட்டா அதில் ஊறி சாப்பிடும் போது வாயில் கரைந்து போகும். அதே போல் அங்க மாரியம்மன் கோயில் அருகே ஒரு சின்ன கடை இருக்கும். அங்க போளி மற்றும் சீம் பால் நல்லா இருக்கும். அதே ஏரியாவில் முட்டை பொடிமாஸ் ஒரு கடையில் கிடைக்கும். தட்டு முறுக்கு, பொறி உடன் முட்டை சேர்த்து ஒரு வகையான சாட் உணவு மாறி தருவாங்க. வித்தியாசமான சுவையில் இருக்கும். இவை எல்லாமே பழனி பஸ் நிலையத்தில் சுத்தி இருக்கிற கடைகள் தான். அங்க போனாலே எல்லா வகையான உணவையும் சுவைக்கலாம்.
பழனி மலை மேல ஏறினா அங்கு தியேட்டர் அருகில் ஒரு அம்மா சின்னதா டிபன் கடை வச்சிருப்பாங்க. அங்க முட்டை தோசை ரொம்ப நல்லா இருக்கும். நண்பர்களுடன் சினிமா பார்த்திட்டு அங்க முட்டை தோசை சாப்பிட்டு வருவோம். பழனியில் பத்தாம் வகுப்பு வரை தான் படிச்சேன். அதன் பிறகு மேற்படிப்புக்காக மதுரைக்கு வந்துட்டேன். அம்மாவும் எனக்காக மதுரைக்கு வந்துட்டாங்க. அம்மா தினமும் கல்லூரிக்கு சாப்பாடு கட்டிக் கொடுத்திடுவாங்க. அதனால் கல்லூரி காலம் வரை மதிய உணவு அம்மாவின் கைப்பக்குவம் தான்.
மதுரை சுவையான உணவுக்கு ெபயர் போன நகரம்னு சொல்வாங்க. ஆனால் நான் அங்கு தங்கி படிச்சாலும், பலர் சொல்லும் அளவுக்கு நான் அங்கு பெரிய அளவில் எக்ஸ்ப்ேளார் செய்தது இல்லை. தங்க ரீகல்ன்னு தியேட்டர் அருகே ஒரு அல்வா கடை. இலையில் சூடா அல்வா வச்சு தருவாங்க. நெய் ஒழுக இருக்கும் அந்த அல்வாவை வாயில் போட்டா அப்படியே வழுக்கி தொண்டைக்குழிக்குள் இறங்கும். அந்த கடையின் மறுபக்கம் மண்பானை உணவகம் ஃபேமஸ். இங்க எல்லா உணவையும் மண்பானையில் தான் சமைப்பாங்க. அது ஒரு தனி சுவையா இருக்கும். குறிப்பா அயிரை மீன் குழம்பு. அது சாப்பிடவே அங்கே போவேன். அதைத்தாண்டி நான் வேற எங்கேயும் போனதில்லை’’ என்றவர் அதன் பிறகு சென்னைக்கு சினிமாவில் நடிக்க வந்துவிட்டாராம்.
‘‘படிப்பு முடிச்சிட்டு சினிமாவில் நடிக்கலாம்னு சென்னைக்கு வந்துட்டேன். இங்க பேச்சிலர் வாழ்க்கை தான். நாங்க நண்பர்கள் மூணு பேர் வீடு எடுத்து தங்கி இருந்தோம். சென்னைக்கு வரும் போதே தட்டுமுட்டு சாமான் எல்லாம் எடுத்திட்டு வந்திட்டேன். அம்மாவிடம் சமையல் குறிப்பும் எழுதி கொண்டு வந்துட்டேன். நான் பாலிபில்டிங் செய்திட்டு இருந்ததால, ஓட்டல் சாப்பாடு எல்லாம் சரிவராது.
மேலும் ஆரோக்கியமா சாப்பிடணும்ன்னு நானே சமைக்க ஆரம்பிச்சேன். அதன் பிறகு சினிமா, கல்யாணம்ன்னு என்னுடைய வாழ்க்கை நகர்ந்தது. என் மனைவி இலங்கையை சேர்ந்தவங்க. அவங்க வந்த பிறகு நானும் அவங்களும் போட்டிப் போட்டுக் கொண்டு சமைப்போம். அவங்களுக்கு தென்னிந்திய உணவு செய்ய தெரியாது. ஆனால் இலங்கை உணவு ரொம்ப நல்லா செய்வாங்க.
அவங்க உணவில் தேங்காய் மற்றும் தேங்காய்ப்பால் பிரதானமா இருக்கும். அவங்க நண்டு கிரேவிக்கு நான் அடிமைன்னு சொல்லலாம். இவங்க மட்டும் இல்லை என் மாமியார் சாம்பல்ன்னு ஒரு டிஷ் செய்வாங்க. சாதத்துடன் சேர்த்து சாப்பிடணும். புளி, காய்ந்த மிளகாய், வெங்காயம், இறால் கொண்டு செய்வாங்க. காரமா ரொம்ப நல்லா இருக்கும். அப்புறம் மீன், இறால், நண்டு என எல்லா வகையான கடல் சார்ந்த உணவுகளுடன் பனங்கிழங்கு சேர்த்து கூழ் செய்வாங்க. அதன் சுவையே வித்தியாசமா இருக்கும். ஒரு கப் குடிச்சா போதும், வயிறு நிரம்பிடும்’’ என்றவர் தன் வெளிநாட்டு உணவு பயணம் குறித்து பேசத் துவங்கினார்.
‘‘கனடா, மலேசியா, இலங்கை, துபாய் போன்ற வெளிநாடுகளுக்கு போயிருக்கேன். எனக்கு மேற்கத்திய உணவுகள் மேல் அவ்வளவு ஈடுபாடு இல்லை. எந்த நாட்டுக்கு போனாலும் நம்மூர் உணவகத்தை தேடிப் போவேன். கனடாவில் சாலட் வகை உணவுகள் நிறைய இருக்கும். அவங்க எல்லா காய்
கறிகள் மற்றும் அசைவ உணவுகள் சேர்த்து விதவிதமா சாலட் வச்சிருப்பாங்க. அதை விரும்பி சாப்பிடுவேன். அப்புறம் சைனீஸ், தாய் மற்றும் மெக்சிகன் உணவுகள் ரொம்ப பிடிக்கும். இவை நம்ம ஊர் உணவுகள் மாதிரி இருக்கும்.
குறிப்பா மெக்சிகன் உணவில் கொஞ்சம் ரெட் ரைசுடன் மீன், இறால் அல்லது சிக்கன் சேர்த்து மடிச்சு ராப் மாதிரி செய்து தருவாங்க. அங்க கஸ்டமைஸ்ட் உணவகம் ஒன்று இருக்கு. நமக்கான உணவினை நாமே தேர்வு செய்யலாம். அதாவது எல்லா வகை உணவும் சமைக்காமல் அப்படியே வச்சிருப்பாங்க. நமக்கு வேண்டிய காய்கறி மற்றும் அசைவ உணவினை தேர்வு செய்து கொடுத்தால், நமக்கு தேவையான காரத்துடன் சமைத்து தருவாங்க. கனடாவில் நான் ரொம்ப விரும்பி சாப்பிட்ட உணவகம் அது.
சென்னையை பொறுத்தவரை என்னுடைய பேவரெட் ரெஸ்டாரன்ட் குமார் மெஸ். அங்க அயிரை மீன் குழம்பு சாப்பிடவே போவேன். அதன் பிறகு கல்லூரி சாலையில் உள்ள மெரினா உணவகம். இங்கு கடல் சார்ந்த உணவுகள் பிரமாதமா இருக்கும். சென்னையில் எப்ப ஜூஸ் குடிக்கணும்னு தோணுச்சுன்னா நான் கோடம்பாக்கம் கிளம்பிடுவேன்.
அங்கு லிபர்ட்டி தியட்டர் அருகே ஒரு கடை இருக்கும். எந்த பழச்சாறு நீங்க கேட்டாலும், அதை இளநீரோடு மிக்ஸ் செய்து கொடுப்பாங்க. டேஸ்டும் வித்தியாசமா இருக்கும். என்னதான் பல இடங்களில் உணவு சாப்பிட்டாலும், எனக்கு வீட்டில் வைக்கும் மீன் குழம்பு, மீன் வறுவல், நாட்டுக்கோழி குழம்பு, பால் கொழுக்கட்டை, வாழைப்பூ வடை, இட்லி தக்காளி குருமாவுக்கு நான் அடிமை’’ என்றார் நடிகர் ஆரி அர்ஜுனா.
Average Rating