வாழ்வென்பது பெருங்கனவு!! (மகளிர் பக்கம்)
இந்தப் பணிக்கு சரியான நபர் இவர் தான் என ஒருவரை தேர்வு செய்வது மிகவும் கடினம். அதுவே நூற்றுக்கணக்கான ஊழியர்களை தேர்வு செய்ய வேண்டும் என்றால் அதில் அனைத்து நுணுக்கமும் அறிந்திருந்தால் மட்டுமே சாத்தியம். நிர்வாகத்தின் தொழில்நுட்ப பிரிவு, கணக்கு பிரிவு, அலுவலக கோப்புகளை பராமரிக்கும் பிரிவு, கடைநிலை ஊழியர்கள், சுகாதார பணியாளர்கள், மின்சாரம், ஏ.சி, லிப்ட் பராமரிப்பு பணியாளர்கள் என கார்ப்பரேட் நிறுவனத்திற்கு தேவைப்படும் அனைத்து ஊழியர்களையும் தேர்வு செய்ய வேண்டும் என்றால், தேர்வு செய்யும் அதிகாரி பழுத்த அனுபவசாலியாக இருக்க வேண்டும்.
அது மட்டுமன்றி தேர்ந்தெடுத்த ஊழியர்களின் அனைத்து எதிர்பார்ப்புகளையும் திறமையாக சமாளிக்கத் தெரிந்திருக்க வேண்டும். மேலும் நிறுவன உரிமையாளர்களுடன் பல கட்ட ஆலோசனை கூட்டங்கள் என ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் வேலை பார்க்கும் மனித வளத்துறை நிர்வாகி என்பவரின் ஒவ்வொரு நாள் பணி நேரம் மிகவும் பரபரப்பாகவே இருக்கும். அப்படிப்பட்ட சூழலிலும் ஊழியர்களிடமும், வாடிக்கையாளர்களிடமும் புன்னகை குறையாமல் பேசியே வேலை வாங்குவதில் கில்லாடியாக இருக்கிறார் ஜான்சி.
சிறிய அளவில் தொடங்கப்பட்ட ஒரு ஐ.டி நிறுவனத்தை பல நூறு ஊழியர்களுடன் கார்ப்பரேட் நிறுவனங்களின் உச்சாணிக் கிளையில் கொண்டு சேர்த்தவர் என்ற பெருமைக்கு சொந்தக்காரர். பெருங்கனவாக பள்ளி நாட்களில் என்ன நினைத்தாரோ அதை சாதித்த சந்தோஷத்துடன் பிராம்ப்ட் இன்ப்போடெக் நிறுவனத்தின் மனிதவள நிர்வாகியாக ஆட்சி செய்து வருகிறார் 30 வயதே நிரம்பிய ஜான்சி.
‘‘ஒரு பெண்ணுக்கு வாழ்வில் தன்னம்பிக்கை கண்டிப்பாக வேண்டும். அப்படியே இருந்தாலும், அந்த நம்பிக்கையை நனவாக்க அசாத்திய திறமையும் கூடவே பொறுமையும் வேண்டும். இதற்கெல்லாம் நன்றாக படித்திருக்க வேண்டும் என்று அவசியம் இல்லை. வளரும் சூழலில் பெண் தன்னைத் தானே புடம் போட்டுக் கொண்டால், தன்னம்பிக்கையும், திறமையும் தானாக உருவாகும். அப்படித்தான் நான் ஜெயித்திருக்கிறேன்.
பிறந்தது கேரள மாநிலம் கொல்லம் என்றாலும், வளர்ந்தது, பள்ளி படிப்பு இப்போது இருப்பது எல்லாமே கோயமுத்தூரில் தான். தன்னை மட்டுமே நம்பி குடும்பத்துடன் கோயமுத்தூருக்கு இடம் பெயர்ந்து, சொந்த தொழில் தொடங்கி என்னையும், தம்பியையும் நாங்கள் ஆசைப்பட்ட படிப்பு படிக்க வைத்த எனது தந்தையும் தாயும் தான் எனக்கு முதல் இன்ஸ்பிரேஷன். அவர்களிடம் இருந்து தான் வைராக்கியம் கற்றேன்.
மேனிலை பள்ளியில் பால் பேட்மின்ட்டன் பிளேயராக பிரகாசித்தேன். பள்ளிகளுக்கிடையிலான போட்டிகளில் கலந்து கொண்டு நான் பெற்ற சான்றிதழ்கள், கல்லூரி படிப்பை இலவசமாக்கியது. ஸ்போர்ட்ஸ் கோட்டாவில் சென்னையில் பி.எஸ்சி., கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்து முடித்தேன். கல்லூரியில் படிக்கும் போது மனித வளத்துறையில் உறுதியான தடம் பதிக்க வேண்டும் என முடிவெடுத்தேன். அந்த முடிவில் இருந்து எந்த சூழலிலும் என்னை நான் மாற்றிக் கொள்ளவில்லை.
இதை ஏன் சொல்கிறேன் என்றால், 2009ல் டிகிரி முடித்த கையோடு கோயமுத்தூர் பாரதியார் பல்கலையில் 2011ல் எம்.பி.ஏ முடித்த 10வது நாளில் எனக்கு திருமணம் நடந்தது. காலா காலத்தில் கடமையை முடித்த திருப்தி பெற்றோருக்கு. நான் கண்ட கனவு புஸ்வாணமாகிவிடுமோன்னு கவலை எனக்கு. சில நாட்களுக்கு பின், என்னுடைய கனவு குறித்து கணவரிடம் பக்குவமாக பேசினேன். தட்டிக் கொடுத்து என்னை ஆதரித்தார். உற்சாகத்துடன் எம்.பில்., முனைவர் படிப்பில் சேர்ந்தேன்.
ஆனால் சேர்ந்த ஒரே மாதத்தில் கருவுற்றேன். தோழிகள் மற்றும் வீட்டில் எல்லாரும், ‘படிச்சது போதும். தினமும் பஸ்சில் இந்த ேநரத்தில் பயணம் செல்வது நல்லதில்லை. முதல் பிரசவம் வேற. எங்களை பார். நாங்களெல்லாம் குடும்ப பெண்ணா மாறிட்டோம்’’ என்றனர். மறுபடியும் கணவருடன் ஆலோசித்தேன். ஊக்கப்படுத்தினார். அவரது தயவு இல்லாமல் என்னால் அந்த ஓராண்டு படிப்பையும், 3 மாத படிப்புக்கான புராஜெக்ட்டையும் முடித்திருக்க முடியாது. எம்.பில்., 8வது மாதத்தில் பெண் பிறந்தாள்.
சிசுவை கவனித்துக் கொண்டு எம்.பில்., படித்து முடித்து முனைவரானேன்.அதைத் தொடர்ந்து பிராம்ப்ட் இன்ப்போடெக்கில் எனக்கு ஹெச்.ஆர் மேனேஜர் பணி கிடைத்தது. ஆக, என்ன நினைத்தேனோ அந்த பதவியை இத்தனை சீக்கிரம் அடைவேன் என எதிர்பார்க்கவே இல்லை. இப்போது பிரச்னை, வீட்டு வேலை செய்தபடி, மகளையும் பராமரித்து வேலையில் கவனம் செலுத்த முடியுமா என்பதாக இருந்தது. அப்போது கணவர்தான் என்னை உற்சாகப்படுத்தி, பணியில் கவனம் செலுத்த சொன்னார்’’ என்றவர் ஆறு ஆண்டுகளாக இந்த பணியில் தன்னை ஈடுபடுத்தி வருகிறார்.
‘‘கனவு நினைவாகிவிட்டது என்ற சந்தோஷம் ஒரு பக்கம் இருந்தாலும், இந்த ஆறாண்டுகளில் வீடு மற்றும் இல்லாமல் அலுவலகம் சார்ந்த பல பிரச்னைகளை ஒரு புன்னகையால் சமாளித்து இருக்கிறேன். மேலும் ஒருவரை பணியில் நியமிக்கும் போது, அவர் அதற்கு திறமையானவரா என்று கணிக்க வேண்டும். என்னிடம் இந்த திறமைகள் இருந்ததா என இன்று வரை தெரியாது.
ஆனால், எனது பணியை நான் சிறப்பாக செய்ய வேண்டும் என்பதில் நான் மிகவும் உறுதியாக இருக்கிறேன். இல்லை என்றால், குறுகிய காலத்தில் 12க்கும் மேற்பட்ட வெளிநாட்டு பயணங்கள், நூற்றுக்கணக்கான வாடிக்கையாளர்களுடன், புதுப்புது நபர்களுடன் வியாபார நிமித்த சந்திப்பு அதைத் தொடர்ந்து நிறுவனத்தை அசாத்திய உயரத்துக்கு கொண்டு சென்றதெல்லாம் நடந்திருக்குமா. இன்று நான் சாதித்து உள்ளேன் என்றால், முக்கிய காரணம் நம்பிக்கை. என்னுடைய இலக்கு என்ன என்று முடிவு செய்து அதை நோக்கி விடாப்பிடியாக பயணம் செய்தேன். அந்த பயணத்தில் ஏற்படும் தடைகளைக் கூட மற்றவர் மனதை நோகடிக்காமல் தகர்த்து நகர்ந்ததால் தான் என்னுடைய இலக்கை என்னால் அடைய முடிந்தது.
ஒரு ஆணின் வெற்றிக்கு பின் ஒரு பெண் இருப்பாள் எனும் சொல்மொழிக்கு நிகராக, ஒரு பெண்ணின் வெற்றிக்கு பின்னால் ஆணும் நிச்சயமாக இருப்பான் என நான் உணர்ந்துள்ளேன். எனக்கு வாய்த்த தந்தையும், தாயும், கணவரும் இல்லை என்றால் என்னால் இந்த பெருங்கனவை சாதித்திருக்க முடியாது. இதில் மிகவும் குறிப்பிட வேண்டிய விஷயம், பாப்பா இப்போது பள்ளிக்குச் செல்கிறாள். என்னை நன்றாக புரிந்து கொண்டிருக்கிறாள். மனதிற்கு நிறைவாக உள்ளது’’ என்றார் ஜான்சி.
Average Rating