அக்கா கடை-தரமும் சுவையும் இருந்தா கண்டிப்பா ஜெயிக்கலாம்! (மகளிர் பக்கம்)

Read Time:13 Minute, 30 Second

‘‘எந்த ஒரு தொழிலாக இருந்தாலும் போட்டி இல்லாமல் இருக்காது. ஆனால் அதையே நாம் நேசிச்சு முழுமையா ஈடுபடும் போது எத்தனை சவால்கள் வந்தாலும் நமக்கு பெரிய தடைகளாக தெரியாது’’ என்கிறார் மதுரையை சேர்ந்த சத்தியபிரியா. பல போராட்டங்களுக்கு மத்தியிலும் தனக்கான ஒரு அடையாளத்தை இந்த நான்கு ஆண்டுகளில் ஏற்படுத்தி இருக்கும் இவர் உணவகம் ஒன்றை தனி மனுஷியாக நிர்வகித்து வருகிறார். மதுரை, தல்லாக்குளத்தில் அமைந்துள்ள ‘கிராமத்து அடுப்பாங்கரை’ உணவகத்தை பற்றி தெரியாதவர்கள் இருக்க முடியாது. வெளியூரில் இருந்தும் பலர் இந்த உணவகத்தை தேடி வருவது இவரின் வெற்றியின் அடையாளம்.

‘‘நான் பிறந்தது படிச்சது எல்லாம் மதுரையில் தான். அப்பா தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வந்தார். அம்மா இல்லத்தரசி. எனக்கு ஒரு தங்கை. +2 வரை தான் படிச்சேன். அதன் பிறகு வீட்டில் கல்யாணம் செய்து வச்சுட்டாங்க. அன்பான கணவர், பாசமான இரண்டு மகன்கள் என்று என் வாழ்க்கையின் படகு எந்த சலனமும் இல்லாமல் பயணித்து வந்தது. எங்க வீட்டில் எல்லாரும் நல்லா சமைப்பாங்க. காரணம் எங்க உறவினர் பலருக்கு உணவகம் தான் தொழில். என் அம்மா வழிபாட்டியும் மெஸ் ஒன்றை நிர்வகித்து வந்தார். அவர் தான் எனக்கு இன்ஸ்பிரேஷன்னு சொல்லலாம். ஒரு பெண்ணாக அந்த காலத்தில் மூன்று ேவளை உணவு என்று தனி ஆளாக அதை நடத்தி வந்தார். பள்ளியில் படிக்கும் வரை எனக்கு சமைக்கவே தெரியாது. அம்மா தான் எல்லாமே பார்த்துக்கிட்டாங்க.

பள்ளிப்படிப்பை முடிச்சிட்டு வீட்டில் இருந்த போது தான் நான் சமையலே கத்துக்கிட்டேன்னு சொல்லலாம். அதன் பிறகு தான் எனக்கு அதன் மேல் ஒரு ஆர்வம் ஏற்பட்டது. சுவையா தரமா சமைச்சா எல்லாரும் விரும்பி சாப்பிடுவாங்கன்னு புரிந்தது. என்னுடைய இந்த ஆர்வத்திற்கு மேலும் வலு கூட்டியவர் என் மாமியார். அவங்க பர்மாவை சேர்ந்தவங்க. பர்மா உணவுகள் எல்லாம் அசத்துவாங்க. விதவிதமா பர்மா உணவுகளை பசங்களுக்கும் எங்களுக்கும் செய்து தருவாங்க.

இந்த சமயத்தில்தான் நாம் ஏன் ஒரு உணவகம் ஆரம்பிக்கக் கூடாதுன்னு தோணுச்சு. என் விருப்பத்தை என் கணவரிடம் சொல்ல… அவர் சொன்ன ஒரே வார்த்தை, ‘உன்னால் சமாளிக்க முடியும்னா தைரியமா எடுத்து செய்’ என்பது தான். அதுவே எனக்குள் பெரிய உற்சாகத்தை கொடுத்தது. நானும் அவரும் இணைந்து சின்னதா ஒரு இடம் மற்றும் உணவகத்திற்கு தேவையான பொருட்கள் சமைக்கும் பாத்திரங்கள் எல்லாம் பார்த்து பார்த்து வாங்கினோம். ஒரு நன்னாளில் ‘கிராமத்து அடுப்பாங்கரை’ ஆரம்பிச்சோம். கடைக்கு தேவையான பொருட்கள் எல்லாம் நானும் என் கணவரும் சேர்ந்து தான் போய் வாங்குவோம். சைவம், அசைவம்ன்னு இரண்டு உணவும் எங்க உணவகத்தில் இருக்கும். ஆரம்பத்தில் மதிய உணவு மட்டும் தான் துவங்கினோம்’’ என்றவரின் வாழ்க்கையில் பெரிய இடி விழுந்தது.

‘‘நான் கடை ஆரம்பிக்கும் போதே பலர், ‘உனக்கு எதுக்கு இந்த வேலை. வீட்டில் இருந்து குடும்பத்தை பார்க்காம… இப்படி கடை நடத்தினா வீட்டை யார் கவனிக்கிறது’ன்னு உறவினர்கள் எல்லாம் குறை சொன்னாங்க. ஆனால் என் கணவர் தான் ‘நீ எடுத்து நடத்து’ன்னு முழு தைரியம் கொடுத்தார். வாழ்க்கையில் எது எப்போது நடக்கும்ன்னு யாருக்குமே தெரியாது. இரண்டு வருடம் முன்பு உடல் நிலை பாதித்து அவர் என்னையும் என் பசங்களையும் விட்டுவிட்டு இறைவனிடம் சென்றுவிட்டார்.

நான் ரொம்பவே நொடிஞ்சி போயிட்டேன். அந்த சமயத்தில் எனக்கு கைக்கொடுத்தது என்னுடைய தொழில் தான். நான் வீட்டில் முடங்கி இருக்கக்கூடாதுன்னு முடிவு செய்தேன். மறுபடியும் என்னுடைய தொழிலில் கவனம் செலுத்த ஆரம்பிச்சேன். ஒவ்வொரு உணவும் பார்த்து பார்த்து சமைப்பதால், எங்க உணவகத்தில் சாப்பிடுபவர்கள் எல்லாரும் வீட்டு சாப்பாடு போல இருக்குன்னு சொல்றாங்க.

உணவைப் பொறுத்தவரை தரமாகவும் சுவையாகவும் கொடுத்தா கண்டிப்பா ஜெயிக்க முடியும். நாம ஒரு உணவகத்தில் சாப்பிட போகும் போதும் சரி நம் வீட்டில் சமைக்கும் போதும் சரி, எல்லா விஷயத்தையும் பார்த்து தான் சாப்பிடுவோம், சமைப்போம். அந்த உணவை குழந்தைகளுக்கு வாங்கித் தரலமா? தராமா இருக்குமா? சுவையா இருக்குமா? காரம் அதிகமா இருக்குமா? இப்படி பல விஷயங்களை யோசிப்போம். நானே அப்படி யோசிக்கும் போது, என் கடையில் சாப்பிட வர்றவங்களும் அப்படித்தானே சிந்திப்பாங்க. எல்லா வயதினரும் சாப்பிடுற அளவுக்கு உணவு கொடுக்கணும் என்பதில் நான் தீர்மானமா இருந்தேன். அது தான் என் வாடிக்கையாளர்களை திரும்ப திரும்ப என் கடையை தேடி சாப்பிட தூண்டுது’’ என்றவரின் உணவகத்தில் வேலைப் பார்க்கும் அனைவரும் பெண்கள் தான்.

‘‘நாங்க எல்லாரும் ஒரே குடும்பமாதான் இங்க வேலை பார்க்கிறோம். என் அம்மா, அப்பா எனக்கு உதவியா இருந்தாலும், என் கடையில் வேலை பார்க்கும் அக்காக்கள் தான் என்னுடைய பலமே. அவங்க இல்லைன்னா நான் இல்லை. நான் இப்ப தலை தூக்கி நிக்கிறேன்னா அவங்க எல்லாரும் தான் காரணம். அவங்க சின்ன தவறு செய்தாலும், நான் கடினமா நடத்த மாட்டேன். தட்டிக் கொடுத்து மறுபடியும் அந்த தவறு செய்யாமல் பார்த்துக்க சொல்வேன். அது மட்டும் இல்லை நான் என் குழந்தைக்கு கடையில் ஸ்வீட், பழங்கள் வாங்கினா கூட இவங்களுக்கும் சேர்த்து வாங்கிடுவேன். ஆரம்பத்தில் மதிய உணவு மட்டும் தான் போட்டோம். இப்போது, மூன்று வேளையும் உணவு தயாரிக்கிறோம். எல்லாரும் காலையில் கடைக்கு வந்தா, இரவு தான் வீட்டுக்கு போகமுடியும்.

அவங்க பசங்களுக்கும் ஏதாவது வாங்கித்தரணும்னு ஆசைப்படுவாங்க. அதை நான் அவங்க சார்பில் செய்றேன். அந்த சமயத்தில் அவங்க முகத்தில் சிரிப்பை பார்க்கும் போது மனசுக்கு சந்தோஷமா இருக்கும். மேலும் நான் இவங்கள நல்லா பார்த்துக்கிட்டா தான் அவங்களும் முழு ஈடுபாட்டோட வேலை செய்ய முடியும். இந்த கொரோனா காலத்தில் கூட எனக்கு மிகவும் உறுதுணையா இருந்தாங்க என்றவர் தன் உணவகத்தின் ஸ்பெஷல் உணவுகள் பற்றி விவரித்தார்.

‘‘நான் பெரிசா விளம்பரம் எல்லாம் செய்யல. கடையில் சாப்பிட வந்தவங்க மூலமா தான் மற்ற வாடிக்கையாளர்கள் வந்தாங்க. எங்க கடையின் ஸ்பெஷல் அயிரை மீன் குழம்பு, நெய் மீன், விறால் மீன். அயிரை மீன் குழம்பு இருக்கான்னு கேட்டு சாப்பிட வருவாங்க. இது தவிர சிக்கன், மட்டனில் எல்லா வகை உணவும் இருக்கும். நண்டு, இறால் பிரியாணியும் உண்டு. பிரியாணியை விட முழு சாப்பாடு தான் நிறைய பேர் விரும்புறாங்க.

இதில் சைவம், அசைவம் இரண்டுமே இருக்கு. சைவம்ன்னா சாம்பார், மோர் குழம்பு, உருண்டை குழம்பு, வத்தக்குழம்பு, ரசம், கூட்டு, பொறியல், கீரை, வாழைப்பூ வடை, வாழைத்தண்டு, காளான் கிரேவி, காலிஃபிளவர் 65ன்னு இருக்கும். அசைவ உணவில் இதனுடன் சிக்கன், மட்டன், நண்டு, இறால்ன்னு அதன் கிரேவியும் தனியா தறோம். அதன் பிறகு அவங்க விரும்பும் சைட் டிஷ், மட்டன் சுக்கா, சிக்கன் 65, நண்டு, இறால், மீன் வறுவல்னு தனியா ஆர்டர் செய்துகொள்ளலாம்.

இரவில் பரோட்டா, இடியாப்பம், ஆப்பம், தோசை, இட்லி… மற்றும் கிரேவி இருக்கும். உணவைப் பொறுத்தவரை தரமா இருக்கணும். அதனால் மசாலாக்கள் எல்லாம் நாங்களே தான் தயார் செய்றதால, வீட்டு சாப்பாடு சுவை இருக்கும். மேலும் எங்க வீட்டுக்கும் இதே உணவு தான். தினமும் கடையில் இருந்து தான் உணவு வீட்டுக்கு பார்சலாகும். நாங்க அங்க தனியா ஏதும் சமைப்பதில்லை என்றவர் உணவகம் மட்டும் இல்லாமல் மாதச் சாப்பாடும் வழங்கி வருகிறார்.

‘‘இங்க கடையில் மூன்று வேளையும் உணவு கொடுக்கிறோம். மேலும் மருத்துவமனையில் வேலைப்பார்க்கும் நர்சுகள் எல்லாம் தனியாக இடம் எடுத்து தங்கி இருக்காங்க. அவங்களுக்கு நாங்க மூன்று வேளை சாப்பாடு சப்ளை செய்றோம். ஒரு முறை அவங்க கடைக்கு சாப்பிட வந்தாங்க. சாப்பாடு நல்லா இருக்குன்னு சொன்னவங்க, மாதச் சாப்பாடு தரமுடியுமான்னு கேட்டாங்க.

செய்து பார்க்கலாம்ன்னு முதலில் ஒரு மருத்துவமனையில் இருக்கும் நர்சுகளுக்கு கொடுத்தோம். அவர்கள் மூலம் இப்போது பத்து மருத்துவமனைகளில் வேலைப் பார்க்கும் நர்சுகள் எங்களிடம் உணவு வாங்குறாங்க. தினமும் காலை, மதியம், இரவுன்னு அவங்களுக்கு தனியாக பார்சல் போயிடும். இதனால் கொரோனா காலத்தில் கூட நாங்க கடையை மூடல.

இந்த காலம் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படுத்தினாலும், ஓரளவுக்கு சமாளிச்சோம்ன்னு தான் சொல்லணும். எல்லாரையும் ஒரே நேரத்தில் வேலைக்கு வைக்க முடியாது. அதனால் இரண்டு குழுவாக பிரித்து வேலைப் பார்க்கிறோம். ஒரு குழு இன்று வந்தால், மறுநாள் அடுத்த குழுவினர் வருவாங்க. கடையில் சாப்பிடுவது குறைந்து விட்டது. பார்சல் மட்டும் தான் போனது. இப்ப 50% பேர் சாப்பிட அனுமதி அளிக்கிறோம். நாம எல்லாரும் ஓடுறதே நல்ல சாப்பாட்டுக்குத்தான்.

வயிறார சாப்பிட்டு மனசார நல்லா இருக்குன்னு அவங்க வாழ்த்தும் போது ரொம்ப நிறைவா இருக்கும். கார்ப்பரேட் நிறுவனம் ஆர்டர் கிடைச்சா செய்யும் எண்ணம் இருக்கு. எல்லாம் இந்த கொரோனா காலம் முடியட்டும்ன்னு காத்துக் கொண்டு இருக்கிறோம்’’ என்றார் தன்னம்பிக்கையின் உதாரணமான சத்தியபிரியா.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post உழைப்பை முதலீடு செய்தால் வெற்றி! (மகளிர் பக்கம்)
Next post கல்யாணத்துக்கு ரெடியா?! # Premarital Special Counselling!! (அவ்வப்போது கிளாமர்)