நல்ல வாய்ப்பிற்காக காத்திருக்கிறேன்! (மகளிர் பக்கம்)
கேரக்டருக்கு உள்ள போயி கேரக்டராகவே வாழ்வது சிலரால்தான் முடியும். அந்த வரிசையில் இயக்குநர் ரஞ்சித்தின் ‘காலா’ படத்தில் சூப்பர் ஸ்டாரையே மிரட்டிய செல்வியாக மனதில் நின்றவர் நடிகை ஈஸ்வரி ராவ். மீண்டும் புதுமுக இயக்குநரான சார்லஸின் ‘லாக்கப்’ படத்தில் காவல் துறை அதிகாரியாய் மிரட்டியிருக்கிறார். படம் ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகி இருக்கிறது.
‘காலா’ படத்தில் பெரிய சைஸ் கல் மூக்குத்தி, கழுத்து நிறைய தங்க நகைகள், எண்ணெய் தடவி படிய வாரிய தலைமுடி, வாய் நிறைய சிரிப்பு.. திருநெல்வேலி பாசை என மனமெல்லாம் ஆக்கிரமித்தவரை ‘லாக்கப்’ படத்தில் வேறொரு கோணத்தில் காக்கி உடையில், மிரட்டும் உடல் மொழியோடு பார்க்க முடிந்தது. செல்வியும்.. இளவரசியும்.. எப்படி வெவ்வேறு கோணத்தில் என்ற நம் கேள்விக்கு முகமெல்லாம் புன்னகைத்தவர்.. சினிமாவை எப்பவுமே நான் தேடலை.. ஆனால் என்னைத் தேடி வரும் வாய்ப்பு எனக்கு பிடித்து விட்டால் விடமாட்டேன் என்கிறார் சிரித்துக்கொண்டே, அவரின் சிரிப்பில் கண்களும் சேர்ந்து சிரிக்கிறது.
13 வருடத்திற்குப் பிறகு காலாவில் எப்படி?
சூப்பர் ஸ்டாருக்கு நான் ஜோடியா நடிப்பேன்னு சத்தியமா நினைக்கவில்லை. என் வீட்டிலும் யாரும் நம்பவில்லை.. இது எனக்கு ஒரு கோல்டன் ஆப்பர்சுனிட்டி. சுத்தமாக தமிழ் ஃபீல்டில் இல்லாமலே இருந்தேன். அப்போது தெலுங்கில் ஒரு படம் பண்ணிக்கொண்டிருந்தேன். நாங்கள் தமிழ்நாட்டில் இருக்கோம். தெலுங்கு படம் எங்களுக்கு தெரியாது. தமிழ் படத்திலும் நடிங்கம்மா என என் குழந்தைகள் என்னிடம் சிரித்துக்கொண்டே கேசுவலாகக் கேட்டார்கள். அவர்களின் ஆசை இத்தனை பெரிதாய் நடக்குமென எனக்கே தெரியாது. காலாவில் என் நடிப்பு என் குழந்தைகளுக்கான கிஃப்ட். அந்த வாய்ப்பை ரஜினி சாரும், ரஞ்சித் சாரும்தான் எனக்கு ஏற்படுத்திக் கொடுத்தார்கள்.
காலாவில் ரஜினி சார், நானே படேகர் என பெரிய நடிகர்கள் கூட்டணி. எப்படி இருந்தது?
இருவருமே எனக்கு ரொம்ப ரொம்ப பிடித்த நடிகர்கள்தான். எனக்குத்தான் டென்ஷனாக இருந்தது. கிரேட் மெமரின்னா அது சூப்பர் ஸ்டார் ரஜினி சாரோடு நடித்ததுதான். நல்ல கேரக்டர் நல்லா பண்ணுங்கம்மான்னு என்னிடம் சொன்னார். அதுவும் முதல் ஷாட்டே எனக்கு அவரோடு தான். லெங்தியான வசனம் வேறு. என் நடிப்பை அவர் ரொம்பவே பாராட்டினார். அவருடன் ஒரு படத்தில் நடித்தாலே சினிமாவில் எப்படி நடந்துக்கணும் என்பதை கற்றுக்கொள்ளலாம். டைரக்டர் சொன்னாதான் கிளம்புவாரு. அந்த அளவுக்கு டைரக்டர் ஆக்டர் அவர். ரொம்பவே கூல். அவருடன் நடித்த அத்தனை சீன்களுமே மறக்க முடியாத நினைவுகள்.
இயக்குநர் ரஞ்சித் குறித்து…
செல்வி கேரக்டர் முழுக்க முழுக்க இயக்குநர் ரஞ்சித்தின் விருப்பம். எனக்கே தெரியாது நான் இவ்வளவு அவுட்புட் கொடுப்பேன் என்று. படத்தில் எனக்கு கிடைத்த பாராட்டு முழுவதும் அவரைத்தான் போய் சேரும். படம் முழுவதுமே ரஜினி சார் பக்கத்தில் நடிக்கும் வாய்ப்பை கொடுத்ததற்கு இயக்குநர் ரஞ்சித்திற்கு என்னுடைய மிகப் பெரிய நன்றி. ஒரு ஃபேமிலி மாதிரியேதான் ஷூட்டிங் போனது பெரிய ஆர்டிஸ்ட், சின்ன ஆர்டிஸ்டுன்னு பந்தா இல்லாமல் எல்லோ ரையும் இயல்பா பழக பழக்கப் படுத்தினார்.
நீங்க பக்கா தெலுங்கு பொண்ணு. படத்தில் திருநெல்வேலி ஸ்லாங் எப்படி?
இயக்குநர் ரஞ்சித்தும் அவரின் டீமும்தான் இதுக்கு மிக முக்கிய காரணம். நான் டப்பிங் பண்ண மாட்டேன்னுதான் முதலில் மறுத்தேன். நிறைய பேர் எனக்கு குரல் கொடுக்க ட்ரை பண்ணுனாங்க. நடிகை சரிதாக்காவின் தங்கை விஜி அக்காதான் எனக்கு டப்பிங் பேச வந்தாங்க. ஆனால் படத்தில் எனது நடிப்பைப் பார்த்துவிட்டு, இதில் நான் பேசி சொதப்பிடக் கூடாது, பேசாமல் அவளையே பேச வைங்கன்னு சொல்ல, டப்பிங்கை நான்தான் பேசணும்னு ரஜினி சாரும் விருப்பப்பட்டார். ரொம்பவே டைம் எடுத்து டப்பிங் பேசி முடித்தேன்.
ஏன் அதிகமாக உங்களை திரைப்படங்களில் பார்க்க முடிவதில்லை?
நல்ல வாய்ப்புகள் வந்தால் நடிப்பதற்கு தயாராகவே இருக்கிறேன். வாய்ப்புகளும் நிறையவே வருகிறது. ஆனால் அந்த கேரக்டர் என் மனதுக்கு பிடிக்கணும். சும்மா வந்து போவதில் எனக்கு எப்போதும் விருப்பமில்லை. லாக்கப் படத்திற்கு பிறகும் வாய்ப்புகள் தொடர்ந்து வருகிறது. ஆனால் நான் ஒத்துக் கொள்ளவில்லை. ஒரு படம் பார்த்தால் அந்தப் படத்தில் நம் கேரக்டர் பேசப்படணும். அதற்காகவே காத்திருக்கிறேன்… அந்த காத்திருப்புக்காக 13 ஆண்டுவரைகூட இருந்திருக்கிறேன்.
காலாவில் டிபிக்கல்ட் வில்லேஜ் பொண்ணு. லாக்கப்பில் மிடுக்கான காவல் அதிகாரி. இரண்டுமே வேற வேற உடல் மொழி… டயலாக் டெலிவரி.. அவுட் புட்.. எப்படி இது?
இது முழுக்க முழுக்க இயக்குநர் பார்ட். தேவையான நடிப்பை அவர்கள் நம்மிடம் வரவைக்கிறார்கள். லாக்கப் படத்தில் எனக்கு ஹோம் வொர்க்கே இல்லை. எந்த டிரெயினிங்கும் தரப்படவில்லை. யாரையும் ரோல் மாடலாகவும் எடுக்கவில்லை. இயக்குநர் சொன்னதை அப்படியே நடித்தேன். ஈஸ்வரி ராவ் என்றால் வில்லேஜ் கேரக்டர்தான் பண்ணுவாங்கன்னு யாரும் நினைத்துவிடக்கூடாது. இதுவும் என்னால் செய்ய முடியும் என புரூஃப் பண்ணவே லாக்கப் படத்தில் நடித்தேன்.
உங்கள் குடும்பம் குறித்து..
எப்போதும் நான் வீட்டுப் பறவைதான். அளவான குடும்பம். எனது கணவர் இயக்குநர் எல்.ராஜா. எனது மகள் 8ம் வகுப்பும் மகன் 6ம் வகுப்பும் படிக்கிறார்கள். கொரோனா நோய்த் தொற்றில் பள்ளிகள் இல்லை என்பதால் ஆன்லைன் வகுப்பில் அவர்களோடு நானும் வீட்டில் படித்துக்கொண்டு இருக்கிறேன். மீண்டும் சிரிப்போடு விடை கொடுத்தார் இந்த சின்ன புன்னகை அரசி.
Average Rating