கப்பல் அரசியல் ‘பிழைப்பு’ !! (கட்டுரை)
எப்பொழுதுமே மக்களை இலகுவாகச் சென்றடைய, சிலநுட்பங்கள் மிகநுணுக்கமாகப் பயன்படுத்தப்படுகின்றன. இலகுவில் மக்களைச் சென்றடையும் ஊடகமாக மனித உணர்வுகள் காணப்படுகின்றன. ஏன்! சொற்கள், பொருட்கள், விலங்குகள் என்பவற்றில் யானை, பேய், பாம்பு, வேற்றுலகவாசிகள், கப்பல், ரயில், இலக்கம், கடல், தொற்றுநோய் போன்றவற்றின் மீது, பார்வை ஒரு கணம் தங்கிநின்று விட்டே செல்லும். மோலோட்டமாகக் கண்ணோட்டம் விடுபவர்களைக் கூட, ஒருகணம் அவதானித்துப் பார்க்கத்தூண்டும் தன்மை மிக்கவை.
மக்களின் இந்தப் பொதுப்பண்பை, உளப்பலவீனத்தை, ஊடகங்களும் அரசியலும் பயன்படுத்துவது, உலக மரபு. மன்னர் காலத்தில் இருந்து, இன்றைய ஜனநாயகம், சோஷலிசம் முறைமை கொண்ட அரசுகளிலும் மக்களுக்குப் ‘பேய் காட்டும்’ நாடகங்கள், உலகெங்கிலும் நடப்பதுண்டு. இதற்கு, இலங்கை விதிவிலக்காகி விடுமா?
தேர்தலுக்காகக் கோடிக்கணக்கில் செலவு செய்து, வெற்றிபெறும் அரசியல்வாதிகள், பதவிக்கு வந்தபின்னர், ‘எதை அடிக்கலாம்; எப்படி அடிக்கலாம்’ என்ற சிந்தனைகளிலேயே மூழ்கித் திளைத்திருப்பர்.
அதற்கான சந்தர்ப்பங்கள் அமையும் போது, மக்களின் கஷ்டங்கள், பாதிப்புகளைக் காரணம் காட்டி, கிடைக்கப்பெற்ற உதவிகள் மக்களுக்குக் கிடைக்கப்பெறுவதைத் தடுத்து, பதவியில் இருந்த அரசியல்வாதிகளால் சுருட்டிச் செல்லப்பட்ட வரலாறுகள், பல நம்மத்தியில் தாராளமாக இருக்கின்றன.
தற்போது தீப்பற்றி எரிந்துகொண்டிருக்கும் கப்பல், இலங்கைக்கு வரும் காலப்பகுதியில், கொரோனா பெருந்தொற்றுப் பரவலின் உத்வேகம் குறித்தும் கொழும்புத் துறைமுக நகர சட்டமூலம் தொடர்பான விடயங்களே, மக்கள் மத்தியில் அதிகம் பேசப்படும் செய்திகளாகவும் வாதப்பிரதிவாதங்களாகவும் இருந்தன.
கப்பல் வருகிறது; தீப்பற்றி எரிகிறது; அணைக்க முயற்சிக்கப்படுகின்றது; இந்தியாவிடம் உதவி கோரப்படுகின்றது; கப்பல் மூழ்கும் ஆபத்தில் உள்ளது; கப்பலில் உள்ள கொள்கலன்களும் பொருட்களும், எரிந்தும் எரியாமலும் கரைதட்டுகின்றன; மொரட்டுவை முதல் சிலாபம் வரையான கடற்கரைப் பிரதேசங்கள், கறுப்புப் படலம் படிந்து, சோகத்தின் சாயலைப் பிரதிபலிக்கின்றன. இலங்கையின் அரச கட்டமைப்பு சார்ந்த சுற்றாடல் அமைப்புகள் குரல் எழுப்புகின்றன. கப்பல் நிறுவனத்திடமிருந்து நட்டஈடு பெற்று, பாதிக்கப்பட்ட மக்களுக்குப் பெற்றுக்கொடுக்கும் கோரிக்கை முன்வைக்கப்படுகின்றது.
பயணத்தடை காரணமாக, வீடுகளுக்குள் முடங்கியிருந்த மக்களுக்கு, ‘கப்பல் காட்டும் நாடகம்’ மிகச் சுவாரஷ்யமாக அரங்கேற்றப்பட்டுக் கொண்டிருக்கின்றது. மே 20ஆம் திகதி கப்பல் கதை ஆரம்பித்து, இன்றுடன் ஒன்பதாவது நாளாகத் தொடரும் இந்த நாடக்கத்தின் ‘முடிவு’ குறித்தும் மக்களுக்குத் தெரியும்.
ஒரு கப்பலோ விமானமோ, ஒரு நாட்டின் வான், கடல் எல்லைக்குள் நுழைவதற்கு முன்னர், அந்த நாட்டின் அரசாங்கத்திடம் அனுமதி பெறல் வேண்டும் என்பது சர்வதேச விதி. இதற்கான அனுமதியை, இலங்கையின் அரசாங்கத்தின் ஆளுகைக்கு உட்பட்ட நிறுவனங்களே வழங்குகின்றன.
‘எம்.வி எக்ஸ்பிரஸ் பேர்ள்’ என்ற கப்பலில், இரசாயனங்கள் அடங்கிய கொள்கலன்கள் 25 இருக்கின்றன; அவற்றில் சிலவற்றில் இருந்து, இரசாயனப் பதார்த்தங்கள் வௌியேறி, கப்பல் பெருந் தீவிபத்துக்கு உள்ளாகி, சுற்றுச்சூழலை மோசமாகப் பாதிக்கும்; இத்தகைய ஆபத்தான கட்டத்தில்தான் இந்தக் கப்பல் இருக்கின்றது; ஏற்கெனவே இரண்டு நாடுகள், இந்தக் கப்பலின் கோரிக்கையை நிராகரித்திருக்கின்றன, அவை ஏன் நிராகரித்தன போன்ற தகவல்கள் தெரிந்திருந்தும், துறைமுகத்துக்குள் கப்பல் நுழைவதற்கு அனுமதி வழங்கிய அரச நிறுவனம் எது என்பது குறித்த தௌிவின்மை பேணப்படுகின்றது.
‘ஆபத்துக் காத்திருக்கிறது’ என்பதைத் தெரிந்து கொண்டும், கப்பலை இலங்கையின் கடற்பரப்புக்குள்ளும் துறைமுகத்துக்குள் நுழைவதற்கும் தரித்துநிற்பதற்கும் அனுமதி அளித்த நிறுவனம், அதிகாரி இதுவரை தம்மை வெளிப்படுத்தவில்லை.
இங்கு கவனிக்கப்பட வேண்டியதொன்று, தீப்பரவும் பேரபாயத்துடனேயே, கப்பல் கொழும்புத் துறைமுகத்துக்குள் நுழைவதற்குக் காத்திருந்தமையை, சம்பந்தப்பட்ட அரச நிறுவனங்களும் கப்பல் நிறுவனங்களும் அறிந்திருந்தார்கள். கப்பல் தீப்பற்றினால், அதன் பாரிய விளைவுகள் குறித்து எவரும் எந்த எச்சரிக்கையையும் விடுக்கவில்லை; நிலைமை குறித்து வாய் திறக்கவில்லை.
கப்பலின் கழிவுகள், கப்பலுக்குள் இருந்த பொருள்கள் கரையொதுங்கி மக்களின் கவனத்தை ஈர்க்கும் போது, சுற்றுச்சூழல் பாதிப்பு தொடர்பில், அரசாங்கத்தில் பொறுப்புக்கூறத்தக்க அமைப்புகள் குரல்கொடுக்கவும் நடவடிக்கையில் இறங்கவும் ஆரம்பித்தன.
இந்த தீவிபத்துடன் தொடர்புபட்டவர்கள் மீது, அரசாங்கம் சிவில், குற்றவியல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குத் தொடுக்கத் தயாராகியும் வருகிறது.
பொதுமக்கள் மீதான பொறுப்புக் கூறல் குறித்த ஏற்பாடுகளின் கீழும் கவனக்குறைவு அல்லது குற்றம் இழைத்தமை காரணமாக இந்த விபத்து நிகழ்ந்தது என்று இனம்காணப்பட்டால் குற்றவியல் சட்டத்தின் கீழும், சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக அறியமுடிகிறது.
இலங்கையின் சமுத்திர சூழல், கரையோரம் மாசுபட்டுள்ளதாகத் தெரிவித்து, துறைமுக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றும் பதிவுசெய்யப்பட்டுள்ளது. இந்த முறைப்பாட்டை, சமுத்திர சூழல் பாதுகாப்பு அதிகார சபை செய்துள்ளது. பொலிஸ் நிலையத்தில் பதிவுசெய்யப்பட்டுள்ள இந்த முறைப்பாட்டை, குற்றவியல் நடைமுறைச் சட்டக் கோவையின் பிரகாரம், கொழும்பு நீதிவான் நீதிமன்றத்துக்கு, துறைமுக பொலிஸார் முதல் அறிக்கையைச் சமர்ப்பித்துள்ளனர். இந்த அறிக்கையில், ‘கடலிலும் கரையிலும் ஏற்பட்டிருக்கும் பாதிப்புகள், எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய பாதிப்புகள்’ குறித்துப் பிரஸ்தாபிக்கப்பட்டுள்ளது.
“எமது நாட்டில், சுற்றாடலுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து, கப்பல் நிறுவனமே பொறுப்புக்கூற வேண்டும்” என்று சுற்றாடல் அமைச்சர் குற்றம் சாட்டி, கப்பல் நிறுவனத்தைக் குற்றவாளியாகச் சுட்டிக்காட்டி உள்ளார்.
அமைச்சர், “சுற்றுச்சூழல் பாதிப்புத் தொடர்பில், மதிப்பீடு செய்து, அதற்கான நட்டஈட்டைப் பெற்றுக்கொள்வதற்கான, நடவடிக்கைகள் எடுக்கப்படும். எதிர்வரும் காலங்களில், இடம்பெறக்கூடிய கப்பல் தீப்பிடிப்பு விபத்துச் சம்பவங்களை எதிர்கொள்ளக்கூடிய, நடவடிக்கை எடுப்பதற்கு முன்னுரிமை அளிக்கப்படும்” என்று கூறியிருந்தார்.
கப்பல் ஒன்றின் விபத்தின்போது, கடல் மாசடைதலைக் கட்டுப்படுத்தும் கப்பல்களை, இலங்கையின் கடல் துறைசார் கட்டமைப்புகள் கொண்டிருக்கும் அளவுக்கு இன்னும் முன்னேறவில்லை. அதனால்தான், கப்பலின் தீயைக் கட்டுப்படுத்த இந்தியாவின் உதவி பெற்றுக்கொள்ளப்பட்டது.
இந்தக் கொவிட்-19 பெருந்தொற்றுக் காலகட்டத்தில், மக்கள் பட்டினியால் வாடும் நிலைமைக்குச் சென்றுகொண்டிருக்கிறார்கள். முல்லைத்தீவில் இந்த நிலைமை மிகமோசமாக இருக்கிறது.
கொவிட்-19 நோய் தடுப்பு செயற்பாடுகள் குறித்தும் அரசாங்கத்தின் மீது பலவிமர்சனங்கள் முன்வைக்கப்படும் நிலையில், “கப்பல் தீப்பிடிப்பு விபத்துச் சம்பவங்களை எதிர்கொள்ளக்கூடிய, நடவடிக்கை எடுப்பதற்கு முன்னுரிமை அளிக்கப்படும்” என்ற அமைச்சரின் அறிவிப்பின் பிரகாலம், ‘முன்னுரிமை’ என்ற சொற்பிரயோகம் குறித்தும் அவதானிக்கப்பட வேண்டும். பலஆயிரம் கோடி பெறுமதியான நவீன தீயணைப்புக் கப்பல்களைக் கொள்வனவு செய்வதற்கான தேவையும் அவசியமும் காண்பிக்கப்பட்டுள்ளது.
மொரட்டுவை முதல் சிலாபம் வரையான பாதிக்கப்பட்ட பகுதிகள், முக்கியத்துவம் மிக்க கடற்பிராந்தியமாகும். கடல்வளங்கள் நிறைந்து காணப்படுவதால், கடற்றொழில் சிறப்பாக நடைபெறக்கூடிய வலயமாகும்.
இப்பகுதிகள் அழிவடைந்து விட்டன என்று, சுற்றுச்சூழல் பாதுகாப்பு அதிகார சபை, கடல்வள பாதுகாப்புத் திணைக்களம், கடற்றொழில் அமைச்சு, கடல் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆணைக்குழு, இலங்கை துறைமுக அதிகார சபை போன்ற நிறுவனங்கள் ஒருங்கே, குரல் எழுப்புகின்றன.
சுற்றாடலுக்கு மாசு ஏற்படுத்தக்கூடிய கப்பல் கழிவுகளால், கரையோர சூழல் மாசடைந்து காணப்படுகிறது. இதனால், மீன்படித் தொழிலில் ஈடுபட்டிருப்பவர்களும் உல்லாசப்பயணத்துறை சார்ந்தோரும் பெரிதும் பாதிக்கப்படும் சூழல் காணப்படுகின்றது என்பது உண்மை. ஆனால், குறித்த கப்பல் தீப்பிடிப்புச் சம்பவம் தொடர்பாக, பெற்றுக்கொள்ளப்படும் நட்டஈடு, பாதிக்கப்பட்ட மக்களைச் சென்றடைவதை யார், எவ்வாறு உறுதிப்படுத்துவது என்பதே முக்கியமானது.
உத்தியோகபூர்வ பகுபாய்வு முடிவுகள், துறைசார் நிபுணர்களின் அறிக்கைகள் கிடைக்கப்பெறுவதற்கு முன்னரேயே, சம்பந்தப்பட்ட அரச நிறுவனங்கள், கப்பல் நிறுவனத்திடம் இருந்து, பெருந்தொகை நட்டஈடு பெற்றுக்கொள்ளும் நோக்கில் மட்டுமே காய்களை நகர்த்தியிருக்கின்றன. ஏனெனில், இதைப்போல் பல்வேறு அனர்த்தங்கள் நடைபெற்றபோது, ஆமை வேகத்தில் செயற்பட்டு, மக்களின் குறைதீர்க்கும் அரச கட்டமைப்புகள், இந்தவிவகாரத்தில் இத்தனை வேகமாகச் செயற்படுகிறது. இது, கட்டாயமாகச் செய்யப்பட வேண்டிய கைங்கரியங்கள்தான்.
ஆனால், நட்டஈடாகப் பெற்றுக்கொள்ளப்படும் தொகைகள் உண்மையில் பாதிக்கப்பட்ட மக்களைச் சென்றடையுமா என்ற நம்பிக்கை பாதிக்கப்பட்ட மக்கள் மத்தியில் இல்லை. தாம் பயன்படுத்தப்படுகின்றோமோ என்ற பயம் அவர்கள் மத்தியில் காணப்படுகின்றது. போராட்டங்களை மேற்கொண்டே தமக்கான நட்டஈட்டைப் பெற்றுக்கொள்ளும் நிலை உருவாக்கப்படலாம் என்றும் கடந்த கால அனுபவங்களைக் கூறுகின்றார்கள்.
இரசாயனப் பதார்த்தங்கள் அடங்கிய கப்பலில் தீப்பரவல் ஏற்பட்டால், அதை எதிர்கொள்வதற்கு அவசியமான போதிய வளங்கள் எம்மிடம் இல்லாத நிலையில், குறித்த கப்பல் இலங்கையின் கடற்பரப்புக்குள் நுழைய ஏன் அனுபதிக்கப்பட்டது என்பதற்கு, ‘மழுப்பல்’ பதில்களே கிடைக்கப்பெறுகின்றன.
Average Rating