கவிதைகளில் என்னை மீட்டெடுக்கிறேன்! (மகளிர் பக்கம்)
தன் முகப்பு பக்கத்தில் எதை எழுதினாலும் அதில் நகைப்பு.. சிலேடை.. என கலந்து கட்டி தன் நட்பு வட்டங்களை ‘மியாவ்’ எனக் கலாய்க்கும் யாழினிஸ்ரீ மிகச் சமீபத்தில் ‘வெளிச்சப்பூ’ என்ற தனது கவிதை நூலையும், சென்ற ஆண்டில் ‘மரப்பாச்சியின் கனவுகள்’ என்கிற கவிதை நூலை கவிஞர் குட்டி ரேவதி மூலமாக வெளியிட்டு அனைவரையும் அசத்தி இருக்கிறார். இரண்டு கவிதைத்தொகுப்புகளை புத்தகமாக வெளியிட்டிருக்கும் யாழினிஸ்ரீ, ருமைட்டாய்ட் ஆர்தடிக்ஸ் (rheumatoid arthritis) எனும் மூட்டு முடக்கு வாதம் மற்றும் கைஃபோஸ்காலியாஸிஸ் (Kyphoscoliosis) எனும் முதுகுத்தண்டுவட பாதிப்பு நோயில் பாதிப்படைந்தவர்.
ஆனால் முகநூலில் இவருக்கு நான்காயிரத்திற்கும் அதிகமான நட்பு வட்டங்கள் இருக்கின்றனர். சொந்தமாக இவருக்கென வலைப்பக்கமும் உள்ளது. கவித் துளி.. கவியோடை.. கவிப்போம்.. என சில பல கவிதை சார்ந்த முகநூல் குழுக்கள்.. இலக்கிய வட்ட நண்பர்கள் என யாழினிஸ்ரீ ஆல்வேஸ் பிஸி. முகநூல் வந்த புதிதில் நம்மை பற்றி யாருக்கும் தெரியாது. தேவை இல்லாத கேள்விகளை சிலர் நம் பக்கத்தில் வந்து கேட்பார்கள். அதனால் கோபம் வந்தாலும்.. குதர்கமாய் என்னை நோக்கி கேள்விகள் வந்தாலும் அதற்கெல்லாம் பதில் சொல்லாமல் ‘மியாவ்’ எனப் பதிவிடுவேன். வணக்கம்..நன்றி.. என எல்லாவற்றுக்கும் மியாவ் போடத் தொடங்கி.. அதுவே எழுத்தில் தொடர.. என்னை ‘மியாவ்’ என்றே பெயர் வைத்து நண்பர்கள் அழைக்கத் தொடங்கினர் எனப் பேசும் யாழினிக்கு நகைச்சுவை இயல்பாய் வருகிறது. முகநூலில் இவர் வெளிப்படுத்தும் பதிவு எதுவாக இருந்தாலும் அதில் காமெடி இல்லாமல் இருப்பதில்லை.
நான் பிறந்த ஊர் நீலகிரி மாவட்டம் கோத்தகிரி. அங்கு அரசுப் பள்ளி ஒன்றில் படித்தேன். எனது அம்மா தேயிலைத் தோட்டத் தொழிலாளர். அப்பா கிளி வைத்து ஜோசியம் பார்ப்பவர். எனக்கு ஒன்பது வயது இருக்கும்போது ஒரு நாள் திடீரென முட்டி வலி. அப்போது மூன்றாம் வகுப்பு படிக்கிறேன். மூட்டெல்லாம் வீங்கிவிட்டது. கைகால் வலியில் என்னால் சுத்தமாக நடக்க முடியவில்லை. மருத்துவமனை சென்று டிரீட்மென்ட் எடுத்ததில் சுருக்கமாக மூட்டு முடக்கு வாதம் என்றார்கள். அத்துடன் முதுகுத்தண்டுவடப் பாதிப்பும் உள்ளது எனச் சொல்லிவிட்டனர்.என் அம்மா, அப்பா இருவருக்கும் படிப்பு குறைவு. அவர்களுக்கு என் உடல் ரீதியான பிரச்சனை குறித்த புரிதல் இல்லை. அதற்கான மருத்துவம் குறித்தும் அவர்களுக்குத் தெரியவில்லை.
பொருளாதார வசதி இன்மையால் உயர் சிகிச்சைக்கு செல்ல முடியாமல், நோயின் தாக்கம் தீவிரமடைய, ஒரு கட்டத்தில் பிறரின் உதவி இன்றி என்னால் எதுவுமே செய்ய முடியாத நிலை உருவானது. காலையில் அம்மா மாலையில் அப்பா என்று பள்ளிக்கு தூக்கிக் கொண்டு சென்றார்கள். சில நேரம் ஆசிரியர்களும்.. நண்பர்களும்.. உதவியாக இருந்தார்கள். பத்தாம் வகுப்பு வரை அங்கு படித்தேன். ஊட்டி குளிரில் உடல் நலம் ரொம்பவே பாதித்தது. என்னைத் தூக்கிக் கொண்டு அம்மாவால் மலைப் பிரதேசத்தில் ஏற்றம் இறக்கங்களில் ஏறி இறங்க முடியவில்லை. அங்கே வசிக்க முடியாத நிலையில், கோத்தகிரியில் இருந்து மேட்டுப்பாளையத்திற்கு இடம் பெயர்ந்தோம். தொடர்ந்த நாட்களில் என் வாழ்க்கை சக்கர நாற்காலியில் முடங்கியது. மேட்டுப்பாளையம் பஞ்சாயத்தில் நடந்த இலவசக் கம்ப்யூட்டர் வகுப்பில் சேர்ந்து கம்ப்யூட்டர் கற்றுக் கொண்டேன். அதில் டிடிபி, டேலி போன்றவற்றை ஓராண்டு பட்டயப் படிப்பாக படித்ததில் டிப்ளமோ சான்றிதழ் எனக்குக் கிடைத்தது. கோவையில் இயங்கிய தன்னார்வ அமைப்பு ஒன்று இலவச மடிக் கணினி ஒன்றை எனக்கு வழங்கியது.
நான்கு சுவற்றுக்குள் வீட்டிலே முடங்கிக் கிடந்த எனக்கு இணையம் புது உலகத்தைக் காட்ட, முகநூல், டுவிட்டர், வாட்ஸ் ஆப், எனக்கான வலைப்பக்கம், முகநூல் நண்பர்கள் என பயணிக்கத் தொடங்கினேன். நண்பர்கள் வழியே டிடிபி டிசைனிங் வேலைகளை ஆர்டர் எடுத்து செய்து கொடுக்கத் தொடங்கினேன் எனத் தொடர்ந்து பேசிய யாழினியின் வலது பக்கம் முதுகு எலும்பு வளைய வளைய இடது பக்கமாக உடல் சாய்ந்து கொண்டே செல்கிறது என்கிறார். பெரும்பாலும் உடல் இயங்காத நிலையில் வீல் சேரில் இருந்தவாறே டேபிள்மேட் மீது மடிக் கணினி வைத்து அதன் விசைப் பலகையில் வார்த்தைகளைக் கோர்த்து விரல்களால் மாயாஜாலம் செய்கிறார். அவரது விடாமுயற்சி பார்ப்பவருக்கு பிரமிப்பாக இருந்தாலும் அவர் சாய்ந்து உட்கார தனக்கு ஏற்ற வசதியான வீல்சேர் மற்றும் படுக்க வசதியான படுக்கை இல்லை என்கிறார் இவர்.
அம்மா, அப்பா இருவரும் வேலைக்குச் சென்ற நிலையில் என் முழு நேர பொழுதுபோக்கே எஃப்.எம் கேட்பதும், புத்தகம் படிப்பதும்தான். பாட்டும், புத்தகமும் இல்லாமல் என்னால் இருக்கவே முடியாது என்றானேன். நாளிதழ்..வார இதழ்..மாத இதழ் என கையில் கிடைப்பதை படிக்கத் தொடங்கினேன். நண்பர்கள் மற்றும் அப்பா மூலமாக நூலகத்தில் இருந்தும் புத்தகங்களை எடுத்துவரச் சொல்லி படிக்க ஆரம்பித்தேன். வார இதழ்களும், மாத இதழ்களும் தவறாமல் வீடு வந்து சேரும். நண்பர்களும் அவர்கள் வீடுகளில் உள்ள புத்தகங்களை கொண்டு வந்து என்னிடம் படிக்கக் கொடுத்தார்கள். வாசிப்பை சுவாசித்தேன்… நிறைய வாசித்ததில் எழுத்து ஆர்வம் வரத் தொடங்கியது.
விளையாட்டாக எஃப் எம் வானொலியில் நடக்கும் சின்னச் சின்ன கவிதைப் போட்டிகளில் பங்கேற்று, தொடர்ந்து சின்னச் சின்ன கவிதைகளை எஸ்எம்எஸ் வழியாக நண்பர்களுக்கு அனுப்பி அவர்களின் பாராட்டைப் பெற்றேன். மேலும் எழுதும் ஆர்வம் மேலிட, அப்போது எஸ்எம்எஸ்ஸில் ‘கவித் துளி’ என்றொரு குழு இருந்தது. அதிலும் தொடர்ந்து கவிதை எழுதிக் கொண்டிருந்தேன். தேனியில் இருக்கும் கவித்துளி குமார் எனும் நண்பர் எஸ்எம்எஸ் இதழில் இயங்கும் மாற்றுத் திறனாளி நண்பர்களின் கவிதைகளை புத்தகமாகத் தொகுத்து வெளியிட்டார். அவர்தான் அந்த இதழையும் நடத்தி வந்தார். எதையாவது ஒரு கருத்தை அடிப்படையாக வைத்து தொடர்ந்து அந்த இதழுக்கு கவிதைகளை எழுதி வந்தேன். அப்போதுதான் இணையம் அறிமுகமான புதிது. ‘பூங்காற்றிலே…’ என்ற வலைப் பக்கம் ஒன்றையும் எனக்காக உருவாக்கி அதிலும் எனது கவிதைகளை எழுதத் தொடங்கினேன்.
நான் எழுதிய கவிதைகளை எல்லாம் சேர்த்து புத்தகமாகக் கொண்டு வரலாம் என என் முகநூல் நண்பர்கள் முடிவெடுத்தார்கள். திருப்பூரில் உள்ள பொன்னுலகம் பதிப்பகம் எழுத்தாளர் ஜீவா எனது முகநூல் நண்பர். என் வலைப் பக்கத்தில் இருக்கும் கவிதைகளைப் பார்த்து புத்தகமாகப் போட அவராக முன் வந்தார். புத்தகம் போடும் அளவிற்கு நாம் பெரிய ஆள் இல்லை என நினைத்து சாதாரணமாக கடந்தேன். ஆனால் அவர் என்னை விடுவதாக இல்லை. என் கவிதைகளை எல்லாம் சேகரித்து ‘மரப்பாச்சியின் கனவுகள்னு’ என்ற என் கவிதையின் தலைப்பை புத்தகத்தின் தலைப்பாக மாற்றி வெளியிட்டார். திருப்பூரில் உள்ள பொன்னுலகம் பதிப்பகம் மூலமாக 2019ல் வெளியான இந்த நூலில் என்னுடைய 50 கவிதைகள் இடம்பெற்றுள்ளது. எனது கவிதைகள் இயற்கை சார்ந்தும் சமூகம் சார்ந்தும் இருக்கும் எனும் யாழினிஸ்ரீ மரப்பாச்சியின் கனவுகள் கவிதைப் புத்தகத்தை கவிஞர் குட்டி ரேவதி வெளியிட்டதாக தெரிவிக்கிறார்.
என் கவிதைகளைப் படித்த நடிகர் விஜய்சேதுபதி சார் ‘கழுத்தைக்கூடத் திருப்ப முடியாத யாழினீஸ்ரீ சமூகத்தைப் பார்த்து கேள்வி கேட்கிறார்’ என என் கவிதையில் ஒன்றை எடுத்து தனது பக்கத்தில் வெளியிட்டு டுவிட் செய்துள்ளார். நடிகர் கமல்ஹாசன் சார் என் புத்தகத்தைப் பார்த்துவிட்டு எனக்கு வாழ்த்துச் செய்தி அனுப்பினார். தஞ்சாவூர் அக்னி சிறகு அறக்கட்டளை மூலமாக எனக்கு ‘அக்னி சிறகு’ விருதும், விருதுநகர் மாவட்ட மானுடப் பண்பாட்டுக் கழகம் ஊக்க விருதும் எனக்கு வழங்கினார்கள்.
பேரறிஞர் அண்ணா குறித்து எழுதிய ஒரு கவிதைக்கும் எனக்கு விருது கிடைத்தது என்கிறார் புன்னகைத்து. இந்த ஆண்டு 2020 அக்டோபரில் ‘வெளிச்சப் பூ’ என்கிற தனது இரண்டாவது கவிதை நூலை ‘தமிழ்நாடு சிற்றிதழ் சங்க’த் தலைவர் பூ.ஆ.ரவீந்திரன் வெளியிட்டார். இதில் தன்னுடைய 75 கவிதைகள் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கிறார் யாழினிஸ்ரீ. புத்தக வெளியீட்டுக்குப் பிறகு பல பிரபல நாளிதழ்களிலும், தொலைக்காட்சியிலும் தன்னைப் பற்றிய செய்தி வந்ததை நினைவுகூர்ந்தவர், சின்ன வயதில் இருந்தே என்னை ஐ.ஏ.எஸ். ஆக்கும் கனவு அம்மாவுக்கு நிறையவே இருந்தது.
ஆனால் அம்மாவை நான் ஏமாற்றிவிட்டேன். எனவே என் முதல் புத்தகம் வெளியாவதை கடைசி வரை அம்மாவிடம் சொல்லாமல் சஸ்பென்சாக வைத்திருந்து அட்டைப் படம் டிசைனாகி.. தலைப்பு வைத்து.. அழைப்பிதழ் தயாரித்து.. புத்தகம் வெளியாகும் இறுதி கட்டம்வரை அம்மாவுக்கு அதுபற்றித் தெரிவிக்கவில்லை. அம்மாவிற்கு இன்ப அதிர்ச்சி கொடுக்க நினைத்து இரண்டு புத்தக வெளியீட்டையும் அவர் கரங்களில் பெற வைத்தேன் என்கிறார் புன்னகைத்து.
அம்மா மிகப் பெரிய நம்பிக்கை மனுஷி. என்னோட ரோல் மாடல் அவர். அவரின் தன்னம்பிக்கைதான் எனக்கும் ஒட்டிக் கொண்டது என்றவர், மேட்டுப்பாளையம் வந்த பிறகு அம்மா அருகே உள்ள மில் ஒன்றில் கூலி வேலைக்கு சென்று கொண்டிருந்தார். அங்கு ஏற்பட்ட விபத்து ஒன்றில் அவரின் கால்கள் அடிபட்டு அறுவை சிகிச்சைவரை சென்றதில் அவராலும் வேலைக்கு போக முடியாத நிலை. என்னை கவனித்துக் கொண்டு இப்போது வீட்டில்தான் இருக்கிறார். என்னுடைய தனிப்பட்ட வேலைகளை 99 சதவிகிதமும் அவர்தான் எனக்கு செய்துவிடுகிறார்.
அப்பவும் சரி இப்பவும் சரி பெற்றோர் மட்டுமல்ல தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றமும், என் முகநூல் நண்பர்களும்தான் எனக்கு பக்க பலமாக இருக்கிறார்கள். நண்பர்கள் இணைந்துதான் எனது இரண்டு புத்தக வெளியீட்டு விழாவையும் நடத்தினார்கள் எனும் யாழினிஸ்ரீ அடுத்த தனது கவிதை நூலை வெளியிடும் முயற்சியிலும் முனைப்பாக இருக்கிறார். அதற்கான வேலைகளும் நடைபெறுவதாகச் சொன்னவர் இருக்கும்வரை நமக்கான அடையாளம் எழுத்து. அதை இழக்க மாட்டேன் என்கிறார்., கதை எழுதும் யோசனையும் இருக்கிறது என்கிறார்.
எனக்கு இப்போது 31 வயது. எங்கு போனாலும் யாராவது ஒருவர் என்னை தூக்கிச் சென்றுதான் உட்கார வைப்பார்கள். தொடர்ந்து கணினியில் வேலையைச் செய்யும்போது கஷ்டமாகத்தான் இருக்கு என்றவர், வருத்தப்பட்டா எல்லாம் சரியாயிடும்மா..? நம்மால் முடியாததுனு ஒன்னும் இல்லை. முடிந்த வரை செய்வோம்… என காமெடியாகவே இறுதிவரை பேசி விடைகொடுத்தார்.
Average Rating