எஸ்.பி.பி அவர்களின் கோடிக்கணக்கான ரசிகைகளில் நானும் ஒருத்தி…!! ( மகளிர் பக்கம்)
ரஜினியின் ‘முத்து’வில் ‘கொக்கு சைவ கொக்கு…(கோரஸ் ட்ராக்)’, விஜய்யின் ‘போக்கிரி’யில் ‘மாம்பழமாம் மாம்பழம்..’ வருஷமெல்லாம் வசந்தத்தில் ‘அடி அனார்கலி’, ஏ.ஆர்.ரஹ்மானின் இசையில் வெளியான ‘தாஜ்மஹாலி’ல் ‘அடி மஞ்சக்கிழங்கே’, தனுஷின் ‘தேவதையை கண்டேனி’ல் ‘அழகே பிரம்மனிடம்…’ என பல ஹிட் பாடல்களை பாடியவர் கங்கா சிற்றரசு. கிட்டத்தட்ட ஆறு மொழிகளில் ஐநூற்றுக்கும் மேற்பட்ட பாடல்களுக்கு மேல் பாடியுள்ளார்.
‘‘என்னோட பூர்வீகம் கேரளா. எனக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்தே இசை மேல் தனிப்பட்ட ஆர்வம் உண்டு. இசை நிகழ்ச்சிக்கு போகும் போது அங்கு இசைக் கச்சேரி நடக்கும். அவர்கள் பாடுவதை மிகவும் ஆர்வமுடன் கேட்பேன். அந்த தாக்கம் தான் இசைக் குழுவில் நானும் ஒரு பாடகியா பாடணும்ன்னு எண்ணம் ஏற்பட்டது.
பள்ளியில் படிக்கும் போது ஒரு பாட்டுப் போட்டியையும் மிஸ் செய்ய மாட்டேன். அதே போல் பரிசும் பெற்று இருக்கேன். அன்று ஏற்பட்ட தாக்கம் இன்றும் எள்ளளவு குறையலன்னு தான் சொல்லணும். பள்ளி மற்றும் கல்லூரி படிப்பு முடிஞ்சதும் மியூசிக் அகாடமியில் இசை சார்ந்து இரண்டு வருஷம் பார்ட் டைம் கோர்ஸ் படிச்சேன். கேரளாவில் இருக்கும் போது கொஞ்சம் கர்நாட சங்கீதம் கற்றுக் கொண்டு இருந்தேன். எங்க குடும்பத்தில் இசைத் துறையை சார்ந்தவர்கள் யாரும் கிடையாது.
அப்பா, அம்மா இரண்டு பேரும் பள்ளி ஆசிரியர்கள். எல்லாரும் நல்லா படிப்பாங்க. படிப்பு தான் அவங்களுக்கு பிரதானமா இருக்கும். நான் மட்டும் தான் எங்க வீட்டில் இசை துறையை தேர்வு செய்யணும்ன்னு ஆர்வத்தில் இருந்தேன். கல்லூரி முடிச்சதும் அப்பா கூப்பிட்டு கேட்டார். என்ன செய்யப்போறன்னு. பாடகியாகணும்ன்னு என் விருப்பத்தை சொன்னேன். அவரும் மறுக்காமல் என்னை சென்னைக்கு கூட்டிக் கொண்டு வந்தார்’’ என்றவர் பல இன்னல்களை தாண்டி தான் இசைத் துறையில் கால் பதித்துள்ளார்.
‘‘சென்னையில் இசைத் துறையில் சேர்வது அவ்வளவு சுலபமல்ல. ஆனால் திறமை இருந்தா அதற்கான வாய்ப்பு கண்டிப்பா நமக்கு கிடைக்கும். அதனால் நான் கொஞ்சமும் தளராமல் ஒவ்வொரு ஸ்டுடியோவாக சென்று மியூசிக் டைரக்டர்களை சந்தித்து பாடவாய்ப்பு கேட்பேன். அப்படித் தொடங்கியது தான் ஏ.ஆர்.ரஹ்மான் சாரின் இசையில் எனக்கு கோரஸில் பாட வாய்ப்பு கிடைச்சது. ‘திருடா திருடா’ படத்தில் ராசாத்தி என் உசிரு பாடலில் நான் சுஜாதா மற்றும் மின்மினி மூணு பேரும் ேசர்ந்து ேகாரஸ் பாடினோம்.
அது எனக்கு கோரஸ் பாடினது போலவே இல்லை. ஒரு பாட்டு பாடினது போல் தான் இருந்தது. அதுதான் என்னுடைய முதல் ரெக்கார்டிங் ரஹ்மான் சாரோட. அப்ப எனக்கு தமிழ் சுத்தமா தெரியாது. சுஜாதா அக்கா தான் எனக்கு ரொம்ப ஹெல்ப் செய்தாங்க. எனக்கு எப்படி பாடணும்ன்னு சொல்லிக் கொடுத்தாங்க. அப்ப ஆரம்பித்த அந்த பயணம் தான் ரஹ்மான் சாரோட எல்லா பாடல்களிலும் நான் கோரஸ் பாடினேன். அந்த சமயத்தில் தான் தாஜ்மஹால் படத்தில் ‘அடி மஞ்சக் கிழங்கே.. ’ பாடலை சோலோவா பாட வாய்ப்பு கிடைச்சது.
அந்த பாடல் முழுக்க கோரசா தான் பிளான் செய்தாங்க. ஆனா பாரதிராஜா சார் தான் பாட்டு ஆரம்பிக்கும் போது ஒரு சோலோ குரல் வேணும்ன்னு கேட்டார். அப்படி தான் எனக்கு அந்த பாடல் பாட வாய்ப்பு வந்தது. தேவா சாரின் எல்லா பாடலும் ரொம்ப ஜாலியா இருக்கும். தப்பா பாடினாக் கூட பரவாயில்லை இன்னொரு டிராக் எடுத்துக்கலாம்ன்னு சொல்லுவார். அதுவே ராஜா சாரிடம் போகும் போது எனக்கு கை கால் எல்லாம் நடுங்கும்.
எல்லாருக்குமே ஒரு பயம் இருக்கும் அவரைப்பார்த்தா. அவரின் ஸ்டுடியோ ரொம்ப அமைதியா இருக்கும். நான் ரொம்ப பப்ளி டைப். பேசிட்டே இருப்பேன். பல சமயம் அவரிடம் ஆடிஷன் நடக்கும் போது பேசி அவரிடம் திட்டு வாங்கி இருக்கேன். அவரிடம் நான் முதன் முதலில் ஒரு மலையாள படத்துக்கு தான் டிராக் பாடினேன். அதனால கொஞ்சம் தப்பிச்சேன். அப்புறம் கன்னட பாட்டு. காசி தமிழ் படத்தின் ரீமேக்கிற்கு பாடி இருக்கிறேன். மணி ஷர்மா, சிற்பி அவர்கள் உட்பட பல இசை அமைப்பாளர்களிடம் வேலை பார்த்திருக்கிறேன்’’ என்றவரின் பேச்சு, பாடகர் எஸ்.பி.பி. அவர்கள் குறித்து திரும்பியது.
‘‘பாலு சாரை முதன் முதலில் சென்னையில் தான் சந்தித்தேன். நான் துறைக்கு வந்து நான்கைந்து வருஷத்திற்கு பிறகு தான் அவருடன் இணைந்து பாட வாய்ப்பு கிடைச்சது. ஒரு பக்கம் சந்தோஷமா இருந்தாலும் மறுபக்கம் பயமாகவும் இருந்தது. கைகால் நடுங்க ஆரம்பிச்சது. சார் ஒரு கேபின்ல இருந்தார். நான் வேற கேபினில் இருந்தேன். பிரசாத் ஸ்டுடியோவில் தான் ராஜா சார் இசையில் ரெக்கார்டிங். ராஜா சார் உதவியாளர் தான் எப்படி பாடணும்ன்னு சொல்லிக் கொடுத்தார்.
ரெக்கார்டிங் முடிந்ததும் எஸ்.பி.பி சார் என்னைக் கூப்பிட்டு, ‘நீ ரொம்ப அருமையா பாடுற, நல்ல குரல் வளம், உச்சரிப்பும் நல்லா இருக்கு, கேரள பெண்ணுனு உன்ன சொல்லவே முடியாது’ன்னு பாராட்டினார். அது மட்டுமில்லாம ஒரு பாடலை உணர்ச்சிபூர்வமா பாடணும். மைக் முன்னால நாம நடிச்சா தான் அந்த பாடலுக்கு உயிர் கொடுக்க முடியும்ன்னு அட்வைசும் கொடுத்தார். மிகப் பெரிய சிகரம். ஆனால் ெபரியவங்க சின்னவங்கன்னு பாகுபாடு பார்க்கமாட்டார். உடனே அழைத்து பாராட்டுவார். எல்லோரிடம் சரிசமமா பழகுவார். அவரை நாங்க பிதாமகன்னு தான் கூப்பிடுவோம். பாடகர்களுக்கு பெரிய ஊக்கம் கொடுக்கக் கூடியவர்.
எஸ்.பி.பி சாருடன் இணைந்து நான் சினிமா பாடல்கள் பாடியது இல்லை. ஆனால் 2006-ம் ஆண்டு அவருடன் மேடையில் பாட எனக்கு வாய்ப்பு கிடைச்சது. லக்ஷ்மன் ஸ்ருதி இசை நிகழ்ச்சி காமராஜர் அரங்கில் நடந்தது. ‘தங்க மகன்’ படத்தில் இடம்பெற்ற ‘ராத்திரியில் பூத்திருக்கும்…’ என்ற பாடல் நான் அவருடன் இணைந்து மேடையில் பாடினேன். என் வாழ்நாளில் என்னால் மறக்க முடியாத தருணம். அதன் பிறகு பல இசை நிகழ்ச்சிகளில் அவருடன் இணைந்து பாடி இருக்கேன்.
ஒரு இசை நிகழ்ச்சியில் ரஜினி படத்தில் வரும் ‘விடிய விடிய சொல்லித் தருவேன்…’ என்ற பாடலை அவருடன் இணைந்து பாடினேன். சினிமாவில் நடிகர்கள் நடிப்போடு பாடலை இணைந்து பார்க்கும் போது, அந்த பாடலுக்கான உணர்வுகளை புரிந்துகொள்ள முடியும். ஆனால் மேடை நிகழ்ச்சியிலும் தன்னுடைய மந்திரக் குரலால் அதே உணர்வை அவரால் மட்டும் தான் கொடுக்க முடியும். அவருடன் மறக்க முடியாத தருணம்… ஒரு முறை இசை நிகழ்ச்சிக்காக கனடா போயிருந்தோம்.
அந்த நிகழ்ச்சியில் பாட எஸ்.பி.பி சார், சங்கர் மகாதேவன், ஹரிஹரன், சுஜாதா, அனுராதான்னு நிறைய முன்னணி பாடகர்கள் வந்திருந்தாங்க. நானும் சப்போர்டிங்காக கோரஸ் சிங்கராக போயிருந்தேன். ஒரு பாடல் சங்கர் மகாதேவன் அவர்களோடு பாடி முடிச்ச பிறகு, எஸ்.பி.பி சார் மேடையில் வந்து என் பெயரைச் சொல்லி என்னை பற்றி பாராட்டி பேசினார்.
பாராட்டுவதில் அவரை மாதிரி யாருமே இருக்க முடியாது. என்னை மட்டுமில்ல. எல்லா இசைக் கலைஞர்களையும் பாராட்டி ஊக்குவிப்பார். எவ்வளவு பாடல்கள் பாடி இருக்கார். ஆனால் இன்றும் எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும் இடைவேளையின்போது அவர் பாட இருக்கும் பாடலை ஒரு முறை பயிற்சி எடுத்த பிறகு தான் மேடையில் பாடுவார்.
நம்ம பாடிய பாடல் தானேன்னு அலட்சியமா இருக்க கூடாது, கவனமா இருக்கணும்ன்னு சொல்வார். அவரிடம் எல்லா பாடகர்களும் இதை கத்துக்கணும். கடைசியாக அவரோடு இந்த ஆண்டு ஜனவரி மாதம் காமராஜர் அரங்கில் ஒரு இசை நிகழ்ச்சியில் சேர்ந்து பாடினேன். இனி அவரோடு பாட முடியாது. என்றாலும் கோடிக்கணக்கான ரசிகைகளில் நானும் ஒரு ரசிகையாக என்றும் இருப்பேன்’’ என்ற கங்காவிற்கு வருங்கால இசைக் கலைஞருக்கு தான் அனுபவப்பூர்வமாக கற்றுக் கொண்ட விஷயங்களை சொல்லிக் கொடுக்க வேண்டுமாம்.
Average Rating