வாழ்வென்பது பெருங்கனவு-கண்ட கனவுகளும் நிஜமாகியவையும்! (மகளிர் பக்கம்)

Read Time:11 Minute, 5 Second

பொத்திப் பொத்தி பெண்ணை வளர்த்து காலா காலத்தில் கல்யாணம் செய்து கொடுத்தது அந்தக் காலம். பெண் என்பவள் பிள்ளை பெறுவதற்கும், சமையலுக்கும், வீட்டு பராமரிப்பு மட்டுமே எனும் ‘ரோபோ’வாக கருதப்பட்டவளாக இருந்தாள். கால சுழற்சி பெண்களை இன்று அனைத்து துறைகளிலும் முன்னிலைப்படுத்தத் தொடங்கியது. முதல் பெண் டாக்டர் முத்து லட்சுமி, நெஞ்சுரம் கொண்ட இந்திரா காந்தி, விண்வெளியில் தடம் பதித்த கல்பனா சாவ்லா, தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா என சாதனை பெண்களின் பட்டியல் மைல் கணக்கில் நீள்கிறது. இந்தப் பட்டியலில் ரமாவையும் சேர்த்துக் கொள்ளலாம்.

பனிரெண்டாம் வகுப்பு முடித்த கையோடு, பருவம் முளைவிட்ட தொடக்கத்திலேயே திருமணம். அடுத்த ஒரே ஆண்டில் மடியில் தவழ்ந்த மகள் என வாழ்க்கையை தொடங்கிய ரமா, அதன் பிறகு தையல் பயிற்சி (டைலரிங்), துணிகளில் பூ வேலைப்பாடு (மெஷின் எம்ப்ராய்டரி), வண்ணம் தீட்டுதல் (பெயின்டிங்), ஓவியக்கலை (டிராயிங்), கலை மற்றும் கைவினைத் திறன் (ஆர்ட்ஸ் அண்டு கிராப்ட்), அழகு மற்றும் ஒப்பனைக் கலை (பியூட்டிஷியன்), யோகா என தனது அறிவுக்கு தீனி போட்டுக் கொண்டபடி தன்னுடைய 3 பிள்ளைகளையும் நல்ல படிப்பு படிக்க வைக்கும் அளவுக்கு வருமானமும் ஈட்டி சமுதாயத்தில் அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும் அளவுக்கு சிறந்த அந்தஸ்தை எட்டியுள்ளார். இத்தனை திறமைக்கு ஹை லைட்டாக அவர் தொடங்கிய சுயதொழிலில் நல்ல வருமானம் பார்த்து வருகிறார்.

இளம் பருவத்தில் தனக்கிருந்த டாக்டர் கனவு தவிடு பொடியானாலும், மனம் தளராமல் சாதனை படிக்கட்டுகளை அசால்ட்டாக அடுத்தடுத்து தாண்டிச் சென்று கொண்டிருக்கும் ரமா, இயல்பிலேயே பெண்களுக்கு உள்ள கூச்சம், தயக்கம் போன்ற தடைகளை கடந்து துணிச்சலை வெளிப்படுத்தினால், திறமை தானாக ஜொலிக்கத் தொடங்கும், அப்புறம் என்ன வானமும் நம் வசப்படும் என பெண்களுக்கு புத்துணர்ச்சி அளிக்கும் ஊக்கத்துடன் தன்னைப் பற்றி உற்சாகத்துடன் அறிமுகம் செய்து கொண்டார்.

‘‘மதுரைல தான் பொறந்தேன். அப்பா காசிராஜன் சின்னதாக ஒரு கம்பெனி வச்சிருந்தாரு. அம்மா தமிழரசி. வீட்ல அவங்க அரசாங்கம் தான். மூணு அண்ணன்கள் எனக்கு. நாலாவதாவும் கடைக்குட்டியாவும் பொண்ணாவும் பொறந்ததால, என்னிய தூசு, தும்பு படாம அம்புட்டு ஜோரா வளத்தாய்ங்க.

லட்சுமி புரத்துல தான் எங்க வீடு என்பதால், அங்க அருகில் இருந்த செயின்ட் ஜோசப் கேர்ள்ஸ் ஹையர் செகன்டரி பள்ளியில் தான் நான் எல்.கே.ஜி தொடங்கி பிளஸ்2 வரை படிச்சேன். படிப்பு முடிஞ்சாச்சு… பொட்டப் புள்ளைக்கு குடும்பம் தான் லாய்க்குன்னு, பள்ளிப் படிப்பை முடித்த அதே வருஷம் எனக்கு கல்யாணம் எங்க வீட்டுல செய்திட்டாங்க.

கணவர் குடும்பத்துக்கு ஓட்டல் பிசினஸ். கீழ ஓட்டல், மேல வீடுன்னு அமைஞ்சது என் புகுந்த வீடு. நான் இப்போது இந்த அளவுக்கு இருக்கேன்னா… அந்த பெருமைக்கு என்னோட கணவர் சந்திரசேகர் தான் முக்கிய காரணம். ஓட்டல் என்பதால், வீட்டில் பெரிய அளவில் சமையல் இருக்காது. மூன்று வேளையும் ஓட்டலில் இருந்து சாப்பாடு வந்திடும். அப்ப எனக்கு நிறைய நேரம் இருந்தது. அதனால் என் கணவர் தான் சும்மா ஏன் இருக்க… உனக்கு விரும்பமானது ஏதாவது கற்றுக் கொள்ளலாம்னு என்னை தட்டிக் கொடுத்து, ஊக்கப்படுத்தி, தைரியமும் கொடுத்தார்.

கல்யாணம் ஆன அடுத்த வருஷமே பொண்ணு பொறந்துட்டா. என் கணவர் கொடுத்த தைரியத்தால், பாப்பா 6 மாச குழந்தையா இருக்கும் போது, தையல் கிளாசுக்கு போனேன். என் கணவர் வீடு கூட்டுக்குடும்பம் என்பதால், நான் பயிற்சிக்கு போகும் போது என் மாமியார் குழந்தைய பார்த்துப்பாங்க. அதனால நானும் கொஞ்சம் நிம்மதியா தையலை முழுமையா கற்றுக் கொள்ள முடிந்தது.

தையல் பயிற்சியை முழுமையாக கற்றுக் கொண்டு, அக்கம், பக்கத்துல இருக்கறவங்களுக்கு ரவிக்கை தைச்சிக் கொடுத்தேன். அடுத்து மெஷின் எம்ப்ராய்டரி பயிற்சி எடுத்தேன். தையல், எம்ப்ராய்டரி என ரெண்டுலயும் வருமானம் வர ஆரம்பிச்சது. இதற்கிடையில் இரண்டாவது மகன் பிறந்தான். அவன் பிறந்த பிறகு ஆர்ட்ஸ் அண்டு கிராப்ட்ஸ் பயிற்சியில் சேர்ந்தேன். கைவண்ண பொருட்கள் குறித்து பயிற்சி எடுத்தேன். மூணாவது பெண் குழந்தை பிறந்த பிறகு பியூட்டிஷியன் கோர்ஸ் போனேன். ஒரு வருட படிப்புக்கு பிறகு முறையாக சான்றிதழ் வாங்கியதும் 2000ம் ஆண்டு ‘குயின்ஸ்’ என்ற பெயரில் பியூட்டி பார்லர் திறந்தேன்.

ஸ்கூலுக்கு எதிர்ல என்னுடைய அழகு நிலையம் இருந்ததால், பள்ளிக்கு குழந்தைகளை விட வரும் பெண்கள் என்னுடைய வாடிக்கையாளராக மாறினாங்க. மேலும் பிரைடல் மேக்கப், ஃபேஷியல், ஹேர் கட், ஐப்ரோ திரெட்டிங்னு எல்லா சேவையும் செய்து வந்தேன். இதற்கிடையில் ஓவியம் பயின்றேன். சிறந்த கைவினை கலைஞர் என காந்தி இன்ஸ்ட்டிடியூட்ல விருது கொடுத்தாங்க. இதைத் தொடரந்து பிடிலைட் நிறுவனத்தில் ஹாபி டீச்சர் வேலைக் கிடைச்சது. அங்கு கைவினை பொருட்கள் குறித்து நான் சொல்லிக் குடுக்கறத பாத்து, நிறைய பள்ளி ஆசிரியர்கள் சனி மற்றும் ஞாயிறுகளில் வீட்டுக்கு வர்றோம், கத்துக் கொடுங்கன்னு கேட்டாங்க. அதற்கும் சம்மதித்தேன்’’ என்றவர் அழகு நிலையத்தை சில காரணத்தால் தொடர்ந்து நடத்தாமல் நிறுத்திவிட்டார்.

‘‘என் பொண்ணும் படிப்பை முடிச்சிட்டதால, அவளுக்கு கல்யாண ஏற்பாடு செய்ய ஆரம்பிச்சேன். அவ இப்ப கனடாவுல செட்டிலாயிட்டா. அவ கல்யாண ஏற்பாட்டில் நான் பிசியா இருந்ததால், என்னால் அழகு நிலையத்தை சரியான முறையில் நடத்த முடியல. அதனால அழகு நிலையத்தை மூடிட்டேன். அதற்காக அந்த தொழிலை நிறுத்தல, வீட்டில் இருந்தபடியே செய்து கொண்டு இருக்கிறேன். மகன் கல்லூரிப் படிப்பை முடிச்சிட்டு, அப்பாவின் தொழிலை பார்த்துக் கொண்டு இருக்கான்.

மூணாவது பொண்ணும் படிப்பை முடிச்சிட்டா அவளுக்கும் கடந்த ஆண்டு திருமணம் செய்து வைத்துவிட்டேன். அவ கல்யாணத்தின் போது தான், நானே என் கையால் ஆரத்தி தட்டு டிசைன் செய்தேன். கல்யாணத்துக்கு வந்தவங்க அதைப் பார்த்து, அவங்களுக்கும் செய்து தரச் சொல்லி கேட்க… இப்ப ‘சினேகிதி ஆரத்தி’ என்ற பெயரில் தனியாக ஒரு நிறுவனம் துவங்கிட்டேன். இதுக்கு நடுவுல யோகா கத்துக்கிட்டேன். இப்போ மூணு வருஷமா, மதுரை சுற்றுவட்டாரத்தில் யோகா போட்டிகளுக்கு நடுவரா இருக்கேன்.

என்னோட அனுபவங்கள் எல்லாமே ஏதோ அடுத்தடுத்து எனக்கு வெற்றி மட்டுமே வந்ததுன்னு நெனச்சுடக் கூடாது. தடைகள் இல்லாமல் தரணியில் எந்த சாதனையும் செய்ய முடியாது. எனக்கும் நிறைய இடையூறுகள் ஏற்பட்டது. அந்த தடைகளை ஒரு பொருட்டாக கருதாமல், எனது சக்சஸ் பாதையை நானே செதுக்கிக் கொண்டேன்.

என்னைப் பொறுத்தவரை பெண்கள் தங்களுக்கு இருக்கும் கூச்ச சுபாவம் மற்றும் தயக்கத்தை போக்கி துணிச்சலாக செயல்பட்டால், வாழ்க்கையில் எல்லாமே வெற்றி என்பது தான் இளைய தலைமுறை பெண்களுக்கு எனது அறிவுரை. யாரையும் சார்ந்திராமல் தனக்கென வருமானம் ஈட்டும் வழியை பெண்கள் உருவாக்கிக் கொண்டு சமுதாயத்தில் தனித்துவமாக பிரகாசிக்க வேண்டும். அது தான் என் வாழ்வின் பெருங்கனவாக இருந்தது. அதை நான் மட்டுமே சாதிக்கவில்லை, என் கணவருக்கும் அதில் முக்கிய பங்குண்டு. மேலும் இருவரும் ஒருவரின் திறமையை நன்கு புரிந்துகொண்டதால் தான் என்னால் இவ்வளவு தூரம் சாதிக்க முடிந்தது’’ என்றார் ரமா சந்திரசேகர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post புதுமணத் தம்பதிகளுக்குத் தேனிலவு தரும் பரிசு…! (அவ்வப்போது கிளாமர்)
Next post விலங்குகளைவிட மனிதர்களே ஆபத்தானவர்கள்!! (மகளிர் பக்கம்)