சாம்பியன் கோப்பை கிரிக்கெட் போட்டி: இலங்கை அணியை 2 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது பாகிஸ்தான்
ஐ.சி.சி.யின் சாம்பியன் கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஜெய்பூரில் நேற்று நடைபெற்ற பரபரப்பான லீக் ஆட்டத்தில் இலங்கை அணியை 2 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி வீழ்த்தியது. முக்கிய லீக் ஆட்டத்தில் மூன்றாவது போட்டியான இந்தப் போட்டி ஜெய்பூரில் உள்ள சவாய் மான்சிங் அரங்கத்தில் நேற்று மின்னொளியில் நடைபெற்றது. இதில் பாகிஸ்தான் அணியும், இலங்கை அணியும் பலப்பரிட்சை நடத்தின.
முன்னதாக டாசில் வெற்றி பெற்ற இலங்கை அணியின் கேப்டன் ஜெயவர்த்தனே பேட்டிங் செய்ய தீர்மானித்தார். இலங்கை அணியில் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை.
இலங்கை அணி தகுதிச் சுற்றுப் போட்டியில் கடைசியாக மேற்கு இந்தியத் தீவுகள் அணியுடன் மோதியது. அந்த ஆட்டத்தில் இலங்கை அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மே.இ.தீவு அணியை தோற்கடித்தது.
முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய இலங்கை அணி பாகிஸ்தான் அணி பந்து வீச்சாளர்களின் பந்துகளை சமாளித்து ஆடி ரன்களைக் குவித்தது. அந்த அணி 49.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 253 ரன்களை எடுத்தது.
அந்த அணி வீரர்களில் எவரும் அரை சதத்தை தாண்டவில்லை. ஜெயசூரியா அதிகபட்சமாக 48 ரன்கள் எடுத்தார். இறுதியில் அவர் இப்டிகார் வீசிய பந்தில் கிளீன் போல்டானார். அடுத்த படியாக சங்கக்கரா 39 ரன்களை எடுத்தார்.
அவர் மாலிக் வீசிய பந்தில் இப்டிகாரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். மற்றொரு துவக்க வீரரான உபுல் தரங்கா 38 ரன்களையும், அட்டப்டடு 36 ரன்களையும், கேப்டன் ஜெயவர்த்தனே 31 ரன்களையும், மகரூப் 22 ரன்களையும் எடுத்து அணி கௌரவமான ஸ்கோரை எட்ட உதவினர்.
முன்னதாக துவக்க வீரர்களான தரங்கா மற்றும் ஜெயசூரியா இருவரும் நிலைத்து நின்று ஆடி அணிக்கு நல்ல அடித்தளம் அமைத்துக் கொடுத்தனர். அவர்கள் இருவரும் இணைந்து முதல் விக்கெட்டிற்கு 63 ரன்கள் எடுத்தனர். இதனை நன்கு பயன்படுத்திய மற்ற வீரர்கள் சராசரியாக ஆடி ரன்களை எடுத்தனர்.
அதன் பிறகு விக்கெட்டுகள் சிறிது இடைவெளியில் விழுந்த வண்ணம் இருந்தன. கடந்த இரண்டு போட்டிகளோடு ஒப்பிடும் போது இந்த மூன்றாவது போட்டியில் இலங்கை அணி முதன் முறையாக 250 ரன்களைக் கடந்தது குறிப்பிடத்தக்கது.
பாகிஸ்தான் அணி சார்பில் ஆல்ரவுண்டர் அப்துர் ரசாக் அபாரமாக பந்து வீசினார். அவர் 50 ரன்களைக் கொடுத்து 4 விக்கெட்டை கைப்பற்றினார். சோயிப் மாலிக் 2 விக்கெட்டையும், இப்டிகார், அப்ரிடி மற்றும் ஹபீஸ் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை எடுத்தனர்.
254 ரன்கள் எடுத்தால் வெற்றி பெறலாம் என்ற இலக்கை பாகிஸ்தான் அணிக்கு இலங்கை அணி வைத்தது. அடுத்து களமிறங்கிய பாகிஸ்தான் அணி 48.1 ஓவரில் 6 விக்கேட்டுகளை இழந்து 255 ரன்களை எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
பாகிஸ்தான் தரப்பில் துவக்க வீரர் இம்ரான் பர்ஹட் அதிகபட்சமாக 53 ரன்கள் எடுத்தார். அடுத்த படியாக மொகமது யூசுப் 49 ரன்களை எடுத்தார். சோயிப் மாலிக் 46 ரன்களுடனும், அப்துல் ரசாக் 38 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
முன்னதாக துவக்க வீரர் ஹபீஸ் 22 ரன்னில் ஆட்டமிழந்தார். அப்போது அணியின் எண்ணிக்கை 39 ஆக இருந்தது. அதன் பின்பு விக்கெட்டுகள் சிறிது இடைவெளியில் விழுந்த போதிலும், இறுதியில் சோயிப் மாலிக் மற்றும் அப்துல் ரசாக் ஜோடி நிலைத்து நின்று ஆடி அணியை வெற்றி பெற வைத்தது.
இலங்கை சார்பில் முன்னணி பந்து வீச்சாளரான சமிந்தா வாஸ் 61 ரன்களைக் கொடுத்து 2 விக்கெட்டை எடுத்தார். மகரூப், முரளீதரன் மற்றும் ஜெயசூரியா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினர்.
சுருக்கமான ஸ்கோர்:_
இலங்கை_ 49.2 ஓவரில் 253 ரன்கள் (ஜெயசூரியா 49, தரங்கா 38, சங்கக்கரா 39, ஜெயவர்த்தனே 31, அட்டபட்டு 36, மகரூப் 22, அப்துல் ரசாக் 50/4, மாலிக் 34/2).
பாகிஸ்தான்_ 48.1 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 255 ரன்கள் (பர்ஹட் 53, யூசுப் 49, சோயிப் மாலிக் 46, அப்துல் ரசாக் 38, ஹபீஸ் 22, வாஸ் 61/2).