குழந்தைகளை பேச வைப்போம்!!! (மருத்துவம்)

Read Time:6 Minute, 13 Second

வசூல்ராஜா எம்.பி.பி.எஸ்.’ படத்தில் கமல் E.N.T. ஸ்பெஷலிஸ்ட் என்பதையே அதாம்பா அந்த END ஸ்பெஷலிஸ்ட்’ என்று சொல்வார். அப்போது நமக்கு சிரிப்பு வரும். நகைச்சுவைக்காக சிரித்தாலும், உண்மையில் காது மூக்கு தொண்டை ஆகிய உறுப்புகள் எவ்வளவு முக்கியம் வாய்ந்தவை என்று நம்மைச் சிந்திக்கவைக்கிறார் இத்துறையில் சாதனைகள் பல நிகழ்த்திவரும் டாக்டர் ரவி ராமலிங்கம்.

மணிப்பால் கஸ்தூர்பா மருத்துவக் கல்லூரியில் காது, மூக்கு, தொண்டை சிறப்பு மருத்துவம் பயின்ற டாக்டர் ரவி ராமலிங்கம், பிரபலப் பாடகர்களின் மருத்துவரும் கூட! மொரீஷியஸ், பங்களாதேஷ், நைஜீரியா, பாகிஸ்தான் உள்பட பல நாடுகளில் மருத்துவ ஆலோசகராக பணியாற்றி வருகிறார். தன் மருத்துவ அனுபவங்கள் பற்றியசுவாரஸ்யமான தகவல்களைப் பகிர்ந்து கொள்கிறார்.

‘‘நாம் கண்களுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தைக் காது, மூக்கு, தொண்டை உறுப்புகளுக்குக் கொடுப்பதில்லை. சமீபகால விழிப்புணர்வு காரணமாக இந்த உறுப்புகளுக்கும் முக்கியத்துவம் கொடுக்கத் தொடங்கிவிட்டனர் என்பது ஆறுதல் அளிக்கிறது. எங்களுடைய ‘காது மூக்கு தொண்டை மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிறுவனம்’ 43 ஆண்டுகளாகச் செயல்படுகிறது. இத்தனை வருடங்களில் எத்தனையோ மருத்துவ முன்னேற்றங்களைப்பார்த்துவிட்டோம்.

தொடுதல், பார்த்தல், கேட்டல், நுகர்தல், சுவைத்தல் ஆகிய 5 உணர்வுகளில் கேட்கும் திறனில் உள்ள குறைபாட்டை சரி செய்வதற்கான தொழில்நுட்பம் தொடர்ந்து வளர்ந்து வருகிறது. கேட்கும் திறன் இன்றி பிறக்கும் குழந்தைகளைக் குணப்படுத்த முடியாத நிலை முன்பு இருந்தது. இப்போது கேட்கும் திறன் இல்லாத குழந்தைகளுக்காக Cochlear Implant என்ற அதிநவீன சிகிச்சை வந்துவிட்டது. காது, மூக்கு மற்றும் தொண்டை உடல் உறுப்புகளில் ஏற்படும் பிரச்னைகளால் அவதிப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டேவந்தாலும், மூளை நரம்பில் ஏற்படும் பாதிப்பையும் கண்ணில் ஏற்படும்

கோளாறையும் மூக்கின் வழியாக துளை ஏற்படுத்தி சரி செய்யும் அளவுக்கு இந்தத் துறையின் தொழில்நுட்பம் வளர்ந்துள்ளது. காதில் சீழ் வடிதல், கேட்கும் திறனில் குறைபாடு, காதில் உள்ள சவ்வு கிழிதல், சவ்வில் ஓட்டை ஏற்படுதல், சைனஸ் பிரச்னை, தொண்டையில் சதை வளர்தல், குரல் கரகரப்பாக மாறுதல், அதிக அளவில் வெளிப்படும் குறட்டை போன்ற பாதிப்புகளுக்குத் தகுந்த சிகிச்சை தரும் வகையில் தொழில்நுட்பம் வளர்ச்சி அடைந்துள்ளது. காது மூக்கு தொண்டை ஆகிய உறுப்புகளில் ஏற்படும் புற்று நோயைக் குணப்படுத்தவும் இன்று சிகிச்சைகள் வந்துவிட்டன.

அடுத்து… பெரும் பிரச்னையாக இருப்பது ‘குறட்டை.’ ஒரு சிலர் அதிக ஒலியுடன் குறட்டை விடுபவராக இருப்பார். வேறு சிலரோ இரவு முழுவதும் இடைவிடாமல் குறட்டை விடுபவராக இருப்பார். அவ்வாறு குறட்டை விடும்போது அடைப்பு உண்டாகும். இது பெரும் ஆபத்தாகும். Sleep Lab என்ற தொழில்நுட்பம் மூலம் இந்தப் பிரச்னைக்கு தீர்வு காணலாம். குறட்டை பிரச்னையால் பாதிக்கப்பட்ட நபரை இந்த Labல் தூங்க வைக்கவேண்டும்.

அங்கு பொருத்தப்பட்டுள்ள கம்ப்யூட்டர் எந்த பொசிஷனில் குறட்டை அதிக அளவு வெளிப்படுகிறது, எவ்வளவு அடைப்பு உள்ளது என்பதை பதிவு செய்து கொள்ளும். அதற்கேற்றவாறு, அந்த நபருக்கு சிகிச்சை அளித்து குறட்டை பிரச்னையை சரி செய்ய முடியும்…’’ – நம்பிக்கை அளிக்கிற டாக்டர், தன்னை நெகிழச் செய்து கொண்டிருக்கும் தொடர் நிகழ்வு ஒன்றையும் பகிர்கிறார்.“Cochlear Implant சிகிச்சைக்குசாதாரணமாக ரூ. 8 லட்சம் வரை செலவாகும்.

கடந்த இரண்டரை வருடங்களில் காது கேட்காத, வாய் பேச முடியாத 600 குழந்தைகளுக்கு தமிழக அரசு மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் Cochlear Implant சிகிச்சை எங்கள் மருத்துவமனையில் இலவசமாக அளிக்கப்பட்டிருக்கிறது. இப்போது இந்த குழந்தைகளுக்கு பேசுவதற்கான சிகிச்சைகள் அளித்து கொண்டிருக்கிறோம். இதனால் அந்த குழந்தைகளின் பெற்றோரிடம் மகிழ்ச்சியைப் பார்க்கிறோம். குழந்தைகளை பேச வைப்பது நல்ல விஷயம். என்னுடைய 25 வருட அனுபவத்தில், என்றைக்குமே மனநிறைவை தரக்கூடிய சம்பவம் இதுதான்!’’

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தடுப்பூசியில் அரசியல்: மனிதவுரிமை யோக்கியர்கள் எங்கே? (கட்டுரை)
Next post தலை காக்கும் தடுப்பூசிகள் வந்தாச்சு! (மருத்துவம்)