ட்வின்ஸ்!! (மருத்துவம்)
ரெண்டு பேரும் ஒரே நேரத்துல அழுவாங்களோ… ஒரே நேரத்துல அம்மானு கூப்பிடுவாங்களோ… ரெண்டு பேருக்கும் ஒரே நேரத்துல ஜுரம் வருமோ…’’ இப்படி சாதாரண சந்தேகங்களில் தொடங்கி, ரெண்டு பேருக்கும் ஒரே நேரத்துல காதல் வருமா? ஒரே மேடையில் கல்யாணம் நடக்குமா என்பது வரை எனக்குள்ளும் என் இரட்டையர் பற்றி ஏராளமான கேள்விகள் இருந்தன. அதெல்லாம் அவர்கள் பிறக்கும் வரைதான். பிறகு என் எல்லா கேள்விகளுக்கும் அவர்களது அன்றாட நடவடிக்கைகளே பதில்களாகின!
ஒரே கருவில் பத்து மாதங்கள் ஒன்றாகப் பயணித்தவர்கள்தான்… ஆனாலும், இருவரும் தனித்தனி மனிதர்கள் என்பதை காலம்தான் அடிக்கடி எனக்கு உணர்த்திக் கொண்டிருக்கிறது.ஒருவனுக்கு ஐந்தே மாதங்களில் குட்டிக்குட்டியாக பற்கள் முளைக்கத் தொடங்கின. இன்னொருவனுக்கு ஒரு வயதில்தான் முதல் பல் எட்டிப் பார்த்தது. உட்கார்ந்திருக்கிற ஸ்டேஜில் இருந்து அடுத்து எப்போது இருவரும் தவழப் போகிறார்கள் என ஒவ்வொரு நாளும் ஆசையுடன் காத்திருந்தால், ஒருவன் திடீரென ஒருநாள் எழுந்து நடக்கவே ஆரம்பித்து விட்டான். தவழவே இல்லை. இன்னொருவனோ தவழ்ந்து, பிறகே நடந்தான்.
ரெண்டு பேரும் எல்லா விஷயங்களையும் ஒரே நாள்ல, ஒரே மாதிரி செய்வாங்கனு எதிர்பார்க்கக் கூடாது போல’ என எனக்கு நானே அட்வைஸ் சொல்லிக் கொண்டிருக்க… ஒரு நல்ல நாளில் இருவரும் ஒரே நேரத்தில் அம்மா’ சொல்லி அசத்திய அந்தத் தருணத்தை என்னவென்று சொல்ல? எதை இருவரும் சேர்ந்து செய்வார்கள்… எதைத் தனித்தனியாகச் செய்வார்கள்… எதை வேறு மாதிரி செய்வார்கள் என்கிற சஸ்பென்ஸ் எனக்கு இன்று வரை புரிபட்டதே இல்லை.
இரட்டையர் விஷயத்தில் எல்லா பெற்றோரும் செய்கிற தவறு ஒப்பீடு… அது மிகவும் தவறு. இரட்டையர் என்றாலும் இருவரும் தனித்தனி மனிதர்கள் என்கிறார்கள் குழந்தைகள் நல மருத்துவர்கள். இருவரின் வளர்ச்சியிலும் நிச்சயம் வித்தியாசங்கள் இருக்கும். அந்த வளர்ச்சி இருவருக்கும் முன்னே பின்னே நடந்தால் பயப்படவே தேவையில்லை. உதாரணத்துக்கு 9 முதல் 15 மாதங்களில் குழந்தைகள் நடக்க ஆரம்பிப்பார்கள். இரட்டைக் குழந்தைகளில் ஒருவர் 9 மாதத்திலும் இன்னொருவர் அதற்கடுத்த மாதங்களிலும் நடக்கலாம். இது இயல்பானதுதான்.
ஆனால் 15 மாதங்களுக்குப் பிறகும் நடக்கவே இல்லை என்கிற போதுதான் எச்சரிக்கையாகி, மருத்துவரை அணுக வேண்டும். இரட்டைக் குழந்தைகள் பெரும்பாலும் நிறை மாதத்துக்கு முன்பே பிறக்கிறார்கள். இப்படிப் பிறக்கும் குழந்தைகளிடம் வளர்ச்சி நிலைகளை மிகச் சரியாக அட்டவணை போட்டு வைத்துக் கொண்டு எதிர்பார்க்கக் கூடாது.
உங்கள் இரட்டையர் 34 வாரங்களில் பிறக்கிறார்கள் என வைத்துக் கொள்வோமே… அப்போது நீங்கள் இன்னும் 6 வாரங்களைக் கூட்டியே அவர்களது வளர்ச்சி நிலைகளை எதிர்பார்க்கலாம். இரண்டு குழந்தைகளின் வளர்ச்சியையும் தனித்தனியே கவனிக்க வேண்டும். அதைப் பற்றி மருத்துவரிடம் அவ்வப்போது பேச வேண்டும். இரட்டைக் குழந்தைகளின் பெற்றோருக்கான மிக முக்கியமான அட்வைஸ் இதுதானே தவிர, ஒப்பீடு என்பது அனாவசியமானது என்றும் எச்சரிக்கிறார்கள் மருத்துவர்கள்.
அனுபவம் பெருமை!
திகில்களும் திடீர் திருப்பங்களும் நிறைந்த பயணமாக இருக்கிறது சரண்யாவின் ட்வின்ஸ் அனுபவம். மயிலாடுதுறையில் ரயில்வேயில் கேட் கீப்பராக வேலை பார்க்கிற சரண்யாவுக்கு அதீஷ், அனீஷ் என இரட்டை இளவரசர்கள்! கல்யாணமாகி ரெண்டு வருஷம் கழிச்சு கர்ப்பமானேன். அந்த சந்தோஷத்தை முழுமையா அனுபவிக்க முடியாதபடி, அடுத்த அஞ்சாவது நாளே ப்ளீடிங்… பதற்றமும் பயமும் மனசை அழுத்த, டாக்டர்கிட்ட ஓடினோம். `நீங்க பயப்படற மாதிரி ஒண்ணும் இல்லை. உங்களுக்கு ட்வின்ஸ்… ஒரு கரு, ரெண்டா பிரிஞ்சிருக்கு… அதனாலதான் ப்ளீடிங்’னு சொன்னாங்க.
கல்யாணமான புதுசுல ட்வின்ஸ் பிறந்தா நல்லாருக்குமேனு அடிக்கடி ஆசைப்பட்டிருக்கேன். அது அப்படியே நிஜமான அந்த நிமிஷத்தை இப்ப நினைச்சாலும் சிலிர்க்கும். அந்த சந்தோஷத்துக்கும் சோதனை வந்தது. ரெண்டு குழந்தைங்களுக்குமே இதயத்துடிப்பு இல்லை… வெயிட் பண்ணிப் பார்ப்போம்னு சொன்னாங்க டாக்டர். அந்த விஷயத்தைக் கேட்டதும் என்னோட இதயத் துடிப்பே நின்னது போலாயிடுச்சு. எனக்கு ட்ரீட்மென்ட் கொடுத்த டாக்டர் சந்திராதான் தைரியம் சொன்னாங்க.
நீ கவலைப்படாதே… உன் குழந்தைங்களைக் காப்பாத்திக் கொடுக்க வேண்டியது என்னோட பொறுப்பு… நான் இருக்கேன்’னு நம்பிக்கை கொடுத்தாங்க. தொடர்ந்து ஊசி போட்டாங்க. அப்புறம் 42 நாள்ல ஒரு குழந்தைக்கும், 50 நாள்ல இன்னொரு குழந்தைக்கும் துடிப்பு வந்த பிறகுதான் எனக்கு இதயம் துடிக்கிறது தொடர்ந்ததுன்னே சொல்லலாம். என்னோட கணவருக்கு வெளிநாட்டு வேலை. முதல் மூணு மாசம்தான் என் பக்கத்துல இருந்தார். அப்புறம் எங்கம்மாவும் அப்பாவும்தான் என்னைப் பார்த்துக்கிட்டாங்க.
எங்கக் குடும்பத்துலயே முதல் முதல்ல இரட்டைக் குழந்தைகளை சுமந்தது நான்தான். அதனால என்னால தாங்க முடியுமா… நல்லபடியா குழந்தைங்களைப் பெத்தெடுக்க முடியுமானு அம்மா, அப்பாவுக்கு ரொம்ப பயம். அப்போதும் என் டாக்டர்தான் உன்னால முடியும்’னாங்க. வயிறு ரொம்பப் பெரிசா இருக்கும்… எல்லாரும் பாவமா என்னைப் பார்ப்பாங்க. ஒரு கட்டத்துல வீட்டை விட்டு வெளியே போறதையே நிறுத்திட்டேன். ட்வின்ஸ்ன்னா சுகப்பிரசவத்துக்கு வாய்ப்பே இல்லை…
சிசேரியன்தான்’னு என்னை நிறைய பேர் பயமுறுத்தி வச்சிருந்தாங்க. ஆனா, அப்பவும் என் டாக்டர், நீ தைரியமா இரு… ஆபரேஷன் தேவைப்படாது. சுகப்பிரசவம் ஆகும்’னாங்க. அவங்க சொன்ன மாதிரியே 25 நிமிஷ வித்தியாசத்துல எனக்கு ரெண்டு ஆண் குழந்தைங்க பிறந்தாங்க… அவங்க வயித்துல இருக்கிறபோது அனுபவிச்சதைவிட, பிறந்ததும் இன்னும் நிறைய கஷ்டங்கள்… ரெண்டு பேரும் ஒரே நேரத்துல அழுவாங்க. ரெண்டு பேருக்கும் ஒரே நேரத்துல பால் கொடுத்து, ஒரே நேரத்துல தூங்க வைக்கணும். பிரசவம் பார்த்த டாக்டர் எப்படி தைரியம் சொன்னாங்களோ, அதே மாதிரி குழந்தைங்க டாக்டரும் ரொம்பவே சப்போர்ட் பண்ணினார்.
தாய்ப்பால் தான் சிறந்த உணவு… உங்களால ரெண்டு குழந்தைங்களுக்கும் நல்லா பாலூட்ட முடியும்’னு என்கரேஜ் பண்ணினார். இப்படி என்னைச் சுத்தி பாசிட்டிவான மனுஷங்க… பாசிட்டிவான வார்த்தைகள்… இப்ப ஒவ்வொரு நிமிஷத்தையும் ரசிச்சு சந்தோஷமா அனுபவிச்சிட்டிருக்கேன். குழந்தைங்களோட சிரிப்பை, சிணுங்கலை, அழுகையை, விளையாட்டை… இப்படி எல்லாத்தையும் ரசிக்கக் கத்துக்கிட்டேன்.
அப்பா, அம்மா ஆதரவோடவும் கடவுளோட துணையோடவும் என் குழந்தைங்களை வளர்த்துக்கிட்டிருக்கேன். நான் கர்ப்பமானப்ப குங்குமம் தோழியில ‘ட்வின்ஸ்’ தொடரைப் படிக்க ஆரம்பிச்சேன். அதுல ஒவ்வொருத்தரோட அனுபவமும் டிப்ஸும் எனக்கு உதவியா இருந்திருக்கு. இன்னிக்கு அதே தொடர்ல நானும் என்னோட அனுபவங்களைப் பகிர்ந்துக்கறது பெருமையாவும் இருக்கு…’’ – தோழிக்கும் தோழிகளுக்கும் நன்றி சொல்லி முடிக்கிறார் சரண்யா!
சரண்யாவின் டிப்ஸ்
உங்களைச் சுத்தி பாசிட்டிவான வைப்ரேஷன் இருக்கிற மாதிரிப் பார்த்துக்கோங்க. நல்லதையே பேசற, சொல்ற மனுஷங்களைப் பக்கத்துல வச்சுக்கோங்க. யார் என்ன சொன்னாலும் உங்க மன தைரியத்தை விட்டுக் கொடுத்துடாதீங்க. மனசை ஆரோக்கியமா வச்சுக்கிற மாதிரியே, உடம்பையும் டபுள் ஆரோக்கியமா பார்த்துக்கோங்க. முளைகட்டின பயறு, பழம், பால்னு சத்தான உணவுதான் உங்களையும் உங்க ரெட்டை செல்லங்களையும் பத்திரமா பார்த்துக்கும்!’’
Average Rating